தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தடையற்ற சூழலும் மாவீரர் தின தமிழ் மக்களின் எழுச்சியும்! -ஐ.வி.மகாசேனன்-
2024ஆம் ஆண்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பில் பல ஐயப்பாடுகள் காணப்பட்டது. ஜே.வி.பி பரினாமமபகிய தேசிய மக்கள் சக்தி முற்போக்கு நிலையிலான தேர்தல் பிரச்சாரங்களை முன்னிறுத்தினாலும், ஈழத்தமிழர் அரசியலில் நீண்ட காலம் இனவாத செயற்பாடுகளையே வரலாற்றில் பதிவு செய்துள்ளது. இப்பின்புலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்க காலப்பகுதியில் தமிழர் தாயகப் பகுதியில் நினைவேந்தல்களில் தடைகள் ஏற்படுத்தப்படுமா என்ற அச்சம் பொதுவில் காணப்பட்டது. எனினும் அரசாங்கம், 'போரில் இறந்தவர்களுக்கு நினைவேந்துவதற்கு எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படாது' என அறிவித்திருந்தது. இது தமிழ் மக்களிடையே நம்பிக்கையான எதிர் விளைவுகளை உருவாக்கியிருந்தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னைரான காலப்பகுதியில், 2015ஆம் ஆண்டிலிருந்து தமிழர் தாயகப் பகுதிகளில் நினைவேந்தல்கள் உணர்வு எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டு வருகிறது. ஒப்பீட்டளவில் அதன் உச்சத்தை 2024இல் அவதானிக்க கூடியதாக இருந்தது. மாவீரர் துயிலும் இல்ல சூழல்களுக்கு வெளியேயும் வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடிகளை மாவீரர் வாரக்காலப்பகுதியில் அவதானிக்கக்கூடியதா...