ஏக்கிய இராச்சிய வரைபும் பயனற்ற பொருள்கோடல் விவாதமும்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் ஆயுத போராட்ட மௌனிப்புக்கு பின்னரான சர்வதேச தலையீடுடனான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் பற்றிய விவாதத்தில் நிறுவனச் சீர்திருத்தம் என்ற அடிப்படையிலான அரசியலமைப்பு மாற்றம் பிரதான உரையாடலாக நிலைபெற்று வருகின்றது. இந்த பின்னணியிலேயே 2009க்கு பின்னரான தேர்தல்கள் யாவற்றிலும் தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களும், தேர்தல் விஞ்ஞாபனங்களும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை ஒரு பகுதியாய் கொண்டுள்ளது. எனினும் ஆட்சியாளர்கள் அரசியலமைப்பு மாற்றத்திற்கு கிடைக்கப்பெற்ற ஆணைகள் யாவையும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களாகவே சுருக்கி கொடார்கள். இதுவொரு வகையில் சர்வதேச அழுத்தங்களை தணிக்கை செய்வதற்கும் இழுத்தடிப்பதற்கான உத்தியாகவுமே அமைந்துள்ளது. இந்த பின்னணியிலேயே அநுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தேர்தல் கால வாக்குறுதிகள் பொது மக்கள் பார்வையில் அணுகப்படுகிறது. எனினும் தமிழ்த்தரப்பிடம் அவ்அசமந்தம் ஆபத்தானதாகும். அரசியலமைப்பு மாற்றம் நடைபெறினும் நடைபெறாவிடினும் தமிழ்த்தரப்பு தமது அரசியல் அபிலாசைகளை திரட்சியாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக சமகாலத்தில் மீள்விவாதத்தை உருவாக்கியுள்ள ஏக்கிய இராச்சிய வரைபை முழுமையாக மீள் புரிந்து கொள்வது அவசியமாகும். இக்கட்டுரை ஏக்கிய இராச்சிய வரைபு தொடர்பான பெயர்ப்பலகை சார்ந்த சர்ச்சைகளை மற்றும் விவாதங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான எத்தகைய முன்னாயர்த்தங்களையும் பகிரங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்துவதை தவிர்த்தே வருகின்றது. எனினும் அரசியலமைப்பு தொடர்பான கேள்விகள் எழுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் அரசாங்க தரப்பினர், புதிய அரசியலமைப்பு ஏற்பாடுகள் தேசிய மக்கள் சக்தி மட்டத்தில் இடம்பெற்று வருகின்றதென கருத்துரைத்து வருகின்றார்கள். குறிப்பாக தென்னிலங்கையின் பிரதான விவாதமாக ஜனாதிபதித்துவ அரசாங்க முறை நீக்கம் மாத்திரமே மையமாக காணப்படுகின்றது. அது மாத்திரமன்றி சில சந்தர்ப்பங்களில் 2015-2019 ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் தொடர்ச்சியை தேசிய மக்கள் சக்தி நிலைப்படுத்த போவதாகவும் கருத்துரைத்து வருகின்றார்கள். எனினும் இதுவரை தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக எத்தகைய ஒரு முன்மொழிவையும் தேசிய மக்கள் சக்தி பகிரங்கப்படுத்தவோ அல்லது தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளுடன்உரையாடவோ முன்வரவில்லை. ஜனாதிபதி தேர்தல் காலத்திலேயே தமிழரசுக்கட்சியிடம் ஆதரவு கோரி யாழ்ப்பாண மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்திலேயே இறுதியாக சந்திப்பு இடம்பெற்றது. தேர்தல் வெற்றிகளின் பின்னர் முழுமையான அரசியல் தீர்வு தொடர்பான எத்தகைய உரையாடல்களும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. கடந்த செப்டெம்பர் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் காலப்பகுதியில், இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. குறித்த கடிதத்தில்,தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறுகோரிக்கை முன்வைக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தினை அனுப்பி