அஜர்பைஜான், ஆர்மீனியா விவகாரம்; நகர்னோ - கரபாக் மையப்படுத்தி மூளும் பிராந்திய மோதல்? -ஐ.வி.மகாசேனன்-

சர்வதேச அரசியலில் போர் என்பது தவிர்க்க முடியாத தொடர்கதையாகவே நீள்கிறது. ஒருபோர்ப்பதட்டம் தணியும் சூழலில் ஏதோவொரு மூளையில் இன்னொரு போர்ப்பதட்டம் ஏற்படவே செய்கிறது. அது சார்ந்து உலகமும் இருதுருவமாவதும் சர்வதேச அரசியலில் தவிர்க்க முடியாத பதிவாகிறது. சமகாலத்தில் சர்வதேச அரசியலில்உன்னிப்பாக அவதானிக்கப்படும் போராக அஜர்பைஜானிற்கும், ஆர்மேனியாவிற்கும் இடையில் மூண்டுள்ள போரே காணப்படுகிறது. அதனடிப்படையில் இவ் சர்வதேச அரசியல்கட்டுரையும் அஜர்பைஜானிற்கும், ஆர்மேனியாவிற்கும் இடையிலான போரை மற்றும் போரின் போக்கை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.


அஜர்பைஜானினதும், ஆர்மேனியாவினதும் எல்லையில் காணப்படும் ‘நகர்னோ கரபாக்’ என்ற பிரதேச உரிமம் தொடர்பான விவகாரமே, அஜர்பைஜானிற்கும் ஆர்மேனியாவிற்கும் இடையில் நீட்ச்சியான போரியல் வரலாற்றை உருவாக்கியுள்ளது. 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் பிளவுபடுவதற்கு முன்னர், இரண்டு நாடுகளும் அதன் அங்கமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. சோவியத் ஒன்றியத்தின் இருப்பின் கீழேயே இவ்நாடுகளிடையே நகர்னோ கரபாக்-ஐ மையப்படுத்திய முரண்பாடு ஆரம்பிக்கப்பட்டு விட்டது. 

சோவியத் ஒன்றியத்தின் கீழ், ஜோசப் ஸ்டாலின் நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தை சோவியத் அஜர்பைஜானின் தன்னாட்சி இடமாக மாற்ற முடிவு செய்தார். கராபாக் சோவியத் அஜர்பைஜானிலிருந்து சோவியத் ஆர்மீனியாவுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கராபாக் ஆர்மீனியர்கள் கோரியபோது தற்போதைய மோதல் 1988இல் தொடங்கியது.  1990களின் முற்பகுதியில் இந்த மோதல் முழு அளவிலான போராக அதிகரித்தது. குறித்த பிராந்தியத்திற்கு உரிமை கோரி 1988ஆம் ஆண்டு தொடக்கம் 1994 வரை நடைபெற்ற போரின் முடிவில், நகோர்னோ கராபக் பிராந்தியம் அஸர்பைஜானுக்கு சொந்தமானது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனிலும் 1994ஆம் ஆண்டிலிருந்து அதனை ஆர்மேனியர்கள் ஆளுகை செய்துவருகின்றனர். இதனை மையப்படுத்தி கடந்த 3 தசாப்தங்களாக நகோர்னோ காரபெக் பிராந்தியம் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாகர்னோ - கரபாக் அஜர்பைஜானில் இருக்கும்போதும், பிரிவினைவாத ஆர்மீனியர்களால் "நாகோர்னோ-கராபாக் தன்னாட்சி ஒப்லாஸ்ட்" என்று அழைக்கப்படும் குடியரசாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுவரை எவ்அரசாங்கமும் தன்னாட்சியை அங்கீகரிக்கவில்லை. குறிப்பாக முதலாம் உலக மகாயுத்த காலப்பகுதியில் நிகழ்ந்த பூகோள அரசியல் மாற்றங்களின் ஒரு கட்டமாக நிகழ்ந்த சுதந்திரப்பிரகடனங்களில், இந்தப் பிராந்தியம் 1918ஆம் ஆண்டிலேயே சுதந்திரப் பிரகடனம் செய்தமை பெரிதும் அறியப்படாத அல்லது மறைக்கப்படும் விடயமாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. நாகோர்னோ - கரபாக் பிராந்தியத்தை அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக ஆதரிக்கும் ஆர்மீனிய அரசாங்கமும் நாகோர்னோ-கராபக்கை சுயாதீனமாக அங்கீகரிக்கவில்லை. இந்நிலையிலேயே இப்பிராந்தியத்தை தன்னகப்படுத்தும் நோக்கில் ஆர்மீனியாவும், அஜர்பைஜானும் முட்டி மோதுகின்றன.


