இளையோர் அரசறிவியல் பங்குபற்றலை ஊக்குவிக்கும் IFES திட்டம்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஈடுபாடு வரவேற்கத்தக்கது! -ஐ.வி.மகாசேனன்-

உலக அரசியலில் இளையோர் தாக்கமிகு சக்தியாக எழுச்சியடைந்து வருகின்றார்கள். ஆசிய பிராந்தியத்தில் இலங்கையின் அரகலய முதல் நேபாளத்தின் Gen-z போராட்டம் வரையில் அதனை நிருபிக்கிறது. இதுவொரு வகையில் இளையோரின் தன்னார்வ அரசியல் ஈடுபாட்டை அடையாளப்படுத்துகிறது. எனினும் அதிகரிக்கும் இளையோர் அரசியல் ஈடுபாடு கருத்தியல் இல்லாது வெறுமனவே கலகங்களாகவும், யாரோ ஒரு தரப்புக்கு மாத்திரம் நன்மைபயப்பதாகவுமே மாறி விடுகின்றது. இதன் பின்னணியில் சமுக வலைத்தள யுகத்தில் இளையோரிடையே ஆழமான கருத்து செறிவாக்கமின்மையும் ஒரு மையக் காரணமாகும். நடைமுறை அரசியலோடு தெளிவான அரசியல் சிந்தனையோட்டமும் இணைகையிலேயே ஆக்கபூர்வமான மாற்றங்களை உருவாக்க முடியும். அண்மையில் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையத்தின் (IFES) இலங்கை கிளையின் PAVE (பங்கேற்பு, பரிந்து பேசுதல், குரல் மற்றும் ஈடுபாடு) செயற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மாணவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு அரசியல் சிந்தனையும் நடைமுறை அரசியலும் ஒன்றிணைக்கும் வகையிலான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மாணவர்களிடையே PAVE செயற...