தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தடையற்ற சூழலும் மாவீரர் தின தமிழ் மக்களின் எழுச்சியும்! -ஐ.வி.மகாசேனன்-

2024ஆம் ஆண்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பில் பல ஐயப்பாடுகள் காணப்பட்டது. ஜே.வி.பி பரினாமமபகிய தேசிய மக்கள் சக்தி முற்போக்கு நிலையிலான தேர்தல் பிரச்சாரங்களை முன்னிறுத்தினாலும், ஈழத்தமிழர் அரசியலில் நீண்ட காலம் இனவாத செயற்பாடுகளையே வரலாற்றில் பதிவு செய்துள்ளது. இப்பின்புலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்க காலப்பகுதியில் தமிழர் தாயகப் பகுதியில் நினைவேந்தல்களில் தடைகள் ஏற்படுத்தப்படுமா என்ற அச்சம் பொதுவில் காணப்பட்டது. எனினும் அரசாங்கம், 'போரில் இறந்தவர்களுக்கு நினைவேந்துவதற்கு எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படாது' என அறிவித்திருந்தது. இது தமிழ் மக்களிடையே நம்பிக்கையான எதிர் விளைவுகளை உருவாக்கியிருந்தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னைரான காலப்பகுதியில், 2015ஆம் ஆண்டிலிருந்து தமிழர் தாயகப் பகுதிகளில் நினைவேந்தல்கள் உணர்வு எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டு வருகிறது. ஒப்பீட்டளவில் அதன் உச்சத்தை 2024இல் அவதானிக்க கூடியதாக இருந்தது. மாவீரர் துயிலும் இல்ல சூழல்களுக்கு வெளியேயும் வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடிகளை மாவீரர் வாரக்காலப்பகுதியில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இது 2009க்கு முன்னரான ஓர் களச் சூழலை வெளிப்படுத்தியது. இது ஆரோக்கியமானதாகும். எனினும் இது முழுமையானதா! நிலையானதா! என்பது தொடர்பில் தமிழ்த் தரப்பு ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இக்கட்டுரை 2024ஆம் ஆண்டு மாவீரர் தின நினைவுகூறலையும் இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பின் உள்ளடக்கத்தையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒன்று, நினைவேந்தலுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தடையின்மை தொடர்பில் ஆரம்பத்தில் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனியார் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். குறித்த நேர்காணலில், 'தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தமுடியும். நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்கவேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபாலவிடம் நினைவேந்தல் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், 'இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை உறவினர்களுக்கு சட்டப்படி உள்ளது. ஆனால் வடக்கில் மாவீரர்களை கொண்டாட இடமில்லை. புலிகள் அமைப்பின் சின்னம் அல்லது சீருடைகள் அல்லது அதன் படங்களைப் பயன்படுத்த முடியாது. நாட்டில் சட்டம் உள்ளது. சட்டப்படி புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு.' எனக்குறிப்பிட்டிருந்தார். மேலும் தெரிவிக்கையில், 'வடபகுதி மக்கள் சில சமயங்களில் உறவினர்களை நினைவு கூர்வதற்கு வேறு அர்த்தம் கொடுக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ஆனால் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகும், அவர்கள் தங்கள் சின்னங்கள், சீருடைகள், பனர்களைப் பயன்படுத்தி கொண்டாடுவதற்கு இடமில்லை. ஆனால், இந்த நாட்டிலுள்ள எந்தவொரு நபரின் இறந்த உறவினரையும் நினைவு கூருவதை நாங்கள் ஒருபோதும் தடுக்க மாட்டோம்' என்றார்.

