கருத்துக்கணிப்புக்களை கடந்து ட்ரம்ப் இரண்டாவது தடவை அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா? -ஐ.வி.மகாசேனன்-

கொரோனா இடைவிடாது உலகை உலுக்கி வருகின்ற போதிலும் கடந்த ஒரு மாதங்களாய் சர்வதேச அரசியல் பரப்பில் முதன்மையான இடத்தை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலே கைப்பற்றியது. அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் (Donald Trump) ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடனும் (Joe Biden) களமிறங்கியிருந்தார்கள். கடந்த நம்பர்-03ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அமெரிக்காவின்  ஜனாதிபதி தேர்தல்  நடைபெற்றது. 

வழமைக்கு மாறாக இம்முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பெரும் சர்ச்சைகளை சர்வதேச செய்திகளில் உலாவ விட்டுள்ளது. அதனடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் சர்ச்சைகளின் தார்ப்பரியங்களையும், தேர்தலின் ஆரம்ப முடிவுகள் வெளிப்படுத்தும் எதிர்பார்க்கைகளையும் தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.


கொரொனா வைரஸ் பரவுகை அமெரிக்காவை கடுமையாக பாதித்துள்ள நிலையில், தேர்தலை சுமூகமாக நடாத்துவதற்கு தபால்மூலமான வாக்களிப்புக்கள் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நவம்பர்-03 வாக்களிப்பு தினத்திற்கு முன்னரும்  9.5 மில்லியன் அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகளை அளித்திருந்தார்கள். நவம்பர்-03 வாக்களிப்பு நிறைவுற்றதுமே வாக்கு எண்ணும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகிவிட்டது. எனிலும் அஞ்சல் வாக்குகள் எண்ணுவதற்கு சில நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் ஆகலாம். அவை பொதுவாக எண்ணுவதற்கு அதிக நேரம் எடுக்கும், ஏனெனில் அவை மோசடி அல்ல என்பதை உறுதிப்படுத்த நீண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாமதம் ஏற்பட்டால், முடிவு வரும் வரை நாடு பொறுமையாக காத்திருக்க வேண்டும்.


அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு கத்தி விளிம்பில் உள்ளது. தேர்தல் வெற்றி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது போட்டியாளரான ஜோ பிடென் இடையே ஊசலாடும் நிலையில் உள்ளது. மில்லியன் கணக்கான வாக்குகள் கணக்கிடப்படாமல் உள்ளன. இந்நிலையில் எந்தவொரு வேட்பாளரும் இதுவரை வெற்றியைக் கோர முடியாது. ஆயினும் பிரதான இரு போட்டியாளர்களும் தங்கள் வெற்றி முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள்.


குறிப்பாக, ட்ரம்ப்  தனது வெற்றி செய்தியை இரவு அறிவிக்கப்போவதாக அறிவித்ததுடன், பின்னர் தனது வெற்றியை தடுக்க சதி நடைபெறுவதாகக் கூறி, உச்சநீதிமன்ற சவாலைத் தொடங்க உறுதி அளித்தார். 'மில்லியன் கணக்கான மக்கள் எங்களுக்காக வாக்களித்தனர். எங்கள் வாக்காளர்களின் வாக்குகளை பறிப்பதற்கு ஒரு குழுவினர் முயல்கின்றனர். நாங்கள் வெற்றியை கொண்டாட தயாராகிக்கொண்டிருந்தவேளையில் நாங்கள் அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றுக்கொண்டிருந்த வேளையில் வாக்குகளை எண்ணும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என ட்ரம்ப் ஊடகங்கள் முன்தோன்றி தெரிவித்துள்ளார். மேலும், 'இது அமெரிக்க மக்களின் மீது இழைக்கப்படும் மோசடி இது எங்கள் தேசத்திற்கான அவமானம் நாங்களே தேர்தலில் வெற்றிபெற்றோம்' எனவும், உச்சநீதிமன்றத்திற்கு செல்லப்போவதாகவும்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


தேர்தல் தாமதங்களால் பாதிக்கப்படுவது இது முதல் தடவையாக இருக்காது. புளோரிடாவில் வாக்களிப்பதில் சட்ட சிக்கல்கள் காரணமாக 2000ஆம் ஆண்டில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. எனிலும் இம்முறை தாமதம் பூதகரமான செய்தியாக்கப்படுவதில் ட்ரம்பே பிரதான காரணியாகின்றார். கொரோனா அபத்தத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட தபால் வாக்களிப்பை ட்ரம்ப் கடுமையாக எதிர்த்திருந்தார். நீதிமன்றத்தினை நாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எனிலும் ட்ரம்பினது கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையால் அதன் சினத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே, தபால் மூல வாக்குகளை எண்ணும் பொறிமுறை தாமதத்தால் முடிவுகள் தாமதப்படுவதை கடுமையான குற்றமாக சாடி வருகின்றார்.


ட்ரம்பின் ஆதரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், வெற்றி அறிவிப்பு தொடர்பிலும் கடுமையான எதிர்ப்பும் உருவாகியுள்ளது. குறிப்பாக, 'நாம் மாபெரும் வெற்றியை எதிர்நோக்கியிருக்கிறோம். ஆனால் அவர்கள் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கின்றனர். ஒருபோதும் அவர்கள் சதி செய்ய விடமாட்டோம். வாக்குசாவடிகள் மூடப்பட்ட பிறகு வாக்களிக்க முடியாது' என செய்யப்பட்ட டுவிட் சமூகத்தை தவறாக வழிநடத்தும் என்ற காரணத்தை முன்வைத்து டுவிட்டரில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. 


