இளையோர் அரசறிவியல் பங்குபற்றலை ஊக்குவிக்கும் IFES திட்டம்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஈடுபாடு வரவேற்கத்தக்கது! -ஐ.வி.மகாசேனன்-

உலக அரசியலில் இளையோர் தாக்கமிகு சக்தியாக எழுச்சியடைந்து வருகின்றார்கள். ஆசிய பிராந்தியத்தில் இலங்கையின் அரகலய முதல் நேபாளத்தின் Gen-z போராட்டம் வரையில் அதனை நிருபிக்கிறது. இதுவொரு வகையில் இளையோரின் தன்னார்வ அரசியல் ஈடுபாட்டை அடையாளப்படுத்துகிறது. எனினும் அதிகரிக்கும் இளையோர் அரசியல் ஈடுபாடு கருத்தியல் இல்லாது வெறுமனவே கலகங்களாகவும், யாரோ ஒரு தரப்புக்கு மாத்திரம் நன்மைபயப்பதாகவுமே மாறி விடுகின்றது. இதன் பின்னணியில் சமுக வலைத்தள யுகத்தில் இளையோரிடையே ஆழமான கருத்து செறிவாக்கமின்மையும் ஒரு மையக் காரணமாகும். நடைமுறை அரசியலோடு தெளிவான அரசியல் சிந்தனையோட்டமும் இணைகையிலேயே ஆக்கபூர்வமான மாற்றங்களை உருவாக்க முடியும். அண்மையில் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையத்தின் (IFES) இலங்கை கிளையின் PAVE (பங்கேற்பு, பரிந்து பேசுதல், குரல் மற்றும் ஈடுபாடு) செயற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மாணவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு அரசியல் சிந்தனையும் நடைமுறை அரசியலும் ஒன்றிணைக்கும் வகையிலான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மாணவர்களிடையே PAVE செயற்றிட்டத்தின் முக்கியத்துவத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையம் (IFES), சர்வதேச ரீதியாக தேர்தல்களின் ஜனநாயகத் தன்மைமைய உறுதி செய்வதற்கான கண்காணிப்பையும் ஈடுபாட்டையும் வழங்கி வரும் அரசு சாரா நிறுவனமாகும். இவ்அமைப்பு மக்கள் சுதந்திரமாக, சமூகங்கள் ஜனநாயகமாக, தேர்தல்கள் நியாயமாக நடைபெறும் ஒரு உலகத்தையே துரநோக்காக அடையாப்படுத்துகின்றது. நெகிழ்ச்சியான ஜனநாயகங்களை உருவாக்க சிவில் சமூகம், பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து செயல்படுகின்றது. 1987ஆம் ஆண்டு முதல், வளரும் நாடுகளில் இருந்து முதிர்ந்த ஜனநாயகங்கள் வரை 145இற்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வருகிறது. இது அமெரிக்காவின் வர்ஜீனியாவின் ஆர்லிங்டனை தளமாகக் கொண்ட ஒரு உலகளாவிய, பாரபட்சமற்ற அமைப்பாகும். மேலும் அமெரிக்காவின் வரிக் குறியீட்டின் கீழ் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக (501(C)(3)) பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையத்தின் 2025-2029ஆம் ஆண்டு மூலோபாயத் திட்டத்தின் மூலோபாய விளைவுகளில் ஒரு பகுதி, 'தகவலறிந்த பொதுமக்கள் ஜனநாயக கலாச்சாரத்தையும் மதிப்புகளையும் வளர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்' என்றவாறு ஜனநாயக கலாசாரம் சார்ந்த விளைவை சுட்டிக்காட்டுகின்றது. ஜனநாயகங்கள் செழிக்க, மக்கள் ஜனநாயக அரசாங்க வடிவங்களில் ஈடுபடவும் பாதுகாக்கவும் சுதந்திரமாகத் தேர்வு செய்ய வேண்டும். ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் உரிமைகள் பற்றிய பகிரப்பட்ட புரிதல் மற்றும் மாறுபட்ட மற்றும் தகவலறிந்த உரையாடல்களில் பங்கேற்கும் வாய்ப்பு ஆகியவற்றால் இந்தத் தேர்வு செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலைமைகள் சர்வாதிகார தந்திரோபாயங்களை எதிர்க்கவும், மக்கள் அவர்களின் சமூகங்கள் மற்றும் அவர்களின் அரசாங்கங்களுக்கு இடையே வலுவான தொடர்புகளை ஊக்குவிக்கவும், அனைவரும் செழிக்க வாய்ப்புகளை உருவாக்கவும் தேவையான துடிப்பான ஜனநாயக கலாச்சாரங்களை வடிவமைக்கின்றன. ஜனநாயக இடத்தை மீட்டெடுப்பதற்கும் அரசியல் பன்மைத்துவத்தை செயல்படுத்துவதற்கும் உள்ளூர் முயற்சிகளை தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையம் ஆதரிப்பதாக அடையாளப்படுத்தப்படுகின்றது. அதனை நடைமுறைப்படுத்த பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. அமைதியான உரையாடல், விவாதம் மற்றும் சமரசத்திற்கான இடங்களை விரிவுபடுத்துவது உட்பட, ஜனநாயக விதிமுறைகள், செயல்முறைகள் மற்றும் நிறுவனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்த சமூகத்தால் இயக்கப்படும் முயற்சிகளை வளர்ப்பது; முறையான மற்றும் முறைசாரா குடிமைக் கல்வி மூலம் தகவலறிந்த மற்றும் செயலில் ஈடுபடுவதை ஊக்குவித்தல்; உள்ளூர் கூட்டாளிகள் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மன்றங்களில் தங்கள் சமூகங்களுக்குக் குரலாக இருக்க ஆதரவளித்தல்; உள்ளூர் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே வலுவான உறவையும், நடத்தையில் நீடித்த மாற்றங்களையும் எளிதாக்குதல்; வலுவான மற்றும் பொறுப்பான ஊடகங்கள் உட்பட, நேர்மறையான குடிமை ஈடுபாட்டைத் தூண்டுவதற்கு நம்பகமான, சரியான நேரத்தில் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கான அணுகலை அதிகரித்தல்.