இரண்டு, தமிழர் தாயகப்பகுதிகளில் நீண்ட கால இடைவெளியில் இவ்வருடம் மாவீரர் தின நினைவேந்தல்கள் மிகுந்த உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. குறிப்பாக இலங்கையில் இயற்கை பேரிடராக கண மழை, வடக்கு-கிழக்கில் வெள்ள அனர்த்தம் மற்றும் புயலுக்கான முன்னெச்சரிக்கைகள் விடப்பட்டிருந்தது. எனினும் தமிழ் மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் பெருந்திரளாக திரண்டிருந்தார்கள். அதுமட்டுமன்றி வடக்கு-கிழக்கில் பரவலாக பல இடங்களிலும் சிவப்பு-மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டிருந்தமையையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கில் தென்னிலங்கைக் கட்சிக்கான ஆசனங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் தமிழ்த்தேசியம் தொடர்பில் பல விசனங்கள் மேலெழுந்தது. குறிப்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமிழ்த்தேசியத்தை இனவாதத்திற்குள் சுருக்கி, தமிழ் மக்களின் தமிழ்த்தேசிய உணர்வை மலினப்படுத்தியிருந்தனர். எனினும் குறுகிய கால இடைவெளியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்களின் எழுச்சி, தமிழ் மக்களின் தமிழ்த்தேசிய அபிலாசைகளை தொடர்ச்சியாக உறுதி செய்வதாகவே அமைகின்றது. 2024ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில் வடக்கு-கிழக்கில் பரவலாக ஸ்ரீலங்கா பொலிஸாரும் வழமைக்கு மாறாக அமைதியாக செயற்பட்டிருந்தார்கள். எனினும் அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாத்திரம் பொலிஸார் முரண்பட்டு பதற்றமான நிலையினை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பொலிஸார் முரண்பட்டதுடன், மக்களிடம் பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரித்து மாவீரர் துயிலும் இல்லத்துக்கு செல்வதை தடுக்க முற்பட்டனர்.

மூன்று, நவம்பர்-26அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 70வது பிறந்தநாள் தாயகத்திலும் எழுச்சிபூர்வமாக வெளிப்படையாக கொண்டாடப்பட்டிருந்தது. வெளிப்படையாக மக்கள் பங்குபற்றலுடன் கொண்டாடப்படுவது 2009இற்கு பின்னரான அரசியலில் புதிதாகவே அமைந்திருந்து. 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் கிடைக்கப்பெற்ற ஜனநாயக இடைவெளியை கொண்டு ஒரு சிலரின் பங்குபற்றலுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வெளிப்படையாக கொண்டாடி வருகின்றார். எனினும் அவற்றுக்காக நீதிமன்ற வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளார். எனினும் இம்முறை வழமைக்கு மாறாக பல இளையோர்கள் மற்றும் மக்கள் பங்குபற்றலுடன் ஒப்பீட்டளவில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வல்வெட்டித்துறையில் உள்ள வே.பிரபாகரன் அவர்களின் பூர்வீக வீட்டு காணியில் இளையோர்கள் ஒன்றிணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கும் மர நடிகைக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்நிகழ்வினை எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார். இதனிடையே வே.பிரபாகரன் அவரது உருவப்படம் தாங்கிய பதாகை வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பிரசன்னமான வல்வெட்டித்துறை பொலிஸார் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு தடையில்லை எனவும் இருப்பினும் அவரது உருவப்படத்தை மாத்திரம் நீக்குமாறும் அறிவுறுத்தியிருந்ததற்கமைய அவரது உருவப்படம் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் பிறந்தநாள் நிகழ்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் காவல்துறையினால் ஏற்படுத்தப்பட்ட சில நெருக்கடிகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் இயல்பை விமர்சிக்கையில், 'குறுக்கிட்ட ஒருவர் தற்போது காலம் மாறியுள்ளது பழையவற்றை கதைக்க வேண்டாம்' என அரசாங்கம் உருவாக்கியுள்ள இடைவெளியுடனும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று சாரப்பட கருத்துரைத்திருந்தார்.

மேற்குறித்த மூன்று விடயங்களிலும் ஒத்துழைப்பாகவும் முரணாகவும் சில விடயங்கள் தொங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக அரசாங்கத்தின் அறிவிப்பை மக்கள் புரிந்து கொண்டுள்ளமையிலும், செயற்பாடுகளிலும் முரண்படும் தன்மைகளை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின், 'இறந்த உறவினர்களை நினைவேந்துவதற்காக தடையற்ற சூழலை' தமிழ் மக்கள் தமது மாவீரர்களின் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை மக்கள் பங்குபற்றலுடன் மேற்கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டனர். எனினும் இதன் நிலைத்திருப்பு தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. கடந்த காலங்களில் 2015-2019ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியிலும் இத்தகைய இடைவெளி காணப்பட்டது. தடையற்ற சூழல்கள் புலப்பட்டது. எனினும் அரசாங்க மாற்றம் சூழ்நிலைகளை மாற்றி கொண்டது. நீதிமன்ற வழக்குகளுக்கு சென்றது. நீதிமன்றங்கள் ஒவ்வொன்றும் முரண்பட்ட வகையில் தீர்ப்பை வழங்கியிருந்தது. தடைகளுக்கு மத்தியிலேயே தமிழ் மக்களின் தன்னார்வ எழுச்சிகள் 2019-2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய முன்னனுபவங்களுக்குள்ளேயே தடைகளற்ற சூழலை நிரந்தர அனுமதிக்கான சூழலாக மாற்றக்கூடிய வியூகத்தை ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

