தமிழ்த்தேசிய இருப்பைப் பேண நுண் செயற்பாட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-
ஈழத்தமிழர்கள் விடுதலைக்கு போராடும் தேசிய இனமாக, தேசியத்தை பலப்படுத்தக்கூடிய அனைத்துக் காரணிகளையும் ஒன்றினைத்து பயணிப்பது அவசியமான முன்நிபந்தனையாகும். எனினும் ஈழத்தமிழரசியலில் ஒற்றுமை சாத்தியப்பாடற்றது என்பது தவிர்க்க இயலாத எதார்த்தமாக காணப்படுகின்றது. அதேவேளை தேசியம்சார் செயற்பாடுகளை மற்றும் செயற்பாட்டாளர்களை நிந்திப்பதனூடாக தேசியத்துக்கான அரண்களை சிதைக்கும் செயல்களே முன்னிலையில் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்களையும் தமது செயற்பாடுகளையும் மகாத்மா தனமானதாக முன்னிறுத்தி பிற செயற்பாடுகளை சிறுமைப்படுத்தும் மற்றும் துரோகத்தனமாக்கும் பிரச்சாரங்களை முன்வைக்கின்றார்கள். தமிழ்த்தேசியத்தை திரட்டும் கருத்தாழத்தை கொண்டிருந்த தமிழ்ப் பொதுவேட்பாளரும் அவ்வாறே சிதைக்கப்பட்டது. இத்தகைய பரந்த அரசியல் செயற்பாடுகளே எவ்வித தூரநோக்கமற்று சிதைக்கப்படுகையில், நுண் செயற்பாட்டாளர்களும் செயல்களும் இலகுவாக அழிக்கப்படும் அவலமே தமிழ் பரப்பில் நிரவி காணப்படுகின்றது. சமகால சமூக வலைத்தள யுகத்தில் செயற்பாட்டாளர்களை எதிர் நிலையில் விமர்சிப்பதனூடாக பிரபல்யமாகும் இழிநிலை முதன்மை பெற்று வருகின்றது. மறுதளத்தில் இது அச்செயற்பாட்டாளரின் செயற்பாடுகளை பாதிப்பதும் அது தமிழ் தரப்பிற்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பிலோ ஆழமான பார்வையற்ற நிலை காணப்படுகிறது. இக்கட்டுரை நுண் செயற்பாட்டாளர்களை தமிழ்த்தேசிய அரசியலில் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் அரசியல் பரப்பு, இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான கடந்த எட்டு தசாப்த உரிமைப் போராட்டத்தில் நீண்டதொரு அஹிம்சைப் போராட்டத்தையும் மற்றும் ஆயுதப் போராட்டத்தையும் வெளிப்படையாக அவதானித்து வந்துள்ளது. அதேவேளையில் அரசியல்வாதிகள் எனவும், சிவில் அரசியல் செயற்பாட்டாளர்கள் எனவும், போராளிகள் எனவும் அரசியல் சார்ந்த செயற்பாட்டாளர்களை அங்கிகரித்துள்ளது. எனினும் வெளிப்படையான அரசியல் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக தமது செயற்பாடுகளில் நுணுக்கமாக தமிழ் மக்களின் அரசியல் விடுதலை அல்லது தமிழ்த் தேசியத்தை பாதுகாக்கும் இலக்குகளை ஆழமாக கொண்ட செயற்பாட்டாளர்களும் கடந்த எட்டு தசாப்தங்களில் தமிழ் அரசியல் பரப்பில் நிரவி காணப்பட்டுள்ளார்கள். குறிப்பாக தொழிலதிபர் மில்க்வைட் கனகரத்தினம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ.துரைராஜா போன்றவர்கள் வரலாற்றில் தமிழ்த்தேசியத்தை பலப்படுத்திய அல்லது பாதுகாத்த நுண் செயற்பாட்டாளர்களாய் காணப்பட்டுள்ளார்கள். இவர்களை தாண்டி பலரும் பிரபல்யமற்றும் காணப்பட்டுள்ளார்கள். பத்தி எழுத்தாளர் ம.நிலாந்தன் குறிப்பிடுவது போன்று, 'எவரெவர் தன் வேலைகளை ஆத்மாத்தமாக செய்கின்றார்களோ அதுவே தேசியமாகும்.' அவ்வகையில் நுண் செயற்பாட்டாளர்கள் பலரின் ஆத்மாத்தமான அரசியல் பணியுமே தமிழ்த்தேசிய இருப்பை பாதுகாத்து வந்துள்ளது.