இத்தகைய சர்வதேச முன்மாதிரியுடனேயே இலங்கையிலும் தேர்தல்களூடாக ஜனநாயக அரசியலை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை சிவில் அமைப்புக்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கடந்த இரு தசாப்தங்களாக தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையம் முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இலங்கையில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பிற பிரதிநிதித்துவம் குறைந்த குழுக்களின் பங்கை அதிகரிக்க செயல்படுகிறது. மற்றும் இலங்கையின் தேர்தல் செயல்முறையில் அதன் வாக்காளர் அணுகல் மற்றும் உள்ளடக்கத்தை விரிவுபடுத்துவதற்கான அதன் நிறுவன திறனை வலுப்படுத்த இலங்கை தேர்தல் ஆணையத்தை ஆதரிக்கிறது. தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையத்தின் இணையவழி தகவலின்படி USAID நிதி உதவியில், இணைந்த பங்கேற்பு செயல்முறைகள் திட்டம், வளர்ந்து வரும் தேர்தல் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதிலும், ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களின் தலைமைத்துவ திறனை வளர்ப்பதிலும் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவை ஆதரிக்கிறது. எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் USAID நிதிப்பங்களிப்பை நிறுத்தியுள்ளதால் இச்செயற்றிட்டத்தின் தொடர்ச்சித் தன்மை கேள்விக்குரியதாக அமைகின்றது. 

கூடுதலாக, அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை (DFAT)-இன் நிதியுதவியுடன் கூடிய துணை தேசிய ஆளுகை வலுப்படுத்துதல் (SSG) திட்டம், குடிமக்களின் தேவைகளுக்கு உள்ளூர் அரசாங்கத்தின் பிரதிபலிப்பை மேம்படுத்துவதன் மூலம் துணை தேசிய அளவில் குடிமை மற்றும் ஜனநாயக பங்கேற்பை ஊக்குவிக்கிறது. இந்த திட்டத்தினூடாக பின்வரும் விளைவுகள் உறுதி செய்யப்படுகின்றது. நம்பகமான, பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் செயல்முறைகளை உறுதி செய்வதற்காக தேர்தல் மேலாண்மை திறன் மேலும் வலுப்படுத்தப்படுகிறது; புதுப்பிக்கப்பட்ட சட்ட கட்டமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் தேர்தல் ஒருமைப்பாடு மேம்படுத்தப்படுகிறது; வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட குழுக்களைச் சேர்ந்தவர்கள் உட்பட குடிமக்கள் இலங்கையின் ஜனநாயக செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்கின்றனர்; அரசாங்கம், குறிப்பாக துணை தேசிய அளவில், குடிமக்களின் தேவைகளுக்கு பதிலளிக்கிறது.

அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடனான தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையத்தின் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறை மாணவர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இளையோரின் பங்கேற்பு, பரிந்து பேசுதல், குரல் கொடுத்தல் மற்றும் ஈடுபாடு ஆகியவற்றை மையப்படுத்திய Pயுஏநு திட்டத்திலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள்.  இந்த திட்டத்தின் அங்குரார்ப்பணம் செப்டம்பர் 19-21, 2025 வரை இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா பூங்கா மற்றும் விடுதியில் மூன்று நாள் தங்குநிலை பயிற்சியுடன் ஆரம்பமாகியது. முதல் நாள் ஜனநாயகம், மனித உரிமைகள், தேர்தல்கள் மற்றும் நிர்வாகம் போன்ற முக்கிய கருத்துக்களில் ஒரு அடித்தளத்தை நிறுவியது. இதில் தேர்தல் சுழற்சியில் இளைஞர்களின் பங்கை எடுத்து விளக்கியது. இரண்டாவது நாளில், தேர்தல் பங்கேற்பாளர்கள் தேர்தல் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் குடிமை பங்கேற்பு குறித்த கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களின் சமூகங்கள் மற்றும் சாத்தியமான ஆதரவு சார்ந்த தலையீடுகள் குறித்து சிந்திக்க அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். இறுதி நாள் நடைமுறை பயன்பாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. அங்கு மாணவர்கள் குழுக்களாக குறிப்பிட்ட நடைமுறையில் அரசறிவியல் சார்ந்த ஈடுபாட்டை வழங்கக்கூடிய முயற்சிகளை உருவாக்கினர். குறிப்பாக மூன்று குழுக்காளாக உருவாக்கப்பட்டனர். முதலாவது குழு, 2024 தேர்தல்களின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நிராகரிக்கப்பட்ட வாக்குகளுக்குப் பின்னால் உள்ள காரணிகளை பகுப்பாய்வு செய்து, தொடர்புடைய நிறுவனங்களுக்கு பரிந்துரைகளை வழங்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இரண்டாவது குழு, இளைஞர்களின் குரல்கள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு ஆராய்ச்சி கருத்தரங்கை ஏற்பாடு செய்வதன் மூலம் முடிவெடுப்பதில் அர்த்தமுள்ள இளைஞர் பிரதிநிதித்துவத்திற்காக வாதிடும் செயற்றிட்டத்தை தேர்வு செய்துள்ளார்கள். மற்றும் மூன்றாவது குழு, குடிமக்கள் சார்ந்த சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க உள்ளூர் அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் திட்டத்தை குறிப்பாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையை முன்மாதிரியாக காட்சிப்படுத்தும் செயற்றிட்டத்தை முன்மொழிந்துள்ளனர்.

சர்வதேச நிறுவனமொன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய செயற்றிட்டமொன்றை மேற்கொள்வது வரவேற்கத்தக்க செயலாகும். முப்பதாண்டு கால போர் மைய நிர்வாக செயற்பாட்டிலிருந்து வடக்கு-கிழக்கை புறமொதுக்கியுள்ளது. இதன் விளைவுகளை வடக்கு-கிழக்கு அரச நிறுவனங்களின் வளப்பகிர்வின் பின்னடிப்புக்களில் தெளிவாக இனங்காணக்கூடியதாக உள்ளது. 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் கூட கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முப்பதாண்டு யுத்தத்தை காரணங்காட்டி வடக்கு-கிழக்கி பின்னடிக்கப்படும் அவலம் தொடர்நிகழ்வாகவே அமைகின்றது. இப்பின்னணியில் சர்வதேச நிறுவனங்களின் புலமைசார் ஈடுபாடுகளும் பெருமளவு கொழும்பு அல்லது தெற்கை மையப்படுத்திய பல்கலைக்கழகங்களுடன் இணைந்ததாகவே அமைகின்றது. வடக்கு-கிழக்கு பல்கலைக்கழகங்களில் பெருமளவு ஈடுபாட்டை வெளிப்படுத்துவதில்லை. இது சர்வதேச தளத்தில் புலமைசார் கருத்தாக ஒரு தள கருத்தை ஒருங்கு சேர்ப்பதாகவே அமைகின்றது. இது இலங்கையின் பன்மைத்துவத்தை வெளிப்படுத்தப் போவதில்லை. எனினும் அண்மைய நாட்களில் சர்வதேச புலமைசார் ஈடுபாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீதான ஈர்ப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனோர் பகுதியாகவே தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையத்தின் Pயுஏநு செயற்றிட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைப்பும் உள்வாங்கப்பட்டுள்ளது. குறித்த அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் வளவாளர் ஒருவர் மாணவர்களின் ஈடுபாட்டையும் கருத்தையும் உள்வாங்கிய போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் அரசியல் அறிவை பார்த்து சிலாகிப்பதாக கருத்து வெளியிட்டிருந்தார். கடந்த காலங்களில் ஒருமுகப் பார்வையில் கருத்துக்களை உள்வாங்கியோருக்கு பன்மைத்துவ கருத்து வெளிப்படுகையில் சிலாகிப்பது எதார்த்தமானதாகும்.