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறைமையில் மக்கள் நேரடியாக ஜனாதிபதியை தெரிவு செய்வதில்லை. மாறாக தேர்தல் கல்லூரி என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பின் மூலம் தேர்தலில் வெற்றி பெறுபவர் தீர்மானிக்கப்படுகிறார்.  50 மாநிலங்களில் ஒவ்வொன்றிற்கும் தேர்தல் கல்லூரி வாக்குகள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 538 வாக்குகள் சேர்க்கப்படுகின்றன.  சிறிய மக்கள்தொகையை விட அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் அதிக தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெறுகின்றன. தேர்தலில் வெற்றிபெற ஒரு வேட்பாளர் 270 தேர்தல் கல்லூரி வாக்குகளை வெல்ல வேண்டும். மைனே மற்றும் நெப்ராஸ்கா இரண்டு தவிர ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர் மாநிலத்தின் அனைத்து தேர்தல் கல்லூரி வாக்குகளையும் வென்றார். இந்த விதிகளின் காரணமாக, ஒரு வேட்பாளர் தேசிய அளவில் அதிக வாக்குகளைப் பெறாமல் தேர்தலில் வெற்றி பெற முடியும்.  கடந்த தேர்தலில் இது நடந்தது. டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மையான தேர்தல் கல்லூரி வாக்குகளை வென்றார், இருப்பினும் அமெரிக்கா முழுவதும் ஹிலாரி கிளிண்டனுக்கு அதிகமான மக்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆரம்பம் முதலே ட்ரம்ப் மீது அதிகளவிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், கருத்து கணிப்பின் முடிவுகளும் பிடனின் வெற்றியையே ஆருடம் கூறியது. நவம்பர்-03 அமெரிக்க ஜனாதிபதி தெரிவுக்கான தேர்தல் கல்லூரி வாக்களிப்பு நிறைவு பெற்றதும் வாக்கு எண்ணிக்கையிலும் ஆரம்பம் முதல் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோய் பிடனே முன்னிலை பெற்று வந்தார். எனிலும் குடியரசு கட்சி வேட்பாளர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-உம் சவாலான போட்டியினையே வழங்கி வந்தார். கருத்து கணிப்புக்கள் எவ்வாறாயினும் எவ்வித சலனமுமின்றி வெற்றிக்கான அறைகூவலையே தொடர்ச்சியாக ட்ரம்ப் வெளிப்படுத்தி வந்தார். அதன் வெளிப்பாடு தேர்தல் முடிவுகளிலும் காணக்கூடியதாகவே உள்ளது.


டொனால்ட் ட்ரம்பிற்கும் ஜோ பிடனுக்கும் இடையிலான போட்டி ஒரு சில மாநிலங்களில் குறுகியுள்ளது. தேர்தல் முடிவுகளின் ஆரம்பம் முதல் பிடன் முன்னிலை பெற்று வந்த போதிலும் தேர்தல் வெற்றியில் தாக்கத்தை செலுத்த கூடிய மாநிலங்களில் ட்ரம்பினது கையே வலுவாக ஓங்கி உள்ளது. குறிப்பாக, புளோரிடா 1964 முதல் ஒரு ஜனாதிபதித் தேர்தலைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் வெற்றிபெற்றது. இது மிகப்பெரிய மக்கள் தொகை மற்றும் அதிக தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்ற ஊசலாடும் மாநிலமாகும். புளோரிடா மாநிலத்தின் 29 தேர்தல் கல்லூரி வாக்குகளை ட்ரம்பே இம்முறையும் வெற்றி பெற்றுள்ளார். மேலும் நவம்பர்-04 நாள் முடிவில் நிலுவையில் காணப்படும் முதன்மையான மாநிலங்களான பென்சில்வேனியா, ஜார்ஜியா, மிச்சிகன் ஆகியவற்றிலும் ட்ரம்ப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசு கட்சியே முன்னிலையில் காணப்படுகிறது. இது ட்ரம்ப் வெற்றிக்கான போட்டியில் உறுதியான நிலையில் உள்ளமையே உறுதி செய்கிறது.


ட்ரம்ப் எனும் ஆளுமையை அவர் மீதான விமர்சனங்களூடாக புறந்தள்ளி விட இயலாது. 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக ட்ரம்ப் முதல்முறையாக களமிறங்கிய வேளையிலும் அவர் மீது அதிகளவில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக கருத்து கணிப்புக்களும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கிலாரி கிளின்டன் அவர்களே வெற்றி பெறுவார் என ஆரூடங்கள் கூறப்பட்டது. எனிலும் கருத்து கணிப்புக்களை ஓரங்கட்டி விமர்சனங்களை மீறி ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியும் பெற்றிருந்தார். அவ்வாறானதொரு சூழலே 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் பிரதிபலிக்கிறது. 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் முழுமையான தேர்தல் முடிவுகள் மீள 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் சூழலை ஒத்ததாக அமையுமா என்பதே? நவம்பர்-04 அன்றைய நாள் முடிவில் கிடைக்கப்பெற்ற  தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கிறது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-