ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் வீழ்ச்சியை நோக்கி நகர்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் அண்மைய அரசியல் நிகழ்வுகள், இலங்கையின் ஆளுந்தரப்பு கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றமையை புலப்படுத்துகிறது. சர்வதேச ரீதியாக அமெரிக்க / இந்தியாவின் நெருக்கடிகளை இராஜதந்திர ரீதியாக நகர்த்தி செல்லும் இலங்கை அரசாங்கம், உள்ளூர் அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை சீர்செய்யக்கூடிய ஆளுமையற்ற நிலையில் காணப்படுகிறது. நிழல் அரசாங்கமாய் செயற்பட வேண்டிய பிரதான எதிர்க்கட்சியும் ஆரோக்கியமான அரசியல் முன்னகர்வுகளின்றி உள்ளமையானது ஆளும்கட்சிக்கு சற்று நிம்மதியான விடயமாகும். இந்நிலையில் உள்ளூர் அரசியல் நெருக்கடியின் விளைவுகளை நேரடியாய் எதிர்கொள்ளும் தரப்பாய் இலங்கை மக்களே காணப்படுகின்றனர். இதனடிப்படையில்இலங்கை ஆளும் தரப்புக்கு எதிராக எழுந்துள்ள நெருக்கடிகளையும், பிரதான எதிர்க்கட்சியின் பலவீனத்தை தேடுவதாகவும் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
2/3 பெரும்பான்மை என்பது எளிதில் கிடைக்கக்கூடாது என்ற அடிப்படையிலேயே இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உருவாக்கி இருந்தார். எனிலும் யாவற்றையும் முறித்து யுத்த வெற்றி வாதத்தையும், சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியலையும் முதலாய் கொண்டு ராஜபக்ஷாக்கள் இரண்டாவது முறை 2/3 பெரும்பான்மையை பெற்று ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தி உள்ளார்கள். எனினும் கடந்த ஜுன்-25 அன்று முன்னாயர்த்த பதிவு செய்யப்பட்ட காணொளி நேரடி ஒளிபரப்பு பதிவில் இலங்கை தேசிய அடையாளங்களான தேசிய கொடி, தேசிய சின்னம் தவிர்க்கப்பட்டு சிங்கள பௌத்த அடையாளங்களை முதன்மைப்படுத்தி உரை நிகழ்த்தியுள்ள போதிலும், சமூக வலைத்தளங்களில் அவ்உரைக்கு எதிர்மறையான விமர்சனங்களே அதிகளவில் எழுந்துள்ளன. குறிப்பாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷாவின் உத்தியோகபூர்வ முகநூலில் எதிர்வினையாற்றியவர்களில் 75 சதவீதமானவர்கள் ஏளனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் பௌத்தமத உயர் பீடங்களினது பார்வை இலங்கையின் பௌத்தமத விவகாரங்களில் மட்டுமல்லாது, இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார விடயங்களிலும் பரந்து விரிந்தே காணப்படுகிறது. ளு.று.சு.னு பண்டாரநாயக்கா ஆட்சிப்பீடமேறியதிலிருந்து மரணம் வரை இலங்கையின் பௌத்த பீடங்களின் ஆதிக்கத்திற்கு சான்றாகிறது. இந்நிலையிலேயே நாட்டின் தலைவர்கள் உட்பட அனைவரும் பௌத்தமத பீடாதிபதிகளின் மீது பயபக்தியோடு நடப்பதுடன் அவர்களின் ஆலோசனைகளையும் செவிமடுப்பவர்களாக இருக்கின்றனர். எனினும் இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பௌத்தமத பீடங்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, அஸ்கிரிய பீடம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷாவின் நாட்டு மக்களுக்கான கடந்த வார உரை தொடர்பிலான விமர்சனத்தை சூசகமாக குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி தனது உரையில் தமது தவறுகளை தாமே வெளிப்படுத்தியுள்ளதாகவும், ஜனாதிபதி தமது உரையை மாத்திரமல்ல, தனது அரச நிர்வாகத்தின் கொள்கைகளைக்கூட திருத்தியமைக்க வேண்டியதன் அவசியத்தை அஸ்கிரிய பீடாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ராஜபக்ஷாக்களின் அரசாங்கத்தின் வருகையை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றியாக கொண்டாடிய சிங்கள பௌத்த பேரினவாத தரப்பே இன்று அவ்அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்துவரும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் திஸ்ஸமஹராம வாவி துப்பரவு பணியில் ஈடுபட்டிருக்கும் சீனர்கள் இராணுவ சீருடையில் காணப்பட்டமை தொடர்பிலே சிங்கள ராவய அமைப்பு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது. சிங்கள ராவய அமைப்பினை சேர்ந்த அக்மீமன தயாரத்ன தேரர், 'தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடையை ஒத்த சீருடையை அணிந்தவர்களை கைது செய்த இலங்கைச் சட்டம், இன்று சீன இராணுவத்தின் சீருடையை அணிந்தவர்களுக்கு எதிராக மௌனமாக இருப்பது ஏன்? சீன இராணுவத்தைக் கொண்டு உள்நாட்டு வாவி ஒன்றை புனரமைக்கும் அதிகாரத்தை சமல் ராஜபக்சவிற்கு வழங்கியது யார்?' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்களும், பௌத்தமத உயர்பீடங்களும் அரசாங்கத்தை எதிர்க்கின்றதாயின், இவ்வாட்சிக்கு பெரும்பான்மையான அதரவினை வழங்கிய சிங்கள பௌத்த மக்களிடமும் அவ்வாறான எண்ணங்களே அதிகம் உலாவிட வாய்ப்புள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதம் கொண்டாடிய நாயகர்களை இரண்டு வருடங்களுக்குள் வெறுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இவ்நிகழ்வுகள் ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் தொடர்பிலே மக்கள் கொண்டுள்ள எண்ணங்ளை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவையை உணர்த்துகிறது.
