புதுடெல்லி-கொழும்பு உறவு அசோகப்பேரரசின் பௌத்த பண்பாட்டிற்கு நகர்த்தப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

'நாம் வரலாற்றை மாற்ற முடியும், ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது'

-அடல் பிஹாரி வாஜ்பாய்-


இலங்கை அரசியலிலும், ஈழத்தமிழசியலிலும் இந்தியா தவிர்க்க முடியாததொரு காரணியாகும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் ஒவ்வொருவரிடமும் காணப்படினும், பிராந்திய அரசாக இந்தியாவின் தாக்கம் இலங்கை அரசியலிலும் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்திலும் ஆழமான கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் பின்னணியிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலங்கைக்கான விஜயம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. எனினும் இந்தியப் பிரதமரின் விஜயம் வரலாற்றை திசைதிருப்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக இலங்கை-இந்திய பண்பாட்டு உறவு தமிழக-ஈழத்தமிழர்கள் பண்பாட்டு உறவை மையப்படுத்தியே கடந்த காலங்களில் விபரிக்கப்பட்டது. இந்திய-இலங்கை அரசியலும் அதன்வழியேயே நிர்மாணிக்கப்பட்டது. எனினும் அண்மைக்காலத்தில் தமிழக-ஈழத்தமிழர் உறவில் விரிச ஏற்படுத்தப்படுகிறது. இதுதொடர்பில் கடந்த வார இப்பத்தியில் விபரிக்கப்பட்டிருந்தது. அதேவேளை நரேந்திர மோடியின் விஜயத்தில், கொழும்பு-புதுடெல்லி பௌத்த பண்பாட்டினை மையப்படுத்திய உறவை வலுப்படுத்தியுள்ளமையை இனங்காணக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை கொழும்பு-புதுடெல்லி உறவு, பௌத்த பண்பாட்டால் பாதுகாக்கப்படுவதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மூத்த அரச இராஜதந்திரியான கௌடில்யர் அண்டை நாட்டு வெளியுறவுக்கொள்கையில் அதிக கவனத்தை குவித்துள்ளார். இந்திய அரசாங்கங்களின் வெளியுறவுக்கொள்கை உருவாக்கங்களிலும் கொடில்யரின் சிந்தனைகள் ஆழமான செல்வாக்கை செலுத்துகின்றது. ஒரு அரசின் பாதுகாப்பு, அரசுகளின் வலையமைப்பிற்குள் அதன் நிலைப்பாட்டால் தீர்மானிக்கப்படுகிறது என்றும், அதன் உடனடி அண்டை நாடுகள் 'இயற்கை எதிரிகள்' என்றும், அவர்களின் அண்டை நாடுகள் ஷஇயற்கை கூட்டாளிகள்' என்றும் கௌடில்யர் விபரிக்கின்றனர். இப்பின்னணியில் உடனடி அண்டை நாடுகள் மீது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை கரிசனை தொடர்ச்சியாக உயர்வாகவே நிலைபெற்று வந்துள்ளது. ஆட்சியாளர்களின் எண்ணங்களில் அணுகுமுறைகளில் மாற்றங்களை அவதானிக்கின்ற போதிலும், இந்தியா உடனடி அண்டை நாடுகளின் மீது அதிக கவனக் குவிப்பை பேணி வந்துள்ளது. இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூருக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தின் போது, இரண்டு தெற்காசிய நாடுகளும் தங்கள் நீண்டகால பகைமையை ஏன் வெல்ல வேண்டும் என்பது குறித்து பேசினார். அதில், 'நாம் வரலாற்றை மாற்ற முடியும், ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது' எனக்குறிப்பிட்டிருந்தார். இது இந்தியா-பாகிஸ்தான் உறவை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. பொதுவான அரசியல் வரலாற்றையும், புவிசார் அரசியலையும் எதார்த்தபூர்வமாக விபரிக்கின்றது.

