பிரிக்ஸிட் பிரித்தானியவும் அதன் அரசியல் தாக்கங்களும் -ஐ.வி.மகாசேனன்-


19ஆம் நூற்றாண்டில் தம் ஏகாதிபத்திய ஈடேற்றத்திக்காய் அரசுகளைப் பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டு சூரியன் மறையாத தேசமாக விளங்கிய பிரித்தானியா, இன்று தன்னுள் இணைந்த அரசுகளை பிரிய விடாது பேண தினறுகின்றது பிரிக்ஸிட் என்ற ஒற்றை வார்த்தையினால். கடந்த 31சனவரி பிரித்தானிய நேரப்படி நள்ளிரவு 11 மணிக்கு பிரித்தானியா 43ஆண்டு கால கூட்டு வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சட்டபூர்வமாக வெளியேறியது. எனிலும் டிசம்பர் 31 வரை ஐரோப்பிய ஒன்றியத்தின் நியமங்களின் கீழேயே பிரித்தானியாவின் செயற்பாடுகள் காணப்படும். இக்காலப்பகுதி நிலைமாறு காலமாகக் காணப்படுகிறது. குறித்த காலப்பகுதியில் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே, வெளியேறிய பின்னரான வர்த்தகரீதியான மற்றும் உறவு நிலைப்பாடுகள் தொடர்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். ஒப்பந்தங்கள் நிறைவேறாவிடின் ஒப்பந்தம் ஏதும் இன்றி டிசம்பர் 31 முழுமையான ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான உறவு பிரித்தானியாவிற்கு இல்லாது போகும். பிரித்தானியாவின் வெளியேற்றத்தின் பின்னணியில் பிரித்தானியவின் தேசங்கள் பிரியும் சூழலும் ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டுரை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேற்றம் மற்றும் அதனுடனான அரசியல் தாக்கம் என்பதனை விவரிப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

“பிரிட்டன் வெளியேற்றம்" (Britain Exit) என்பதன் ஆங்கில வார்த்தையைச் சுருக்கினால் “பிரிக்ஸிட்" என்ற வார்த்தை வருகின்றது. பிரிக்ஸிட், 2016ஆம் ஆண்டு ஜீன்23 பொதுவாக்கெடுப்பு நடாத்தி மக்கள் ஆணை பெற்றதிலிருந்தே பிரித்தானியாவைக் கொதிநிலைக்கு தள்ளியுள்ளது. பிரிக்ஸிட் கருத்துநிலை, 2008இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐரோப்பாவிலும் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பிரித்தானியாவில் சூடு பிடித்ததாகும். 2013ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிரிக்ஸிட் பற்றிய உரையாடல் வலுவாகக் காணப்பட்டது. இதன் அடிப்படையிலே 2016ஆம் ஆண்டு பிரிக்ஸிட் பொதுவாக்கெடுப்பும் நடாத்தப்பட்டது. அதில் 52% மக்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் 48% மக்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் எனவும் வாக்களித்தனர். பிரித்தானியாவின் வெளியேற்றத்தை விரும்பாத பிரதமர் டேவிட் கமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார். பொது வாக்கெடுப்பில் பிரிக்ஸிட்டிற்கு எதிராகப் பிரதமரும் எதிர்க்கட்சியும் செயற்பட்ட போதிலும் பெரும்பான்மையான மக்கள் பிரிக்ஸிட்டை ஆதரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது இவ்வளவு சினம் கொள்வதற்கான அடிப்படை காரணமாவது, பிரித்தானியர்களின் தேசியவாத சிந்தனை எழுச்சியே ஆகும். பிரித்தானியாவின் தேசியவாத சிந்தனைக்கு குடியேறிகளின் வரவு மற்றும் வேலை வாய்ப்புகளில் அவர்களின் செறிவு அதிகரிக்கப்பட்டமையே உரம்போடுவதாக காணப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளில் இருக்கும் மக்களுக்கு நினைத்தபடி அங்கத்துவ நாடுகளுக்கு இடையே இடம்பெயரலாம், வேலை பார்க்கலாம் என்ற பொதுவிதி ஐரோப்பிய ஒன்றியத்தினுள் காணப்பட்டது. இது பிரிட்டனுக்கு பெரும் தலையிடி ஆகியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குப்பக்கமாக இருக்கும் போலந்து போன்ற வறுமைப்பட்ட நாடுகளிலிருந்து பலரும் பிரித்தானியாவிற்கு குடியேறி வேலைகளைப் பெற்று வந்தனர். இதற்கு தீர்வாய் பிரித்தானிய மக்களிடையே பிரிக்ஸிட் வலுப்பெறலாயிற்று. மேலும் பொருளாதார ரீதியாகவும் ஐரோப்பிய ஒன்றியம் பெருந்தொகையான நிதியை அங்கத்துவக் கட்டணமாய் பிரித்தானியாவிடமிருந்து பெறுகின்றது என்ற விசனமும் மக்களிடம் பரவலாகக் காணப்பட்டது. தரவுகளின்படி 2014ஆம் ஆண்டில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாரத்திற்கு 276 மில்லியன் பவுன்ஸ்களைக் கொடுப்பதோடு அதற்குப் பதிலாக ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனுக்குச் செலவு செய்த தொகை 100மில்லியன் பவுண்ஸ்களிற்கு கொஞ்சம் அதிகம்தான். இத் தரவுகளோடு மக்களின் கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பிரிக்ஸிட்டை ஆதரிக்கும் அரசியல்வாதிகளின் பிரச்சாரமும் அமைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாரம் தோறும் 350 மில்லியன் பவுண்ஸ்களை கொடுக்கின்றோம். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு முழு வசதிகளுடன் வாரத்திற்கு ஒரு வைத்திய சாலையைக் கட்டிவிடலாம் என்பது பிரபல்யமான பிரச்சாரமாக அமைந்தது. இதில் மும்முரமாக பிரித்தானிய சுதந்திரக்கட்சியும் அதன் தலைவருமான நிஹெல் ஃபரெஜ் செயற்பட்டிருந்தார்.