முதலாவது, தமிழ் மக்கள் தமது இறந்த உறவினர்களை நினைவுகூருவதற்கான தடையற்ற சூழலையே இலங்கை அரசாங்கம் கருத்துரைத்துள்ளது. அதில் பொருள்கோடல் சார் முரணான தன்மையையும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். 'இறந்தவர்களை நினைகூரும் உரிமை உறவினர்களுக்கு சட்டப்படி உள்ளது. ஆனால் வடக்கில் மாவீரர்களை கொண்டாட இடமில்லை.' எனவும் 'இறந்த உறவினர்களை நினைவுகூரும் யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. அதனால்தான் வடபகுதி மக்கள் சில சமயங்களில் உறவினர்களை நினைவு கூர்வதற்கு வேறு அர்த்தம் கொடுக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார். இது தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை தென்னிலங்கை அரசாங்கம் தமது இசைவுக்கு ஏற்ப பொருள்கோடல் செய்கையில் தடைசெய்யக்கூடிய சூழமைவையே உறுதி செய்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்த தடையற்ற சூழல் நிரந்தரமான அனுமதியாக தமிழ் மக்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையையே இது உறுதி செய்கின்றது. தடையற்ற சூழலுக்கும், அனுமதிக்கும் நீண்ட இடைவெளி காணப்படுகின்றது. தடையற்ற சூழல் தொடர்பான கருத்துக்களிலும், மாவீரர்களை நினைவேந்த முடியாது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்கள். எனவே சட்டரீதியாக மாவீரர் தின நினைவேந்தல்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டது என்பதையே பொதுபாதுகாப்பு அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார். எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்கள் தன்னார்வ தமிழ்த்தேசிய எழுச்சி மீது தடைபோடாதுள்ளது. இது சட்டரீதியான பொருள்கோடலுக்குள் எதிர்காலத்தில் தடைகளுக்கான வாய்ப்பை வழங்கலாம் என்பதை உட்கிடக்கையாக கொண்டுள்ளது என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்வது அவசியமாகும்.

இரண்டாவது, தமிழ் மக்கள் தென்னிலங்கையின் வரையறைக்குள் தமிழ் மக்களின் உணர்வுகளை மட்டுப்படுத்துவது ஆபத்தான எதிர்காலத்தையே உருவாக்கக்கூடியதாகும். மாவீரர் நினைவேந்தல் எழுச்சி தொடர்பான லுழரவுரடிந காணொளிகள் பின்னூட்டல்கள் பலவற்றிலும் மாவீரர் தியாகம் சார்ந்த கருத்தாடல்களை கடந்து, அனுரகுமார திசநாயக்காவின் புகழ் துதிகளையே அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சிறு குழப்பமும் இத்தகையதொரு பின்னணியையே கொண்டிருந்தது. ஒப்பீட்டளவில் கடந்த காலங்களில் நினைவேந்தல்களுக்கு காணப்பட்ட அரசாங்க நெருக்கடிகளிலிருந்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தளர்வை ஏற்படுத்தி தந்துள்ளது. அது வரவேற்கத்தக்க அரசியலாகவே அமைகின்றது. எனினும் முழுமையான அனுமதியினை தரவில்லை என்பதில் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. முழுமையான அனுமதியற்ற சூழலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குள் தமிழ் மக்கள் கரைந்து செல்வது தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் ஆபத்தில் இருப்பதையே உணர்த்துகின்றது. கடந்த வார கட்டுரையில் குறிப்பிட்டதைப்போன்று, 'ஒடுக்கப்பட்ட இனங்களுக்கிடையிலான போராட்டத்தில் அரசியல் என்பது போடப்பட்ட கோட்டை பின்தொடர்ந்து ஓடுவது அல்ல. அவ்வாறு ஓடுவார்களாயின் தொடர்ச்சியாக ஆதிக்க சக்தியின் சூழ்ச்சிகளினுள்ளேயே விழ வேண்டிய சூழலே ஏற்படும். ஆதிக்க சக்தியின் கோட்டிற்கு வெளியே புதிய கோட்டில் விரைவாக செல்கையிலேயே முந்தி செல்ல முடியும். தமிழ்சமூகமும் இன்று ஆதிக்க சக்தி சக்தி வரைந்துள்ள விநோதமான கோட்டின் பின்னாலேயே செல்வார்களாயின், சிங்கள பேரினவாத சூழ்ச்சிக்குள்ளேயே வீழ்த்தப்படுவார்கள்.' தமிழ் மக்கள் புதிய வியூகத்தில் சிந்தித்து செயற்பட முயல வேண்டும். தடைகளற்ற சூழலை வரவேற்பதுடன், சட்டரீதியான அனுமதிக்கான சூழலையும் உருவாக்க வேண்டும்.

