கொரோனா வைரஸ் சதியா! பரிசோதனை கசிவா? -ஐ.வி.மகாசேனன்-
2018ஆம் ஆண்டு இறுதியில் பில்கேட்ஸ், 'நாடுகள் போருக்குத் தயாராகும் அதே தீவிரமான வழியில் தொற்றுநோய்களுக்குத் தயாராக வேண்டும்' எனக்கூறியிருந்தார். இன்று சீனாவில் அது மெய்த்துள்ளது. போர்க்கால சூழல் போன்று சீன அதிபர் அவசர அவசரமாக சீன கொம்யூனிஸ்ட் கட்சி கொள்கை வகுப்பாளர்களை அழைத்து சீன நாட்டை உலுக்கும் வைரஸ் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக உரையாடியூள்ளார். சீன நாட்டில் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் துளிர்விட்ட வைரஸ் நோய் ஒன்று 20 நாட்களுக்குள் உலகை பதற வைக்கும் பெரும் உயிர்கொல்லியாக வளர்ந்துள்ளது. சீனாவினை மையப்படுத்தி தோன்றியுள்ள குறித்த உயிர்கொல்லி நோய் அரசியல் தாக்கம் நிறைந்ததாக காணப்படுமோ என்ற எண்ணப்பாடு அரசியல் ஆய்வாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. சீனாவின் நட்பு நாடுகள் பலவும் சீன மக்களின் வரவை விரும்பாதோராய் தடைகளை ஏற்படுத்தி வரும் நிலைமை காணப்படுகின்றது. சீனாவை தனிமைக்குள் தள்ளும் குறித்த உயிர் கொல்லி நோய் பற்றியும் அதுசார்ந்த சீனாவினை மையப்படுத்திய அரசியல் தாக்கத்தினை எடுத்துக்காட்டுவதாகவே குறித்த கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
சனவரி 1 அன்று சீனாவின் வூஹான் நகரில் 61 வயதான ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதுவே உயிர்கொல்லி வைரஸின் சீனாவிற்கான அறிமுகமாகியது. தொடர்ந்து சில நாட்களிலேயே மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்றுநோய்க்காக பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இரத்த பரிசோதனையில் வினோதமான வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டில் சீனாவை உலுக்கிய சார்ஸ் வைரஸ் குடும்பத்தைச்சேர்ந்த வைரஸ் என்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் அதற்கு கொரோனா வைரஸ் (2019 - nCOV) என பெயரிட்டனர். சீனாவில் மாத்திரம் கொரோனா வைரஸ் உயிர் கொல்லி நோய்க்கு 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 500க்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, தென்கொரியா, இலங்கை உட்பட 25 நாடுகளில் கொரோனா வைரஸ் உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டோர் காணப்படுகின்றனர். சீனா சனத்தொகை கூடிய நாடு என்ற ரீதியிலும், சீனாவின் சந்திர புதுவருடப்பிறப்பை முன்னிட்டு சீன மக்கள் விடுமுறையை கழிப்பதற்காக உலக நாடுகள் பலவற்றுக்கு சுற்றுலா பயணிகளாய் சென்றுள்ளமையாலும் உலக நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன.
சீனாவை மையம் கொண்டு உலகை உலுக்கும் கொரோனா வைரல் எதன் மூலம் எவ்வாறு பரவலாயின என உறுதியாக அடையாளம் காண முடியாத போதிலும். இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. வூஹான் நகரில் உள்ள கடல் உயிரினங்கள் மொத்த விற்பனை சந்தையிலிருந்து தான் இந்த வைரஸ் தொற்று நோய் பரவியது. முதன்முதலில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த சந்தையில் வேலை செய்தவர்களும் அந்த சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்களும் தான். தொடர்ச்சியான ஆய்வுகளில் கொரோனா வைரஸ் பாம்புகளிடமிருந்து இருந்து வந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. வனத்திலிருக்கும் பாம்புகள் அவ்வப்போது வெளவால்களை வேட்டையாடுவதுண்டு. அவ்வாறு வேட்டையாடப்பட்ட வெளவால்களின் உடலில் காணப்பட்ட கொரோனா வைரஸ் பாம்புகளுக்கு பரவியிருக்கலாம். வைரஸ் பரவிய பாம்பு அந்த சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் ஊகங்களை தெரிவிக்கின்றனர்.