இன்றும் அவ்வகையான நுண் செயற்பாட்டாளர்கள் தமிழ்த்தேசிய அரசியல் இலக்கை தமது செயற்பாடுகளூடாக மறைமுகமாக பாதுகாத்து வருகின்றார்கள். குறிப்பாக இப்பத்தி எழுத்தாளரின் சாதாரண நடைமுறை அனுபவத்தில் பாடசாலை நாட்களை மீட்கையில், பல ஆசிரியர்கள் அத்தகைய நுண் செயற்பாட்டளார்களாக செயலாற்றியதன் விளைவாகவே, இப்பத்தி எழுத்தாளரின் தமிழ்த்தேசியம் மீதான பற்றுறுதி வளர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஓய்வுபெற்ற அரசியல் விஞ்ஞான ஆசிரியர் வ.தவகுலசிங்கம் மற்றும் பிரபல அரசியல் விஞ்ஞான ஆசிரியர் மற்றும் அதிபர் கே.எஸ்.இளங்கோ ஆகியோர் அரசறிவியல் கற்கையை பள்ளி மாணவர்களுக்கு வெறுமனவே இலங்கை அரசின் பாடவிதானத்துக்குள் நின்று ஒப்புவிப்பதில்லை. மாறாக தமிழ் மக்களின் அரசியல் பயணப் பாதையை அறிவுபூர்மாக மாணவர்களுக்கு பழக்குகின்றார்கள். இதுவொரு வகையில் அறிவுபூர்வமாக தமிழ்த்தேசியத்தை பாதுகாக்கும் பணியாகவே அமைகின்றது. அவ்வாறே தமிழ்ப் பாடத்தின் பிரபல ஆசிரியர் நிசாந்தன் மற்றும் பௌதிகவியல் ஆசிரியர் குமரன் ஆகியோர் தமிழ்ப்பொதுவேட்பாளரின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து தமது தனியார் கல்வி நிலையங்களில் அதுசார்ந்த பிரச்சாரங்களை அனுமதித்துள்ளார்கள். இவர்கள் சமுகத்திற்கு அரசியல் செயற்பாட்டாளர்களாய் பரீட்சயமற்ற போதிலும், தமிழ்த்தேசிய அரசியலை பாதுகாப்பதில் தமது தொழில்களூடாக செயலாற்றி வருகின்றார்கள். இவர்கள் இப்பத்தி எழுத்தாளரின் நடைமுறை அனுபவத்தின் ஓர் பகுதியினரேயாகும். இன்னும் இன்னும் பலரும் பிரபல்யமற்று விரவி நுண் செயற்பாட்டாளர்களாய் அரசியலில் காணப்படுகின்றார்கள்.
சமுகம் சார்ந்த ஈடுபாடும் அரசியல் செயற்பாடு என்பதும் ஒருவரின் தொழிலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதேவேளை செயல்பாடு என்பது நிச்சயமாக ஒருவர் செல்வாக்கு செலுத்துபவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டின் வடிவம் அல்லது அதன் நுண்ணிய அரசியல் வடிவம் எப்போதும் ஒருவரின் சமூக ஊடக கணக்குகளில் விளம்பரப்படுத்துவதுமில்லை. மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாட்டின் வடிவம் நுண்ணிய செயல்கள் மூலம் காட்டப்படுகிறது. இதுவொரு வகையில் சமுக பாதுகாப்பற்ற சூழலில், சமுகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களால் நேரடியான பிரச்சார முறையை தவிர்த்து தமது தொழில்களூடாக கட்டமைக்கப்படுகின்றது. இனவெறி எதிர்ப்பு ஆதரவாளர் மற்றும் எழுத்தாளர் ஓம்காரி வில்லியம்ஸ், தனது 'நுண் செயற்பாடு' (ஆiஉசழ யுஉவiஎளைஅ) புத்தகத்தில், 'நுண் செயற்பாடு என்பது ஒன்றின் மேல் ஒன்று கட்டமைக்கும் சிறிய செயல்களாகவும் மற்றும் கூட்டாக கட்டமைக்கப்படும். இது நீங்கள் உணரக்கூடியதை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று விளக்குகிறார். நுண் செயற்பாட்டாளர்கள் சமூக இயக்கங்களுக்குப் பின்னால் உள்ள முகங்கள், வழக்கமான செயல்கள் மூலம் சமூக நிகழ்ச்சி நிரல்களை இயக்கும் நிலையான, சிறிய அல்லது பெரிய செயல்களை உருவாக்குகிறார்கள். அச்செயல்கள் நுணுக்கமாக அரசியல் இலக்குகளை நீண்டகால நோக்கில் நெறிப்படுத்துவதாக அமைகின்றது.
