யூதர்களுக்கான பிரித்தானியாவின் பால்போர் பிரகடனமும் ஈழத்தமிழர்களுக்கான கனடா பிரதமரின் இனப்படுகொலை அறிக்கையும்! -ஐ.வி.மகாசேனன்-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு தினம், ஈழத்தமிழர்கள் பரந்து வாழும் நாடுகள் அனைத்திலும் நினைவு கூறப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுடன் ஒருங்குசேர்ந்து வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்கள். உயர்ந்தபட்சமாக கனடா நாட்டின் பிரதமர், ‘இந்தத் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், இழந்த உயிர்களை - பிரிந்த குடும்பங்கள், பேரழிவிற்குள்ளான சமூகங்கள் மற்றும் இன்றுவரை காணாமல் போனவர்களை - நாங்கள் நினைவு கூர்கிறோம்’ என அறிக்கை வெளியிட்டிருந்தார். தமிழினப் படுகொலை நீதிக்கோரிக்கைகளுக்கான சர்வதேச ஆதரவுத் தளம் வலுவாக அதிகரித்து வருகின்றமையை 16ஆம் ஆண்டு நினைவேந்தலில் தெளிவாக இனங்காணக்கூடியதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இக்கட்டுரை சர்வதேச அரசியல் பிரதிநிதிகளின் தமிழினப்படுகொலை நீதிக்கோரிக்கைக்கான ஆதரவு தளத்தை ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்வது தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
யூதர்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க எழுச்சியை ஏற்படுத்திய பால்போர் பிரகடனம் நவம்பர்-2, 1917அன்று வெளியிடப்பட்டது. இப்பிரகடனம் ‘பாலஸ்தீனத்தில் யூத மக்களுக்கான தேசிய தாயகத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தும்’ பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு முக்கிய அறிக்கையாகும். இந்த அறிக்கை, பிரிட்டனின் அப்போதைய வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் பால்போர், பிரிட்டிஷ் யூத சமூகத்தின் முக்கியத் தலைவரான லியோனல் வால்டர் ரோத்ஸ்சைல்டுக்கு எழுதிய கடிதத்தின் வடிவத்தில் வந்தது. பல நூற்றாண்டுகளாக புலம்பெயர்ந்தோர் மற்றும் துன்புறுத்தலுக்குப் பிறகு யூத தாயகத்தை நிறுவ முயன்ற யூத தேசியவாதம் மற்றும் சியோனிச இயக்கத்தின் பரந்த சூழலில் அதன் பங்கில் அதன் முக்கியத்துவம் உள்ளது. முதலாம் உலகப் போரின் போது, பிரிட்டன் நேச நாடுகளின் போர் முயற்சிகளுக்கு யூத ஆதரவைப் பெற முயன்றபோது, அரபு மக்களுடனான சிக்கலான உறவுகளையும் அவர்களின் சுதந்திரத்திற்கான விருப்பங்களையும் வழிநடத்த முயன்றபோது இந்த பிரகடனம் வெளிப்பட்டது. இந்தப் பிரகடனம் சியோனிச இயக்கத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சியோனிச நோக்கத்தை ஒரு யதார்த்தமாக மாற்றியது. ஏனெனில் இது ஒரு பெரிய உலக சக்தியிடமிருந்து அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியது. யூத நிலத்தின் உரிமைகோரல்களின் சட்டபூர்வமான தன்மையை வலுப்படுத்தியது.
பால்போர் பிரகடன அரசியல் சூழல் பிரதிபலிப்பை கனடாவில் வெளிப்படையாக ஈழத்தமிழர்களால் இனங்காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச ஆதரவுத்தளம் என்பது அந்நாட்டின் உள்ளக கட்சி மோதல்களை கடந்ததாக அமைதல் வேண்டும். கனடாவில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுத்தளத்தில் அத்தகைய சூழமைவை அறியக்கூடியதாக உள்ளது. நடந்து முடிந்த கனடா பாராளுமன்றத் தேர்தலில் இரண்டாம் நிலையை பெற்றிருந்த கனடா பழமைவாத கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே, தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், தமிழினப்படுகொலையை கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயராக விழித்து, ஈழத்தமிழர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். தனது அறிக்கையில், "பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும், பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் கௌரவிக்கிறோம். நீதிக்கான அவசரத் தேவையை அங்கீகரிக்கிறோம். ராஜபக்ச ஆட்சியின் போர்க்குற்றங்களை மறக்கக்கூடாது. அல்லது அதன் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடப்படக்கூடாது. கனடா வலுவான நடவடிக்கை எடுத்து பொறுப்புக்கூறலைக் கோர வேண்டும். போர்க்குற்றவாளிகளுக்கு கனடா ஒருபோதும் பாதுகாப்பான புகலிடமாக இருக்கக்கூடாது. தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் உண்மையான விளைவுகளை சந்திப்பதை உறுதிசெய்ய ஒரு பொது அறிவு பழமைவாத அரசாங்கம் பாடுபடும்." எனக்குறிப்பிட்டுள்ளார். இது ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தில் கனடாவின் முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகிறது.
