ஈழத்தமிழர்களின் சர்வதேச விசாரணை கோரிக்கையும் உள்ளக நீதியின் பலவீனத்தை உறுதிப்படுத்தலும்! -ஐ.வி.மகாசேனன்-

மீண்டுமொரு முறை ஐ.நாவும் சர்வதேசமும் ஈழத்தமிழர்களை வஞ்சித்து விட்டது என்ற கோசம் ஈழத்தமிழரசியல் உரையாடலை பெற்றுள்ளது. ஜெனிவா திருவிழாவில் மார்ச் மற்றும் செப்டெம்பர் ஆரம்பங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதங்கள் அனுப்புவதும், ஏப்ரல் மற்றும் ஒக்டோபரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஏமாற்றியதாக புராணம் பாடுவதும் 2012களுக்கு பின்னரான ஈழத்தமிழரசியலின் தொடர் நிகழ்வாக அமைகின்றது. வருடம் வருடம் அரையாண்டுகளில் இரண்டு தொடக்கம் மூன்று மாத கால பின்தொடருகையில் ஐ.நாவும் சர்வதேசமும் ஈழத்தமிழர் நலனுக்காக முழுவீச்சாக செயற்பட வேண்டுமெனும் ஈழத்தமிழரசியல் எதிர்பார்ப்பு விவாதத்திற்குரியதாகும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உரிமை போராட்டக்காரர்கள் பருவகால செயற்பாட்டாளர்களாக இருந்து கொண்டு மூன்றாம் தரப்பை முழுநேர செயற்பாட்டாளராக கோருவது ஈழத்தமிழரசியலின் அரசியல் வறுமை அல்லது மாயையான நம்பிக்கைகளை அடையாளப்படுத்துவதாக அமைகின்றது. சர்வதேச அரங்கில் கடந்த காலத்துக்கான நீதிக் கோரிக்கையில் சர்வதேச நீதியை வலியுறுத்துவதாயின் அதற்கான நியாயாதிக்கம் மற்றும் தொடர்ச்சியான Home Work (அரசியல் சொல்லாடலில் ஆங்கிலத்தில் Home work எனக்குறிப்பிடுவது செயற்பாட்டின் தொடர்ச்சி என்ற பொருள் ஆழத்தை வழங்கும்) காணப்படுதல் வேண்டும். இக்கட்டுரை சர்வதேச நீதி விசாரணைக்கான நியாயாதிக்கத்தை தமிழ்த்தரப்பு வழங்கக்கூடிய பொறிமுறையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

2010களில் LLRC ஆணைக்குழு நியமனம் முதல் 2025களில் ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னராக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது வரை உள்ளக நீதிப்பொறிமுறை நியாயப்படுத்துவதற்கான அரங்கேற்றங்களை இலங்கை அரசாங்கங்கள் தெளிவாக பயன்படுத்தி வருகின்றது. அது ராஜபக்சக்களியினும் சரி, மைத்திரிபால சிறிசேனாவாயினும் சரி, ரணில் விக்கிரமசிங்கவாயினும் சரி இன்று மாற்றத்தின் குறியாக பிரச்சாரப்படுத்தும் அநுரகுமார திசநாயக்கவாயினும் சரி பொதுவான நடைமுறையாகவே அமைகின்றது. ஆட்சியாளர் முகங்கள் பெயர்கள் மாறலாம், ஜெனிவா சார் அரசியல் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரே இயல்பை பேணுகின்றனதாகவே அமைகிறது. அதேவேளையில் ஈழத்தமிழரசியல் தரப்பும் முழுமையான தொடர்ச்சியான செயற்பாடற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஏமாற்றியதாக புராணம் பாடுவதே இயல்பாக அமைகின்றது. அரசுடைய அமைப்பு தனது முழுமையான அரச இயந்திரத்தை பயன்படுத்தி செயற்படுகையில், அதற்கு எதிராக உரிமைக்காக போராடும் அரசற்ற அமைப்பின் போராட்டம் என்பது உயர்வீச்சாக அமையும் பட்சத்திலேயே குறைந்தபட்ச மாற்றங்களையாவது அடையாளம் காண முடியும். எனினும் ஈழத்தமிழ் அரசியலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கையாள்வதில் இலங்கை அரச இயந்திரத்தின் செயற்பாட்டிற்கு எதிர்வினையாய் குறைந்தபட்ச அளவைக்கூட கணிக்க முடியாத சூழலில், மாற்றங்கள் விளைவுகளை எதிர்பார்ப்பது கனவாகவே அமையக் கூடியதாகும்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிப் பொறிமுறையை நிராகரிப்பது தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களும் தொடர்ச்சியாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. குறிப்பாக 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத 60வது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் வருடாந்த அறிக்கையில், “உள்நாட்டுப் பொறிமுறைகளால் பொறுப்புக்கூறலை நோக்கிய முன்னேற்றம் இல்லாத நிலையில், மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 46/1 இன் படி, OHCHR (Office of the United Nations High Commissioner for Human Rights - மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளர் அலுவலகம்) இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவியது. தீர்மானம் 57/1 இல், பேரவையில் இந்த திறனை நீட்டிக்க முடிவு செய்தது. எவ்வாறாயினும், இன்றுவரை, இலங்கை அரசாங்கம் இந்தத் திட்டத்தில் ஈடுபட மறுத்துள்ளதுடன், மனித உரிமைகள் பேரவையில் பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானங்களைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது” எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியானதாகும். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைகள் நிபுணர் குழுக்களின் அறிக்கைகள் இலங்கை அரசாங்கத்தின் செயற்றிறனின்மை மற்றும் நம்பிக்கையீனத்தையே சுட்டிக்காட்டியுள்ளது. அக்டோபர்-07அன்று வெளியிடப்பட்ட வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழுவின் (UNCED - United Nations Committee on Enforced Disappearance) அறிக்கையும் இலங்கையின் உள்ளக நீதிப் பொறிமுறையை விமர்சித்துள்ளது. குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம் (OMP) பெற்றுள்ள கிட்டத்தட்ட 17,000 வழக்குகளில் ஒரு பகுதியை மட்டுமே (23 வழக்குகள்) கண்டறிந்துள்ள நிலையில், வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை கையாள்வதில் இலங்கையின் முன்னேற்றம் இல்லாதது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழு கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அறிக்கையில், "கட்டாயமாக காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்களின் விசாரணை மற்றும் வழக்குத் தொடுப்பதில் முன்னேற்றம் இல்லாததில் அதிக அளவிலான தண்டனை விலக்குரிமை பிரதிபலிக்கிறது" என்று குறிப்பிட்டது.

ஐ.நா கட்டமைப்பு உலக அரசாங்கம் என்ற கற்பனையில் நிறுவப்பட்ட இறைமையுடைய நாடுகளைக் கொண்ட இறைமையற்ற அமைப்பாகும். இங்கு ஐ.நா கட்டமைப்பின் எண்ணங்களை செயற்படுத்துவதில் அரசுகளின் குறிப்பாக வலிமையான அரசுகளின் விருப்பிலேயே எவையும் தங்கியுள்ளது. சமகாலத்தில் சர்வதேச அரசியல் பரப்பில் முதன்மையான விவாதமாக அமைந்துள்ள ரஷ்யா-உக்ரைன் போராயினும் அல்லது காசா போராயினும் அங்கு இடம்பெறும் இனப்படுகொலைகள் தொடர்பிலும் யுத்த நிறுத்தத்திற்கான அறைகூவல் தொடர்பிலும் ஐ.நாவின் அறிக்கைகள் காத்திரமாகவே அமைகின்றது. எனினும் செயற்பாட்டு தளத்தில் வலிமையான அரசுகளின் தலையீட்டால் யாவும் செயலிழந்து, இனப்படுகொலையையோ அல்லது போரையோ நிறுத்த திராணியற்ற நிலையிலேயே ஐ.நாவின் அறிக்கைகள் அமைகின்றது. இவ்சர்வதேச அனுபவங்களில் பின்னணியில் இலங்கை தொடபில் சர்வதேச விசாரணை அல்லது சர்வதேச தலையீட்டினை எதிர்பார்க்கும் ஈழத்தமிழர்கள் ஐ.நா மற்றும் அதன் கட்டமைப்புக்களிள் செயற்றிறனை அல்லது ஐ.நா கட்டமைப்பின் பொறிமுறையை அறிந்து அதனை கையாள தந்தீரோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

ஐ.நாவின் கட்டமைப்புக்கள் என்பது பல அரசுகளின் இராஜதந்திரிகளை ஒரே தளத்தில் சந்திக்க கூடிய ஓர் களமாகும். இவ்எண்ணங்களுக்குள்ளேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களையும் ஈழத் தமிழர்கள் புரிந்து செயல்பட வேண்டும். விமர்சனம் என்பதற்கு அப்பால் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர் என்பது ஈழத்தவர்கள் தங்களது கதறல்களை தந்திரோபாயமாக வெளிப்படுத்துவதற்கான களமாகும். சமகாலத்தில் ஐ.நா அரங்குகளில் பலஸ்தீனியர்களின் நடவடிக்கைகள் அதிகம் தமது மக்களின் இனப்படுகொலைக்கான கதறல்களாகவே இருந்து வந்துள்ளது. தொடர்ச்சியான சர்வதேச செய்திக் காணொளிகளில் இதனை அவதானிக்க கூடியதாகவும் உள்ளது. இவ்வாறான அனுபவங்களை ஈழத்தமிழர்கள் விளங்கிக் கொள்வது அவசியமானதாகும். ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வது என்பது, சர்வதேச அரசுகளின் இராஜதந்திரிகளுடன் சிவில் அமைப்புக்ககளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கும் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கான நியாயப்பாடுகளை வெளிப்படுத்துவதனூடாக ஆதரவுகளை திரட்டுவதாக அமைய வேண்டும்.

ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் குறிப்பாக உள்ளக நீதிப் பொறிமுறையின் பலவீனங்களை வெளிப்படுத்தி, சர்வதேச அரசுகளின் ஆதரவை திரட்டக் கூடிய வகையில் ஈழத் தமிழர்கள் நியாயாதிக்கத்தை தர்க்கரீதியாக கொண்டுள்ளார்களா என்பதில் முரணான கருத்துக்களே காணப்படுகின்றது. வெறுமனவே ஈழத் தமிழர்கள் தமது வரலாற்றை மற்றும் கடந்த காலத்தை முன்னிறுத்தி தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமானது எனக் கோசம் மாத்திரம் எழுப்புவது பயனற்றதாகும். இதனால் எவ்அரசையுமே அசைத்து விடக் கூடியதாக இருக்கப் போவதில்லை. நிகழ்கால சாட்சியங்கள் அவசியமானதாகும். அதற்கான வேலைத் திட்டங்களை ஈழத் தமிழ் அரசியல் தரப்பு நகர்த்துவது அவசியமானதும். குறிப்பாக இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகள் மற்றும் அரச அதிகாரிகள் சிலரை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வலிமையான அரசுகள் போர்க்குற்றங்களை முன்னிறுத்தி தடை செய்துள்ளது. இது ஈழத் தமிழருக்கு சர்வதேச அரச மட்டத்தில் உள்ள உயர்ந்ததொரு ஆதரவு தளமாகும். சர்வதேச அரசுகள் இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகள் மற்றும் அரச அதிகாரிகளை தடை செய்வதற்கு முன்வைத்துள்ள காரணங்களை சாட்சிகளை முன்னிறுத்தி இலங்கை நீதிமன்றங்களில் குறித்த முன்னாள் இராணுவ தளபதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட வேண்டும். இந்நடவடிக்கைகளின் விளைவுகள் சர்வதேச அரசுகளின் நியாயாதிக்கத்தை இலங்கையின் உள்ளக நீதி பொறிமுறை புறந்தள்ளுவதை உறுதி செய்யக்கூடியதாக அமையும். அல்லது மாறாக உள்ளக நீதிப்பொறிமுறையின் கீழ் முன்னாள் இராணுவத் தளபதிகள் தண்டிக்கப்படுவார்களாயினும் கூட ஈழத்தமிழருக்கு சாதகமானதேயாகும். சர்வதேச அரசுகளின் நியாயாதிக்கத்துடன் இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறை முரண்படுமாயின், தமிழர்களுக்கு இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறைக்குள் நீதி கிடைக்கப் போவதில்லை என்பதை சர்வதேச அரசுகளின் நிலைப்பாட்டின் ஊடாக எடுத்துக்காட்ட பொருத்தமான வாய்ப்பு காணப்படுகின்றது. இது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமுக சந்திப்புகளில் அரசியல் பத்தி எழுத்தாளர் ம.நிலாந்தன் அவர்களும் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி உள்ளார். எனினும் வினைத்திறனான செயற்பாட்டுக்கு ஈழத்தமிழ் அரசியல் தரப்பு முன் வரவில்லை.