சமகால சமூக வலைத்தள யுகத்தில் சில நுண் செயற்பாட்டாளர்களை, அவர்களின் முக்கியத்துவம் உணரப்படாது அல்லது உணர்ந்து அதனை நசுக்கும் வேலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. குறிப்பாக சிவபூமி அறக்கட்டளையின் நிறுவுனர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் மற்றும் றீச்சா நிறுவன நிறுவுனர் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் ஆகியோர் மீதான அண்மைய அவதூறுகளை நுணுக்கமாக ஆராய்ந்து உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டிய தேவைப்பாடு தமிழ்த்தேசியத்தை பாதுகாக்க அறிவுபூர்வமாக சிந்திப்பவர்களுக்கு அவசியமாகின்றது.
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் ஏறத்தாழ இரு தசாப்தங்களுக்கு மேலாக சிவபூமி அறக்கட்டளை என்ற நிறுவனத்தினூடாக சமூக வேலைகளை வடக்கு-கிழக்கு-மலையகம்-கொழும்பு என தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலங்களெல்லாம் மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக கோண்டாவிலில் வலுக்குறைந்த மாணவர்களுக்கான பாடசாலை என ஆரம்பிக்கப்பட்ட நிறுவனப்பணி மூன்றுக்கு மேற்பட்ட வலுக்குறைந்த மாணவர் பாடசாலை, முதியோர் இல்லங்கம், தமிழர் பூமிகளில் மடங்கள், தமிழ் கருங்கற் ஆவணங்கள், நூதணசாலை, இலவச மருத்துவ முகாம், தமிழ் ஆராய்ச்சி நிலையம் என நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ் சமுகத்துக்கு தேவையான நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். வெளிப்பார்வையில் ஆலயங்களாகவும், சமய நிறுவனங்களாகவும் காட்சிப்புலனாகினும் ஆழமான தமிழ்த்தேசிய அரசியல் இருப்பை கலாநிதி ஆறு திருமுருகனதும் அவரை சார்ந்த சிவபூமியினதும் பணிகள் கொண்டுள்ளது. இதுவொரு வகையில் சமூக ஓட்டத்தில் தேசிய இருப்பை பாதுகாக்கும் பணியாகும். மதம் தொடர்பான கருத்தியலை அரசியல் சொல்லாடலில் 'நம்பிக்கை' (Believe) என்றே குறிப்பிடுவதுண்டு. மதம் தவிர்க்க முடியாத வகையில் மக்களிடையே ஆழமான நம்பிக்கையை கொண்டதாகவும் நம்பிக்கையை விதைப்பதாகவும் அமைகின்றது. அதனூடாக சில விடயங்கள் முன்னெடுக்கையில் இலகுவாக மக்களை சென்றடைவதாகவும் மக்களால் பாதுகாக்கப்படுவதாகவும் அமைந்து விடுகின்றது. சோழனினதும் மூத்த தமிழ்க் குடியினதும் வீரமும் ஆற்றலும் தஞ்சை பெரிய கோயிலின் விஷ;தாரத்திலேயே இன்றும் பார்க்கப்படுகின்றது. மேலும் தென்னாசிய நாடுகளில் காலணித்துவ அரசியலும் அதன் விஷ;தரிப்பும் கிறிஸ்தவ மத பரப்புகையிலாலேயே சாத்தியமாயிற்று. மதத்தினூடாக உள்ளார்ந்த அரசியல் நோக்குடைய செயற்பாடுகள் இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளின் இயல்பான அரசியல் கலாசாரமாகவே அமைகின்றது. அத்தகையதொரு வடிவத்தையே 21ஆம் நூற்றாண்டில் கலாநிதி ஆறு திருமுருகனும் பிரதிபலிக்கின்றார். உதாரணமாக நாவற்குழியில் 2010களில் இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்டரீதியில் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டு பௌத்த விகாரையும் நிறுவப்பட்டுள்ளது. இதுவொரு வகையில் திட்டமிட்ட வகையில் தமிழர் தாயகம் மீதான வரலாற்று திரிபை உருவாக்கக்கூடிய சூழலை உருவாக்கும் திட்டமாகும். இதற்கெதிராக தமிழ் அரசியல் தரப்பு சாத்தியமான எதிர்வினைகளை ஆற்றியிருக்கவில்லை. மாறாக சிவபூமி அமைப்பு வரலாற்றை நிலையாக பேணும் நோக்கில், யாழ்ப்பாண நுழைவாயிலான