மூன்றாவது, அரசுகள் யாவும் தமது தேசிய நலனுக்குள்ளேயே செயற்படக்கூடியதாகும். அதற்காக சில ஏற்ற இறக்கங்களை கையாளும். இதுவே நடைமுறையில் இராஜதந்திரம் என்ற சொல்லுக்குள் உள்ளடக்கப்படுகின்றது. அரசின் இராஜதந்திர பொறிமுறைக்குள் விடுதலைக்காக போராடும் தேசிய இனம் அகப்படுகையில், தேசிய இனத்தின் நலன் அரச நலனுக்குள் கபளீகரம் செல்லும் சூழல் ஏற்படக்கூடியதாகும். இப்பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இராஜதந்திர பொறிமுறையை தமிழ் மக்கள் நிதானமாக கையாள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. இலகுவாக ஏற்றுக்கொண்டு செல்ல முடியாத மரபை தொடர்கின்றது. இலங்கையின் பேரினவாத அரசியல் கலாசாரம் வெறுமனவே பாரம்பரிய அரசியல் கட்சிகளிடையே சுருக்கி விட முடியாது. இது இலங்கையின் மகாவம்ச மனநிலையின் மரபாக ஆழமாக பொதிந்ததொன்றாகும். இலங்கையின் அரசியலை தீர்மானிக்கக்கூடிய மகாசங்கங்களும் புரட்சிகளை வரவேற்கப்போவதில்லை. மாறாக சிங்கள பௌத்த பேரினவாதிகளையே அங்கீகரித்துள்ளது. ஜே.வி.பியின் அரசியலை கண்மூடித்தனமாக நம்புவதில் இத்தகைய மரபை தமிழ் மக்கள் சிந்திப்பதே பொருத்தமானதாகும். நினைவேந்தல் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இராஜதந்திர தேவைப்பாடுகளை ஆழமாக அணுக வேண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி தென்னிலங்கையில் பேரினவாதத்துக்கு ஒத்திசைவான போக்கை வெளிப்படுத்துவதுடன், தமிழர் தாயகத்தில் கிடைக்கப்பெற்ற ஆதரவை பாதுகாக்க வேண்டிய சூழலும் காணப்படுகின்றது. பொதுபாதுகாப்பு அமைச்சரின் முன்பின் முரணான கருத்தும் அதனையே உறுதி செய்துள்ளது. 

எனவே, நினைவேந்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் தடையற்ற சூழல் வரவேற்கத்தக்கதாகும். எனினும் அதனைக்கொண்டு தேசிய மக்கள் சக்தியின் இராஜதந்திர பொறிக்குள் தமிழ் மக்கள் விழ முடியாது. அரசியலை அறிவது தொடர்பில் ஈழத்தமிழரசியலின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிடுகையில், 'அரசியலை உட்கிடக்கையாக ஆராய வேண்டும்' எனக்குறிப்பிடுவார். ஈழத்தமிழர்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நகர்வுகளை உட்கிடக்கையாக அவதானிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. மேலோட்டமாக பார்க்கையில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல், ஈழத்தமிழர்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொள்வதாக அமையலாம். எனினும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நகர்வுகள் ஏற்றுக்கொள்வதிலிருந்து வேறுபட்டு அக்கருத்து வெளியை தவிர்த்து செல்ல முற்படுகின்றது. இதனோர் பகுதியாகவே நினைவேந்தலுக்கான தடையற்ற சூழலும் அமைகின்றது. இதனை தமிழ் மக்கள் வினைத்திறனாக கையாள்வதனூடாக அழுத்தம் அதிகரிக்கையில் தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகத்தை வெளிக்கொணர முடியும். அல்லது தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளுக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இது தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நகர்வுக்குள் கரையாது சாதுரியமாக பயன்படுத்திக்கொண்டு கையாள்வதிலேயே தங்கியுள்ளது. மாவீரர் தின எழுச்சி ஒருவகையில் வெற்றிகரமான பயன்படுத்துகையாகவே அமைகின்றது.


Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-