தேசிய மக்கள் சக்தியின் 'இனவாதமற்ற ஆட்சி' பிரச்சாரமும் சிங்கள பௌத்தமயமாக்கும் ஆட்சியும்! -ஐ.வி.மகாசேனன்-

ஜே.வி.பி பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனரஞ்சக அரசியலின் தேர்தல் யுக்திகள் தொடர்பிலான விமர்சனங்கள் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னரான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் பிராச்சரங்களில் அதிகளவில் வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதன் செயலாக்க தன்மைகள் தொடர்பில் சமகாலத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகள் நிறைந்துள்ளன. இந்த பின்னணியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த காலங்களை இருண்ட காலமாகவும், பழையவர்களை சாத்தான்களாகவும் சித்தரித்து, தங்களை புறக்கணிப்பதனூடாக பழைய இருண்ட காலத்திற்குள் சாத்தானின் பிடிக்குள் செல்வீர்களென்ற எச்சரிக்கை அச்சுறுத்தல்களை முன்வைக்கின்றார்கள். தங்களின் கடந்த காலங்களுக்கு பொறுப்பு கூறாது, தங்களை மீட்பர்களாகவும் புனிதர்களாகவும், தங்கள் ஆட்சியை ஒளி நிறைந்ததாகவும் சித்தரிக்க முயல்கின்றார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஏழு மாதங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் அடையப்பட்ட விகிதங்களையாவது பொதுவெளியில் சொல்ல திராணியற்ற நிலைமையிலேயே உள்ளார்கள்.  இக்கட்டுரை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, 2024-செப்டம்பர் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் யாழ்ப்பாணத்தில் கொடுத்த வாக்குறுதிகளின் தன்மையை கடந்த ஏழு மாத கால ஆட்சியில் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

2024 செப்டம்பர்-05அன்று அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு இலங்கை வந்திருந்தார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கடந்த கால அரசாங்கங்களை (கடந்த கால பாதை) இனவாதிகளாகவும் தங்களை தூயவர்களாகவும், தங்களை மாத்திரமாகவே தூயவர்களாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்கள். குறிப்பாக தமிழ் மக்களிடம் ஆழமாக நிறைந்துள்ள ராஜபக்ச எதிர்ப்புவாதத்திற்கு தூபமிடும் வகையில் ராஜபக்சாக்கனை சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் குறியீடாக சுட்டிக்காட்டி, ராஜபக்சாக்காளின் பொதுஜன பெரமுன கூடாரத்தின் உறுப்பினர்களே ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச கூடாரத்தில் பரவி இருப்பதாகவும் விழித்திருந்தார். குறிப்பாக ஜி.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும போன்றவர்கள் ராஜபக்சக்களின் அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்தததையும் தற்போது சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூடாரத்தில் உள்ளமையை குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான பின்னணியில் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் யாவரையும் இனவாதியாக விழித்திருந்தார். இது தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து நிலையாகவே அமைகின்றது. தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் இக்கருத்தையே முன்னிறுத்தியிருந்தார்கள். சாத்தான்களின் விகிதம் அல்லது தோற்றம் வேறுபடலாம். எனினும் சாத்தான்கள் என்பது நிதர்சனமாகும். அநுரகுமர திசநாயக்கவும் விதிவிலக்கானவரில்லை என்பதையே கடந்த காலமும் நிகழ்கால ஆட்சியும் உணர்த்துகின்றது.

கடந்த காலங்களில் ராஜபக்சாக்களுடன் இணைந்து பயணித்தவர்களின் பரவலை சுட்டிக்காட்டிய அனுரகுமார திசநாயக்க, ஜே.வி.பியினதும் தனதும் கடந்த காலத்தை மறந்துள்ளார் அல்லது மறைத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியாக பரிணாமமாகியுள்ள ஜே.வி.பியும் கடந்த காலங்களில் ராஜபக்சாக்களுடன் இணைந்து செயற்பட்டிருந்த இனவாதிகள் என்பதை அனுரகுமார திசநாயக்க ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுப்புக்கூறவோ மறுத்திருந்தார். குறிப்பாக 2004ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் அமைச்சராக கூட்டு சேர்ந்து செயற்பட்டிருந்தார். அதுமட்டுமன்றி மகிந்த ராஜபக்ச நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை பெற்றுக்கொள்வதில் 2005ஆம் அண்டு ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சாவின் பிரதான பங்காளியாக ஜே.வி.பியே காணப்பட்டது. அன்று ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினராக இன்றை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் முக்கிய பொறுப்பில் இருந்தார். எனவே, அன்றைய ஜே.வி.பியின் இனவாத செயற்பாடுகளுக்கு அனுரகுமார திசநாயக்கவும் பொறுப்பாளி என்பதே நிதர்சனமாகும். தென்னிலங்கையின் ஏனைய அரசியல்வாதிகள் மீது அனுரகுமார திசநாயக்க முன்வைத்த விமர்சனங்கள் யாவும் அவருக்கும் பொருத்தமானதாகவே அமைகின்றது.