நாவற்குழியில் கருங்கற்கலால் தமிழ் மொழியின் தனித்துவமான திருவாசகம் பதிக்கப்பட்ட திருவாசக அரண்மனை மற்றும் இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னர்களின் சிலைகள் யாவும் நிறுவப்பட்டுள்ள நூதனசாலை நிறுவப்பட்டுள்ளது. கீரிமலை உட்பட பல இடங்களில் தமிழ் தொல்லியல் வரலாற்றை மாற்ற பௌத்த விகாரை நிறுவுவதற்கான முயற்சிகளை சிவபூமி நிறுவுனர் மற்றும் சமூகத் தலைவர் என்ற அடையாளங்களூடாக பிரச்சாரமின்றி ஆறு திருமுருகன் தடுத்துள்ளார். இவ்வாறே சிவபூமி நிறுவனங்கள் உருவாகியுள்ள பல இடங்களும் கடந்த காலத்தில் இராணுவ முகாம்களாக காணப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்கள் அதனை சிவபூமிக்கு பாரப்படுத்தியதும் அதனை மீட்டு தமிழ் சமுகத்துக்கு தேவையான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
கந்தையா பாஸ்கரன் புலம்பெயர் தொழிலதிபராக அறியப்பட்டுள்ளார். அத்தகைய அறிமுகத்துடனேயே அவரது றீச்சா நிறுவனமும் கந்தையா பாஸ்கரனின் தொழில் முதலீட்டு முயற்சியாக மாத்திரம் அணுகப்படுகின்றது. றீச்சா, சுற்றுலா தளம் என்ற போர்வையில் ஈழத்தமிழர்களின் அரசியல்-சமுக-பண்பாட்டு-பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகவும் அமைகின்றது. இதுவரை உல்லாச சுற்றுலா விடுதியுடன் கூடிய அனைத்து வகை சுற்றுலாத் தளங்களை பார்ப்பதற்கு தென்னிலங்கையை நோக்கியே பயணிக்க வேண்டிய தேவைகள் காணப்பட்டது. எனினும் றீச்சாவின் உருவாக்கம் மாற்றை தந்துள்ளது. அதேவேளை றீச்சாவின் உட்கட்டுமானங்கள் தமிழர்களின் அடையாளங்களை தமிழர்களின் அரசியல் வரலாற்றையும் சுற்றுலா வேடிக்கைக்குள் இணைத்துள்ளது. குறிப்பாக றீச்சாவின் உட்பகுதி தமிழர்களின் பண்டைய ஐந்து நிலங்களான மருதம், முல்லை, குறிஞ்சி, நெய்தல், பாலை என்ற பெயரிடலில் பிரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே உட்கட்டுமானங்கள் யாவும் தமிழ்ப் பெயரிடலில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விடுதி அறைகளின் பெயர்கள் யாவும் அரிதான பூக்களின் பெயர்கள் இடப்பட்டுள்ளது. குறிப்பாக முதலாவது அறையின் பெயர் காந்தள் ஆகும். அதுமாத்திரமன்றி 1983 தமிழினப்படுகொலையை நினைவுகூரும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மன்னர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது. போராட்ட காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு நிறுவப்பட்டள்ளது. இது வெளிப்போர்வையில் சுற்றுலாத்தளம் என்ற காட்சியை கொடுப்பினும் உள்ளார்ந்த தமிழ்த் தேசிய அரசியல் செய்திகளை சொல்லக்கூடியதாகவும், தமிழர் வரலாற்றை பேணக்கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி றீச்சாவின் வெற்றியும் இருப்பும் ஏனைய புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு தாயக முதலீட்டுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக அமையும். இது தமிழ்த்தேசியத்தின் முதலீட்டையும் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதற்கான முன்மாதிரியாக அமையும். அத்துடன் கந்தையா பாஸ்கரன் உயிரிழை, லிப்ரா போன்ற நிறுவனங்களூடாக தொடர்ச்சியாக சமுகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார். வெளியே அடையாளப்படுத்தி பிரச்சாரப்படுத்தாத வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்குமே பல வகையில் உதவிகளை மேற்கொண்டு வருகின்றார்.