ஈழத் தமிழ் அரசியல் தரப்பு சட்டவாளர்களால் நிறைந்தது என்பது பொதுவான இயல்பாகும். இது விமர்சனமும் ஆகும். எனினும் சட்டாம்பி அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் தமது சட்டப் புலமையை ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பொருத்தக்கூடியதாக பயன்படுத்துவது குறைவாகவே காணப்படுகிறது. இது தொடர்பிலான விளக்கத்திற்கு இப்பத்தி எழுத்தாளரின் இரு அனுபவங்களை பதிவு செய்வதும் பொருத்தமானதாக அமையும். ‘கொரோனா நெருக்கடியின் பின்னரான காலப்பகுதியில் பொது சுகாதார நெருக்கடியை காணங்காட்டி வடக்கு-கிழக்கு நீதிமன்றங்கள் போலீசாரின் கோரிக்கைக்கு இணங்கி ஈழத் தமிழர்களின் நினைவேந்தல்கள் தடுக்கப்பட்டன. சமகாலத்தில் தென்னிலங்கையில் வெற்றி விழா கொண்டாட்டங்களும், அரசியல் கூட்டங்களும் பெருந்திரளாக நடைபெற்று இருந்தது. இது ஒரு நாட்டின் இருவகையான சட்டங்களை பிரதிபலித்து இருந்தது.’ இதனை கண்டிக்கும் வகையில் தமிழ் சட்டத்தரணிகள் சட்டமறுப்பு போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்ற கோரிக்கையை இப்பத்தி எழுத்தாளர் ஈழத் தமிழ் அரசியலில் பிரபலமான இளம் அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான ஒருவரிடம் முன்வைத்திருந்தார். எனினும் குறித்த இளம் அரசியல்வாதி சட்டத்தரணி, சட்ட மறுப்பு போராட்டத்தை நீதிமன்றத்திற்கு எதிரானதாகவும் அதனை சட்டவாளர்கள் தாங்கள் செய்ய முடியாது என்றவாறு கருத்துரைத்திருந்தார். அவ்வாறே இன்னொரு சந்தர்ப்பத்தில் சமகாலத்தில் அரசியல் பத்தி எழுத்தாளர் ஒருவர் சட்டத்தரணி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரிடம் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் தமிழ் சட்டவாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பொறிமுறையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் குறித்த சிவில் செயற்பாட்டாள சட்டத்தரணி, ‘நீதிபதிகள் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் இணைந்து செயல்படுவதால், சட்டவாளர்கள் தனித்து செயல்படுவது நீதிபதியை அவமதிக்கும் செயல்’ எனக்கூறி அக்கோரிக்கையை நிராகரித்திருந்தார். இதே சட்டத்தரணிகள் தமது சக சட்டத்தரணி ஒருவர் வீட்டில் காவல்துறை அடாத்தாக நுழைந்ததற்கு எதிராக அண்மையில் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து போராடியிருந்தார்கள். இத்தொகுப்பு வெளிப்பாடுகள் சட்டவாளர்கள் அரசியல்வாதிகளாயினும், சிவில் சமூக செயற்பட்டவர்களாயினும் சட்டப்புலமையை வெறுமனவே இலங்கை அரசிற்கு உட்பட்ட தொழிலாக மாத்திரமே மட்டுப்படுத்துகிறார்கள். ஈழத் தமிழ் அரசியல் செயற்பாட்டிற்கு தமது சட்டத்தரணி கட்டமைப்பை பயன்படுத்தும் தெளிவை கொண்டிருக்கவில்லை. அல்லது விரும்பவில்லை. கிழக்கில் முஸ்லீம் அரசியல் செயற்பாட்டில் முஸ்லீம் சட்டத்தரணிகள் கட்டமைப்பாக செயற்படுவதிலிருந்து ஈழத்தமிழ் அரசியல்வாதி சட்டடத்தரணிகள் பாடங் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விடயத்தில் ஈழத் தமிழர்கள் புலம்புவதை தவிர்த்து அதன் செயற்றிறனை அறிந்து அதனுடாக பெற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பில் நகர்வதே பொருத்தமானதாகும். அதேவேளை சர்வதேச அரசுகளை கையாள்வதற்கு அல்லது சர்வதேச அரசுகளை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற தந்திரோபாயமான நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவும் வினைத்திறனாகவும் செயற்படுத்த ஈழத்தமிழ் அரசியல் முன்வர வேண்டும். பருவ கால அரசியல் செயற்பாடு ஊடாக அரசற்ற விடுதலைக்காக போராடும் தேசிய இனம் அரசுகளை அரசுகளின் அரசுகளின் நலன்களை வளைத்துக் கொள்ள முடியாது. சர்வதேச நீதி விசாரணையை துரிதப்படுத்துவது அல்லது நியாயப்படுத்துவது என்பது சர்வதேச அரசுகளின் நியாயாதிக்கத்தோடு இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறையை மோத விடுவதிலேயே சாத்தியத்திற்கான வாய்ப்புக்களை தேடலாம். இதற்கு ஈழத்தமிழர்களின் அரசியல் சட்டாம்பிகள் வினைத்திறனான செயற்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-