கடந்த கால அரசியல்வாதிகளை இனவாதிகளாவும், தம்மை தூயவாதிகளாகவும் அனுரகுமார திசநாயக்க பிரச்சாரம் செய்திருந்தார். குறிப்பாக தம்மை இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக விழித்திருந்தார்கள். கடந்த ஏழு மாத கால ஆட்சியிலும் இச்சொல்லாடலை அதிகம் விழித்திருந்தார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமது ஆட்சி இனவாதத்தை களைந்துள்ளதாக அடிக்கடி கூறிவருகின்றார்கள். எனினும் கடந்த ஏழு மாதங்களில் இனவாதத்தை களைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாது என்பதற்கு போதியமான விளக்கங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் காணப்படுவதில்லை. அமைச்சரவை சிங்களமயமாக்கம். குறைந்தபட்சம் சன விகிதாசாரப்படி கூட அமைச்சரவையில் ஏனைய இனங்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை.

தையிட்டி விகாரை விவகாரத்தில் முன்னைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிலிருந்து விலகி செல்லும் போக்கையே கடைப்பிடிக்கிறது. கடந்த கால ஆட்சி தவறானது, அவர்கள் இனவாதிகள், தாம் தூய்மையானவர்கள் என்று சொல்லியே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. தற்போது கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளுக்கு நீதி வழங்காது செல்வதும் ஒரு வகையில் இனவாதத்திற்கு துணை போகும் செயற்பாடாகவே அமைகின்றது. சட்டவிரோத தையிட்டி விகாரை நிர்மாண விவகாரத்திற்கு இனவாத கலப்பற்ற சரியான தீர்வை வழங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றமை இனவாத செயற்பாடாகவே அமைகின்றது. அதுமட்டுமன்றி, சட்டவிரோத தையிட்டி விகாரை கட்டிட தொகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்க காலப்பகுதியில் புதியதொரு மண்டப கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரச காவல்துறை இயந்திரங்களாகிய பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பிலேயே குறித்த கட்டிடம் திறக்கப்பட்டது. முப்படைகளின் தலைவராகவும், நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியின் அரச இயந்திரத்தின் பாதுகாப்பில் சட்டவிரோத கட்டிடம் திறக்கப்பட்டுள்ளமைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக்கூற தவறுவது அவர்களின் போலியான முகத்தை தோலுருப்பதாகவும், அவர்களின் இனவாத முகத்தை வெளிப்படுத்துவதுமாகவே அமைகின்றது.

மேலும், தமிழர்களின் அடையாளங்களை சிதைக்கும் முன்னைய ஆட்சியாளர்களின் இயல்பை தொடர்பவர்களாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணப்படுகின்றது. ஈழத்தமிழ் நிலப்பரப்பின் அடையாளங்களில் ஒன்றாகவே ஆணையிறவு உப்பு காணப்படுகின்றது. அதற்கான சிங்கள பெயரிடலை கடந்த கால ஆட்சியாளர்களின் தவறாகவும் தாம் ஒருவார காலப்பகுதிக்குள் அதனை சீர்செய்வதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் குறிப்பிட்டார். எனினும் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் இலங்கை பாராளுமன்ற அவைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க, 'தமிழ் மக்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க வலியுறுத்துவதை இனவாதமாக விழித்துள்ளார்.' பிமல் ரத்நாயக்கவின் உரையாடல் ஆணையிறவு உப்பிற்கு இடப்பட்டுள்ள சிங்களப் பெயர் நிலைப்பதற்கான எதிர்வுகூறல்களையே உருவாக்கியுள்ளது. 