கனடா பிரித்தானிய முடிக்குரிய தேசமாகும். மன்னர் சார்லஸ் மே 26-27ஆம் திகதிகளில் இருநாள் விஜயமாக கனடாவுக்கு வருகை தரவுள்ளார். குறிப்பாக நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘கனடா 51வது மாநிலமாக மாறக்கூடும்’ என்று தொடர்ந்து கூறி வந்த நிலையில், நாட்டின் தலைவராக மன்னர் சார்லஸ் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்து அரியணையில் இருந்து உரை நிகழ்த்த உள்ளார். இது ‘மன்னர் கனேடிய அரசியலமைப்பு மற்றும் கனேடிய அரசாங்கத்தின் அடையாளம்’ என்பதை உணர்த்துகிறது. மன்னர் பிரித்தானியா மற்றும் கொமன்வெல்த் நாடுகளின் வலையமைப்பின் உயர் கௌரவமாகும். சர்வதேச அரசியலில் இத்தகைய உயர் பின்புலத்தை கொண்டுள்ள கனடாவின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவை எளிதாக கடந்து விடுவது, ஈழத்தமிழரசியலின் பலவீனமான அரசியல் வெளிப்பாடுகளையே உறுதிப்படுத்தக் கூடியதாகும்.
இன்று காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையுடன் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை பொதுவெளியில் மதிப்பிடப்படுகின்றது. ஈழத்தமிழர்கள் 80 ஆண்டுகளுக்கு பின்சென்று யூத இனப்படுகொலை மற்றும் யூதர்தளின் தந்திரோபாய நகர்வூடாக அரசு உருவாக்கம் என்பதை மதிப்பிடுவது சமகால சூழலை கையாள பொருத்தமானதாக அமையும். யூதர்களுக்கு, முதலாம் உலகப்போர் காலத்தில் பிரித்தானிய வெளிப்படையான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது. இதனை மையப்படுத்தியே, இரண்டாம் உலகப்போர் முடிவில் மூன்று தசாப்தகால இடைவெளியில் இஸ்ரேல் என்ற அரசை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் யூதர்கள் உருவாக்கி கொண்டார்கள். ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை பேரினவாத அரசாங்கங்களின் இனப்படுகொலை சர்வதேச அரங்கில் நீண்டகாலமாக ‘'போர்க்குற்ற’ வரையறைக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஓய்வுபெற்ற சர்வதேச தலைவர்கள் போர்க்குற்றத்தை தாண்டி உச்சரிக்கமுற்பட்ட போதிலும் ‘இனப்படுகொலை’ (Genocide) என்பதை தவிர்த்து வந்தார்கள். குறிப்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது ‘வாக்குறுயளிக்கப்பட்டநிலம்’ (A Promised Land) எனும் புத்தகத்தில் இலங்கையில் இன சம்காரம் (Ethnic slaughter) இடம்பெற்றதாக குறிப்பிட்டு இருந்தார். எனினும் தற்போது கனடா அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக ஈழத் தமிழர்கள் மீது இலங்கை பேரினவாத அரசாங்கங்களால் நிகத்தப்பட்டுள்ள இனப்படுகொலையை குறிப்பிடுகின்றன. மேலும் இனப்படுகொலையாளிகளை பெயரிட்டு குறிப்பதுடன், ஒருசிலருக்கு பயணத்தடை விதித்துள்ளதுடன், சர்வதேச நீதிப்பொறிமுறைக்கான ஆதரவையும் பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார்கள். இதனை ஈழத்தமிழர்கள் பற்றிக்கொள்வதும் தொடர்வதும் அவசியமாகிறது.
