தமிழ்த்தேசியத்தில் தமிழ் அரசியல் கட்சிகளே பலவீனப்பட்டுள்ளன! -வி.மகாசேனன்-

2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் முழு இலங்கையிலும் புதியதொரு அரசியல் மாற்றத்தை அல்லது புதியவர்களின் அரசியலை அடையாளப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 170க்கும் மேற்பட்டவர்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கை வரலாற்றில் அதிகளவு பெண் பிரதிநிதித்துவத்தை (22 உறுப்பினர்கள் - 9.8%) கொண்டுள்ள பாராளுமன்றமாக இது அமைந்துள்ளது. மேலும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் தேர்தல் மாவட்டங்களிலும் சிறுபான்மை மக்கள் குழுக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை புதியதொரு சமிக்கையாக அடையாளப்படுத்தப்படுகின்றது. அதேவேளை வடக்கில் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளுக்கு மாறாக தென்னிலங்கை கட்சியான ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற்றுள்ளது. மட்டக்களப்பு தவிர்ந்த 21 தேர்தல் மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற்றுள்ளது. இதனடிப்படையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்திற்கு பின்னர் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கமே, தனிக்கட்சியாக ⅔ பெரும்பான்மை ஆசனத்தை (159 ஆசனங்கள்) பெற்றுள்ளது. வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி தமிழ் மக்களிடையே, தமிழ்த் தேசியம் பலவீனப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை வடக்கில் தமிழ் மக்களிடையே காணப்படும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை இனங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பலரும் வடக்கின் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தமது எண்ண வாக்கில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு மக்களின் கடந்த கால தமிழ்த்தேசிய அரசியல் முடிவுகளை இனவாத அடையாளத்துடன் விபரிக்க முற்படுகின்றனர். ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, 'வடமாகாண மக்கள் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாது, இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு விசேடமாக நன்றி தெரிவிப்பதாக' தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட சில செயற்பாட்டாளர்களும் தமிழ்த்தேசியத்தை இனக்கருத்தியலுக்குள் சுருக்கியுள்ளனர். 'தமிழ் மக்கள் இனரீதியான சிந்தனைத்துவத்தை மறந்து தேசிய கட்சிக்கு வாக்களித்தது பரிதாபகரமான நிலைப்பாடு' என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன் குறிப்பிட்டிருந்தார். ரில்வின் சில்வா அறிந்தும், சிவகரன் அறியாமலும் தமிழ்த்தேசியத்தை இனரீதியான சிந்தனைக்குள் சுருக்குவதான கருத்துகள் தமிழ்த்தேசியத்தின் கருத்தியல் வறுமையையே வெளிக்காட்டுகிறது. இக்கருத்தியல் வறுமையின் வெளிப்பாடே ஆசனக் கணக்கியலுக்குள் தமிழ் மக்களின் தேசிய நிலைப்பாட்டை தேடவும் காரணமாகிறது.

ஆசனக்கணக்கிலும் கூர்மையான விடயங்களை உள்வாங்க தவறியுள்ளார்கள். மாறாக வெளிப்படையானதோரு போர்வையிலேயே வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியை அளவீடு செய்கின்றார்கள். தேசிய மக்கள் சக்தி வடக்கில் கனிசமான செல்வாக்கை அதிகரித்துள்ளது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதில்லை. இது முழு இலங்கையிலும் ஏற்பட்டுள்ள அரசியல் தாக்கத்தின் பிரதிபலிப்பு ஈழத்தமிழர்களிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளது. எனினும் இத்தாக்கம் முழுமையாக ஈழத்தமிழர்கள் தென்னிலங்கையை சார்ந்து பயணிப்பதை வெளிப்படுத்துவதில்லை. எண் கணிய அளவீடுகளிலேயே இது தெளிவாக அடையாளப்படுத்தப்படுகின்றது. யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 325,312 ஆகும். இதில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 80,830 ஆகும். அதேவேளை தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கான 17, 14, 13 என்பனவும் முதன்மையாக தமிழ்த் தேசிய பிரச்சாரத்தை முன்னிறுத்தியிருந்தனர். இவ் அணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 164,561 ஆகும். இவ்அடிப்படையில் ஆசன ஒதுக்கீடு செய்கையில், தேசிய முலாம் பூசப்பட்ட அணியினருக்கு 4 ஆசனங்களும்; தேசிய மக்கள் சக்திக்கு இரண்டு ஆசனங்களும் பெறக்கூடிய சூழ்நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான எண்கணிய முடிவுகளையே தமிழ்த்தேசியம் பலவீனப்பட்டதாக பிரச்சாரப்படுத்தப்படும் வன்னித் தேர்தல் தொகுதியிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. வழமையாக ஓரிரு ஆசனங்கள் வடக்கு-கிழக்கில் தென்னிலங்கை கட்சிகள் அல்லது தென்னிலங்கைக்கு ஆதரவான பிராந்திய கட்சிகள் பெற்றுவரும் நீண்ட மரபுகள் காணப்படுகின்றது. 1994ஆம் ஆண்டு முதல் டக்ளஸ் தேவனந்தா தொடர்ச்சியாக ஆசனத்தை பெற்று வந்துள்ளார். குறிப்பாக 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசிய அலை உயர்வாக காணப்பட்டது. எனினும் அத்தேர்தலிலும் டக்ளஸ் தேவனந்தா தமிழ்த்தேசியத்திற்கு வெளியே நின்றும் ஆசனத்தை தக்கவைத்தவராக காணப்படுகின்றார். ஓரிரு ஆசனங்களை தென்னிலங்கை பெற்றுக்கொள்வது தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்துவதாக அமைவதில்லை.