சமீபத்திய புதிய மோதலானது, அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா ஒவ்வொரு நாடும் தனது எதிரிக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறியதிலிருந்து, செப்டம்பர்-27 அன்று காலை தொடங்கியது. தற்போதைய விரிவடைதல் குறித்து வேறுபட்டது என்னவென்றால், இரு நாடுகளும் இராணுவச் சட்டத்தை அறிவிப்பது இதுவே முதல் முறை.


கிழக்கு ஆர்மேனிய நகரான Vardenis பகுதியில் அசர்பைஜான் படைகள் பயணிகள் பஸ் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆர்மேனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. இந்நிலையில், அஜர்பைஜான் படைகள், வான் மற்றும் ஆட்லறி தாக்குதல்களை ஆரம்பித்ததாக ஆர்மேனிய பிரதமர் நிக்கோல் பஷின்யன் தெரிவித்திருந்தார். இவ்வாறே மோதலின் ஆரம்பம் தொடர்பில் அஜர்பைஜானும் ஆர்மேனியா மீது தனது குற்றச்சாட்டை முன்வைக்கிறது. ஆர்மீனியப் படைகள் டார்டார் நகருக்கு ஷெல் தாக்குதல்களைத் தொடங்கியதாகவும், பொதுமக்கள் உள்கட்டமைப்பை சேதப்படுத்தியதாகவும், மக்களைக் காயப்படுத்தியதாகவும் அஜர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. ஆர்மீனியாவின் எல்லை மீறல்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேல் கராபக்கில் தாக்குதல்களைத் தொடர்ந்து அஜர்பைஜானின் பாராளுமன்றம் அதன் சில நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் யுத்த நிலையை அறிவித்ததாக அஜர்பைஜான் அரசாங்கம் தெரிவித்திருந்தது.


உலகெங்கிலும் இருந்து போர்நிறுத்தத்திற்கான கோரிக்கைகள் இருந்தபோதிலும், இரு தரப்பினரும் அண்மையில் ஏற்பட்ட விரோதங்களைத் தொடங்குவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி, சமாதானப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை நிராகரித்துள்ளனர்.


அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா மோதலானது பிராந்தியரீதியிலும், சர்வதேசரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நீண்ட காலத்தின் பின் நட்பை வளர்த்து கொள்ளும் ரஷ்சியா மற்றும் துருக்கியிடையேயும், நேட்டோ உறுப்பு நாடுகளாகிய துருக்கி மற்றும் பிரான்ஷிடையும் முரண்பாட்டுக்கான சூழலை அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா மோதல் ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.  இருதுருவங்களாக தமது ஆதரவை ரஷ்சியா, பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகியன வெளிப்படுத்தியுள்ளன.


அஜர்பைஜானின் தேசிய கவுன்சிலின் தலைவர் ஒரு அறிக்கையில், "அஜர்பைஜான் இராணுவத்தின் இராணுவ நடவடிக்கை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எதிரி ஆக்கிரமித்துள்ள பகுதிகளை அழித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும் செப்டம்பர்-27 ஒரு சோர்வு நாள் என்றும், பாதுகாப்பு வலயத்தை உருவாக்க ரஷ்சியாவின் நேரடி ஆதரவுடன் ஆர்மீனியா நாகோரோனோ-கராபாக்கைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர் ஆர்மீனியா சார் ரஷ்சியா நிலைப்பாட்டை கடுமையாக சாடியிருந்தார்.


ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் மோதலில் பிராந்திய நாடுகளின் ஆதரவில் பனிப்போருக்கு பின்னரான உலகில் எழுச்சியுறும் நாகரீகங்களின் மோதுகை அதிக செல்வாக்கை செலுத்துவதையும் காண முடிகிறது. ரஷ்சியாவின் ஆர்மீனியா சார்பு நிலைப்பாட்டில் ரஷ்சியாவுக்கும் ஆர்மீனியாவுக்கும் பொதுமையான கிறிஸ்தவமும் தாக்கம் செலுத்துகிறது. அதன்வழியே துருக்கி மற்றும் அஜர்பைஜான் உறவில் அங்கு பொதுமையாக காணப்படும் இஸ்லாம் செல்வாக்கு செலுத்துகிறது. முஸ்லீம் பெரும்பான்மை துருக்கி அஜர்பைஜானை ஆதரிக்கிறது, சமீபத்தில் கிறிஸ்தவ பெரும்பான்மை ஆர்மீனியாவை அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கவில்லை என்று கண்டனம் செய்தது.  துருக்கி சமீபத்தில் முஸ்லீம் பெரும்பான்மை அஜர்பைஜானுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தது.


