அமெரிக்க வரி விதிப்பு அறிவிப்பும் தாராள பொருளாதார தோல்வியின் எச்சரிக்கையும்! -சேனன்-
'அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்தானது, ஆனால் அமெரிக்காவின் நண்பனாக இருப்பது அழிவுகரமானது' ('It may be dangerous to be America's enemy, but to be America's friend is fatal.’)
-ஹென்றி கிஸ்ஸிங்கர்-
கொரோனா நெருக்கடிக்கு பின்னர் உலக ஒழுங்கின் மாற்றம் அதிக விவாதத்தை உருவாக்கியிருந்தது. குறிப்பாக அமெரிக்காவில் ஒற்றைமைய அரசியல் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்த பின்னணியில் சீனாவில் எழுச்சி மற்றும் பல்துருவ உலகிற்கான எதிர் கூறுகள் சர்வதேச அரசியலில் வியாபித்திருந்தது. எனினும் உலக ஒழுங்கின் அதிகார மாற்றம் அல்லது அமெரிக்காவின் நிலை மாற்றத்தை அடையாளப்படுத்தக்கூடிய எந்த ஒரு உறுதியான நிகழ்வையும் இனங் காண முடியவில்லை. சர்வதேச நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்புக்களும் உலகமயமாதலுக்கு அமெரிக்க ஜனாதிபதியால் ஏற்படுத்தபப்பட்டு நெருக்கடிகளும், அமெரிக்காவை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும் சூழலை சர்வதேச அரசியல் அறிஞர்கள் விபரிக்கின்றார்கள். இக்கட்டுரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்புக்கள் சர்வதேச அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான உறவு தொடர்பில் பல அறிஞர்களும் அண்மைக்காலத்தில்
எச்சரிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் மறைந்த பனிப்போர்க்கால
அமெரிக்க ஐனாதிபதியின் ஆலோசகரும், இராஜதந்திரியுமான ஹென்றி கிஸ்ஸிங்கர் (1923-2023), அமெரிக்காவுடனான
நேர் மற்றும் எதிர் உறவுகளில் உள்ள நெருக்கடியை முன்னரே சுட்டிக்காட்டியுள்ளார். 'அமெரிக்காவின்
எதிரியாக இருப்பது ஆபத்தானது, ஆனால் அமெரிக்காவின் நண்பனாக இருப்பது அழிவுகரமானது'
('It may be dangerous to be America's enemy, but to be
America's friend is fatal.’)
எனக்குறிப்பிட்டுள்ளார். சமகாலத்தில் அமெரிக்காவின்
அறிவிப்புக்கள், அமெரிக்காவின் எதிரியாக வர்ணிக்கப்படும் சீனா, ரஷ்யா போன்ற அரசுகளுக்கு
ஆபத்து என்பது எதார்த்தமானதாகும். மற்றும் எதிர்பார்க்கப்பட்டதாகும். எனினும் அமெரிக்காவின்
நிழலாக செயற்பட்டிருந்த ஜரோப்பாவின் அரசியல் இருப்பையே கதிகலங்க வைத்துள்ளது. ரஷ்யா-உக்ரைன்
விவகாரத்தில் அமெரிக்காவின் பின்வாங்கலால் கலக்கமடைந்த ஐரோப்பிய ஒன்றியம், ட்ரம்பின்
வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்புக்களால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த
பின்னணியிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், 'அமெரிக்காவில் திட்டமிட்ட முதலீட்டை ஐரோப்பிய
நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார்.
