ட்ரம்பின் மத்திய கிழக்கு அமைதி திட்டம் பாலஸ்தீனியர்களுக்கான அமெரிக்காவின் சதி! -ஐ.வி.மகாசேனன்-
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அமெரிக்கா விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நெதன்யாகுவின் கரங்களைப் பிடித்தவாறு “அமைதியை நோக்கி இஸ்ரேல் பெரிய படியை எடுத்து வைத்துள்ளது, இது தான் பாலஸ்தீனத்திறகான கடைசி வாய்ப்பு” என பாலஸ்தீனத்தை எச்சரிக்கும் வகையில் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய முரண்பாட்டிற்கு தீர்வாக மேற்குக் கரை குடியேற்றங்கள் மீதான இஸ்ரேலின் இறையான்மையயுடன் அங்கு பாலஸ்தீன சுதந்திர அரசு காணப்படும் எனவவும், ஜெருசலேம் பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராகத் தொடர்ந்து இருக்கும் எனவும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆள்புல பிரிவினை வரைபடம் உருவாக்கி ‘மத்திய கிழக்கு அமைதித் திட்டம்’ எனும் பெயரில் அறிவித்தார். ட்ரம்பின் மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் பாலஸ்தீன சனாதிபதி மஹ்முத் அப்பாஸ் ட்ரம்பின் திட்டம் சதி திட்டம் என நிராகரித்துள்ளார். 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையில் கற்பனை செய்யப்பட்டதை விட பாலஸ்தீன அரசு 2020 ட்ரம்பினது அமைதி திட்டத்தில் குறைந்து போயுள்ளது. அத்தோடு சியோனிச குழுவின் 1979ஆம் ஆண்டு ட்ரபிள்ஸ் திட்டத்தினை (Droubles Plane) ஒத்ததாகவே 2020ஆம் ஆண்டு ட்ரம்ப் திட்டம் (Trump Plane) இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் இக்கட்டுரை ட்ரம்பின் மத்திய கிழக்கு அமைதித் திட்டம் பாலஸ்தீனத்திற்கு எவ்வாறான சதித்திட்டமாக அமைந்துள்ளது என்பதை விபரிப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய காலனித்துவத்தின் கீழிருந்த 7% பாலஸ்தீன நிலப்பரப்பில் குடியேற்றம் அமைத்திருந்த 30% யூத மக்களுக்கு, 1947ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை 55% நிலப்பரப்பை பரிந்துரை செய்து தனிநாட்டிற்கான அங்கீகாரத்தை வழங்கியது. 1948ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டனின் பாலஸ்தீனம் மீதான கட்டுப்பாடு முடியும் போதும் யூதர்கள் சுதந்திர இஸ்ரேலை பிரகடனம் செய்தனர். அன்றிலிருந்தே இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாடு முறுகலாகி போருக்கு உருமாறியது. போர்களுடாக இஸ்ரேல் பாலஸ்தீன பிரதேசங்களை ஆக்கிரமித்து பாலஸ்தீனியர்களை நாடற்ற அகதிகளாக்கியது. இஸ்ரேல்-பாலஸ்தீன முரண்பாட்டிற்கான தீர்வினைப் பெற பல சமாதான முன்னெடுப்புக்களைக் காலத்துக்கு காலம் மேற்கொண்ட போதிலும், 1947ஆம் ஆண்டில் ஜ.நாவின் இஸ்ரேல்-பாலஸ்தீன ஆள்புல பிரிப்பின் போது பொதுப்பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த புனித பூமியாகிய ஜெருசேலத்தை மையப்படுத்தி மேற்கொண்ட சமாதான முன்னெடுப்புக்கள் தீர்க்க முடியாத பிரச்சினையாக நிகழ்கின்றது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்பும் ஜெருசலேம் தொடர்பாக தொடர்ந்து உரிமை கோரி வருகின்றன. 1967ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போரில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டு நாடற்ற நிர்க்கதியில் நிற்கும் பாலஸ்தீனியர்கள்; அந்நகரை தங்களின் எதிர்கால தனி நாட்டுக்கு தலைநகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறனர்.
மேற்காசியா மீதான தொடர்ச்சியான ஆதிக்க பேணுகைக்கான உலக வல்லாதிக்க அமெரிக்காவின் ஜனாதிபதிகள் மத்திய கிழக்கு அமைதித் திட்டம் என்ற போரவையில் காலத்துக்கு காலம் இஸ்ரேல் சார்பான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த தொடரிலேயே 2016ஆம் ஆண்டு அமெரிக்க சனாதிபதியாகிய ட்ரம்ப்பும் இஸ்ரேல்-பாலஸ்தீன முரண்பாட்டிற்கான அமைதித் திட்ட வரைபை முன்மொழிந்துள்ளார். அந்த பார்வையே ட்ரம்பின் மத்திய கிழக்கு அமைதி திட்டம் பாலஸ்தீனத்திற்கான சதித்திட்டமாக காணப்படும் என்பதனை வரலாற்று அனுபவத்தினூடாக உறுதிப்படுத்தக்கூடியதாகக் காணப்படும். இவ்வரலாற்றுக் கொள்கைப் பிணைப்புக்கு அப்பால் பிரதானமான 3 விடயங்கள் ட்ரம்பின் மத்திய கிழக்கு அமைதி திட்டம் சதித்திட்டம் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளாய் உள்ளன.