முதலாவது, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு எல்லையற்ற விதத்தில் அதிகரித்து வருகின்றமை சிங்கள பௌத்த மக்களிடையே அச்சத்தை உருவாக்கி வருகிறது. அரசியல் வெளியில் இலங்கையின் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றமையை சுட்டி இலங்கை சீனாவின் காலணித்துவமாகிறதா? என்ற உரையாடல்கள் அதிகரிக்கப்பட்டு வரும் சூழலில் சில நடைமுறை நிகழ்வுகளும் சிங்கள பௌத்த மக்களுக்கு அச்சத்தை அளிக்கின்றது. கொழும்பு துறைமுக நகர சட்ட அமுலாக்கம், திஸ்ஸமஹராம வாவி துப்பரவு பணியில் இராணுவ சீருடையிலான சீனர்கள் என்பன அவற்றுள் சிலவாகும். குறிப்பாக, இன்று இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை இலங்கை சீன தூதரகம் செய்வதாகவும் விமர்சனங்கள் அதிகளவில் எழுகிறது. இலங்கை அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பலவற்றுக்கும் இலங்கையின் சீனத்தூதரகம் ருவிற்றர் தளத்தில் பதிலளித்து வருகின்றது. அண்மையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.யு.சுமந்திரன் சீன முதலீட்டு திட்டங்களில் இலங்கை ஊழியர்களை பயன்படுத்தாது, சீன ஊழியர்கள் பயன்படுத்துவதாக இலங்கை அரசாங்கத்தை விமர்சித்தமைக்கு இலங்கை சீன தூதரகம் தனது ருவிற்றர் தளத்தில் பதிலிட்டுள்ளது. இந்நடவடிக்கைககள் இலங்கை அரசாங்க நடவடிக்கையிலும் சீனா ஈடுபட இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதாக இலங்கை அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்படைய காரணமாகிறது.
இரண்டாவது, பொருட்களின் விலைவாசி அதிகரிப்பானது ராஜபக்ஷா அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்ட ஈடுபாட்டை அதிகமாக விலக்கியுள்ளது. சடுதியாக பெற்றோலிய பொருட்களின் விலையேற்றமானது இலங்கை மக்களுக்கு அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னைய ரணில்-மைத்திரி அரசாங்க காலப்பகுதியில் பெற்றோலிய பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து ராஜபக்ஷாக்கள் நிகழ்த்திய உந்துருளி பயண எதிர்ப்பு போராட்டத்தை மீளச்சுட்டிக்காட்டி மக்கள் கடுமையாக எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். மக்களின் எதிர்ப்பினால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் தங்களது அரசியல் இருப்பின் சுயபாதுகாப்புக்காக பெற்றோலிய துறை அமைச்சர் மீது பழியை சுமத்தி தாங்கள் தப்பித்துக்கொள்ள முயன்றனர். இதனால் ஆளும் கட்சியினுள்ளேயே கடுமையான முரண்பாடுகள் உருவாக்கம் பெற்றிருந்தன.