ஏப்ரல்-2, 2025அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனைத்து இறக்குமதிகளுக்கும் 10 சதவீத வரியை அறிவித்தார். இது ஏப்ரல்-5 முதல் அமுலுக்கு வருவதாகவும், மேலும், சீன, இந்தியா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்காசிய நர்டுகள், ஆபிரிக்க நாடுகள் மற்றும் தென்னாசிய நாடுகள் எனப் பரவலாக விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிகள் ஏப்ரல்-9 முதல் தொடங்குவதாகவும் அறிவித்தது. இந்த அறிவிப்பு உலகப் பொருளாதாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றில் மிக மோசமான இரண்டு நாள் இழப்பைத் தூண்டியது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும், வார இறுதியில் சந்தைகள் மூடப்படுவதற்கு முன்பு 6.6 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பு அழிக்கப்பட்டது. செவ்வாயன்று சிறிது மீட்சிக்குப் பிறகு, புதன்கிழமை பங்குச் சந்தைகள் மீண்டும் சரிந்தன. இதன் பின்னணியில் ட்ரம்பின், டஜன் கணக்கான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதிப்புக்களின் தாக்கத்தை பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இது உலகளாவிய வர்த்தகப் போரின் அச்சங்களை வியத்தகு முறையில் அதிகரிக்கிறது. அமெரிக்கா எதிர் உலக நாடுகள் எனும் வர்த்தகப்போரின் அச்சுறுத்தலால் அமெரிக்கா 90 நாட்களுக்கு உலக நாடுகளுக்கு அதிகரிக்கப்பட்ட வரிவிதிப்பை இடைநிறுத்தியுள்ளது. எனினும் சீனாவுடனான வர்த்தக்போரை முடுக்கிவிட்டுள்ளது. ஆரம்ப அறிவிப்பில் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 54சதவீத வரி விதிப்பு, 104 சதவீதமாக உயர்த்தப்பட்டு, இறுதியாக 125 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் உலக நாடுகள் மீதான சீற்றமும் வரிவிதிப்பு நடவடிக்கைகளும், ஒருவகையில் அமெரிக்க ஏற்படுத்திக்கொண்ட ஒற்றைமைய உலக ஒழுங்கின் ஏகாதிபத்தியமாக உலகிற்கான தலைமையின் விளைவானதாவே அரசியல்-பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். அமெரிக்க தனது தலைமையை தக்கவைத்துக்கொள்வதற்கு உலக நாடுகளின் அரசியல்-பொருளாதார இருப்பில் தலையீடு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. அந்தவகையிலேயே உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் போன்ற சர்வதேச நிறுவனங்களுக்காக அதிக முதலீட்டை அமெரிக்க வழங்கி வந்திருந்தது. அதுமட்டுமன்றி, யு.எஸ் எய்ட் (U.S. AID) என்பதனூடாக தென்பூகோள நாடுகளில் வளர்ச்சித்திட்டங்களை மேற்கொண்டிருந்தது. இதற்கு பெருமளவு நிதியை ஒதுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. சராசரியாக அண்மைய வருடங்களில் 70 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக வெளிநாட்டு உதவிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணளவாக அமெரிக்காவின் மொத்த கூட்டாட்சி செலவீனத்தில் 1 சதவீதம் வெளிநாட்டு உதவிக்காக வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் ஜனநாயக மீட்பு என்ற பெயரில் உலகில் இராணுவச்செலவீனங்களை அமெரிக்கா உயர்த்தியது. தலீபான்களுக்கு எதிரான போரிற்கு ஆப்கானிஸ்தானில் படைக்குவிப்பு மற்றும் மேற்காசியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் - ஹமாஸ் - ஹவுதி மற்றும் இதர இராணுவ குழுக்களுக்கு எதிராக சிரியா-ஈராக் போன்ற நாடுகளில் படைக்குவிப்பு என அமெரிக்க எல்லைக்கு வெளியே இராணுவ வீரர்களின் உயிரிழப்பும், இராணுவச் செலவீனமும் உயர்வாக காணப்பட்டது. எடுத்துக்காட்டாக சி.என்.என் செய்திக்குறிப்பில் (ஏப்ரல்-04, 2025), 'ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி போராளிகளுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கையின் மொத்த செலவு மூன்று வாரங்களுக்குள் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை நெருங்குகிறது' எனக்குறிப்பிடப்பட்டது. இத்தகைய செலவீனங்கள் அமெரிக்க அரசின் ஏகாதிபத்தியத்தை ஒற்றை மைய அரசியலில் கடந்த 30ஆண்டுகளில் உறுதிப்படுத்த அவசியமாகியது. மாறாக இதன் சுமைகள் அமெரிக்க மக்கள் அனுபவிக்க தள்ளப்பட்டனர்.