முதலாவது ட்ரம்பின் இஸ்ரேல் மீதான உறவு, மத்திய கிழக்கு அமைதித் திட்டம் பாலஸ்தீனத்திற்கான சதி என்பதை விபரிக்கின்றது. டிசம்பர் 6, 2017 அன்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் உரிமை கோரும் சர்ச்சைக்குரிய புனித பிரதேசமாகிய ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக முறையாக அங்கீகரித்தார். கிட்டத்தட்ட ஏழு தசாப்த கால அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைத்து, டெல் அவிவிலிருந்து அமெரிக்க தூதரகத்தைக் கடுமையாக போட்டியிட்ட புனித நகரத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை வகுத்தார். இது பலஸ்தீனியர்களின் ஜெருசேலம் மீதான உரிமை கோரிக்கையை நீத்துப் போகச் செய்வதுடன், பலஸ்தீனியர்களுக்கு எதிரான ட்ரம்பின் முதற் சதியாக அமைந்தது.
இரண்டாவது 1993ஆம் ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீனிடையே பங்கிடப்பட்ட நில அளவீட்டிலும் குறைவாகவே 2020ஆம் ஆண்டு ட்ரம்ப்பின் திட்டத்தில் பாலஸ்தீனுக்குப் பகிரப்பட்டுள்ளது. 1993ஆம் ஆண்டு அமெரிக்க நெறியாள்கையில் இஸ்ரேலிய பிரதமர் ராபின் மற்றும் பி.எல்.ஓ (பாலஸ்தீன விடுதலை அமைப்பு) தலைவர் ஆல்பிரட் ஆகியோரால்; கையெழுத்திடப்பட்ட இடைக்கால சுயாட்சி குறித்த கோட்பாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் ஒரு பாலஸ்தீனிய சுயாட்சித் திட்டம் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 1995இல் பாலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தால் காசா பகுதி மற்றும் ஜெரிகோவில் (ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள கிராமம்) சுயாட்சி தொடங்கியது. அடுத்து யெல்லிகோவைத் தவிர மேற்குக் கரையில் சுயாட்சி விரிவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனிலும் 2020ஆம் ஆண்டு ட்ரம்ப் திட்டத்தில் மேற்குக் கரையில் சட்டவிரோதக் குடியேற்றங்கள் மீது இஸ்ரேலிய இறையாண்மையை அங்கீகரிப்பதற்கான திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேற்குக் கரையில் சுமார் 97% இஸ்ரேலியர்கள் தொடர்ச்சியான இஸ்ரேலிய பிரதேசத்தில் இணைக்கப்படுவார்கள். பாலஸ்தீனியருடன் ஒத்துப்போகாத உறைவிடங்களில் உள்ள இஸ்ரேலியர்கள் அவர்கள் விரும்பினால், இஸ்ரேலுக்கான அணுகலுடனும், இஸ்ரேலிய பாதுகாப்பின்கீழ் இருக்க வேண்டும் என்று திட்டம் தெளிவுபடுத்துகிறது. இது 1993ஆம் ஆண்டு பாலஸ்தீனுக்கு பகிரப்பட்ட ஒஸ்லோ பரப்பிலும் குறைவானது என்பதுடன் இஸ்ரேலியர்களின் குடியேற்றங்களை பாதுகாப்பதாகவும் பாலஸ்தீனியர்களின் இறைமையைப் பலவீனப்படுத்துவதாகவும் காணப்படுகின்றது.
