புதிய அரசியலமைப்பு விவாதமும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு முயற்சிகளும்! -ஐ.வி.மகாசேனன்-

2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னர் அரசியலமைப்பு மாற்றம் பற்றிய விவாதம் நிறுவன சீர்திருத்தமாக இலங்கை அரசியலில் தொடர்ச்சியான பிரச்சாரப் பொருளாக அமைகின்றது. 2010, 2015, 2019 மற்றும் 2024ஆம் ஆண்டு தேர்தல்களின் பிரச்சாரத்தில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளிடம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் முதன்மையானதாகவும் அமைந்தது. பல சந்தர்ப்பங்களில் புதிய அரசியலமைப்புக்கான மக்கள் ஆணையும் கிடைக்கப்பெற்றிருந்தது. இந்த பின்னணியிலேயே கடந்த 15 ஆண்டுகளில் 2010ஆம் ஆண்டு 18ஆம் திருத்தம் முதல் 2022ஆம் ஆண்டு 22ஆம் திருத்தம் வரையில் ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் முழுமையான அரசியலமைப்பு மாற்றம் சாத்தியப்பாடற்றதாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபை முழுமைப்படுத்துவது தொடர்பில் தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கியிருந்தது. ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபு தமிழ் அரசியல் பரப்பில் கடுமையான விவாதப் பொருளை உருவாக்கியிருந்ததாகும். சமகாலத்திலும் ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபுக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரை ஏக்கிய இராச்சிய வரைபுக்கு எதிரான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரமும் கடந்த காலத்தின் தொடர்ச்சியாய் நிறுவன சீர்திருத்தத்தை உறுதி செய்ய அரசியலமைப்பு மாற்றத்தை முன்மொழிந்து மக்கள் ஆணையை கோரியிருந்தார்கள். 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு இலங்கை தேசிய ஆக்கக்கூறுகள் எனும் பகுதியில், 'புதிய அரசியலமைப்பொன்றுக்கான வரைவு தயாரிக்கப்படுவதோடு, அது பொதுமக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரையாடலுக்கு இலக்காக்கப்பட்ட பின்னர் அவசியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் கருத்துக் கணிப்பில் அங்கீகரித்துக் கொள்ளப்படும்' என்றவாறு குறிப்பிட்ப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சார மேடைகளில், 'நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து, அதை பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் இல்லாத ஜனாதிபதியால் மாற்றுவதாக உறுதியளித்தார். 2015இல் தொடங்கப்பட்ட சீர்திருத்த செயல்முறையை கட்டியெழுப்ப, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதையும் அனைத்து குடிமக்களின் சமத்துவத்தையும் உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாகவும்' உறுதியளித்தார். இலங்கை மக்களும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு ஏற்றவாறு 2ஃ3 பெரும்பான்மை ஆணையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர். ஒரு வருடங்கள் அண்மிக்கும் நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முன்னகர்வுகள் எதனையும் இலங்கைப் பாராளுமன்றத்தில் அவதானிக்க முடியவில்லை. குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாயின் இலங்கைப் பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட வேண்டும். எனினும் அத்தகைய முன்னகர்வுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்க உரையாடலிலும் அவதானிக்க முடியவில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியலமைப்பு மாற்றம் இழுத்தடிப்பு பொதுத்தளத்திலும் தென்னிலங்கை சிவில் சமுகத்தினரிடமும் பாரிய விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. ஒரு காலத்தில் ஜே.வி.பி பரிமாண தேசிய மக்கள் சக்தியின் குரல் ஆதரவாளர்களாக இருந்த சிவில் சமூக அமைப்புகள், சிறுபான்மை பிரதிநிதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களும் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தெளிவின்மை மற்றும் உற்சாகமின்மையால் ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். 'பரந்த ஒருமித்த கருத்து' மற்றும் 'தொழில்நுட்ப சிக்கல்கள்' ஆகியவற்றின் தேவையே தாமதத்திற்குக் காரணம் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் விமர்சகர்கள் இவை வசதியான புகை திரைகள் என்று வாதிடுகின்றனர். அரசாங்கம் அதன் சொந்த காலக்கெடுவின்படி புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். மக்களிடமிருந்து பெற்ற ஆணையின்படி, விரைவில் ஒரு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி. பெரேரா முன்வைத்ததற்கு அமைச்சர் பதிலளித்தார். மேலும், 'ஒரு நாயின் வால் எப்போது வேண்டுமானாலும் ஆடாது, நாய் எப்போது வேண்டுமானாலும் ஆடலாம். எனவே, நாம் நமது சொந்த காலக்கெடுவின்படி செயல்படுவோம்' என்று நீதியமைச்சர் தெரிவித்தார். இது அரசியலமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையே தொடர்ச்சியாக உறுதி செய்கின்றது.

