இந்திய பிரேசில் உறவு புதிய பரிணாமத்தில்! -ஐ.வி.மகாசேனன்-
இந்தியாவின் 71வது குடியரசு தின விழாவின் சிறப்பு அதிதியாக பிரேசிலின் சனாதிபதி ஜெய்ர் போல்சொனாரோ அழைக்கப்பட்டிருந்தார். போல்சொனாரா, அமைச்சர்கள் மற்றும் வர்த்தகர்கள் அடங்கிய குழுவுடன் இந்தியாவிற்கு நான்கு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்திந்தார். பிரேசில் சனாதிபதியின் பயணத்தில் இந்தியாவிற்கும் பிரேசிலிற்குமிடையே வர்த்தகம் - முதலீடு, எண்ணெய் - எரிவாயு, இணையதளப்பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக 15ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஒருங்கே பிரேசில் - இந்திய பாதுகாப்பு தொழில் உரையாடலும் முதன்முறையாக நடைபெற்றுள்ளது. போல்சொனாரா – மோடி கூட்டு உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையுமென அரசியல் அவதானிப்பாளர்கள் கருத்துரைத்துள்ளனர். இதனடிப்படையிலே பிரேசில் - இந்திய மூலோபாய உறவை வெளிப்படுத்துவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
பிரேசில் - இந்தியா அரசியல் ஒத்துழைப்பு சர்வதேச நிறுவன அரங்கு சார்ந்து 1960ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலே உருவாக்கப்பட்டுள்ளது. 1964 ஆம் ஆண்டில் இருநாடுகளும் கூட்டாக வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு மற்றும் ஜி77இல் நிலைகளை வெளிப்படுத்தின. பிரேசில் - இந்தியாக்கு இடையிலான 70 ஆண்டு கால உறவில் இதுவரை தரப்பு ஒப்பந்தங்களாக 56 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரேசில் - இந்தியா மூலோபாய உறவின் வளர்ச்சியை அறிய பிரதானமாக ஐந்து விடயங்களை கவணிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, புவியியல் முக்கியத்துவம் மற்றும் ஒப்பீட்டு நன்மைகள் காரணமாகவும் தென்அமெரிக்காவில் பிரேசில் மற்றும் தெற்காசியாவில் இந்தியா ஆகியவை அந்தந்த சுற்றுப்புறங்களில் செல்வாக்கைச் செலுத்தும் பிராந்திய சக்திகளாக காணப்படுகின்றன. இதனடிப்படையில் சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச நிறுவனங்களில் மிகவும் தீர்க்கமான பங்கை தமக்கு உருவாக்குவதில் பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. இருநாடுகளும் ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவதிக்கான கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இரண்டாவது, பிரேசில் மற்றும் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைளின் நோக்கங்கள் ஒருமித்து காணப்படுகின்றன. உலக அரசியலில் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டும் வாஷிங்டனின் விருப்பங்களிற்கும் கற்பனைகளுக்கும் எதிராக தமது வெளியுறவுக் கொள்கையில் சுயாட்சியை பாதுகாக்கும் முகமாக இந்தியா மற்றும் பிரேசில் தமது வெளியுறவுக்கொள்கையினை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றன. மேலும் இருவரும் தங்களை மூன்றாம் உலகின் தலைவர்களாக கருதினர்.
மூன்றாவது, பிரேசில் மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பு செயற்பாடுகள். வளரும் நாடுகளை பற்றிய பிரச்சனை எழுப்புவதன் மூலமும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களின் சீர்திருத்தத்தை கோருவதன் மூலமும் 2011ஆம் ஆண்டில் மேற்கு நாடுகள் லிபியாவின் இறையாண்மை மீறுவதற்கு பகிர்ந்து கொண்ட எதிர்ப்பிலும் அவர்களின் ஒத்துழைப்பு பிரதிபலிக்கின்றது.