மூன்றாவது ட்ரம்ப் முன்மொழிந்துள்ள மத்திய கிழக்கு அமைதி திட்டமானது 1979ஆம் ஆண்டு இஸ்ரேலின் உலக சியோனிச அமைப்பின் யூதேயா சமாரியாவில் குடியேற்றத் திட்டத்தை ஒத்துள்ளது என்பதும் ட்ரம்பின் பலஸ்தீனர்களுக்கு எதிரான சதியை விபரிக்கின்றது. மத்திய கிழக்கிற்கான அமைதித் திட்டத்தை ட்ரம்ப் அறிவிக்கையில், இந்த திட்டத்தை ஒரு “வரலாற்று" மற்றும் “அடிப்படையில் வேறுபட்ட திட்டம்" என்றும்; இத்திட்டத்தை மேற்பார்வை செய்த ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், “நாங்கள் ஒரு வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையை எடுத்துள்ளோம்; மக்கள் பழைய பாரம்பரியம் பேசும் புள்ளிகளில் கவனம் செலுத்தினால், நாங்கள் ஒருபோதும் முன்னேற மாட்டோம்” எனவும் கருத்துக்களூடாக இதனை புதுமையான திட்டம் என்பதை அழுத்திக் கூற முற்படுகின்றார்கள். ஆயினும் பெரும்பாலும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான பேசும் புள்ளிகளையே பரவலாக ட்ரம்பின் திட்டம் பேசுகின்றது என்பதை மாமனும் மருமகனும் லாபரமாக மறைக்க முயல்கின்றனர். குறிப்பாக இஸ்ரேலின் தேசியவாத்தைக் காவும் உலக சியோனிச அமைப்பு 1979ஆம் ஆண்டில் உலக சியோனிச அமைப்பு ஹெரட்-லிபரல் பிளாக்கிற்கான நெசெட்டின் முன்னாள் உறுப்பினரான மேட்டித்யாஷுஹ டிராபில்ஸ் என்பவரால் எழுதப்பட்டு “யூதேயா மற்றும் சமாரியாவில் குடியேற்றங்களை மேம்படுத்துவதற்கான மாஸ்டர் பிளான் 1979–1983” என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை வெளியிட்டது. பெரும்பான்மையில் அத்திட்டத்தின் அம்சங்களை ஒத்ததாக “டிரம்பின் பார்வை உண்மையில் டிராபில்ஸ் 2.0 ஆகும்” என 2001 முதல் 2004 வரை மேற்குக் கரையோர நகரங்களான பெத்லகேம் மற்றும் ஹெப்ரான் ஆகிய இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் ஒரு காலாற்படை, போர் சிப்பாய், மற்றும் தளபதியாக பணியாற்றியதுடன் பிரேக்கிங் தி சைலன்ஸ் நிறுவனத்தின் உறுப்பினராக உள்ள யெஷுஹதா ஷால் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக ட்ரம்பின் திட்டம் பாலஸ்தீனிய பகுதிகளில் சில இறையாண்மை சக்திகளின் வரம்புகளை அவசியமாக்குகிறது. அதேபோலவே 40 ஆண்டுகளுக்கு முன்பே டிராபிலும் அதே கருத்தையே டிராபில் திட்டத்தில் முதன்மையாக நடவடிக்கை மூலம் சுயாட்சி என்பது பிரதேசங்களுக்கு பொருந்தாது என்பதுடன் அரபு மக்களுக்கு மாத்திரம் உடையதாக காணப்படாது என வலியுறுத்தப்படுகின்றது. ஆக டிரம்பின் மற்றும் டிராபில்ஸின் திட்டங்கள் ஒருபோதும் நிலத்தின் மீது உண்மையான பாலஸ்தீனிய இறையாண்மையைக் கொண்டிருக்கக்கூடாது என்ற நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கின்றன.
குறித்த மூன்று விபரணங்களுமே ட்ரம்பின் திட்டம் பாலஸ்தீனியர்களுக்கு சதி என்பதை விபரிக்கின்றது. இதனடிப்படையிலே ஜனவரி இறுதியில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் ட்ரம்பின் திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே திட்டத்திற்கு எதிராக காசா பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும், “ஜெருசேலம் விற்பனைக்கு அல்ல; எமது அனைத்து உரிமைகளும் விற்பனைக்கு அல்ல; மற்றும் பேரம் பேசுவதற்காக அல்ல என்று ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவிடம் நான் கூறிக்கொள்கின்றேன். உங்களது திட்டம், சதி நிறைவேறாது.” என பாலஸ்தீன சனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், “ட்ரம்பின் திட்டம் அச்சுறுத்தும் கனவு” எனவும், மலேசியா பிரதமர் மகாதீர், “பாலஸ்தீனம் மீதான ஒடுக்குமுறை நீடித்தால் மலேசியா அமைதி காக்காது” எனவும் எச்சரித்துள்ளனர். இஸ்லாமிய நாடுகளுக்கு அப்பால் ஐரோப்பிய ஒன்றியமும் ட்ரம்பின் தீர்வு திட்டம் தொடர்பாக 27 நாடுகளுடனும் கலந்தாலோசித்து வெளியிட்ட அறிக்கையில் பாலஸ்தீனத்துக்குச் சதி இடம்பெற்றுள்ளது என்பதை புலப்படுத்தும் வகையிலேயே, “சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுருக்கள் முறிந்துவிட்டது, பாலஸ்தீனிய நிலங்களை இஸ்ரேலிய எந்தவொரு இணைப்பும் சவாலுக்கு உட்படுத்தும்” எனவும் குறிப்பிட்டு ட்ரம்பின் திட்டத்தின் சில பகுதிகளை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது.
முழுமையில் ட்ரம்ப் தனது உரையில் பாலஸ்தீனியர்களுக்கு “நியாயமாக இருப்பேன்" என்று வாக்குறுதியளித்த போதிலும், உண்மையில் ஆவணத்தை பார்க்கையில் கண்ணை மூடிக்கொண்டால் மிகக் குறைவான சமரசமே பிரதிபலிக்கிறது என்பதுடன் அமெரிக்காவின் பார்வையிலான நியாயம் என்பது இஸ்ரேல் மீதான கரிசனையும் பாலஸ்தீனியர்களுக்கான சதி என்பதும் தெளிவாகப் புலப்படுகின்றது.
Comments
Post a Comment