அரசியலமைப்பு மாற்றம் என்பது தென்னிலங்கையில் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியின் சர்வதிகார முறைமை சார்ந்த அரசியல் மாற்றத்திற்கான கோரிக்கையாக 1994ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக உரையாடப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை 1949ஆம் ஆண்டு முதல்; அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியலமைப்புக்கான கோரிக்கையை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இப்பின்னணியில் 1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பு மற்றும் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்புக்களை முழுமையாக ஈழத்தமிழர்கள் நிராகரித்தே வந்துள்ளனர். எனினும் எந்தவொரு அரசாங்கமும் அதிகாரப்பகிர்வின் தூய்மையான எண்ணங்களை செயற்பாட்டு பரப்பில் கொண்டிருக்கவில்லை. அரசியலமைப்பில் அதிகாரப் பகிர்வு விடயத்தில் சொல்லுக்கும் செயலுக்குமே ஆளுந்தரப்பில் முரண்பாடு காணப்படும். அதுமட்டுமன்றி ஆளுந்தரப்பு முயற்சிக்கும் குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வைக்கூட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கைவிடும் நிலைமைகளே இலங்கை வரலாற்றின் தொடர்ச்சியான அனுபவங்களாக அமைகின்றது. 1957ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் முதல் 2000களில் சந்திரிக்க அரசாங்கத்தின் பீரிஸ்-நீலன் தீர்வுப்பொதி உள்ளடங்கலாக 2015-2019ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் ஏக்கிய இராச்சிய வரைபு வரை அவ்வராற்று அனுபவங்களின் தொடர்ச்சியாகவே அமைகின்றது. இப்பின்னணி அனுபவங்களை கொண்டே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியலமைப்பு உரையாடல்களை ஈழத்தமிழர்கள் அணுகவேண்டி உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு உள்ளடக்கங்கள் தொடர்பில் தமிழ்ப்பரப்பில் வேறுபட்ட நிலைப்பாடுகளை அவதானிக்க முடிகின்றது. எனினும் பாராட்டத்தக்கதொரு விடயம், கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை தமிழ் அரசியல் பரப்பு முன்கூட்டிய செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து, அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரணியில் வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளுடனும் தமிழ்ப் பராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக்களையும் உரையாடல்களையும் முன்னெடுத்திருந்தது. கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பேரவையில் தமிழ் சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் மற்றும் தமிழ்க் கட்சிகள் பலரின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட அதிகாரப்பகிர்வுசார் தீர்வுத்திட்டத்தை முன்னணி பிரதானமாக நகர்த்தியிருந்தது. அதேவேளை தமிழ்க்கட்சிகளிடம் குறிப்பாக அத்தீர்வுத்திட்ட உருவாக்கத்தில் பங்குகொள்ளாத தமிழரசுக்கட்சி அத்தீர்வு திட்டத்தில் மாற்றங்களை முன்மொழியின் ஆரோக்கியமான விடயங்கள் ஒன்றுபட்ட கலந்துரையாடலூடாக உள்வாங்கப்படும் என்ற இணக்கத்தையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வெளிப்படுத்தியிருந்தது. தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முயற்சிக்கு ஆதரவான சமிக்ஞையை வெளிப்படுத்திய போதிலும், தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் குழுக்கள் கட்சி அரசியல் நோக்குடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்கூட்டிய செயற்பாடு தேவையற்றது என்ற கருத்தை சுட்டிக்காட்டி இழுத்தடிப்பு செய்து நிராகரித்திருந்தனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் தொடர்பிலோ அல்லது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலோ எவ்வித கருத்துக்களையும் வெளிப்படையாக முன்வைக்க தயாரில்லாத நிலையிலேயே உள்ளார்கள். இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்வினையாற்ற காத்திருப்பது மடமைத்தனமாகும். நீண்ட அரசியல் பாரம்பரியத்தை கொண்ட தமிழரசுக்கட்சி ஆளுந்தரப்புக்கு எதிர்வினையாற்றுவதனூடாகவே விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தை நகர்த்த முனைவது ஆபத்தானதாகவே அமைகின்றது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்கூட்டிய முயற்சிகளும் தொடர்ச்சியான உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்புக்களால் நீர்த்து போகும் நிலைக்கு சென்றிருந்தது.