2016 ஜூன்23 பொதுவாக்கெடுப்போடு போது பிரிக்ஸிட் செயல்பாடு பூரணத்துவம் பெறவில்லை. அதிலிருந்துதான் பிரித்தானியாவின் அரசியல் ஸ்திரமற்ற நிலை உருவாக்கப்பட்டது. குறுகிய மூன்று வருடத்தில் பிரிக்ஸிட் இரு பிரதமர்களைக் காவு கொண்டது. டேவிட் கமரூனிற்குப் பிறகு பிரதமராக வந்த தெரெசா மே அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வெளியேறுவதற்கு மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்ச்சியாகப் பிரித்தானியக் கீழவையிலேயே தோற்கடிக்கப்பட, 2019 ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இடைப்பட்ட காலத்தில் பிரித்தானியாவின் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் ஆய்வு நிறுவனமாகிய “Hansard societyஎன்பது வெளியிட்ட அறிக்கையின்படிஇ பிரிக்ஸிட் பேச்சுவார்த்தைகளைப் பிரித்தானிய அரசாங்கம் கையாளும் விதத்தில் 73% மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். காத்திரமான மாற்றத்தினைக் கொண்டு வருவதற்குரிய துணிச்சல் மிக்க அரசியல் தலைமையின் தேவையினை 54% வலியூறுத்தினர். இவ்விம்பத்தைக் காட்சிப்படுத்தியே தொடர்ந்து வந்த பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 2019 இறுதியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரிக்ஸிட் மற்றும் பிரிட்டன் ஐக்கியம் ஆகிய இரு சுலோகங்களை மாத்திரம் வைத்தே பொரிஸ் ஜோன்சன் பெருவாரியான வெற்றியைப் பெற்றதுடன் ஜோன்சன் எடுக்கும் முடிவுகளிற்கு பாராளுமன்றம் கட்டுப்பட வேண்டிய தேவையை உருவாக்கினார். அதுவே பிரிக்ஸிட் தொடர்பான ஒப்பந்தம் வெற்றி பெற்று சனவரி31 பிரித்தானியா சட்டபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியுள்ளது.

பிரிக்ஸிட் தினமான சனவரி31 பிரித்தானியாவின் பிளவு காட்சிப்படலாயிற்று. சனவரி31 இரவு பிரித்தானியாவின் பாராளுமன்ற சதுக்கத்தில் பிரிக்ஸிட் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைக்க, மறுபக்கம் ஸ்கொட்லாந்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரிக்ஸிட் எதிர்ப்பாளர்களின் போராட்டம் பிரித்தானியாவின் உடைவை உறுதி செய்கின்றது .