நான்காவது, கூட்டாண்மை செயற்பாடுகள். 2003ஆம் ஆண்டு IBAS உரையாடல் மன்றமாக பிரேசில், இந்தியா, தென்னாபிரிக்கா இணைந்த கூட்டு பிரேசில் மற்றும் இந்தியாவிற்கான கூட்டாண்மைக்கான அடிப்படையை வழங்கியது. 2006ஆம் ஆண்டில் பிரேசில் மற்றும் இந்தியாவுடன் ரஷ்யா மற்றும் சீனா இணைந்து உருவாக்கப்பட்ட BRIC (இன்று தென்னாபிரிக்காவும் இணைந்து BRICSஆக பரிணமிக்கப்பட்டுள்ளது.) பிரேசில் - இந்தியாவிற்கான கூட்டாண்மையினை உச்சக்கட்டத்திற்கு எடுத்து சென்றது. இவ்கூட்டாண்மைகளின் வெளியுறவுக்கொள்கை மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பன மேற்கின் ஆதிக்க கருத்துக்களை எதிர்க்கும் ‘மென்மையான சமநிலையின்’ குறியீடாய் வளர்ச்சி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது, சீன பொருளாதார ஆதிக்க எதிர்ப்பு வாதமாகும். தென்னாசியாவில் இந்திய தவிர்ந்த ஏனைய சகல நாடுகளுடன் சீனா நெருக்கமான உறவைப் பேணி வருவதுடன் தனது பெல்ற் மற்றும் சாலைக்கான (Belt & Road - BRI) அனுமதியினையும் பெற்று தென்னாசியாவில் இந்தியாவை மிஞ்சிய பொருளாதார ஆதிக்கத்தைத் தொடர சீனா முற்படுகின்றது. ஆதலால் சீனாக்கு எதிரான இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுப்பதில் சீனா முனைப்பாக உள்ளது. அவ்வாறானதொரு அரசியல் சூழலே தென்அமெரிக்காவிலும் காணப்படுகின்றது. BRIஇனூடாக தென்அமெரிக்காவில் தனது பொருளாதார செல்வாக்கை சீனா நிலைநாட்டி வருகின்றது. போல்சொனாரா அரசாங்கம் ஆரம்பத்தில் சீனாவுடனான உறவில் சிறிதளவு கவணம் செலுத்திய போதிலும் சீனாவின் தென்அமெரிக்கா மீதான பரந்தளவு ஆதிக்கம் எதிர்நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது.
மேற்குறித்த ஐந்து காரணிகளும் பிரேசில் - இந்திய உறவின் வளர்ச்சியை காட்டுவதுடன் இந்திய – பிரேசிலின் பிராந்திய ஆதிக்க நலன் சார்ந்த மூலோபாய உறவின் வளர்ச்சியையும் சுட்டி நிற்கின்றது. இதன் பின்னனியில் 2019ஆம் ஆண்டில் பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற போல்சொனாரோவின் தீவிர வலதுசாரி கொள்கையும் இந்திய பிரதமர் மோடியின் தீவிர வலதுசாரி கொள்கையும் ஒருங்கே சேர்வது பிரேசில் மற்றும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க நலன் சார்ந்த மூலோபாய உறவை மேலும் பலப்படுத்தியுள்ளது.
பிரேசில் - இந்திய உறவை வலுச்சேர்க்கும் வகையிலான டெல்லியின் விருப்பை அடையாளப்படுத்தம் வகையிலேயே பிரேசிலில் நடைபெற்ற 11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு முன்னரான கலந்துரையாடலில் பிரேசில் சனாதிபதி போல்சொனாராவை இந்தியாவின் 71வது குடியரசு தினத்தில் சிறப்பு அதிதியாக இந்திய பிரதமரால் அழைக்கப்பட்டார். அவ்விருப்பை பிரேசிலும் ஏற்றுள்ளமையை பறைசாற்றும் வகையிலேயே பிரேசில் ஜனாதிபதியின் வருகையும் இரட்டிப்பான பொருளாதார நலன்களை கொண்ட 15வர்த்தக ஒப்பந்தங்களும் நடைபெற்றுள்ளது.
இந்தியா – பிரேசிலிற்கு இடையிலான உறவு இராணுவ நிலையிலும் பரிணமிப்பதற்கான வாய்ப்பை பிரேசில் சனாதிபதியின் இந்திய விஜயம் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்திய உலக நாடுகளிலே ஆயுத இறக்குமதியை மேற்கொண்டு வருகிறது. பிரதானமாக ரஷ்யாவிடமிருந்தே ஆயுத இறக்குமதி இடம் பெற்றது. தற்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயுத கொள்ளளவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வெளிநாட்டு கொள்முதலாளரான இந்தியாவுக்கான ஆயுத ஏற்றுமதியாளராக தனது நிலையை உறுதிப்படுத்த பிரேசில் அரசாங்கம் விரும்புகிறது. இதுவரை எவ்வித ஆயுத ஏற்றுமதியும் நடைபெறாத போதிலும் தற்போது அதற்கான சமிக்ஞை கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த 28ஆம் திகதி இந்தியாவின் ஜின்டால் குழுமத்தின் (Jindal) ஒரு பகுதியான ஜின்டால் டிஃபென்ஸ் (Jindal Defence) நிறுவனத்துடன் பிரேசிலின் ஆயுத தயாரிப்பு நிறுவனமான டாரஸ் ஆர்ம்ஸ் எஸ்.ஏ (Taurs Arms S.A)உடன் 51:49 என்ற அடிப்படையில் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் நிசாரில் (ஹரியானா) கூட்டு ஒப்பந்த நிறுவனத்தை அமைக்க ஒப்பந்தம் முன்மொழிகிறது. பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகளுக்கு ஏற்ப உற்பத்தியின் உள்ளுர்மயமாக்கலை அடைய டாரஸிலிருந்து தொழில்நுட்பத்தை மாற்றுவதன் அடிப்படையில் இந்தியாவில் சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும். இக்கூட்டு ஒப்பந்தத்தின் அறிவிப்பின் விளைவாய் பிரேசில் பங்குசந்தையில் டாரஸின் பங்குகள் அதிகரித்துள்ளது.
