நினைவேந்தல்களை சமுகமயப்படுத்துவதனூடாகவே தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்படுகின்றது! -ஐ.வி.மகாசேனன்-
2024ஆம் ஆண்டு மாவீரர் தினம் தாயகத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடனேயே முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக ஒரு பக்கம் வெள்ளம், புயல் என்ற போன்ற இயற்கையின் சீற்றத்துக்கான முன்னெச்சரிக்கைகள் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. அதேவேளை அரசியலில் ஜே.வி.பி-யின் ஆட்சி மாவீரர் தின நாட்களில் புதிய வினோதங்களை வெளிப்படுத்தலாம் என்ற எண்ணங்களும் பொதுவாக காணப்படுகின்றது. வினோதங்கள் நேராகவோ, எதிராகவோ இரு வழியிலான சந்தேகங்களும் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் ஜே.வி.பி போராளி மன்னம்பெரிக்கு எதிராக இலங்கை அரச இயந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் கொடுமை மற்றும் கொலைக்கு, குற்றவாளிகள் இலங்கை சட்டத்துக்குள் தண்டிக்கப்பட்டிருந்தனர். எனினும் தண்டனையின் பின் விடுதலையடைந்த குற்றவாளிக்கு பின்னாட்களில், ஜே.வி.பி தனது தண்டனையும் வழங்கியிருந்தது. எனினும் ஈழப் போராட்டத்தில் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா போன்ற போராளிகளுக்கு எத்தகைய தீர்வுகளையும் ஜே.வி.பி உரையாட தயாராகவில்லை. இவ்வாறான அனுபவத்தின் பின்புலத்தில் ஜே.வி.பி அரசாங்கத்தின் நேரான வினோதங்களை எதிர்பார்ப்பதும் சந்தேகத்திற்குரியதாகவே காணப்படுகின்றது. இக்கட்டுரை மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் ஈழத் தமிழர்கள் கொண்டிருக்க வேண்டிய விழிப்புணர்வுகளை அடையாளம் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல்கள் மீது இலங்கை அரசாங்கங்கள், தமது அரச இயந்திரத்தினை கொண்டு தடையிடுவது இயல்பானதாகும். இது தொடர்பில் தமிழ் மக்கள் நீண்ட அனுபவங்களையும் கொண்டுள்ளனர். தமிழ் சமுகத்தின் தேசிய அலைக்கான வெளிப்பாடுகள் பெரும்பாலும், நினைவேந்தல் நிகழ்வுகளின் திரள்களிலேயே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இத்தகைய பின்னணியிலேயே அரசாங்கங்கங்களும் ஈழத்தமிழர்களின் நினைவேந்தல்களை தடுப்பதில் மாறுபட்ட வியூகங்களை கையாண்டு வருகின்றனர். இந்நிலையிலேயே தமிழ் சமூகம் புதிய அரசாங்கத்தினால் ஏற்படுத்தக் கூடிய விநோதமான செயற்பாடுகளுக்கு மத்தியிலும், தங்கள் உரிமைகளை அடைந்து கொள்வதற்கான வியூகத்தை சிந்திக்க வேண்டி உள்ளது.
ஒடுக்கப்பட்ட இனங்களுக்கிடையிலான போராட்டத்தில் அரசியல் என்பது போடப்பட்ட கோட்டை பின்தொடர்ந்து ஓடுவது அல்ல. அவ்வாறு ஓடுவார்களாயின் தொடர்ச்சியாக ஆதிக்க சக்தியின் சூழ்ச்சிகளினுள்ளேயே விழ வேண்டிய சூழலே ஏற்படும். ஆதிக்க சக்தியின் கோட்டிற்கு வெளியே புதிய கோட்டில் விரைவாக செல்கையிலேயே முந்தி செல்ல முடியும். தமிழ்சமூகமும் இன்று ஆதிக்க சக்தி சக்தி வரைந்துள்ள விநோதமான கோட்டின் பின்னாலேயே செல்வார்களாயின், சிங்கள பேரினவாத சூழ்ச்சிக்குள்ளேயே வீழ்த்தப்படுவார்கள். மாறாக புதிய வியூகத்தில் அறிவார்ந்த ரீதியில் விரைந்து செயற்பட வேண்டிய காலமிது.
கடந்த காலங்களில் சர்வதேச தலையீட்டுடன், நிலைமாறுகாலநீதியினுள் நினைவேந்தலுக்கான உரிமையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட போதிலும், இலங்கை சட்டத்திற்குள் அங்கீகாரத்தை வழங்குவதை தவிர்த்திருந்தது. ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் அரசாங்கத்துடன் இதயத்தால் ஒப்பந்தம் மேற்கொண்டு தேனிலவை கொண்டாடிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரும் அதுதொடர்பில் வினைத்திறனாக செயற்பட்டிருக்கவில்லை.
