தமிழக தொலைக்காட்சிகளில் ஈழத்தமிழர்கள் பங்கேற்பும் துயர் பிரச்சாரங்களும்! -ஐ.வி.மகாசேனன்-
ஈழத் தமிழர்களின் அரசியலில் தமிழகத்தின் பங்களிப்பு பிரதான வகிபாகத்தை பெறுகின்றனது. குறிப்பாக பல அரசியல் வரலாற்று அறிஞர்களும் தமிழகத்தினை மையப்படுத்திய சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எதிர்ப்பின் விளைவாகவே ஈழத் தமிழர்கள் நீண்டதொரு இன அழிப்பை இலங்கை தீவில் எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை விவரிக்கின்றார்கள். அதேவேளை தமிழகத்தின் பாதுகாப்பில் ஈழத்தமிழரின் கரிசணை தொடர்பிலும் புவிசார் அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இது மொழியால் ஒன்றினைந்த ஒத்த இன சகோதரத்துவத்தின் அரசியல் இயல்பை தமிழகமும் ஈழத்தமிழர்களும் பகிர்ந்து கொள்கின்றமையையே அடையாளப்படுத்துகின்றது. எனினும் பாக்குநீரிணையின் இடைவெளி சில சந்தர்ப்பங்களில் சில வேறுபாடுகளையும், உறவுகளுக்கு இடையிலான தளர்வையும் வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் நடைமுறையில் அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது. மறுமுனையில் சமகாலத்தில் தமிழக கலைத்துறையில் ஈழத்தமிழர்களின் பிரவேசம் சடுதியாக அதிகரிக்கப்படுகின்றது. இது பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்ட ஒத்த சகோதரத்துவத்தின் இடைவெளிகளை குறைக்கிறது. இது வரவேற்கத்தக்கதாகும். இக்கட்டுரை தமிழகத்தின் கலைத்துறையில் அதிகரிக்கும் ஈழத்தமிழர் வாய்ப்பு, ஈழத்தமிழ்-தமிழக உறவில் அறிவுபூர்வமாக நகர்த்தப்படுகிறதா என்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 5-6 ஆண்டுகளாக தமிழக தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளில் அயலகத் தமிழ் போட்டியாளர்களின் ஈடுபாடு கணிசமாக அதிகரித்து வருகின்றது. தமிழக தொலைக்காட்சி பார்வையாளர்களாய் தமிழகத்துக்கு வெளியே சிங்கப்பூர், மலேசியாவில் வாழும் தமிழ் மக்கள், ஈழத்தமிழர்கள் மற்றும் ஐரோப்பிய தேசங்களில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் காணப்படுகிறார்கள். இதனால் இப்பார்வையாளர்களின் ஈடுபாட்டை உள்வாங்கும் வகையில், போட்டி நிகழ்ச்சிகளில் பரவலாக தமிழகத்துக்கு வெளியே போட்டியாளர்கள் உள்வாங்கும் நிலைகள் காணப்படுகிறது. இப்பின்னணியில் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் தாயகத்தில் வாழ்பவர்களும் மற்றும் புலம்பெயர்ந்தவர்களும் கடந்த காலங்களில் போட்டியாளர்களாக உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலரும் தமிழக மக்களின் மனங்களை வென்று வெள்ளித்திரையில் நாயகர்களாகவும், இசைக் கலைஞர்களாகவும் வளர்ந்துள்ளார்கள். சமீபத்திய வருடங்களில் தமிழக தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளில் ஈழத்தமிழர்களின் கோட்டா அதிகரிக்கப்படுகிறது. குறிப்பாக அண்மையில் தமிழக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் இசை நிகழ்ச்சியில் ஈழத்தமிழ் போட்டியாளர்கள் மூவர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் தலா ஒருவரும் மற்றும் புலம்பெயர் ஈழத்தமிழ் ஒருவரும் போட்டியாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மேலதிக வருகைகளும் எதிர்பார்க்கப்படுகின்றது. விசேடமாக அண்மைய காலங்களில் குறித்த நிகழ்ச்சியின் ஈழத்தமிழர்களிற்கான தேர்வு போட்டிகள் இலங்கையில் நேரடியாகவே இடம்பெறுகின்றது. கடந்த ஆண்டுகளில் வடக்கில் மாத்திரம் இடம்பெற்ற தேர்வுப் போட்டி இம்முறை வடக்கு-கிழக்கில் தமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.