வைத்திருந்தனர். எனினும் தமிரசுக்கட்சியின் கோரிக்கைக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரை எவ்வித வெளிப்படையான  எதிர்வினையும் வரவில்லை. ஆயினும் தமிழரசு கட்சி பொதுவெளியில் காணப்படும் ஏக்கிய இராச்சிய வரைபின் பங்காளிகளாக அதனை பாதுகாக்கும் உரையாடல்களை சமூகவலைத்தளங்களில் மற்றும் ஊடக சந்திப்புகளில் வெளிப்படுத்துவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஏக்கிய இராச்சிய வரைபின் முன்னுரை சார்ந்த குறிப்புக்கள் மற்றும் ஏக்கிய இராச்சிய வரைபின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கருத்துக்களால்,ஏக்கிய இராச்சிய அல்லது ஒருமித்த அரசுஎன்ற பெயர்ப்பலகைக்கான விளக்கத்தை ஒப்புவித்தார்.புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாவதற்கான முயற்சி நடைபெற்ற போது முதலாவது இடைக்கால வரைவு பாராளுமன்றத்தில் நான்கு நாட்கள் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்திலேயே கலந்து கொண்ட அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாகச் சொன்னார், சிங்கள மக்களுக்கு சமஸ்டி எனும் சொல்லைக்  கேட்டால் பயமாக இருக்கிறது. அதனைப் போல தமிழ் மக்களுக்கு ஒற்றையாட்சி என்று சொல்லைக் கேட்டால் பயமாக இருக்கிறது. நாட்டினுடைய அரசியல் அமைப்பை எந்த மக்களும் பார்த்து பயப்படக்கூடாது.  அதற்கேற்றவாறு நாங்கள் புதிய அரசியல் யாப்பை வரைய வேண்டும் என்று சொன்னார்என்றவாறு விபரிக்கப்பட்டுள்ளது. மேலும்  ஏக்கிய இராச்சிய வரைபின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள,மத்தியிலும் மாகாணத்திலும் ஆட்சி அதிகாரங்களைக் கொண்டதுதான் இந்த ஏக்கிய இராச்சிய/ஒருமித்த நாடு என்று வர்ணிக்கப்பட்டுள்ளதுஎன்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தனது பதிவில்,ஒற்றையாட்சி என்றால் ஆட்சி முறையை குறிப்பது. ஒருமித்தநாடு என்றால் நாட்டினுடைய சுபாவத்தை குறிப்பது. ஆகவே ஆட்சி முறையிலிருந்து நாட்டை குறிப்பதற்காகத்தான் ஒற்றையாட்சி என்று சொல்லை நீக்கி ஒருமித்தநாடு, அதுவும் ஒருமித்த என்று சொல்லுகிற போழுது பல கூறுகள்  ஒன்றாகச் சேருவதையும் குறிக்கும்என்றவாறு ஒருமித்த ஆட்சி அல்லது ஏக்கிய இராச்சிய பெயர்ப்பலகை விளக்கத்தை மீள சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை மைத்திரிபால சிறிசேனா சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி தொடர்பில் சிங்கள மற்றும் தமிழ் சமுகங்கள் இருவேறு எதிரெதிர் எண்ணங்களில் பயப்படுவதை சுட்டிக்காட்டிய கருத்துரையின் தொடர்ச்சியாக, "ஒற்றையாட்சி அரசு எனும் ஆங்கிலப் பதத்தின் பண்டைய வரைவிலக்கணம் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் வட அயர்லாந்திலும் ஸ்கொத்திலாந்திலும் தற்போது ஒன்றியத்திலிருந்து பிரிந்தி செல்லக் கூடியதாயுள்ளது. எனவே, ஆங்கிலப் பதமானஒற்றையாட்சி அரசுஇலங்கைக்குப் பொருத்தமற்றதாயிருக்கும். பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு என்பதை சிங்களப் பதமானஏகிய இராஜ்ஜியநன்கு விபரிக்கப்படுகிறது. இது தமிழ் மொழியில்ஒருமித்த நாடுஎன்பதற்கு சமனாகும்என்ற விடயமும் பதியப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனாவின் இக்கருத்து ஒருவகையில் அதிகாரக் குவிப்புக்கு ஒற்றையாட்சி என்ற பதம் பொருத்தமற்ற சூழலியே, அதிகாரக் குவிப்பை பலப்படுத்த மற்றும் பாதுகாப்பதற்கு ஏக்கிய இராச்சிய அல்லது ஒருமித்த நாடு என்பது துணைபோகக்கூடியது என்ற விளக்கத்தையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. 