பிராந்திய நாடுகளின் ஆதரவு நிலைப்பாடு பிராந்தித்தில் அமைதியை சீர்குலைக்குமா என்ற தேடல் சர்வதேச ஆய்வாளர்களிடேயே ஆழமாக காணப்படுகிறது. குறிப்பாக சமீபத்திய இணக்க தேசங்களாயினும், நீண்டகால பிராந்திய போட்டியாளர்களாக காணப்பட்ட துருக்கி மற்றும் ரஷ்யாவின் தலையீட்டால் இந்த மோதல் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.  


கடந்த செப்டெம்பர்-7 தனது நேர்காணலில் மோதலை 'ஒரு சோகம்' என்று புடின் என்று கூறியது, கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பு (சிஎஸ்டிஓ) க்குள் மாஸ்கோ தனது கடமைகளை நிறைவேற்றும் என்பதை வலியுறுத்தியது. ஆயினும் நேர்காணலில் அவர் சுட்டிக்காட்டிய, "எங்கள் பெரும் வருத்தத்திற்கு, இன்றுவரை தொடரும் விரோதங்கள், ஆர்மீனியாவின் பிரதேசத்தில் நடைபெறவில்லை." என ஆர்மீனியாவை ஆதரித்தே தொடர்ச்சியாய் கருத்துரைப்பது சமாதான தூதுவருக்கான அணுகுமுறையாக அமைவதில்லை. அண்டை நாடான பெலாரஸில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், எதிர்க்கட்சி நபர் அலெக்ஸி நவல்னியின் விஷம் மற்றும் இப்போது கிர்கிஸ்தானில் அமைதியின்மை போன்ற பிற பிரச்சனைகள் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா இதுவரை மோதலில் தனது தூரத்தை வைத்திருக்கிறது என்பதே சர்வதேச ஆய்வாளர்களின் கருத்தாக அமைகிறது.


மறுபுறம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் ஆக்கிரமிப்பு படையான நேட்டோவினுள்ளும் ஆர்மீனியா – அஜர்பைஜான் மோதல் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவுடனான ஆயுத இறக்குமதி முரண்பாட்டால் நேட்டோ நாடுகளுடன் சற்றே விரிலுடன் உறவை பேணும் துருக்கியின் அஜர்பைஜான் ஆதரவானது, ஆர்மீனியா ஆதரவு பிரான்சிடமிருந்து எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. அஜர்பைஜானுக்கு துருக்கி ஆதரவு வழங்குவது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.மேலும் துருக்கியிடமிருந்து வெளியாகும் யுத்த முழக்கங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸின் ஆர்மீனியா சார் நிலைப்பாட்டில் கிறிஸ்தவ நாகரீக செல்வாக்கும், பிரான்சில் ஆர்மேனியாவை பூர்விகமாக கொண்ட பலர் வாழ்வதும் செல்வாக்கு செலுத்துகிறது. 


ரஷ்சியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மின்ஸ் குழு ஆர்மேனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளுக்கு முயற்சிக்கவேண்டும் எனவும் பிரான்ஸ் விருப்பம் வெளியிட்டுள்ளது. இதேவேளை துருக்கியின் நேட்டோ சகாக்கள் நகர்னோ கரபாக் குறித்த துருக்கியின் நிலைப்பாடு குறித்து கரிசனை வெளியிட்டுள்ளனர். இதேவேளை அஜர்பைஜானுக்கு துருக்கி இராணுவஉதவியை வழங்குமா என்ற கேள்விக்கு நாங்கள் அவசியமான எதனைவேண்டுமானாலும் செய்வோம் என துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். துருக்கியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள அஜர்பைஜான் எனினும் தனக்கு இராணுவஉதவி அவசியம் இல்லையென தெரிவித்துள்ளது. எங்கள் மண்ணிலிருந்து ஆர்மேனியர்கள் வெளியேறினால் மோதல் முடிவிற்குவரும்; என அஜர்பைஜான் தெரிவித்துள்ளது.


பகுப்பில், ஆர்மினியா எதிர் அஜர்பைஜான் மோதல் என்பது பிராந்திய சக்திவாய்ந்த அரசுகளின் உறுதுணையினாலேயே நீள்கிறது. பிராந்திய அரசுகளும் தங்கள் நலனுக்கு ஏற்ப பிராந்தியத்தை நகர்த்தி செல்ல ஏதுவாக சமாதான போர்வையில் மோதலை நகர்த்துவதிலேயே கவனம் செலுத்துகின்றது. இருவாரங்களாகியும் முடிவற்ற போரில் நகர்னோ கரபாக் பிரதேச மக்களே இழப்புகளுடன் கடந்து செல்கின்றனர். 


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-