இந்திய பிரதமரின் 2025ஆம் ஆண்டு இலங்கையின் அநுராதபுர விஜயமும், காட்சிகளும், உரையாடல்களும் இலங்கை-இந்திய உறவின் வரலாற்றை மாற்றுவதாகவே அமைகின்றது. இலங்கை-இந்திய உறவின் ஆதாரத்தை நட்புக் காரணியை மாற்றுவதாகவே அறிய முடிகின்றது. நீண்டகாலமாக இந்தியா-இலங்கை பண்பாட்டு உறவு, தமிழகம் மற்றும் ஈழத்தமிழர் பண்பாட்டு தொடர்ச்சியாகவே அணுகப்பட்டிருந்தது. எனினும் நரேந்திர மோடியின் அனுராதபுர பயணம் இந்திய-இலங்கையின் பௌத்த பண்பாட்டு சுவடுகளை புதுப்பித்துள்ளதுடன், தமிழகத்தை ஆக்கிரமிப்பு சக்தியாக வேறுபடுத்துகின்றதா என்ற சந்தேகங்களை உருவாக்குகின்றது. இலங்கைக்கான விஜயத்தில் நரேந்திர மோடி இலங்கையின் புராதன இராச்சிய நகரான அநுராதபுரத்திற்கு சென்று, இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான ஆழமான பௌத்த பண்பாட்டின் அடையாளமான புனித ஸ்ரீ மகாபோதி மரத்தில் பிரார்த்தனை செய்தார். மேலும், பண்டைய அனுராதபுர நகரத்திற்குள் உள்ள அட்டமஸ்தானம் அல்லது எட்டு புனித தலங்களில் ஒன்றான 'உட மலுவ' விஜயம் செய்து, எட்டு பெரிய பௌத்த ஆலயங்களின் தலைமை பிக்கு (அட்டமஸ்தானாதிபதி) மற்றும் நுவரகலவியவின் தலைமை சங்கநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய டாக்டர் பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்து ஒரு சுமூகமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

நரேந்திர மோடியின் அனுராதபுரத்திற்கான விஜயமும், அதன்வழி கட்டமைக்கப்படும் இலங்கை-இந்திய பௌத்த பண்பாட்டு உறவின் ஆழத்தை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, இலங்கையின் ஆதிக்க சக்தியாக பௌத்த மதமும் அதனை நெறிப்படுத்தும் பௌத்த சங்கங்களே காணப்படுகின்றமை நிதர்சனமாகும். இலங்கையின் அரசியலமைப்புக்கும் உயர்வாக பௌத்த சங்கங்களின் விருப்புக்களும் எண்ணங்களுமே காணப்படுகின்றமையை அறியக்கூடியதாக அமைகின்றது. 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் அரசியலமைப்பினூடாக இலங்கையில் செல்வாக்கு செலுத்த முனைந்த போதிலும், கடந்த 30 ஆண்டுகளில் அது எதிர்பார்த்த இலக்கை பூர்த்தி செய்ய போதுமானதாக அமையவில்லை. எனினும் சமீப காலமாக சீன அரசு இலங்கையின் பௌத்த பண்பாட்டை முன்னிறுத்தி உறுதியான உறவை கட்டமைத்து வருகின்றது. குறிப்பாக இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் சீன விஜயத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்களின் இணக்கங்கள் தொடர்பில் சீன மக்கள் குடியரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புத்த மதப் பரிமாற்றங்களின் பிணைப்பைக் கட்டமைக்கவும், மக்களிடையேயும் சகோதர நகரப் பரிமாற்றங்களை ஆழப்படுத்தவும் இரு தரப்பினரும் தயாராக உள்ளனர்' என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை-சீனாவிற்கு இடையிலான பௌத்த பண்பாட்டு உறவு வலிந்து உருவாக்கப்படுவதாகும். எனினும் இந்திய-இலங்கை பௌத்த பண்பாட்டிலான உறவு இயற்கையானதாகும். இதனை மீளப்புதுப்பிக்கும் உரையாடலையும் செயற்பாட்டையுமே மோடியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது.