சமகாலத்தில் மீளவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் மக்களின் கருத்தை ஓரணியில் திரட்டும் உரையாடல்களை முன்னகர்த்தி வருகின்றார்கள். இம்முறை 'எது வேணும் என்பதற்கு அப்பால் எது வேணாம்' எனும் எதிரான அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். குறிப்பாக 2015-2019 ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் வரையப்பட்ட ஏக்கிய இராச்சிய வரைபை நிராகரிக்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்கள். ஏக்கிய இராச்சிய வரைபு முழுமையாக அரசியல் அரங்கில் அப்புறப்படுத்தப்பட்ட வரைபாக இல்லை என்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரங்களிலும் அவதானிக்கக்கூடியதாகவே அமைந்தது. குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் தேர்தல் மேடைகளில், '2015இல் தொடங்கப்பட்ட சீர்திருத்த செயல்முறையை கட்டியெழுப்பப்படும்' என்பது முதன்மையான பிரச்சாரமாக அமைந்துள்ளது. இது ஏக்கிய இரச்சிய வரைபின் இருப்பையே உறுதி செய்கின்றது. இந்த பின்னணியிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் ஏக்கிய இராச்சிய வரைபு நிராகரிப்புசார் பிரச்சாரம் நிராகரிக்க முடியாததாக அமைகின்றது. அதேவேளை சுவிஸர்லாந்து-இலங்கை நட்புறவு பாராளுமன்ற குழுவின் சுவிஸர்லாந்து பயண அனுபவம் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பில், 'தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ஏக்கிய இராச்சிய வரைபை தொடரும் எண்ணங்கள் இருப்பது சுவிஸர்லாந்தில் இடம்பெற்ற சந்திப்புக்களில் வெளிப்படுத்தப்பட்டதாக' தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். 'சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு தென்னாபிரிக்கா, ஜப்பான் போன்று நாடுகளுடன் இணைந்து கடந்த இரு வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகிறது. அந்த அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்துக் கட்சி குழுவொன்று சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டு அவர்களின் சமஷ;டி முறையை பற்றி சிந்திப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் நேரடி பிரதிநிதி பத்ம மஞ்சுல, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முனீர் முளாபர் ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது தாங்கள் 2015-2019ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பை திருத்தி முடித்துவிட்டோம். அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்' என கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பின்னணியிலேயே ஏக்கிய இராச்சிய வரைபை நிராகரிக்கும் வகையில் சிவில் ஒத்துழைப்புக்களை பெறும் வகையில் சந்திப்புக்களை மேற்கொண்டும் வருகின்றார்.

தமிழ் சிவில் சமுகங்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் ஏக்கிய இராச்சிய வரைபு தொடர்பில் எதிரான எண்ணங்களே காணப்படுகின்றது. குறிப்பாக ஏக்கிய இராச்சிய இடைக்கால அறிக்கை வெளிவந்த போது தமிழ் சிவில் சமுகங்கள் மற்றும் புத்திஜீவிகளிடமிருந்து வலிமையான எதிர்;ப்பும் ஏமாற்ற நிலைப்பாடும் வெளிப்படுத்தப்பட்டது. 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கணிசமான எழுச்சிக்கு பின்னாலும் ஏக்கிய இராச்சிய வரைபு தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஏமாற்றங்களும் ஒரு காரணமாகும். ஏக்கிய இராச்சிய வரைபை அன்றைய ரணில்-மைத்திரி அரசாங்கத்துடன் இதயத்தால் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் இணங்கியிருந்தனர் என்பது தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் நம்பிக்கை இழக்க காரணமாகியது. சம்-சுமோ கூட்டு 'ஏக்கிய இராச்சியம்' என்பது ஒற்றையாட்சியை குறிக்காது, மற்றும் பெயரில் தொங்கக்கூடாது போன்ற கருத்துக்களை முன்வைத்து பௌத்தத்திற்கு முதன்மை அளிக்கும் ஏக்கிய இராச்சிய வரைபை நடைமுறைப்படுத்த முழுவீச்சாக செயற்பட்டிருந்தார்கள். 