கலாநிதி ஆறு திருமுருகனோ அல்லது கந்தையா பாஸ்கரனோ அல்லது அவர்களைப் போன்ற சமுக செயற்பாட்டாளர்களோ விமர்சனத்தை கடந்தவர்கள் என இப்பத்தி அவர்களை இவ்உலகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக சித்தரிக்க முயலவில்லை. எனினும் அவர்கள் மீது முன்வைக்கும் விமர்சனங்கள் அவர்களது நிறுவனங்களையும், அவர்களது சமுகம் சார்ந்த செயற்பாடுகளையும், அவர்களது தமிழ்த் தேசியம் சார்ந்த நுண் செயற்பாடுகளையும் எந்தளவு பாதிக்கும் மற்றும் அது தமிழ் சமுகத்தின் எதிர்காலத்திற்கு எத்தகைய தாக்கத்தை வழங்கும் என்பதையும் சிந்தித்து விமர்சனத்தை முன்வைக்க முன்வர வேண்டும். தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் ஒரு சந்திப்பொன்றில் கலாநிதி ஆறு திருமுருகனை பற்றி குறிப்பிடுகையில், 'தம்மைப் போன்ற அரசியல்வாதிகள் ஒருவர் கூட செய்யாத செய்ய முடியாத பல வேலைகளை ஆறு திருமுருகன் செய்து வருகின்றார். அவரை பொதுவெளியில் விமர்சிப்பது தமிழ் சமுகத்தின் பல நன்மைகளை இழக்கச் செய்யக்கூடியது' என்றவாறு கருத்துரைத்தார். இத்தகைய பிரபல்யமான நுண் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதும் நிச்சயம் குறைகள் காணப்படலாம். அவர்கள் தமது சிந்தனைக்கு ஏற்றவாறு தமிழ் சமுகத்திற்கு இவ்வாறு செய்வதால் நன்மை ஏற்படுமென்றவாறு செயற்பட முயலுகின்றார்கள். யாவரும் முழுமையானவர்கள் இல்லை. தவறுகள் வரலாம். அத்தகைய தவறுகளை அவர்களிடம் நேரடியாக சுட்டிக்காட்டி திருத்தி கொள்வதே பொருத்தமானதாகும். அதுவே தமிழ் சமுகத்தின் எதிர்காலத்தையும் பாதுகாக்கக்கூடியதாகும். மாறாக கண்மூடித்தனமாக யாவரையும் எதிரிடையாக விமர்சிப்பது அதிகரிக்குமாயின் சமுகம் மீதான பற்று குறைவடைந்து யாவரும் சுயநலத்துடன் வாழும் அராஜகமான எதிர்காலத்தையே தமிழ் சமுகம் உருவாக்குவதாக அமைந்து விடும்.
எனவே, அரசியல் பாதுகாப்பற்ற மற்றும் ஒருங்கிணைந்த தலைமையற்ற விடுதலைக்காக போராடும் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை பாதுகாப்பதில் நுண் செயற்பாட்டாளர்களின் வகிபாகம் அரசியலில் முதன்மையானதாக அமைகின்றது. நிலையான தீர்வு ஒன்று கிடைக்க வரலாறும் பண்பாடும் மண்ணும் மக்களும் பாதுகாக்கப்படுவது அவசியமாகும். அத்தகைய அரசியலையே தமது சமுக செயற்பாடுகளூடாக நுணுக்கமாக கலாநிதி ஆறு திருமுருகன் மற்றும் கந்தையா பாஸ்கரன் போன்ற நுண் அரசியல் செயற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். வெளிப்படையான அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு கிடைக்கும் அங்கிகாரம் நுண் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை. நுண் அரசியல் செயற்பாட்டாளர்கள் அத்தகைய அங்கிகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை. ஒரு நுண் செயற்பாட்டாளர் ஒரு சமூக நோக்கத்தை தனது தோள்களில் சுமக்கும் பொறுப்பை ஏற்கவில்லை. ஒரு நுண் செயற்பாட்டாளர் ஒரு விலைமதிப்பற்ற ஆதரவாளர். அவர் தனது அன்றாட வாழ்க்கையில் செயல்பாட்டை இணைத்து, நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் இரக்கத்துடன் வாழ்கிறார். நுண் செயற்பாட்டாளர்கள் மாற்றத்தை உருவாக்குபவர்கள், பாலம் கட்டுபவர்கள் மற்றும் இயல்பான அரசியல் பெட்டிக்கு வெளியேயான சிந்தனையாளர்கள் ஆகும். இத்தகைய நுண் அரசியல் செயற்பாட்டாளர்களை பேணுவதனூடாகவே தமிழ் சமுகமும் நிலையான மாற்றத்தை பாதுகாக்கக்கூடியதாக அமையும்.
Comments
Post a Comment