தமிழ் மக்கள் கணிசமாக தேசியவாத பிரச்சாரங்களை முதன்மைப்படுத்தியே வாக்களித்துள்ளார்கள். எனினும் தமிழ்த் தேசிய அணியினரிடையே காணப்பட்ட பிளவுகளே ஆசனங்களை இழக்கச் செய்துள்ளது. தேசியம் அடிப்படையில் திரட்சியை குறிப்பதாகவே அமைகின்றது. எனினும் தமிழ் அரசியல் கட்சிகள் மக்களின் திரட்சியை குழப்பும் வகையில் தமக்குள் சிதறுண்டு தேர்தலை எதிர்கொண்டிருந்தார்கள். ஆதலால் அரசியல் கட்சிகளால் தமிழ்த்தேசிய திரட்சியின் அணுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இங்கு தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் தமிழ்த்தேசியத்தை வெறுமனவே பிரச்சாரப் பொருளாக மாற்றிக்கொண்டதன் விளைவுகளை பெற்றுள்ளார்கள். பாராளுமன்றத் தேர்தல் வெறுமனவே ஆசனங்கனை இலக்கு வைத்துள்ளமையால், வடக்கில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் சரிவு, தமிழ்த்தேசியத்தின் பலவீனமாக பொதுவெளியில் ஊடக வெளிச்சத்தை பெற்றுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய நிலைப்பாடு வெளிப்படுகை, வெறுமனவே வாக்களிப்பதிலேயே காணப்படுகின்றது. அவ்வாக்களிப்பில் கணிசமாக தமிழ்த்தேசிய பிரச்சாரத்தை முன்னிலைப்படுத்தியவர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். தமிழ் மக்களின் தேசிய நிலைப்பாடுகள் தேர்தல்களில் மாத்திரம் இனங்காண முடியாது. 

தேர்தல்களின் முடிவுகள் ஆசன எண்ணிக்கையிலேயே வெற்றி-தோல்வி தீர்மானிக்கப்படுகின்றது. இது அரசியல் கட்சிகளின் தேசிய நிலைப்பாடு தொடர்பில் மக்கள் கொண்டுள்ள எண்ணங்களை வெளிப்படுத்துபவையாகவே அமைகின்றது. இவ்வடிப்படையில் 2024 பொதுத்தேர்தலில் வடக்கில் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அணியினர் ஆசனங்களை இழந்துள்ளமை, அவ்அணியின் தேசியம் சார்ந்த நிலைப்பாட்டையே கேள்விக்குட்படுத்துகின்றது. ஏனெனில் தமிழ் கட்சிகளிடையே தமிழ்த்தேசியம் வெறுமனவே பிரச்சார யுக்தியிலேயே காணப்படுகின்றதன்றி, அது சார்ந்த கருத்தியல் அறிவு மற்றும் செயற்பாட்டு தன்மை வறுமையிலேயே காணப்படுகின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, தமிழ் அரசியல் கட்சிகளிடையே தேசியவாதம் தொடர்பில் கருத்தியல் வறுமைநிலை காணப்படுகின்றது. வெறுமனவே மக்களது உணர்வுகளுக்குள்ளேயே அரசியல் செய்கின்றார்கள். தேசம் - தேசியம் - தேசியவாதம் எனும் சொல்லாடல்கள் மக்களின் உணர்வுகளோடு தொடர்புறும் சிந்தனையாகவே காணப்படுகின்றது. தேசம் என்பது கற்பனையாகவோ அல்லது நிஜயமாகவோ வரையறுக்கப்பட்ட புவியியல் பரப்பை கொண்ட நிறுவனமாக அமைகின்றது. அந்நிறுவனத்தின் மீது கட்டமைக்கப்படும் ஓர் உணர்வு ரீதியான ஈடுபாடு தேசியமாகின்றது. அவ் உணர்வுரீதியான ஈடுபாட்டின் கருத்தியல்ரீதியான கூட்டு தேசியவாதமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. இங்கு தேசம் வெறுமனவே புவியியல் கூறுகளுடன் சுருங்குவதில்லை. பொதுவான மொழி, இனம், வரலாறு, கலாச்சாரம் மற்றும் பொதுவாக ஒரு புவியியல் பிரதேசத்தைப் பகிர்ந்து கொள்ளும் மக்கள் குழு தேசமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. இதனை சுருக்கமாக மண், மக்கள், மாண்பு என்பவற்றை கொண்ட திரட்சியான கட்டமைப்பே தேசம் என வரையறுத்துக்கொள்வார். தேசங்கள் தோன்ற முன்பே அதாவது  இற்றைக்கு சுமாராக  6000 ஆண்டுகளை ஒட்டி 'நாடு', 'அரசு' என்பன தோன்றின. நாடு, அரசு ஆகிய இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவை. அதாவது ஒரு நாடு என்பது தனக்கே  உரிய ஓர்  அரசியல் அதிகார அமைப்பை கொண்டிருக்கும் ஒரு புவியியல் பரப்பாகும். இதில் நாடும் அரசும் ஒன்று கலந்திருப்பதை காணலாம். நாடு என்பது அரசியல் அதிகாரத்தைக் கொண்ட ஒரு புவியியல் பரப்பு. ஆனால் தேசம் என்பது அரசியல் அதிகாரம் புவியியல் பரப்பு ஆகிய இரண்டையும் கொண்ட ஒரு சமூகப் பண்பு நிலையை குறிக்கிறது. அதனடிப்படையிலேயே தேசம் நாடு மற்றும் அரசிலிருந்து வேறுபடுகின்றது. ஈழத்தமிழரசியலில் பரந்ததொரு தேசிய கட்டுமானப்பணி காணப்படுவதில்லை. தமிழ்த் தேசியத்தின் சமூகப் பண்பு நிலையை பேணுவதற்கான செயற்பொறிமுறையை எந்தவொரு அரசியல் கட்சியும் கொண்டிருக்கவில்லை. மாறாக தேர்தல் காலங்களில் வெறுமனவே தேர்தல் பிரச்சார சொல்லாடலாக மாத்திரமும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பதே தமிழ்த் தேசியவாத செயற்பாடு என்ற பிரம்மையை கட்டமைத்து வந்துள்ளார்கள்.

இரண்டாவது, தமிழ்த் தேசியத்தை வலிமையாக பேணக்கூடியதொரு தலைமையை தமிழ் அரசியல் கட்சிகளால் அடையாளப்படுத்த முடியவில்லை. தமிழ்த்தேசியம் பரந்தொரு சிந்தனையாகும். குறிப்பாக இலங்கையில் வடக்கு-கிழக்கு என பரந்த மரபுவழி தாயகத்தை கொண்டுள்ளது. இதனுள் எட்டு நிர்வாக மாவட்டங்கள் காணப்படுகின்றது. எனினும், தமிழ்த்தேசிய அலை வெறுமனவே வடக்கில், அதிலும் யாழ்ப்பாணத்தில் சுருக்கும் நிலை காணப்படுகின்றது. தமிழ்த்தேசிய செயற்பாட்டை யாழ்ப்பாணத்தை முன்னிறுத்தி விழிக்கும் மனநிலையே அரசியல்வாதிகளிடம் காணப்படுகின்றது. இதற்கு பிரதான காரணம் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதான தலைமைகள் யாழ்ப்பாணத்தை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றார்கள். அவர்களால் பரந்த அளவில் வடக்கு-கிழக்கு முகத்துடன் தமிழ்த்தேசியத்தின் தலைவராக செயற்பட முடியவில்லை. கடந்த காலங்களில் இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக செயற்பட்ட காலப்பகுதியிலும், திருகோணமலைக்கு வெளியே அவரால் தமது தலைமைத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தேசியப்பட்டியல் நியமனங்களில் அதனை தெளிவாக அடையாளங்காணக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு தேர்தல் மாவட்ட தொகுதி கிளைத் தலைவர்களும் தமது மாவட்டத்திற்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி, தமது மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவத்தை கோரியிருந்தார்கள். மாறாக தமிழ்த் தேசியத்திற்குரியதொரு ஆளுமையை அடையாளங்காண முடியவில்லை. இதுவே தமிழ்த்தேசியத்தின் பலவீனமாக பக்கமாகும்.