எந்த மொழியும் அழகானது. அதற்கான விளக்கங்கள் நாக்கின் சுழற்சிக்கேற்ப பல திருப்பங்களை கொண்டுள்ளது. யுவால் நோவா ஹெராரிசேப்பியன்ஸ்என்ற தனது புத்தகத்தில் குறிப்பிடும் கற்பனை செய்யப்பட்ட யதார்த்தங்களில் (Imagined Realities) என்ற பார்வையில் உலகம் மற்றும் மனித இயங்கு நிலை பொருத்தப்பட்டுள்ளது.  இவ்கற்பனை செய்யப்பட யதார்த்தத்தை உருவாக்கும் மற்றும் நெறிப்படுத்தும் நிலையை பலவான் சக்தி தனதாக்கி கொண்டுள்ளது. உலகப் பார்வையில் எளிமையான விளக்கமாக அமைவது இன்கா, மாயா மற்றும் செவ்விந்திய பூர்வீக மக்கள் மீதான இனப்படுகொலையிலேயே நவீன அமெரிக்காவின் 200 ஆண்டு கால வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்று இவ்அமெரிக்காவே மனித உரிமைகளை உலகிற்கு போதிக்கிறது. மிகச் சமீபத்திய விளக்கமாய் இஸ்ரேல்-காசா போரில் இஸ்ரேல் அரசின் இனப்படுகொலை செயலை கண்டிக்காது ஆதரித்துக் கொண்டே, ரஷ்சியா-உக்ரைன் போரில் ரஷ்சியாவின் இனப்படுகொலை தாக்குதல்கள் மீது கடுமையான எதிர்ப்பையும் தடைகளையும் அமெரிக்க வெளிப்படுத்தியது. எனவே இங்கு ஏதும் ஒரே கோணத்தில் அணுகப்படுவதில்லை. அதிகார வர்க்கங்கள் தம் இசைவுக்கும் இருப்புக்கும் ஏற்ப ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கற்பனையயின் பின்னணியில் பொருள்கொடலை எதார்த்தமாக்கி செல்கின்றார்கள்.

இவ்வாறான அனுபவங்கள் சொற்கள் அல்லது பெயர்ப்பலகை மீதான விதன்டாவாதத்தின் தேவையற்ற நேரக்கழிப்பையே விளக்குகின்றது. ஈழத்தமிழர் அரசியலும் இவ்வாறான வீண் நேரக்கழிப்புக்குள்ளேயே நகருகின்றது. ஏக்கிய இராச்சிய வரைபை நிராகரிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியினரும்ஏக்கிய இராச்சியம்என்ற சொல்லை முன்னிறுத்தியே விவாதத்தை ஆரம்பிக்கின்றனர். அதற்கு பதிலளிக்கும் ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபின் ஆதரவணி குறிப்பாக எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான தமிழரசுக்கட்சி அணியினரும்ஏக்கிய இராச்சியசொல்லை நியாயப்படுத்துவதிலேயே விவாதித்து வருகின்றனர். குறைந்தபட்சம் ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபின் உள்ளடக்கங்களை முன்னிறுத்திய பரந்த அறிவார்ந்த விவாதத்திற்கு செல்ல கூட இரு தரப்பும் தயாரில்லாத நிலைமைகளையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 

இலங்கையின் முன்னைய வரலாறுகளில் வரைபுகள் யாவும் இறுதி வடிவத்தை பெறாத நிலைகளே முழுமையாக உள்ளது. சமஸ்டி கேட்டு போராடிய, சமஸ்டி கட்சியின் தலைவர் செல்வநாயகம் மாவட்ட மற்றும் பிராந்திய அளவில் சுருங்கி பண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா போன்ற ஒப்பந்த வரைவுகளுக்குள் இணங்கிய போதிலும், செயற்பாட்டில் வரைபுகள் சட்டமாகவோ அல்லது தீர்வாகவோ இயங்குநிலை வடிவத்தை பெற்றிருக்கவில்லை. இது 1950களின் பதிவாக மாத்திரம் அமையவில்லை. 2000களில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நீலன்-பீரிஸ் தீர்வுப்பொதி உள்ளடங்களாக 2015இல் இன்றைய சர்ச்சைக்குரிய ஏக்கிய இராச்சிய இடைக்கால அறிக்கை வரை பல வரைபுகளும் நிலையான தீர்வற்ற தாள்களாக மிஞ்சியுள்ளது. அதுமட்டுமன்றி தீர்வுப்பொதிகளிள் ஆரம்ப வரைபும் விளைவைக் கொண்டிராத இறுதி வரைபுகக்கும் இடையில் கூட பல முரண்பாட்டுமாற்றங்களை அவதானிக்கக்கூடியதாக அமையும். 