2015-2019ஆம் ஆண்டு ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக்கட்சியும் பிரதான பங்காளிகள் என்ற அடிப்படையில் ஏக்கிய இராச்சிய வரைபு மீதான தமிழ் அரசியல் விவாதம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எதிர் தமிழரசுக்கட்சி விவாதமாகவும் கட்சி போட்டி அரசியலாகவும் விம்பப்படுத்தப்படும் அல்லது செயற்படும் அபாயமும் காணப்படுகின்றது. இந்த அபாய சூழலை கருத்திற் கொண்டே ஏக்கிய இராச்சிய வரைபு நிராகரிப்பு தொடர்பான பிரச்சாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நகர்த்த வேண்டிய தேவையும் உள்ளது. ஏக்கிய இராச்சிய வரைபு தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே உறுதியானதாகும். எனினும் அக்கருத்து தமிழ் அரசியலுக்குள் முரண்பாட்டு சூழலை உருவாக்காத வகையில் பயன்படுத்துவதே ஈழத்தமிழரசியலின் திரட்சிக்கு அவசியமானதாகும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த்தேசிய அரசியல் தீர்வு விடயத்தில் இதய சுத்தியான எண்ணங்கள் தொடர்ச்சியாக காணப்படுகின்றதாயின், கட்சி நலன்சார் அரசியலை முழுமையாக அகற்றி தமிழ்த்தேசிய அரசியலை முதன்மைப்படுத்தி, ஏனைய தமிழ் கட்சிகளை விமர்சிக்கக்கூடிய கருத்துக்களை தவிர்ப்பதனூடாகவே தமிழ்த்தேசிய திரட்சியை உருவாக்கி தமிழ் மக்களின் அபிலாசையை முன்னிறுத்தக்கூடியதாக அமையும்.

எனவே, அரசியலமைப்பு உள்ளடக்கத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற முனைப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்கூட்டிய செயற்பாடு வரவேற்கத்தக்கதாகும். குறிப்பாக தமிழ்க்கட்சிகள் மற்றும் சிவில் சமுகங்களின் கூட்டாக தமிழ் மக்களின் திரட்சியூடாக தமிழ் மக்களின் அபிலாசை வெளிப்படுத்த மேற்கொள்ளும் சந்திப்புக்கள் பாராட்டத்தக்கதாகும். அண்மைய காலங்களில் தமிழ் அரசியலில் முதிர்ச்சியான அரசியல் செயற்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அவதானிக்க முடிகின்றது. எனினும் ஒருசில முடிவுகள் திரட்சியை குழப்பக்கூடியதாகவும், கட்சி நலன் போட்டியை விம்பப்படுத்தக்கூடியதாக அமைகின்றதையும் சீர்செய்ய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக அரசியலமைப்பை மையப்படுத்தி ஆரம்பத்தில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுப் பொதியை முன்வைத்து, 'தமிழ் மக்களுக்கு என்ன வேணும்' என்பதை வலியுறுத்தும் வகையில் மேற்கொண்ட முயற்சி காத்திரமானதாகும். மாறாக 'என்ன வேணாம்' என்பதை மாத்திரம் வலியுறுத்தும் போது எதிரான மனநிலையையும் எதிரிகளையுமே உருவாக்கக்கூடியதாக அமையும். இதனை சீர்செய்து 'எது வேணும் என்பதை முன்னிறுத்துவதனூடாக எது வேணாம் என்பதை சுட்டுவது' தமிழ் மக்களின் உரிமை வென்றெடுக்கக்கூடிய கூட்டுத்திரட்சியை பாதுகாக்கக்கூடிய பாதையாக அமையும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-