அடிப்படையில் தமிழக தெலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈழத்தமிழர்களின் பங்கேற்பினை அதிகரிப்பது, அவ்தொலைக்காட்சிக்கான வெளிநாட்டு பார்வையாளர்களை அதிகரித்து இலாபத்தை பெற்றுக்கொள்வதாகும். எனினும் இலாபம் என்பதைக் கடந்து, தெரிவுப் போட்டிகளை நேரடியாக ஈழத்திற்கு வந்து தமிழர் தாயகப்பகுதிகளில் நிகழ்த்தி, சிறந்த போட்டியாளர்களை உள்வாங்கி கொண்டுள்ளமைக்கு நிச்சயம் அவ்தனியார் தொலைக்காட்சிக்கு ஈழத்தமிழர்கள் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம். எந்தவொரு நிறுவனமும் நபரும் தமது நலனுக்குள் நின்றே பயணிக்கும். இது எதார்த்தமானதாகும். மனித வாழ்வியலின் அடிப்படை தத்துவத்தில் சகல உறவுகளும் நலன்களால் ஆனவை. நலன்கள் கொடுக்கல்-வாங்கல் அல்லது ஆக்கிரமிப்பாலானவை. தாய்க்கும்-பிள்ளைக்கும், காதலனுக்கும்-காதலிக்கும், அயலவனுக்கும்-அயலவனுக்கும் என உறவுகள் அனைத்துமே ஏதொவொரு வகையின் தேவையின் அடிப்படையில் நலன்களின் பரிணாமத்திலேயே இணைகின்றன. எனவே இங்கு தேவை மற்றும் நலன் என்பது தவறானவை அன்று. அது அடிப்படையானது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இரு தரப்பு நலன்களும் தேவையும் ஒருங்கு சேருமிடத்தில் இருதரப்பும் நன்மையை அல்லது வெற்றியை பெற்றுக்கொள்கின்றது. மாறாக ஒரு தரப்பின் நலன் பூர்த்தி செய்யப்பட்டு மற்ற தரப்பின் நலன் பூர்த்தி செய்யப்படாதவிடத்து, அத்தரப்பு ஏமாற்றத்தை அல்லது தோல்வியை பெற்றுக்கொள்கிறது. இது இணையும் தரப்பினரின் சாமர்த்தியத்திலேயே தங்கியுள்ளது.