இந்த பின்னணியில் தேசிய மக்கள் சக்தியின் 'இனவாதமற்ற ஆட்சி' எனும் பரப்புரை, சிங்கள இனத்தை தவிர்த்த ஏனைய இனங்களின் அடையாளங்களை இலங்கையிலிருந்து அழித்து விடுவதனால், ஒரே இனம் எஞ்சிய நிலையில் இனவாத தேவைகள் இருக்கப்போவதில்லை என்பதாகவே அமைகின்றது. கடந்த கால ஆட்சியாளர்கள் சிங்கள-பௌத்த இனவாதத்தை பாதுகாக்க, எதிராக கூறி (Negative Propaganda) செய்தவற்றை; தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நேராக கூறி (Positive Propaganda) செய்கின்றது. இரு தரப்பினதும் இறுதி விளைவு சிங்கள-பௌத்த இன இருப்பை பாதுகாப்பதாக மாத்திரமே அமைகின்றது.

கோத்தபாய ராஜபக்சவின் வியத்கம அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர் நாலக கொடகே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களின் மனித உரிமைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படுவதாக அனுரகுமார திசநாயக்க ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முன்னர் சுட்டிக்காட்டியிருந்தார். இத்தகையோருக்கா தமிழ் மக்கள் வாக்களிக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். அதேகேள்வி தேசிய மக்கள் சக்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அவர்களுக்கும் பொருத்தமுடையதாகவே அமைகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஐ.நா மனித உரிமை பேரவை அரங்கில் தமிழ் மக்களின் நீதிக்கோரிக்கைக்கு எதிராகவே உள்ளார்கள். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரித்துள்ளதுடன், ஐ.நா மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச நாடுகள் சுட்டிக்காட்டும் போர்க்குற்ற இராணுவ மற்றும் முன்னாள் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றனர். கோத்தபாய அரசாங்கத்தில் நாலக கொடகே செய்தவற்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கொண்டு வருகின்றார். எனவே இத்தகையோருக்கான தமிழ் மக்கள் உள்ளூராட்சி சபைகளை வழங்க போகிறீர்கள் என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் கேள்விகளிலிருந்தே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

எனவே, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அளந்துவிட்ட பல வாக்குறுதிகளின் முன்னுரையாக ஒப்புவித்த 'இனவாதமற்ற ஆட்சி' என்பதையே கடந்த ஏழு மாதங்களில் முழுமையாக வெளிப்படுத்த முடியாது, கடந்த கால ஆட்சி இயல்புகளை தொடரும் நிலைமைகளே காணப்படுகின்றது. ராஜபக்சாக்கள் 'மணலாற்றை' 'வெலி ஓயா' என மாற்றிக்கொண்டார்களெனில், ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தியினர் 'ஆணையிறவு உப்பை' 'ரஜ லுணு' என மாற்றிக்கொண்டுள்ளார்கள். இதனை தமிழ் மக்கள் சாதாரணமாக ஏற்றுக்கொள்வார்களாயின், நாளை 'யாழ்ப்பாணத்தின்' உத்தியோகபூர்வ பெயர் 'யாபணய' ஆகவும் மாறலாம். 'திருகோணமலை' 'திகுணாமல' ஆகவும் மாறலாம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாட்டு தன்மையை கடந்த ஏழு மாத கால அனுபவங்களில் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேசியம க்கள் சக்தி கொடுக்கப்படும் வாக்குறுதிகளுக்குள் செயற்படுபவர்கள் அல்ல. இலங்கையின் மரபார்ந்த மகாவம் மனோநிலையின் உச்ச செயற்பாட்டாளர்களாகவே உள்ளனர். உள்ளூராட்சி சபை தேர்தல் பிரச்சாரத்துக்கான யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஜனாதிபதி, தையிட்டி விவகாரத்தை இலகுவாக தீர்க்கலாம். அதில் பொதிந்துள்ள இனவாதமே அதனை தீர்க்க தடையாகிறது எனக்கூறிவிட்டு, தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமான பௌத்த பிக்குவிடம் சென்று சமரசம் பேசி தையிட்டி விவகாரத்திற்கு தீர்வு காண பரிந்துரைக்கின்றார். இதுவே மகாவம்ச மனோ நிலை. ஜனாதிபதியின் உரையில் உரிமைகளை கேட்கும் தமிழ் மக்களின் கோரிக்கையே இனவாதமாக காணப்படுகின்றது. மாறாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பௌத்த பிக்கு நீதவானாகின்றார். இத்தகைய தேசிய மக்கள் சக்திக்கா தமிழ் மக்கள் ஊரையும் நகரையும் வழங்கப் போகிறார்களா? என்பதை தமிழ் மக்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-