கனடாவிற்கு சமாந்தரமாக சர்வதேச நாடுகளிலும் பரவலாக அரசியல் பிரதிநிதிகள் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்ட ஆதரித்துள்ளார்கள். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் தமிழினப்படுகொலை நினைவு வாரத்தில் எக்ஸ் தளத்தில் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்கள். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெர்ப் கொனவே தமிழர் சுயநிர்ணய உரிமைக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில், "தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நியாயமான மற்றும் நீடித்த அரசியல் தீர்வுக்காக நாங்கள் தொடர்ந்து வாதிடுகிறோம்” எனப் பதிவு செய்துள்ளார். மேலும், வட கரோலினாவின் 2வது காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதியாகப் பணியாற்றும் காங்கிரஸ் பெண் டெபோரா ரோஸ் மற்றும் பென்சில்வேனியாவின் 12வது காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதியான காங்கிரஸ் பெண் சம்மர் லீ ஆகியோரும் தமிழ் இனப்படுகொலையை சுட்டிக்காட்டி, ஈழத்தமிழர்களுக்கான ஆதரவை பதிவு செய்துள்ளார்கள். மே-16அன்று அமெரிக்க காங்கிரஸில் ஆற்றிய உரையில் , அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டான் டேவிஸ், இலங்கையில் தமிழ் இனப்படுகொலையின் 16வது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தார். அவ்நினைவு கூரலில், “தமிழ் இனப்படுகொலையில் நடந்த அட்டூழியங்களைப் போலவே, அது மீண்டும் ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என அமெரிக்க காங்கிரஸை விழித்ததுடன், “காங்கிரஸ் ஈழத் தமிழர்களுடன் இணைந்து நிற்க" அழைப்பு விடுத்து தனது கருத்துக்களை முடித்தார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும் தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர், ஈழத் தமிழ் பாரம்பரியத்தின் முதல் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன், வெளியுறவுக்கான நிழல் அமைச்சர் ஆண்ட்ரூ ரோசிண்டெல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுக்கான நிழல் அமைச்சரான லூயி பிரெஞ்சு, வீட்டுவசதி, சமூகங்கள் மற்றும் உள்ளாட்சித்துறை நிழல் அமைச்சர் டேவிட் சிம்மன்ஸ், ஹாரோ ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன், சிப்பிங் பார்னெட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.டி. டேம் தெரசா வில்லியர்ஸ், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் முன்னாள் தலைவரான எலியட் கோல்பர்ன் ஆகியோர் தமிழினப்படுகொலைக்கான ஈழத்தமிழர்களின் நீதிப்போராட்டத்திற்கான ஆதரவை பதிவு செய்துள்ளார்கள்.
ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை விழிக்க தயங்கிய சர்வதேச தளத்தில், இனப்படுகொலை நிகழ்ந்துள்ளமையை ஏற்றுக்கொண்டு, ஈழத்தமிழர்களின் நீதிப்போராட்டத்திற்கு சர்வதேச ஆதரவு தளம் அதிகரிக்கப்படுவதில், புலம்பெயர் சமூகத்தின் அரசியல் பாராட்டிற்குரியதாகும். எனினும் இது முழுமையாக நிறைவு பெறுவதில் புலம்பெயர் சமூகத்திடையே ஓர் ஒத்துழைப்பு பொறிமுறை பிரதானமாகிறது. தாயகத்திற்கு சமாந்தரமாகவே புலம்பெயர் தளத்திலும் ஈழத்தமிழர்கள் சிதறடிக்கப்பட்டுள்ளனர். தாயக விடுதலையை மையப்படுத்திய செயற்பாட்டில் புலம்பெயர் சமூகங்களிடையே ஒருங்கிணைவு அவசியமாகிறது. சமகாலத்தில் இனப்படுகொலையை மையப்படுத்தி சர்வதேச தளத்தில் ஈழத்தமிழர்களுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலையை இனங்காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச தளத்தில் தனியன்களாக உள்ள ஈழத்தமிழ் ஆதரவுத்தளத்தை ஒருங்கிணைப்பது என்பது, புலம்பெயர் கட்டமைப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைவிலேயே சாத்தியப்படுத்தக்கூடியதாகும். யூதர்களின் நடைமுறை அரசியலில் முரண்நகைகள் காணப்படினும், யூத தேச உருவாக்கத்தில் சியோனிச புலம்பெயர் தள தந்திரோபாய செயற்பாட்டினை ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
எனவே ஈழத் தமிழர்களுக்கான சர்வதேச ஆதரவு தளம் என்பது ஏறக்குறைய ஏனைய வெற்றி பெற்ற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தின் சாயல்களை வெளிப்படுத்துகின்றது. இது ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான சமிக்ஞையாகும். இதனை வெறுமனவே உணர்ச்சிகளுக்குள் சுருக்கி விடமுடியாது. அல்லது தானாக கனிந்துவருமென ஒதுங்கி இருந்து விடவும் முடியாது. ஏனெனில் தென்னிலங்கை அரசுடைய தரப்பு ஆகும். அரசுகளுக்கிடையிலான உறவை முதன்மைப்படுத்தும் சர்வதேச அரசியல் உறவில், இலங்கை அரசாங்கம் அரசு இயந்திரத்தினூடாக உயர்ந்தபட்ச இராஜததிர பொறிமுறையை கையாளும். அதனை எதிர்கொள்ளும் வகையிலேயே ஈழத்தமிழர்களின் தந்திரோபாய நடவடிக்கைகள் அமைய வேண்டும். இதனூடாகவே சாதகமான சூழலை, வெற்றிக்குரிய சூழலாக மாற்ற முடியும்.
Comments
Post a Comment