தமிழக மக்களுடன் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக நெருங்கிச் செயற்படும் வகையிலான இத்தகைய களங்கள் உருவாக்கப்படுவது தேவையானதும் ஆரோக்கியமானதாகும். 2009களுக்கு பின்னர் தமிழக-ஈழத்தமிழ் மக்களிடையே அதிகரிக்கப்பட்ட இடைவெளியை சீர்செய்வதில் தொலைக்காட்சி சார்ந்த இத்தகைய களங்கள் மிகவும் பயனுடையதாக அமைகின்றது. குறிப்பாக தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈழத்தமிழர்கள் பங்குபெறுவதனால் தமிழக மற்றும் உலகத்தமிழர்களின் வீடுகளுக்கு தினசரி ஈழத்தமிழ் கலைப் பிரதிநிதி செல்கின்றார். ஈழத்தமிழர் செய்திகளை உலகத்தமிழர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்ல வாய்ப்பாக அமைகின்றது. உலகம் எங்கிலும் கலைகளுக்கூடாக ஒடுக்கப்பட்ட சமுகம், தமது ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை விதைத்துள்ளார்கள். 'பொப்' பாடல் வகையறாவின் அறிமுகம் அத்தகையதாகவே அமைகின்றது. இது அமெரிக்க சூழலில் அடிமைப்படுத்தப்பட்ட ஆபிரிக்க மக்களின் குரலாகவே அறிமுகமாகியது. தமிழர்களின் கூத்து கலையும் சமூக செய்தி சொல்லும் கலைப்படைப்பாகவே அமைகிறது. சமீபத்தில் ஈழத்தாயின் மகனொருவன் கேரளத்தில் ஒடுக்குமுறைக்கெதிராக தனது இசைகொண்டு எழுச்சியுற்றுள்ளான். ஒடுக்குமுறைக்கெதிரான கலைப் பங்களிப்பு சகல பாகங்களிலும் நிறைந்துள்ளது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் எழுச்சியுற்ற காலப்பகுதியிலும் கலை ஆழமான பணியாற்றியுள்ளது. அதன்விளைவாகவே விடுதலைப்புலிகளும் கலைப்படைப்புகளுக்கு முக்கியத்துவமளித்து தனியானதொரு துறையை பேணி வந்தார்கள். நாமும் நமக்கென்றோர் நலியா கலையுடையோம் என்பதை உலகத்தமிழர்களின் வீடுகளுக்கு தினசரி செல்லும் ஈழத்தமிழ் கலைப்பிரதிநிகள் சொல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதனை சீராக பயன்படுத்திக்கொள்வதில், ஈழத்தமிழ் சமுகம் தொடர்பான அக்கறையும் ஈடுபாடும் ஈழத்தமிழ் கலைப்பிரதிநிகளிடம் காணப்பட வேண்டும்.
ஈழத்தமிழ் சமுகத்தின் பயன்பாடு என்பது பொருளாதார ரீதியான அபிவிருத்தியையும் உள்வாங்குகின்றது. அத்தகைய பயன்பாடு ஓரளவு ஈழத்தமிழர்களிடம் சாதகமான மாற்றங்களை உருவாக்கியுள்ளமையை இனங்காணக்கூடியதாக உள்ளது. கடந்த கால போட்டியாளர்களின் ஈடுபாடும் மற்றும் அவர்களுக்கு தமிழகம்-ஈழம்-உலகத்தமிழர்கள் வழங்கிய ஆதரவுத்தளங்களே தொடர்ச்சியாக ஈழத்தமிழ் போட்டியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. முன்னையவர்கள் நன்மையளித்திருக்காவிடின் அல்லது பாதகமான விளைவுகளை உருவாக்கியிருப்பின் பின்னையவர்களுக்காக வாய்ப்புகள் அற்றுப்போயிருக்கும். எனினும் தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களின் பிரசன்னம் அதிகரிக்கப்படுகின்றதாயின் முன்னையவர்களின் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது. இவ்வகையில் தொடர்ச்சியாக தமது சமுகத்திற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையில் செயற்படுகின்றமை வரவேற்கத்தக்கதாகும். இத்தகைய சூழல் ஈழத்தமிழர் கலைத்துறையின் எல்லையை விரிவடைய செய்துள்ளது. ஈழத்தமிழர் கலைத்துறை கடந்த காலங்களில் ஈழத்தமிழ் எல்லைக்குள்ளேயே பெருமளவு சுருங்கி காணப்பட்டது. எனினும் சமகாலத்தில் கணிசமாக தமிழக கலைஞர்களுடன் கூட்டுச்சேர்ந்து செயற்படுவதாக தனது எல்லையை தமிழகம் வரை விரித்துள்ளது. அண்மையில் ஒரு ஈழத்தமிழ் குறுந்திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக ஈழத்திற்கு வருகை தந்திருந்த தமிழக திரைத்துறை பிரபல்யம் தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்ந்து தமக்குள்ள பெருமைகளை ஊடக சந்திப்பில் நினைவு மீட்டிருந்தார். இத்தகைய உறவுகளுக்கும் மாற்றங்களுக்குமான அடிப்படை தமிழக தெலைக்காட்சிகளில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்களும் அதனை பயன்படுத்திக்கொண்டுள்ளமை சார்ந்துமே அமையப்பெற்றுள்ளது.