2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினூடாக அமைந்த மைத்திரி-ரணில் அரசாங்கம் சர்வதேச தலையீடுடனான நிலைமாறுகால நீதிக்கு சாதகமான சமிக்ஞையை காட்டியிருந்தது. செப்டெம்பர் 2015இல், இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30ஃ1இற்கு ஒப்புதல் அளித்ததுடன், நிலைமாறுகால நீதி வழிமுறையொன்றின் ஊடாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றிற்கு முன்னொருகாலமும் இல்லாதவாறு தனது உறுதிமொழியினையும் வழங்கியது. குறிப்பாக மோதலுடன் தொடர்புடைய விடயங்களில் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், இழப்புக்கள் மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் ஊடாக தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உறுதிமொழியளித்தது.
நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் இழப்பீட்டுக்கான உரிமையும் பாரம்பரியமாய் பிரதான தூண்களில் ஒன்றாகக் காணப்படுகிறது. கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட தீங்குகளிற்கு எதிர்வினையாய் மாற்றீடு வழங்குவதனூடாக மறுசீரமைப்புக்கான எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுதலும், அரசின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புதலும், நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்திற்கான பங்களிப்பை வழங்குதலும் நிலைமாறுகால நீதியில் இழப்பீட்டு உரிமையின் செயற்பணியாக காணப்படுகின்றது. இழப்பீட்டுக்கான உரிமை என்கையில், 'ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதுமான அத்துமீறல்களினால் தேசங்களுக்கான தனிப்பட்டவர்களினதும் சமூகங்களினதும் உரிமைகளை மீளப்பாதுகாப்பது தொடர்பில் தேவைப்படும் திருத்தங்களுக்காக பாதிக்கப்பட்டவர்களது உரிமை மீறப்பட்டமையுடன் சம்பந்தப்பட்ட நாட்டின் அரசு அவற்றை அங்கீகரித்து பாதிப்புக்குள்ளானவர்களது உரிமைகள் மீறப்பட்டதனால் ஏற்பட்ட துயரங்களுக்கு ஆவன செய்வதே இழப்பீடு வழங்கும் முறை எனப்படுகிறது.' இவ்இழப்பீட்டை பெறத்தகுதியுடைய பாதிக்கப்பட்டவருக்கு உள்ள மனித உரிமையே இழப்பீட்டிற்கான உரிமையாகின்றது.
இழப்பீடு என்பதனுள் நஷ்டஈடு என்ற அடிப்படையில் பணரீதியாக வழங்கப்படுவது மாத்திரம் உள்ளடக்கப்படுவதில்லை. சட்ட உதவி, கல்வி, சுகாதாரச் சிறப்பு ஆலோசனைகள், மீள தொழிலில் அமர்த்துதல், அடையாளம் சார்ந்து ஏதேனும் தீங்கு ஏற்பட்டிருப்பின் அத்துமீறலுக்குப் பொறுப்பானவர் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக் கோரல், நினைவுகூற அனுமதித்தல், காணாது இருப்பவர்களை கண்டறிதல், இறந்திருப்பின் உடல்களைத் தேடிக் கண்டுபிடித்தல் என்ற வகையில் இயன்றளவு முன்னைய நிலவரத்திற்கே கொண்டு செல்லக்கூடிய இயல்பான உணர்வை பாதிக்கப்பட்ட தரப்பு உணரும் வகையிலான சட்டரீதியான செயற்பாடுகள் யாவும் உரிமைக்குள் உள்ளடங்குகிறது.
இலங்கையை பொறுத்தவரை நிலைமாறுகால நீதி பொறிமுறை ஏற்பே கண்துடைப்பு நாடகம் என்ற ரீதியில், இழப்பீடு என்பதனுள் பணரீதியாக வழங்கும் நஷ்டஈட்டை மட்டுமே கருத்தில் கொண்டார்கள். அஃதும் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் முறிவடைந்ததன் பிற்பாடே 2019 ஏப்ரல் 1, நிலைமாறுகால நீதிக்கான உறுதிமொழியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இழப்பீட்டு அலுவலகம் முழுமை பெற்றது. அதிலும் காணமல் போனதை உறுதி செய்து பதிவை மேற்கொண்டவர்களுக்கே நஷ்டஈடாக ரூபா 6000ஃஸ்ரீ வழங்கப்பட்டது. மாறாக நிலைமாறுகால நீதியின் சர்வதேச அனுபவமான நினைவு கூறலுக்கான அனுமதி மற்றும் நினைவாலயங்களை நிறுவுவதற்கான அனுமதிகளை மற்றும் ஏற்பாடுகளை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலைமாறுகாலநீதி செயற்படுத்த ஆரம்பத்திலிருந்தே தவறிவிட்டது. நிலைமாறுகால நீதிக்கும், மைத்திரி – ரணில் அரசாங்கத்துக்கும் வலிய முண்டு கொடுத்த தமிழ்த்தரப்பும் நிலைமாறுகால நீதியினூடாக நினைவுகூறலுக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்த தவறியதன் விளைவே தொடர்ச்சியான தடைகளாகும்.