அரசியலுக்கு சமாந்தரமாக பொருளாதாரத்திலும் அமெரிக்கா மறைமுகமாக நெருக்கடியை கடந்த 30 ஆண்டுகளில் எதிர்கொண்டிருந்தது. குறிப்பாக 20ஆம் நூற்றாண்டின் அரசியல் பொருளாதார பிரிப்பிலான மூன்றாம் மண்டல நாடுகளின் இயல்புகளை அமெரிக்காவும் கொண்டிருந்தது. குறிப்பாக பொருளாதார சார்பு நிலை என்பது மூன்றாம் மண்டல நாடுகளின் இயல்பாக காணப்படுகின்றது. அமெரிக்காவின் முதலாளிகள் குறைந்த செலவீனத்தை கருதி முதலீடுகளை தென்பூகோள நாடுகளை நோக்கி நகர்த்தியமையால், அமெரிக்காவின் முதலீடுகள் தென்பூகோள நாடுகளில் குவிக்கப்பட்டது. இப்பின்னணியில் அமெரிக்கா பொருட்களுக்கு தென்பூகோள நாடுகளை தங்கியே சார்ந்தே இருக்க வேண்டிய தேவை காணப்பட்டது. எடுத்துக்காட்டாக 'ஐ-போன்'. ஐ.போன் தயாரிக்கும் 'அப்பிள்' (Apple) நிறுவனம் அமெரிக்க நிறுவனமாக அமைகின்ற போதிலும், அதன் உற்பத்தி செயற்பாடுகள் அதிகம் கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளான சீன, தைவான், தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலேயே பரவலாக காணப்பட்டது. தற்போது ட்ரம்ப் அமெரிக்காவில் முதலீடுகளை அதிகரிக்கும் செயற்பாட்டினை முன்னகர்த்தியுள்ளார். இது தொடர்பில் நிதிச்சேவை நிறுவனமான வெட்பஷ் செக்யூரிட்டீஸின் (Wedbush Securities) தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான உலகளாவிய தலைவரான டான் ஜவ்ஸ் சி.என்.என் செய்திச்சேவைக்கு தெரிவிக்கையில், 'அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அவற்றின் தற்போதைய விலையான சுமார் 1,000ஐ விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம்' என்ற எச்சரிக்கையை வழங்கியுள்ளார். மேலும் குறைந்த செலவீனத்தை இலக்கு வைத்து அமெரிக்காவின் முதலீடுகள் தென்பூகோள நாடுகளை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளமையால் அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்யும் உயர்வடைந்துள்ளது. அமெரிக்காவில் காணப்படும் வேலை வாய்ப்புக்களையும் குறைந்த ஊதியத்தில் குடியேற்ற மக்கள் உள்வாங்கப்படுவதனால், அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பில் சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆதாலாலேயே ட்ரம்ப் சட்டத்துக்கு புறம்பான குடியேறிகள் மீது இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றுகின்றார்.
டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு எதிரான அதிகரிக்கப்பட்ட வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்பை, 'விடுதலை தினமாக' விழித்திருந்தார். உரையின் போது உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரிகளை கட்டவிழ்த்துவிட்டதால், 'வேலைகள் மற்றும் தொழிற்சாலைகள் மீண்டும் கர்ஜிக்கும்' என்று பெருமை பேசியுள்ளார். மேலும், ‘பல தசாப்தங்களாக, நம் நாடு அருகிலும் தொலைவிலும் உள்ள நாடுகளால், நண்பர்களாகவும் எதிரிகளாகவும், சூறையாடப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சூறையாடப்பட்டு வருகிறது’ என தாராள பொருளாதாரத்தை கடுமையாக சாடியுள்ளார். இது அமெரிக்கா இதுவரை நன்மை பாராட்டிய தாராள பொருளாதாரம் அமெரிக்காவின் சுதந்திரத்தை காவு கொண்டுள்ளது என்ற செய்தியையே ட்ரம்ப் வழங்குகின்றார். கடந்த 50 ஆண்டுகளில் பொருளாதார செல்வத்தின் மிகப்பெரிய பயனாளிகளில் ஒருவராக, குறிப்பாக மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு, வரிவிதிப்பு அறிவுப்பும் ட்ரம்பின் செய்தியும் “அமெரிக்காவை ஒரு பாதிக்கப்பட்டவராகக் கருதுவதில்" இருந்து உருவாகிறது என மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையின் எமரிட்டஸ் பேராசிரியர் ரிச்சட் வோல்ஃப் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அமெரிக்க ஏகாதிபத்திய சரிவையும் அடையாளம் காட்டியுள்ளார். ‘உலகின் பிற பகுதிகளின் வளர்ந்து வரும் பொருளாதார செல்வத்திற்கும், அமெரிக்க மேலாதிக்கத்தில் தொடர்புடைய சரிவுக்கும் பதிலளிக்கும் விதமாக, ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மறுப்பதிலும் விரக்தியிலும் மற்றவர்களைத் தாக்குகிறார்கள்’ என வோல்ஃப் தெரிவித்துள்ளார்.
எனவே, அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள அரசியல்-பொருளாதார
ரீதியிலான அதிரடி நடவடிக்கைகள், அமெரிக்கர்களின் எதிர்பார்ப்பாகவே அமைந்துள்ளது. வரி
விதிப்பை தொடர்ந்து வார இறுதியில் அமெரிக்க நகரங்களில் திரட்டப்பட்ட ட்ரம்பிற்கு எதிரான
போராட்டங்கள், ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள் எதேச்சதிகாரமாக திசைதிருப்பப்படுவதற்கு
எதிரான உடனடி விளைவாக அமைந்திருந்தது. குறிப்பாக ட்ரம்ப் அரசியலமைப்பை மாற்றுவதனூடாக
மூன்றாம் முறை ஜனாதிபதி பதவிக்கான தகைமையை திசைதிருப்புவது தொடர்பாக செய்திகள் உலாவியது.
இதுவே அமெரிக்க மக்களை உடனடி போராட்டத்திற்கு தூண்டியது. இதில் ட்ரம்பின் குடியேற்ற
நடைமுறைகளுக்கு எதிரானவர்களுக்கும் மற்றும் வரி விதிப்புகளுக்கு எதிரானவர்களுக்கும்
சாதகமான சூழலை வெளிப்படுத்தியது. மேலும் ட்ரம்பின் வரிவிதிப்பு உடனடி விளைவாக அமெரிக்க
நுகர்வோர் மீது கடுமையான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். இதன் பின்னணியிலேயே ட்ரம்ப்
தற்காலிகமாக வரி விதிப்பில் பின்வாங்கியுள்ளார். ட்ரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்புக்கள்
பின்புலத்தில் அமெரிக்காவில் உற்பத்தி முதலீட்டை அதிகரிக்க செய்யும் செயற்பாடாகும்.
அதற்கான முயற்சிகளையும் ட்ரம்ப் நிர்வாகம் முடுக்கியுள்ளது. இது திறந்த பொருளாதாரத்தை
நிராகரித்து அமெரிக்கா மூடிய பொருளாதார இயல்புக்குள் நகர்த்தப்படுவதையே அரசியல்-பொருளாதார
நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Comments
Post a Comment