இம்மாற்றம் ஈழத்தமிழ் தனக்குரிய தனித்துவத்தில் விரிவடைவதாக அமைய வேண்டும். ஒருசில ஈழத்தமிழ் கலைஞர்களிடம் இத்தகைய ஞானத்தை இனங்காணக்கூடியதாக அமைகின்றது. எனினும் பலரிடம் அத்தகைய சமுக நலன் சார்ந்த கூட்டுணர்வை அவதானிக்க முடிவதில்லை என்ற பார்வையையே பொதுவிமர்சனம் வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் ஈழத்தமிழ் கலைப்பிரதிநிதிகள், சமூக கூட்டு நலனை அடைந்து கொள்வதிற்கு பதிலாக பெரும்பாலும் 'ஈழத்தமிழர்' என்ற அடையாளத்தை பயன்படுத்தி வெறுமனவே தனிப்பட்ட நலன்களை மாத்திரமே ஈடேற்றி செல்கின்றார்கள் என்ற விமர்சனங்களும் பொதுவெளியில் காணப்படுகின்றது. இதுவொரு வகையில் மறுதலிக்க முடியாத நடைமுறை வெளிப்பாட்டையே கொண்டுள்ளது. குறிப்பாக ஈழத்தமிழர்களை இரக்கத்திற்குரியவர்களாக காட்டும் வெளிப்பாடுகள் அதிகம் போலித்தனமாக சுயநலத்துக்குள் அமைகின்றது. தமிழகத்துக்கும் உலகத்தமிழர்களும் ஈழப்போராட்ட கதைகளை சொல்ல சரியான களமாக தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அமைகின்றது. ஈழத்தமிழ் போராட்டம் இனப்படுகொலையை எதிர்கொண்ட சமூகமாய் நிறைய வலிகளை கொண்டுள்ளது. அவை சொல்ல வேண்டியதும் அவசியமாகும். எனினும் அதனை இட்டுக்கட்டி கூற முற்படுவது உண்மைகள் மீதும் சந்தேகத்தை விதைத்துவிடும்.
உணர்வுகளே ஆழமாக இணைக்கக்கூடியதாகும். கடந்த காலங்களில் சிரிய உள்நாட்டு போரின் அவலம் கடற்கரையில் ஒரு குழந்தையின் மரண புகைப்படமே சர்வதேச மக்களின் கவனத்தை சிரிய பக்கம் இழுத்தது. அவ்வாறே இன்றும் பலஸ்தீன போரில் சிறுவர்களின் மரண வீதம் அதிகரிப்பும், சிறுவர்கள் உணவுக்காக முண்டியடிக்கும் காணொளிகளுமே அதிக அளவில் பலஸ்தீனப் போரின் அவலத்தை சர்வதேச கவனிப்புக்கு கொண்டு சென்றுள்ளது. 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்ட போது, தமிழக மக்கள் சில எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தார்கள். இன்றும் ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறை தொடருகின்ற போதிலும், சமகாலத்தில் தமிழகதின் ஈழத் தமிழர்கள் மீதான கரிசணை ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளது. இது தொடர்பில் தமிழகத்தின் சில செயற்பாட்டாளர்களுடன் உரையாடிய போது, 'ஈழத்தின் ஒடுக்குமுறை பற்றிய செய்திகள் உணர்வைத் தொடும் வகையிலாக காணப்படுவதில்லை' என்பதை சுட்டிக்காட்டி இருந்தார்கள். எனவே உணர்வுபூர்வமான பின்னணியிலேயே பாதிக்கப்படும் தரப்புக்கு பிறரின் ஆதரவு அல்லது கரிசனை கிடைக்கப் பெறுகின்றது. ஈழத்தமிழர்களுக்கான தமிழகத்தின் ஆதரவை தக்கவைத்துக் கொள்வதற்கும் பலப்படுத்துவதற்கும், ஈழத் தமிழர்கள் தமது வலியினை உணர்வெழுச்சியுடன் சொல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதேவேளை அவ்உணர்வெழுச்சி எதார்த்தபூர்வமானதாகவும் உண்மையாகவும் அமைதல் வேண்டும்.