2000களில் சந்திரிக்கா அரசாங்க காலப்பகுதியில் உரையாடப்பட்ட நீலன்-பீரிஸ் தீர்வுப்பொதி ஆரம்பம் தொட்டு முழுமையானதாக அமையாவிடினும், ஆரம்ப தளத்தில் 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தின் விளைவான 13ஆம் திருத்தத்தின் உள்ளடக்கங்களை தாண்டியதாகவே அமைந்திருந்தது. எனினும் நீலன்-பீரிஸ் தீர்வுப்பொதியின் இறுதி வடிவம் ஏதுமற்ற வெறும் சக்கையாகவே அமைந்திருந்தது. 2003, மார்ச்-11 அன்று கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் வங்கியொன்றை வைபவ ரீதியாக திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் சந்திரிக்கா அரசாங்கத்தின் தீர்வுப்பொதி பற்றி உரையாடியிருந்தார். '1995ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வம் அரசமைப்புத் திருத்த வரைபு ஒன்றை சமர்ப்பித்தார். அது சரியான வரைபு. அது  ஏற்க கூடியது. ஆனால்  பின்னர்  2000ஆம்  ஆண்டு  அந்த  வரைபின்  அடிப்படையில்  சந்திரிக்கா  ஒரு  திருத்த  வரைபை  சமர்ப்பித்தார். அந்த  வரைபு  நீலன்  திருச்செல்வத்தின்  வரைபின்  ஒரு  அரைகுறையான தொகுதியாகும்' எனத் தெரிவித்திருந்தார். இப்பயனற்ற அரைகுறையை கூட அன்றைய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எதிர்க்கட்சி ஏற்றிருக்கவில்லை. ஆதலாலேயே அது நீர்த்துப்போக செய்யப்பட்டிருந்தது. இவர்களின் கூட்டிலேயே பின்னாளில் ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏக்கிய இராச்சிய வரைபு பற்றிய விவாதம் அதன் தலைப்பு சார்ந்த சொற்களுக்குள் நேரத்தை வீணடிக்காது, குறைந்தபட்சம் அதன் உள்ளடக்கங்களை விவாதிக்கும் களமாக திறக்க வேண்டும். இது நிலையான தீர்வை பெற்றுத்தரா விடினும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சார்ந்த அபிலாசைகளை ஒன்றுதிரட்டும். உள்ளடக்கங்கள் பற்றிய விவாதம் தெளிவான அதிகாரப் பகிர்வை மையப்படுத்தியதாகவே காணப்படும். ஏக்கிய இராச்சிய வரைபை ஆதரிக்கும் தமிழரசுக்கட்சியும் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வையே அரசியல் கொள்கையாக வெளிப்படுத்தும் கட்சியாகும். இப்பின்னணியில் ஏக்கிய இராச்சிய வரைபின் உள்ளடக்கத்தை விவாதிக்கையில் விரும்பியோ விரும்பாமலோ தமிழரசுக்கட்சியும் அதிகாரப்பகிர்வையே விவாதிக்கும். இது ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையை திரளாக பலப்படுத்துவதாக அமையும். சமகாலத்தில் ஏக்கிய இராச்சிய வரைபுக்குள் மோதல் ஈழத்தமிழர் அரசியல் களத்திற்குள்ளேயே காணப்பகின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக்கட்சியுமே மோதிக்கொள்கின்றன. எனினும் இருதரப்புமே இறுதியான அரசியலமைப்பு மாற்றத்தை செய்யக்கூடிய அரசாங்கம் இல்லை. தமிழ்த்தரப்புக்குள் இப்பிளவும் முரண்பாடும் தீர்வு விடயத்தை இழுத்தடிப்பு செய்வதற்கு தென்னிலங்கைக்கு வாய்ப்பை வழங்குவதாகவே அமையும். அதிகாரப் பகிர்வு மீளத்திருப்பி பெற முடியாத வகையில் ஏக்கிய இராச்சிய வரைபின் உள்ளடக்கம் கொண்டுள்ளதா என்பதை ஈழத்தமிழர்கள் விவாதிப்பதே, தென்னிலங்கையை தீர்வு சார்ந்த விவாதத்தில் இழுக்கும் யுக்தியாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-