இரண்டாவது, அனுராதபுரத்தில் காணப்படும் புனித ஸ்ரீ மகாபோதி மரம் இலங்கை-இந்திய பௌத்த பண்பாட்டு உறவின் அடித்தளங்களில் ஒன்றாகும். இலங்கைக்கு பௌத்தம் இந்தியாவிலிருந்தே இலங்கையில் தேவநம்பிய தீசன் காலத்தில் இந்தியப் பேரரசர் அசோகனால் அனுப்பபட்டிருந்தாக வரலாறு கூறுகின்றது. இங்கு ஆழமான செய்தி மறைக்கப்படுகின்றது. அசோகப் பேரரசிற்குள் இலங்கை சிற்றரசு காலணித்துவப்படுத்தப்பட்டு, பௌத்த மதம் திணிக்கப்பட்டு என்பதே வரலாறாக அமையக்கூடியதாகும். இப்பின்னணியிலேயே தேவநம்பியனுக்கு அசோகப்பேரரசின் தூதர் அசோகனின் மகன் மகிந்த தேரரால் 'தீசன்' எனும் பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் பிரதமர் தரிசித்திருந்த புனித ஸ்ரீ மகாபோதி மரம் இந்திய மரத்தின் கிளையில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. இலங்கையில் இறுக்கமாகப் பாதுகாக்கப்படும் மகாபோதி மரம், இந்தியாவில் போத்கயாவில் புத்தர் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு ஞானம் பெற்றதாக நம்பப்படும் மரத்தின் கிளையிலிருந்தே கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் போத்கயாவில் போதி மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மரக்கன்று, பேரரசர் அசோகரின் மகள் தேரி சங்கமித்தாவால் கொண்டு வரப்பட்டு, கோயிலின் வளாகத்தில் நடப்பட்டதாக நம்பப்படுகின்றது. இப்பின்னணியில் இந்திய-இலங்கை பௌத்த பண்பாட்டு உறவுகளில் புனித ஸ்ரீ மகாபோதி மரமும் சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தியப் பிரதமர் இலங்கையின் பௌத்தத்தின் ஆதரமாக இந்தியாவை நினைவூட்டுவதாக மகாபோதி மர தரிசனம் அமைகின்றது.

மூன்றாவது, இந்தியாவில் இந்து மதத்தின் கூறாக பௌத்தத்தை உள்வாங்கியுள்ள நிலையில், இந்தியா இலங்கையை பௌத்தத்தின் சிற்றரசாக ஏற்றுக்கொள்கின்றதா என்ற சந்தேகங்களை நரேந்திர மோடியின் அனுராதபுர விஜயத்தின் உரையாடல்கள் உருவாக்கியுள்ளது. அனுராதபுர பயணத்தில் இலங்கையில் பௌத்தத்தின் ஆரம்பகால வரலாற்றிலும் தேரவாத பௌத்தத்தின் பரவலிலும் முக்கியத்துவம் வாய்ந்த உடமலுவவுக்குச் சென்றிருந்த நரேந்திர மோடி, 1960களில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் புத்தரின் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உடமலுவ அட்டமஸ்தானாதிபதியிடம் பகிர்ந்து கொண்டார். இலங்கையில் இந்த புனித நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் விவாதிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், போத்கயாவை ஆன்மீக நகரமாக மேம்படுத்துமாறு அட்டமஸ்தானாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஜனாதிபதி திசாநாயக்கவுடன் கலந்துரையாடிய பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அதை நனவாக்குவதற்கு பாடுபடுவதாகவும் உறுதியளித்தார். எனினும் போத்கய விவகாரம் இந்தியாவில் வேறுபட்ட முரண்நிலையை கொண்டுள்ளது. இந்தியாவின் போத்கய இந்துக்களின் ஆதிக்கம் நிறைந்த பிரதேசமாகவே காணப்படுகின்றது. 1891ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த அநகாரிக தர்மபாலா தலையீட்டினாலேயே மகாபோதி சங்கம் உருவாக்கப்பட்டு, பௌத்த கரிசணை உள்வாங்கப்பட்டது. எனினும் சுதந்திர இந்தியா அரசில் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போத்காயா கோவில் சட்டம் மூலமாக பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் சமபங்கு (50-50) நிர்வாக உரிமை வழங்கப்பட்டது. எனினும் தலைமை இந்துக்களிடம் பாரப்படுத்தப்பட்டது. இவ்விவகாரம் இன்றுவரை பௌத்த பிக்குகளின் போராட்டத்திற்கு ஆதாரமாகி உள்ளது. இவ்வாறான பின்னணிச் சூழலியே இந்துவான நரேந்திர மோடி இலங்கையில் பௌத்த பிக்குவிடம் மண்டியிட்டு வணங்கியுள்ளார். மோடியின் செயற்பாடுகளும் உரைகளும் இந்தியாவை புனித இந்துப் பிரதேசமாக பேணுவதுடன், தென்னிலங்கையர்களின் மகாவம்ச மனோநிலையில் இலங்கையை புத்தரால் ஆசிர்வதிக்கப்ட்ட பௌத்த பூமியாக ஏற்பதாகவே அமைகின்றது.