இவ்வாறான பின்னணியில் புதிய ஜே.வி.பி அரசாங்கம் நினைவுகூறல் தொடர்பில் எத்தகைய நிலையான ஏற்பாடுகளை வழங்கும் என்பதில் சந்தேகங்களே காணப்படுகின்றது. தமிழ் மக்கள் வினைத்திறனூடாக செயற்படுவதனூடாகவே நினைவேந்தல் உரிமையை பாதுகாக்க முடியும். தமிழ்சமூகம் அண்மைக்காலமாக நினைவேந்தல்களின் தார்ப்பரியங்களை அறியாதே செயற்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக நினைவுகளை அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் ஊடுகடத்துதலே நினைவேந்தலின் தார்ப்பரியமாகிறது. நினைவுகள் என்கையில், மாவீரர்கள் எவ்வகை போரட்டத்தின் மூலம் உயிர்த்தியாகம் செய்தார்கள்; போராட்ட பின்னணி என முழுமையான வரலாற்று நினைவுகளையும் அடுத்த சந்ததியினருக்கு கடத்தல் வேண்டும். சகல நினைவேந்தல்களும் இவ்வாறாகவே வரலாற்று நினைவுகள் முழுதையும் அடுத்த சந்ததிக்கு கடத்துவதாக அமைதல் வேண்டும். ஆயினும் இன்றைய நினைவேந்தல்கள் பலதும் ஒரு பொதுவெளியில், நினைவிடத்தில் மாலை அணிவித்து, பொதுச்சுடரேற்றி வணங்கிச்சென்றால் நினைவேந்தல் இனிதே நிறைவுற்றதாக கருதி கொள்கிறார்கள். மாறாக வரலாற்று நினைவுகளை கடத்துவதனை பெரிதும் தவறவே விடுகிறார்கள். இத்தவறு தொடரின் எதிர்காலத்தில் நினைவேந்தல்கள் வரலாற்று நினைவுகளற்ற தமிழர்களின் ஓர் நிகழ்வாக சுருக்கம்பெறும் சூழலே ஏற்படும்.
நினைவேந்தல்கள் மீது மேற்கொள்ளப்படும் அரச இயந்திரத்தின் தடைகள், வெறுமனவே பொது இடங்களில் பொதுச்சுடரேற்றி நினைவேந்தலை மேற்கொள்வதற்கான தடையாகவே அமையக்கூடியதாகும். மாறாக மக்கள் உணர்வூர்வமாக செயற்பாடுகளை தடுக்க முடியாது. மக்கள் அறிவுபூர்வமாக உணர்வுடன் வரலாற்று நினைவுகளை கடத்துவதூடாக நினைவேந்தல்களை மக்கள்மயப்படுத்தி செயற்படும் செயற்பாட்டை தமிழ் சமூகம் நினைவேந்தல்களில் செயற்படுத்த வேண்டும். குறிப்பாக கடந்த காலங்களில் மே-18 தமிழினப்படுகொலை நினைவேந்தலில் போர்க்கால துயரை நினைவுபடுத்தும் முகமாக உப்புக்கஞ்சி வழங்கும் செயற்பாடு நடைபெற்று வருகிறது. இவ்ஒழுங்கு ஏனைய நினைவேந்தல்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். நினைவுகளை சிறப்பாக கடத்தும் அனுபவத்தை தமிழர்கள் சர்வதேச அனுபவத்தில் யூதர்களிடமிருந்து பெறலாம். பண்டைய எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து கடவுள் விடுவித்ததையும், மோசேயின் தலைமையில் ஒரு தேசமாக அவர்கள் சுதந்திரம் பெற்றதையும் நினைவுகூரும் விதமாக யூதர்கள் பஸ்காவை கொண்டாடி வருகிறார்கள். பார்வோன் இஸ்ரவேலரை விடுவித்தபோது, அவர்கள் ரொட்டி மாவை புளிப்பு எழும் வரை காத்திருக்க முடியாத அளவுக்கு அவசரமாக வெளியேறினர் என்று கூறப்படுகிறது. நினைவாக, பஸ்கா காலத்திற்கு புளித்த ரொட்டி எதுவும் உண்ணப்படுவதில்லை. இவ்வாறு பஸ்கா பண்டிகையின்போது மாட்ஸோ (தட்டையான புளிப்பில்லாத ரொட்டி) சாப்பிடப்படுகிறது, இது ஒரு பாரம்பரியமாகும். இஸ்ரேல் என்ற நாட்டை கட்டமைத்த பின்பும் இன்றும் கூட இந்நினைவுகளை வரலாறாய் கடத்தி கொண்டே வருகிறார்கள்.