சீனாவில் 5 நகரங்கள் இந்த வைரஸ் தாக்குதலால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருப்பதுடன், 13 நகரங்களுக்கான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகள் மத்தியிலும் சீன மக்களை தவிர்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். சீனாவின் எல்லைகளை மெங்கோலியா மற்றும் ஹொங்ஹொங் அரசுகள் தற்காலிகமாக மூடி உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ் முதலான வளர்ச்சியடைந்த நாடுகள் முதல் இலங்கை, இந்தியா போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் வரை தங்கள் மக்களை சீனாவில் இருந்து பாதுகாப்பாக நாட்டிற்கு திருப்பி அழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சீன மக்களின் வரவில் பல விசேட ஏற்பாடுகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. மலேசியாவில் சீனாவின் வூஹான் மற்றும் ஹீயேப்பகுதிகளில் இருந்து வரும் சீன மக்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் நெருங்கிய தோழன் இலங்கை அரசே சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விமான நிலையத்திலேயே விசா வழங்கும் முறையை உடனடியாக ரத்து செய்வதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இவ்வாறு சுகாதாரப் பாதுகாப்பு கருதி அனைத்து நாடுகளும் சீனாவை தனிமைப்படுத்தும் நிலை காணப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொடர்பில் ஊகங்களும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் பரவலாக உலா வருவதுடன் அரசியல் ரீதியான போராக உயிர் கொல்லி நோயை மாற்ற முனைகின்றனர். பிரான்ஸின் லூமோ பத்திரிகையில் 2003ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டதாகவும், அதனை அமெரிக்கா பகிரங்கப்படுத்தாது இருந்ததாக சமூகவலைத்தளங்களில் வந்ததாக கூறி சில ஆவணங்களை பிரசுரித்துள்ளது. இதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாயினும், அமெரிக்க – சீனாக்கிடையிலான வர்த்தகப்போரின் ஓர் அங்கமாய் அமையுமோ என்ற எண்ணப்பாடு அரசியல் ஆய்வாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இஸ்ரேல் சீனா வார்த்தைப்போர் நோக்கப்படுகின்றது. சீன அரசை சீண்டும் வகையில் இஸ்ரேலிய உயிரியல் விஞ்ஞானி இஸ்ரேலின் ராணுவத்தின் புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரியுமான டேனி ஷோஹம் என்பவர் த வாஷிங்டன் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். “உலக நாடுகளுக்கு தெரியாமல் சீனா உயிர் ஆயூதங்கள் தயாரிக்கும் ஆய்வு கூடங்களை வூஹான் நகரில் நடாத்தி வந்தன. ஒருகட்டத்தில் சீனாவின் உயிர் ஆயுத தயாரிப்பு தொடர்பிலே உலக நாடுகளுக்கு தெரியவந்ததும், உயிர் ஆயுதங்கள் தயாரிக்கும் ஆய்வுகூடங்கள் எங்களிடம் இல்லை என்று சீனா தெரிவித்தது. ஆனால் இந்த ஆய்வுகூடங்களில் இருந்தே கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன். ஆனால் இதற்கான ஆதாரங்கள் இல்லை.” என குற்றம் சுமத்தியுள்ளார் பதிலுக்கு சீன குற்றசாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், சீனாவின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அமைப்பின் இயக்குனர் கவோ பு “அது அமெரிக்காவின் விஷமப் பிரச்சாரம்” என கண்டித்துள்ளார்.