நான்காவது, அனுராதபுரம் வடஇந்தியாவின் அசோகப் பேரரசு மற்றும் பௌத்தத்தின் வழி பண்பாட்டு உறவை இறுகப் பிணைக்கின்ற போதிலும், தென்னிந்திய ஆதிக்க சக்தியாக அனுராதபுர இராசதானியின் வீழ்ச்சிக்கு காரணமாகின்ற வரலாற்றையும் பகிர்கின்றது. 1,300 ஆண்டுகளாக செழித்து வளர்ந்த இலங்கையின் அரசியல் மற்றும் மத தலைநகரான அனுராதபுரம், கி.பி 993இல் தென்னிந்திய சோழப் படையெடுப்பிற்குப் பிறகு கைவிடப்பட்டது. சோழர்கள் தலைநகரை அனுராதபுரத்திலிருந்து பொலநறுவைக்கு மாற்றியதுடன், சைவப் பண்பாட்டையும் ஆரம்பமாக நிறுவினார்கள். இன்றும் பொலநறுவையில் சோழர்கால சிவலாயம் இனங்காணக்கூடியதாக அமைகின்றது. சோழ ஆக்கிரமிப்பால் சிதைக்கப்பட்ட தேரவாத பௌத்தத்தின் பண்பாட்டு இராச்சியமான அனுராதபுரம் பல ஆண்டுகளாக அடர்ந்த காட்டில் மறைக்கப்பட்டது. இப்பின்னணியில் நரேந்திர மோடியின் அனுராதபுரத்திற்கான விஜயம், இலங்கையின் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டு, இன்றைய இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள இந்தியாவின் அசோகப் பேரரசின் ஆக்கிரமிப்பு காலத்துடன், இலங்கையும் இந்தியாவும் இணங்கிப் போகும் சூழமைவே வெளிப்படுத்துகின்றது. இது இலங்கையின் ஆதிக்க சக்தியாக காணப்படும் பௌத்த பண்பாட்டால் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

எனவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் இலங்கை-இந்திய உறவை பௌத்த பண்பாட்டினூடாக மீள்கட்டுமானம் செய்கின்றது. வரலாற்றில் இலங்கை மீதான தென்னிந்திய ஆக்கிரமிப்பையும், நிகழ்காலத்தில் ஈழத்தமிழர்கள் மீதான கரிசணையும் நிராகரித்து, புதுடெல்லி-கொழும்பு அசோகப்பேரரசு கால பௌத்த பண்பாட்டு உறவை மீளப் புதுப்பிப்பதை அரசியல் அவதானிகள் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தில் சுட்டிக்காட்டுகின்றனர். இந்;தப் பயணம், பகிரப்பட்ட பாரம்பரியத்திற்கான இந்தியாவின் மீள்புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இதனை அடையாளப்படுத்தும் வகையிலேயே இந்தியப் பிரதமரின் வருகை தொடர்பான இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தின் செய்திக் குறிப்பில், 'பிரதமர் மோடியின் வருகை, நூற்றாண்டுகளின் நட்பு, வளமான எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்பு என்ற கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது, இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மீக உறவுகளை அடையாளப்படுத்துகிறது' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் சமூக வலைத்தளப்பதிவும், 'இந்த வருகை நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது' என்றவாறு அமையப்பெற்றுள்ளது. இந்தப்பின்னணியில் இந்தியாவின் இந்து மதமும் இலங்கையின் பௌத்தமும் தமக்குள் நிலங்களை பங்கு போட்டுள்ளதா? என்ற சந்தேகமே இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான ஈழத்தமிழர்களின் விளைவாக அமைகின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-