மூன்றாவது, தமிழ்த் தேசிய திரட்சியை பேணக்கூடியதாக தமிழ் அரசியல் கட்சிகள் காணப்படுவதில்லை. வரலாற்றில் தேசியம் மனிதனை குழுவாக்குகிறது. அந்தக் குழு அந்த மனிதக் கூட்டத்துக்குப் பாதுகாப்பரணாகிறது. இப்பின்னணியில் மனிதன் எப்போதும் ஏதோ ஒரு வகையில் குழுவாகவே செயல்பட வேண்டி இருக்கும். ஆந்தவகையில் தமிழ் மக்களும் தமிழ்த்தேசியத்தின் பெயரில் தொடர்ச்சியாக குழுவாகவே செயற்பட்டு வருகின்றார்கள். எனினும் அக்குழுவின் திரட்சியை ஒன்றுசேர்த்து அறுவடை செய்யக்கூடிய திறனை தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டிருக்கவில்லை. 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கில் தமிழ் கட்சிகளுக்கு ஆசனங்கள் குறைவடைந்துள்ளமைக்கு பிரதான காரணமாக அமைவது கட்சிகளிடையே காணப்பட்ட பிளவுகளே ஆகும். தேர்தலுக்கு முன்னரும் பல அரசியல் அவதானிகள் இந்நிலைமையை சுட்டிக்காட்டியிருந்தார்கள். யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களுக்கு 396 வேட்பாளர்கள் போட்டியிடுவது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் எந்தவொரு அரசியல் கட்சியும் அதனை கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனியன்களாக சிந்தித்து தமது கட்சிக்கான ஆசனங்களை குறிவைத்து செயற்பட்டார்கள். அதனடிப்படையில் போட்டி தமிழ் கட்சிகள் மீது அவதூறுகளை பரப்பினார்கள். மாறாக தேசிய மக்கள் சக்தி தமது செயற்பாட்டை முன்னிறுத்தி தென்னிலங்கை கட்சிக்கு செல்லக்கூடிய வாக்குகளை தமக்குள் வலிமையாக திரட்டி கொண்டார்கள். ஆதலால் வடக்கில் தேசிய மக்கள் சக்தி கூடிய ஆசனங்களை பெறக்கூடியதாக அமைந்தது. மாறாக தமிழ் அரசியல் கட்சிகள் பலவீனப்படும் நிலை உருவாகியது. தேசியம் என்பது திரட்சியினை அடிப்படையாக கொண்டது என்பதை தேர்தல் முடிவுகளின் பின்னரும் தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளாமையே தமிழ்த் தேசியத்தின் அபத்தமானதாகும். குறிப்பாக தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் தமிழரசுக்கட்சி தனித்து தேர்தலை எதிர்கொண்டு எட்டு ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளமையையே பெருமையாக பாராட்டுகின்றார்கள். மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஏற்படுத்தப்பட்ட அலையில் 22 ஆசனங்களை தமிழ்ப் பிரதிநிதித்துவம் பெற்றுக்கொண்டமையை இலாபகரமாக மறைக்க முற்படுகின்றார்கள். இதுவே தமிழ்த்தேசியத்தின் இருப்பிற்கு ஆபத்தமான எண்ணமாகும்.