மேலும், கடந்த காலங்களில் குறிப்பாக 2009களுக்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் பெருமளவு சமுகத்துடன் இணைந்து செயலாற்றியது. அதனடிப்படையிலேயே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களும் தீர்மானமிகு சக்தியாக காணப்பட்டது. எனினும் 2009களுக்கு பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து சமுகம் பெருமளவில் விலகிச் சென்றுள்ளதனையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. காலத்துக்கு காலம் அரசியல் போராட்டங்களில் யாழ்;ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பெயரிடல்கள் காணப்படுகின்ற போதிலும், வலுவான அரசியல் தலைமையை குறைந்தபட்சம் அரசியல் பங்குபற்றல் ஈடுபாட்டை கூட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் உருவாக்க முடியவில்லை. இதன் பின்னணியில் சமுகத்துடன் இணைந்து செயலாற்றுவதில் மாணவர் ஒன்றியத்தின் ஈடுபாடு குறைவு மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக புலமைசார் ஈடுபாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வழங்க தவறியுள்ளமையே பிரதான காரணமாகும். சமகாலத்தில் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையத்தின் PAVE திட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மாணவர்கள் குழுக்களாக வழங்கியுள்ள செயற்றிட்ட முன்மொழிவுகள் சமூகம் சார்ந்த பல்கலைக்கழக புலமைசார் ஈடுபாட்டை ஊக்குவிக்கக்கூடியதாகும். இதனை வெறுமனவே இலாப நோக்கற்ற அரசுசார நிறுவன செயற்றிட்டங்களின் பொது இயல்பான நிதியிடல் மற்றும் அறிக்கையிடல் என்பதற்குள் சுருக்காது மாணவர்கள் ஆக்கபூர்வமாக வினைத்திறனுடன் செயலாற்றுவார்களாயின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான சமுக நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்தக்கூடியதாக அமையும்.

எனவே, தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையம் (IFES) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மாணவர்களுடன் ஒருங்கிணைந்து அரசறிவியல் கருத்தியலை நடைமுறைசார் அரசியலுடன் ஒருங்கிணைக்கும் செயற்பாடு வரவேற்கத்தக்கதுடன் பேண வேண்டியதாகும். இது இன்னும் அதிகமாக கொழும்பு மற்றும் தெற்கு பல்கலைக்கழகங்களில் மட்டும் சுருங்கியுள்ள சர்வதேச புலமைசார் செயற்றிட்டங்களை வடக்கு-கிழக்கு நோக்கி நகர்த்துவதற்கான ஆதாரமாக அமைய வேண்டும். இதனை ஆதாரமாக்குவதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மாணவர்களுக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. அவர்களின் ஈடுபாடும் செயற்றிறனுமே இன்னும் பல சர்வதேச அமைப்புக்களை புலமைசார் ஈடுபாட்டிற்கு வடக்கு-கிழக்கு நோக்கி இழுப்பதற்கான உந்துசக்தியாக அமையும். இதுவெறுமனவே அரசுசாரா நிறுவனங்களின் அறிக்கையிடல் செயற்றிட்டங்கள் என்பதற்கு அப்பால் சர்வதேச நிறுவனங்களுக்கு வடக்கு-கிழக்கின் தனித்துவமான புலமைசார் குரல்களை மேலெழ செய்வதற்கும் வாய்ப்புடையதாக அமையும். விடுதலைக்காக போராடும் தேசிய இனம் தமக்கு கிடைக்கும் துரும்புகளையும் சிகரங்களுக்கான கட்டமைப்பாக பேணுதலும் பாதுகாத்தலும் அவசியமாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-