2014ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பு நடத்துகையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ச்சியாக இருக்குமென பிரித்தானிய அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதி அடிப்படையிலேயே ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்து இருப்பதற்கு ஆதரவாக ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தனர். அத்துடன் 2016ஆம் ஆண்டு பிரிக்ஸிட் வாக்கெடுப்பில் பெருவாரியாக பிரிக்ஸிட்டினை எதிர்த்தே ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தனர். எனினும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது ஸ்கொட்லாந்து மக்களிற்கு பிரித்தானிய மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சான்றாய் பிரித்தானியவின் 2019 டிசம்பர் பொதுத்தேர்தலில் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை வலியுறுத்தும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி போட்டியிட்ட 59 தொகுதிகளில் 48 ஆசனங்களை பெற்றுள்ளது. இத்தேர்தலில் ஸ்கொட்லாந்து சுதந்திர கட்சி, ஸ்கொட்லாந்து சுதந்திரம் பற்றியதாகவே பிரச்சாரம் செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது பிரிட்டனின் ஐக்கியத்திற்கு சவாலானதாக காணப்படுகின்றது.

வட அயர்லாந்தும் பிரித்தானியாவை விட்டு பிரிந்து செல்வதற்கான பொதுவாக்கெடுப்பு சூழலை பிரிக்ஸிட் ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல்10, 1998ஆம் ஆண்டு புனிதவெள்ளி ஒப்பந்தம் ஊடாக வட அயர்லாந்தை பிரித்தானியாவுடன் இணைக்கும் போது மக்களின் சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் அயர்லாந்து குடியரசுக்கும் வட அயர்லாந்துக்கும் இடையே திறந்த எல்லை இருக்கும் என்பதை உறுதி செய்தது. எனிலும் பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தான வெளியேற்றம் திறந்த எல்லை அந்தஸ்தை வலுவற்றதாக்கி விடும் என்ற அச்சத்தை வடஅயர்லாந்து தேசியவாதிகளிடம் ஏற்படுத்தியுள்ளது. தெரேசா மே அவர்களது ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான ஒப்பந்த இழுபறியின் மைய புள்ளியாகவும் வடயஅயர்லாந்து எல்லை கையாள்கையே காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. வடஅயர்லாந்தின் தேசியவாத கட்சிகளின் எழுச்சி, பிரிக்ஸிட்டின் விளைவு வடஅயர்லாந்தையும் பிரித்தானியவிலிருந்து பிரிப்பதற்கான முயற்சியை உருவாக்கியுள்ளது என்பதே நிதர்சனம்.


மேலும் ஸ்பெயினுக்கு தெற்கே கடல் பிராந்தியத்தில் உள்ள ஜிப்ரால்டர் கற்பாறை பிராந்தியம் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜிப்ரால்டர் பிராந்தியத்தின் மக்களும் பிரக்ஸிட்டுக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பட்சத்தில் ஸ்பெயினுடன் தங்களுக்கு இருக்கின்ற திறந்த எல்லையின் எதிர்காலம் குறித்து ஜிப்ரால்டர் பிராந்தியத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஹிப்ரால்டர் பிராந்தியத்தை கூட்டாக நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஸ்பெயின் அரசாங்கம் பிரித்தானியாவிடம் கேட்டுள்ளது.

பிரித்தானியாவில் காணப்படும் அரசியல் ரீதியான பிரிவினை, பிரிக்ஸிட் தினம் அன்று பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வழங்கிய செய்தியில், “இந்த முடிவில் பலர் கவலை மற்றும் இழப்பை உணர்ந்திருப்பார்கள். மூன்றாவதாக உள்ள குழுவினர் இந்த மொத்த அரசியல் சச்சரவுகளும் ஒருபோதும் முடிவுக்கு வராது என்று கவலை ஆரம்பித்திருந்தார்கள். அனைத்து மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு, அரசு இதை ஒற்றுமைப்படுத்தி முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும்” தெளிவாக புலப்படுகின்றது. அதேநேரம் அவரின் உறுதிப்பாடு அரசியல் வார்த்தைகளோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றது. பிரிக்ஸிட்டை அடுத்து கிடைக்கப்பெற்ற மக்களின் அங்கிகாரத்தை தொடர்ந்து ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் தலைவர் நிக்கோலா ஸ்ட்ர்ஜன் ஸ்கொட்லாந்தின் சுதந்திர பொதுவாக்கெடுப்பினை நடத்துவதென கிலுங்குப்பிடியில் உள்ளமை பிரிவினையை தடுக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதாகவே அரசியல் அவதானம் காணப்படுகின்றது. எனிலும் ‘நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பர் நடந்துவிடும்’ என்ற கண்ணதாசன் வரிகளே அரசியலை சுவாரசியப்படுத்துவதும் யதார்த்தமானதேயாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-