நான்காவது, தமிழ்த்தேசியவாதத்தை அரசியல் கட்சிகள் வெறுமனவே தேர்தல் பிரச்சாரத்துக்குள் சுருக்கிய கருத்தியல் வறுமையினாலேயே தமிழ்த் தேசியவாதத்தை ஒரு சில தரப்பு இனக்கருத்தியலுக்குள் மட்டுப்படுத்த முயலுகின்றனர். வரலாற்று ரீதியாக, தேசியவாதம் என்ற கருத்து 'குடிமை' மற்றும் 'இன' தேசியவாதம் என பிரிக்கப்பட்டுள்ளது. குடிமைத் தேசியவாதம் பிரெஞ்சு புரட்சியின் பின்னணியில் பிரெஞ்சு அரசியல் தத்துவஞானி ஜீன் ஜாக் ரூசோவின் கருத்துக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரூசோவின் குடிமைத் தேசியவாதத்தின்படி, தேசம் மக்களைக் குறிக்கிறது. மற்றும் இறையாண்மையானது தேசத்திற்கும் மக்களுக்கும் சொந்தமானது ஆகும். குடிமை தேசியவாதம் சுதந்திரம், சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் உள்ளடக்கிய மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. ஜேர்மன் தத்துவஞானி ஜோஹன் காட் பிரைட் ஹெர்டர் (1744-1803) தேசியவாதத்தை ஏழடமளபநளைவ எனும் ஜேர்மன் சொற்றொடரால் குறிக்கின்றார். இது ஒரு நாட்டின் மக்களின் தனித்துவமான ஆவி மற்றும் தன்மையைக் குறிக்கிறது. இக்கருத்து பழமைவாத தேசியவாதத்துடன் தொடர்புடையது மற்றும் முந்தைய தலைமுறையினருடன் தொடர்ச்சியின் உணர்வை வலியுறுத்துகிறது. இது சாவிக்னியின் சட்டக் கோட்பாட்டின் ஒரு முக்கியக் கொள்கையாகும். இது ஒரு நாட்டின் சட்ட அமைப்பு அதன் வரலாற்று கலாச்சாரம் மற்றும் மரபுகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று கூறுகிறது. இதுவே இனத் தேசியவாதத்திற்கான வரையறையையும் வழங்குகின்றது. வரலாற்று ரீதியாக, நாஜி ஜெர்மனி மற்றும் முசோலினியின் இத்தாலியில் இனத்தேசியவாதம் அடையாளப்படுத்தப்படுகின்றது. தமிழ்த் தேசியவாதம் இனத்தேசியவாதத்திள் வரலாற்று கலாசாரம் மற்றும் மரபுகளை பேணுகின்ற போதும் முழுமையாக இனத் தேசியவாதத்திற்குள் சுருங்கவில்லை. மாறாக குடிமை தேசியவாதத்திற்குரிய சுதந்திரம், சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவக் கூறுகளையும் கொண்டுள்ளது. தமிழ்த் தேசியவாதம் மொழியால் தமிழில் இணைகின்றது. எனினும் மதத்தால் சைவம் மற்றும் கிறிஸ்தவ சமுகங்களிடையே சமத்துவக்கூற்றை கொண்டுள்ளது. இதனை ஆழமாக வரையறை செய்ய வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. எனினும் தமிழ்த்தேசியத்தை வாக்கிற்காக வியாபாரம் செய்யும் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக இல்லை. ஏனெனில் தமிழ்த்தேசியத்தை வரையறை செய்கையில், தமிழ்க்கட்சிகள் தமிழ்த் தேசியத்தின் இருப்பை பாதுகாக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளளக்கூடிய நிலை காணப்படும்.

எனவே, 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகளின் வீழ்ச்சியையே அடையாளப்படுத்தப்படுகின்றது. மாறாக தமிழ் மக்களிடையே தமிழ்த் தேசியம் வலுவான நிலையிலேயே காணப்படுகின்றது. அதனை ஒன்றுதிரட்டி தமிழ்த்தேசிய எழுச்சியை நிறுவனமயப்படுத்தும் கட்டமைப்பே தமிழ்த்தேசிய அரசியலில் பற்றாக்குறையாக அமைகின்றது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய அலையை திரட்டும் முனைப்போடு சிவில் சமுகங்களின் கூட்டிணைவாக கட்டமைக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் பலவீனமும் தமிழ் மக்கள் பொதுத்;தேர்தலில் பலவீனமான முடிவுகளை வெளிப்படுத்த காரணம் எனலாம். தமிழ் மக்களிடம் ஆழமாகப் பொதிந்துள்ள தமிழ்த் தேசிய அலையை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், சரியாக நிறுவனமயப்படுத்த தவறுகின்ற போது, அது தென்னிலங்கைக்கு சேவகம் செய்யக்கூடிய விளைவுகளையே உருவாக்கக்கூடியதாகும். 2024 பொதுத்தேர்தல் முடிவுகளும் அதனையே உறுதி செய்துள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-