உலக சுகாதாரத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன கொரோனா வைரஸ் உயிர்கொல்லி பரவலிற்கு சீன அரச நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பற்ற தன்மையே காரணம் என சர்வதேச ஆய்வாளர் மாக்ஸ் பிக்சர் த நியூயோர்க் டைம்ஸின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சீன நிர்வாக கட்டமைப்பை பொறுத்தவரை மத்திய-மாகாண அரசுகள் இடையே சீரான பிணைப்பு காணப்படுவது இல்லை. ஆதலால் தாமதம் சீனாவின் ஒரு பழக்கமான முறையாக அமைந்து விடுகின்றது. இந்நிலையே 2003ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்குதல் காலத்திலும் காணப்பட்டது. ஆயினும் இம்முறை சற்று முன்னரே செயற்படலாயிற்றனர். அத்துடன் வூஹான் நகர மேயர் அரச தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தலைமைத்துவ ஒப்புதலுக்கு காத்திருந்ததால் உரிய நேரத்தில் வைரஸ் தொடர்பான தகவலை வெளியிடவில்லை.” என தெரிவித்துள்ளமை சீன அரச நிர்வாக பலவீனத்தை வெளிக்காட்டுவதாய் காணப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால், மேற்கத்தைய நாடுகளுக்கு உண்டான சீனா நாட்டின் ஏற்றுமதியானது அளவு குறைந்துவிடும். மேலும் சீன நாட்டிற்கு சுற்றுலா பெரிதும் பாதிக்கப்படும் போன்ற காரணிகளால் நிச்சயம் பொருளாதார ரீதியில் சீனாவிற்கு ஓர் பின்னடைவு காணப்படும் எனிலும் நீண்டகால தாக்கத்தை அப்பின்னடைவு ஏற்படுத்த போவதில்லை என்பதே கடந்த கால வைரஸ் தாக்குதலின் பின்னரான சீனா பொருளாதார நிலைப்பாட்டை ஒப்பீட்டு ஆய்வு செய்யும் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக அமைகின்றது. 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இதன் பொருளாதார சரிவு பெரியதாக இருக்கும். இது வருடாந்திர அடிப்படையில் ஒரு சதவீத புள்ளியால் வளர்ச்சியைக் குறைக்கும். ஆனால் இது ஆண்டின் பிற்பகுதியில் போக்குக்கு மேலான வளர்ச்சியால் கணிசமாக ஈடுசெய்யப்படும். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் தாக்கம் இன்னும் சிறியதாக இருக்கும். ஒருவேளை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.1 சதவீத புள்ளியின் வரிசையிலேயே சரிவு ஏற்படும் என கூறுகின்றார்கள். 2003ஆம் ஆண்டில் பல முதலீட்டு வங்கிகளின் பொருளாதார வல்லுநர்கள் தொற்றுநோயின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை அதிகமாக கணித்த பேதிலும் முழு ஆண்டு வளர்ச்சி விகிதம் சுமார் 10%ஆக வளர்ச்சி போக்கிலேயே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் அபிவிருத்தி பலத்தை உணர்வதற்கான ஒரு நிகழ்வாயும் கொரோனா வைரஸ் உயிர்க்கொல்லி நோய் காணப்படுகின்றது. சான்றாக, சீனா ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை ஒன்றினை 25,000 சதுர மீட்டரில் 6 நாட்களில் கட்டி முடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2003ஆம் ஆண்டு சீனாவில் சார்ஸ் வைரஸ் தாக்குதல் அதிகமாக இருந்த காலப்பகுதியில் பீஜீங் நகரில் இதே போன்று மிக வேகமாக மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார நிபுணர்கள் 2003ஆம் ஆண்டு சீனாவை உலுக்கிய சார்ஸ் வைரஸின் தாக்கத்திலும் பார்க்க பாதிப்பு கூடிய தன்மை பொருந்தியதாக கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் பரவல் காணப்படுவதாக குறிப்பிடுகின்ற போதிலும் சார்ஸை எதிர்கொண்ட விதத்திலுருந்து வேகமாகவே சீனா செயற்படுவதாக அவதானிப்பாளர்கள் குறிப்பிடுவதும், சீனாவின் பொருளாதார பலம் மற்றும் அரசியல் நிர்வாகத்தில் பலவீனங்களிற்கு மேலான பலம் என்பன கொரோனா பாதிப்பை விரைவில் சீனா மட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. எனினும் சீனாவின் உயிர்கொல்லி தாக்கத்திலிருந்து இலங்கையராகிய நாமும் சூழலியல் சார்ந்து படிப்பினை பெற வேண்டிய உள்ளோம். புச்சி மருந்துகள் நிறைந்த மரக்கறிகள் பழங்கள் ருசித்து உண்ணும் நாமும் விரைவில் இன்னும் ஒரு உயிர்கொல்லி நோய்க்கு உள்ளாகும் சூழலுக்குள் தள்ளப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. பிறநாட்டு நிகழ்வூகளினை சாதாரண விடயமாய் அரசியலாய் கடந்து செல்லாது அதுசார் படிப்பினையை பெறுதல் அவசியமானதாகும்.
Comments
Post a Comment