இந்தியா - பிரேசிலுக்கு இடையில் நடைபெற்றுள்ள முதலாவது இந்திய - பிரேசில் பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டுச் செயற்குழுவானது பிரேசிலின் ஆயுத விற்பனை விருப்பத்தை ஈடேற்றியுள்ளதுடன் மோடியின் மேக் இன் இந்தியாவின் கீழான இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்குப் பதிலீடாக உள்நாட்டு உற்பத்தி பொருட்களை உருவாக்குவது மற்றும் சீனாவிற்கு மாற்று பூகோள அளவிலான உற்பத்தி மையமாக இந்தியாவை எழுச்சியுறச் செய்யும் கொள்கையையும் பலப்படுத்துவதாக அமைகின்றது.
பிரேசில் - இந்திய ஒப்பந்தத்தின் முடிவிலான இருநாட்டு தலைவHகளின் கூட்டறிக்கையும் பிரேசில் - இந்தியாவில் எழுச்சியுறும் தீவிர வலதுசாரி கருத்தியல்சார் மனநிலையையே பறைசாற்றுகின்றது. பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுதல் எனும் மையக்கருத்தை வெளிப்படுத்தி, பெரியளவிலான உளவுத்துறை பகிர்வு உட்பட, பயங்கரவாதத்தையும் வன்முறைமிக்க தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்த வலுவான சர்வதேச கூட்டாண்மையை உருவாக்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது எதிரிகளுக்கெல்லாம் பயங்கரவாதி என்ற நாமத்தை சூடுவது போன்றே கொள்கையளவில் போல்சொனாராவும் மோடியும் காணப்படுகின்றனர். இந்தியாவில் மோடி தனது கொள்கைகளுக்கு எதிரானவர்களை இந்திய தேசத்தின் துரோகி என அடையாளளப்படுத்துவடன் பயங்கரவாதத்தை கட்டுப்பபடுத்தும் போர்வையில் காஷ்மீர்மக்களின் சிறப்புரிமை சட்டங்களை ரத்து செய்து அவர்களின் சுதந்திரத்தை பறித்துள்ளார். மறுபுறம் பிரேசிலில் போல்சொனாரா சமூக ஆர்ப்பாட்டங்களை பயங்கரவதா செயல்கள் என அழைப்பதோடு பயங்கரவாதசட்டங்களின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பிரேசிலிய காங்கிரஸ் சட்டத்தை ஊக்குவித்துள்ளார். ஆக இவர்கள் மையப்படுத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுதல் என்பது தமது எதிரிகளுக்கு எதிரான கூட்டு போராட்டத்தையே பறைசாற்றுகின்றது மோடியின் கீழான இந்தியாவிற்கும் போல்சொனாராவின் கீழான பிரேசிலிற்கும் இடையிலான உறவு என்பது உலக ஒழுங்கின் எதிர்காலத்தில் ஒரு அடிப்படை சித்தாந்த விளைவையும் ஏற்படுத்தக் கூடும்.
ஆக பரந்துபட்டளவில் தொகுத்து நோக்குகையில் போல்சொனாரா – மோடி ஆகிய தென்அமெரிக்கா மற்றும் தென்னாசிய வலதுசாரிகளின் கூட்டானது தென்னாசிய மற்றும் தென்அமெரிக்காவில் சீனாவின் பொருளாதார ஆதிக்கத்திற்கு சவால்விடக்கூடியது என்பதுடன் இரு பிரதான கண்டங்களின் தெற்கின் ஆதிக்க சக்திகள் வலதுசாரி சிந்தனையில் எழுச்சியுறுவது உலகளவில் வலதுசாரி சிந்தனையை பலப்படுத்தும் காரணியாகவும் அமைகின்றது. இது தொழிலாளர் வர்க்கத்துக்கு உலகளவில் விடப்படும் சவாலாகவும் அமைகின்றது.
Comments
Post a Comment