தமிழ் மக்கள் பௌதீக ஒன்றுகூடல்களுக்கு சமாந்தரமாக இணையவழி ஒன்றுகூடல்களையும் நினைவேந்தல்களில் தொடர்ச்சியாக பேண வேண்டும். இது களத்தையும் புலத்தையும் இணைக்கும் புள்ளியாக அமைகின்றது. கொரோனாவிற்கு பின்னரான உலகில் இணையவழி ஒன்றுகூடல்கள் பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிலையில் தமிழ் சமூகம் இணையவழி ஒன்றுகூடலை நினைவேந்தல்களில் ஒழுங்கு செய்கையில் பரந்துபட்ட அடிப்படையில் மக்களை ஒன்றினைக்க வழி ஏற்படுகிறது. இணையவழி ஒன்றுகூடலை ஒழுங்கமைக்க கூடிய வசதி வாய்ப்பு அதிகமாக புலம்பெயர் சமூகத்திடமே உண்டு. குறிப்பாக, 2020 மே-18 இனப்படுகொலை நினைவேந்தலில் புலம்பெயர் தமிர்களால் இணையவழி ஏற்பாட்டில் கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான கலாநிதி ஹொசே ரமோஸ்-ஹோர்தா அவர்களின் நினைவுப்பேருரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை வரவேற்கத்தக்கது. ஹொசா ரமோஸ்-ஹோர்தா தனது நினைவுப்பேருரையில், 'தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என' தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இலத்திரனியல் நினைவு கூர்தலோடு சேர்த்து வேறு எந்த வழிகளில் பெருந்தமிழ் பரப்பை ஓர் உணர்ச்சி புள்ளியில் ஒருங்கிணைப்பது என்றும் சிந்திக்கவும் வேண்டும்.
எனவே, தமிழ் மக்கள் நினைவேந்தல்கள் தொடர்பில் மாற்று வியூகத்தை செவ்வனவே செயற்படுத்த ஒருங்கிணைந்த ஓர் செயற்பாட்டு கட்டமைப்பு தமிழ்சமூகத்திடம் அவசியமாகிறது. தமிழ் சமூகம் வரலாற்றுரீதியாகவே மக்கள்மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியே இருந்து வந்துள்ளது. 1980களுக்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு தரப்பினரே தமிழர் அரசியல் போராட்டங்களில் பங்குபற்றியிருந்தார்கள். அவ்வாறே 1980களுக்கு பிற்பட 2009ஆம் ஆண்டு வரையான உரிமைக்கா ஆயுதப்போராட்டமும் மக்கள்மயப்படுத்தப்பட்டதாய் அமைந்திருக்கவில்லை. அதன் தொடர்ச்சியே இன்றும் தமிழர் அரசியல் மக்கள்மயப்படுத்தப்படாததாகவே தொடர்கிறது. எனிலும் இன்று தமிழர் அரசியலில் மக்கள்மயப்படுத்தலே பிரதான ஆயுதமாகும். நினைவுகூறல்கள் மக்ககள்மயப்படுத்தப்படுமாயினாலேயே தொடர்ந்து நிலைத்திருக்கக்கூடியதாகும். மக்கள்மயப்படுத்தலை துரிதப்படுத்தவே ஒருங்கிணைந்த ஒரு கட்டமைப்பு தமிழரசியலில் தேவைப்படுகிறது. தமிழ் மக்கள் தடைகளில் துவளாது தமக்கான பாதையை தாம் அடையாளம் காண்பார்களாயினேயே, இலங்கையில் தம் இருப்பை உறுதி செய்ய முடியும். அதற்கான சரியான வியூகங்களை ஆழமாக சிந்தித்து தமிழ் சமூக செயற்பாட்டாளர்களும், தமிழ் அரசியல் தலைமைகளும் ஒருங்கிணைந்து தமிழ் மக்களை நெறிப்படுத்த முன்வருவார்களா என்பதை தமிழர்களின் நாளைய இருப்பே பதில் சொல்லும்.
Comments
Post a Comment