எனினும் தமிழக தொலைக்காட்சிகளின் போட்டிகளில் பங்குபெறும் ஈழத்தமிழ் போட்டியாளர்களின் உணர்வெழுச்சி உரைகள் நாளடைவில் தமிழக-ஈழத்தமிழ் மக்களுக்கு இடையிலான உறவை விரிசலடைய செய்து விடுமோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது. இதுவொரு வகையில் ஈழத்தமிழ் சமூகத்தின் கூட்டுத்தோல்வியாகவே அமைகின்றது. விடுதலைக்காக போராடும் தேசிய இனத்திடையே தனது சமூகம் சார்ந்த கூட்டு பிரக்ஞையை உருவாக்க வேண்டிய பொறுப்பு சமூகத்தின் கூட்டு பொறுப்பிலேயே காணப்படுகிறது. எனினும் ஈழத்தமிழர்களிடம் அக்கூட்டுப்பொறுப்பு கட்டமைக்கப்படவில்லை என்பதனையே சமகால சம்பவங்கள் வெளிப்படுத்துகிறது. தாயகத்தில் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையின்மை, சிவில் சமூகங்களிடையே கூட்டுச் செயற்பாடின்மை, புலம்பெயர் தளத்தில் அமைப்புகளிடையே ஒற்றுமையின்மை, தேசக்கனவுடன் புலம்பெயர் சமூகம் தாயகத்திற்கு மீள்வருவதில் உள்ள சந்தேகங்கள் யாவும் ஈழத்தமிழர்களிடம் சமூகமாக சிந்திக்கும் இயல்பின்மையையே அடையாளப்படுத்துகிறது. இது யாவரும் தனியன்களாக தனிப்பட்ட நலன்களுக்குள் சிந்திப்பதையே சுட்டிக்காட்டுகிறது. இவ்ஒழுங்கின் தொடர்ச்சியையே தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈழத்தமிழ் விம்பத்துடன் பங்குபெறும் போட்டியாளர்களின் நடத்தைகளிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
எனவே, தமிழக மக்களோடும் உலகத் தமிழர்களோடும் ஈழத் தமிழர்களை இணைக்குமோர் பெரியதொரு கருவியாக தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈழத்தமிழர்களின் பங்குபற்றலின் அதிகரிப்பு காணப்படுகின்றது என்பதுவே நிதர்சனமானதாகும். அதன் முக்கியத்துவத்தை சரியாக புரிந்து கொண்டு ஈழத் தமிழர்கள் பயணிக்காத போது அதன் நன்மைகளை பூரணமாக அடைய முடியாது என்பதற்கு அப்பால், சில எதிர்விளைவுகளையும் உருவாக்கக்கூடிய அபாயத்தையே சில நடத்தைகள் வெளிப்படுத்துகின்றது. இது வெறுமனவே ஈழத்தமிழ் கலைப்பிரதிநிதிகளாய் பங்குகொள்பவர்களின் மீது மாத்திரம் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. இதில் ஈழத்தமிழ் சமூக கட்டமைப்பின் தோல்வியும் காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் சுயநலன்களுக்குள்ளால் பொதுமையான கூட்டு நலன்களையும் சிந்திக்கும் சமூகமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தேவை உணரப்படுகிறது.
Comments
Post a Comment