மூன்றாவது, கொரோனா வைரலை கட்டுப்படுத்துவதில் கொரோனா செயலணியின் தோல்வியும் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திசைதிருப்பியுள்ளது. கொரோனா செயலணி இராணுவத்தளபதி தலைமையில் முன்னெடுப்பதுவே இன்றைய பரவல் நிலையின் அதிகரிப்புக்கு காரணமென்ற கருத்தியல் மக்களிடம் காணப்படுகிறது. சிங்கள பௌத்த பேரினவாத மக்கள் யுத்த வெற்றியையும், அவ்வெற்றிக்கு காரணமான இராணுவ வீரர்களை தேசிய வீரர்ரளாக கொண்டாடுகின்ற போதிலும், ஆட்சிப்பரப்பில் இராணுவவாதத்தை ஏற்க தயாரில்லை. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவின் தோல்வியும் அதனையே உணர்த்தி நிற்கிறது. இந்நிலையில் கோத்தபாய ராஜபக்ஷா சனநாயக வெற்றியை இராணுவ ஆட்சி இயல்புக்குள் நகர்த்துவது சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இவற்றினடிப்படையில் அரசாங்கத்தின் மீதான வெறுப்பு இலங்கை மக்களிடையே அதிகரித்து வருகிறது. எனினும் கொரோனா நெருக்கடியில் மக்கள் தங்கள் எதிர்ப்பை பொதுவெளியில் காட்ட முடியவில்லை. அரசாங்கமும் 2ஃ3 பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருப்பதனால் ஆட்சி மாற்றத்துக்கும் சாத்தியமில்லை என்பது மக்களின் துயராக காணப்படுகின்றது. எனினும் மக்களின் இவ்;எதிர்ப்புக்களை அணிதிரட்டி நிழல் அரசாங்கமாய் செயற்பட வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் சக்தியும் திராணியற்று இருப்பதே இலங்கை மக்கள் அரசியல் ஆநாதைகளாக்கப்பட்டுள்ளமைக்கு காரணமாகும். கொரோனா பேரனர்த்தம் பெரியளவிலான அணிதிரட்டல் போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய சூழலை தடுத்துள்ள போதிலும், கொரோனா பேரனர்த்த காலங்களுக்கு பொருத்தமான வகையிலான எதிர்ப்பு போராட்டங்களை வடிவமைக்க வேண்டியது அரசியல் தலைமைகளின் சாணக்கியத்தில் தங்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஆளுமையான தலைமையின்மையையே; 20வது திருத்தத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்தமையும், தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் வரும் ரணில் விக்கிரமசிங்காவின் வருகையை கண்டு அச்சம் கொண்டமையும் வெளிப்படுத்துகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பலவீனம், மூன்றாம் தரப்பாய் இன்னொரு எதிர்க்கட்சி உருவாக்கத்துக்கான வாய்ப்பும் இலங்கை அரசியல் வெளியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் பாராளுமன்ற வருகையோடு அதிகமாக உரையாடப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்க பெற்ற ஒரு தேசிய பட்டியல் பிரதிநித்துவத்தினூடாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் வருகை தந்துள்ள போதிலும் இயல்பாய் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 10 ஆசனங்களின் ஆதரவும் நிச்சயம் கிடைக்கப்பெறும். ரணில் விக்கிரமசிங்காவின் வருகையினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாரளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் பாராளுமன்றில் சிலாகித்து பாராட்டியமை மற்றும் முன்னைய வரலாறுகள் சான்றாகிறது. மேலும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலரும் ஆளுந்தரப்பில் பொதுஜன பெரமுனாவின் சுயாதின செயற்பாடுகளில் அதிருப்தியுற்ற தரப்பினரும் ரணில் விக்கிரமசிங்காவுடன் பாராளுமன்றில் கூட்டுச்சேரக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்களால் ஊகிக்கப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், பாராளுமன்ற சத்தியப்பிரமானத்தை தொடர்ந்து இன்றைய அரசாங்கத்தின் உருவாக்கத்திற்கு பின்னின்று ஆதரவளித்த அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே அனந்த தேரரிடம் சென்று ரணில் விக்கிரமசிங்கா ஆசி பெற்றுள்ளார். இது சிங்கள பௌத்த பேரினவாத ஆதரவுத்தளத்தை ரணில் தன் பக்கம் சாய்க்கும் சமிக்ஞை செய்துள்ளதை வெளிப்படுத்துகிறது.
அசைக்க முடியாத ஆட்சியென தம்பட்டமடித்த பொதுஜன பெரமுன அட்சியின் முக்கிய பங்காளர்களான சிங்கள பௌத்த எதிர்ப்பு என்பது இலங்கை அரசுக்கான விசுவாசத்தின் பிரதிபலிப்பாகவே உள்ளது. மக்களின் நெருக்கடிகளுக்கு ஆதரவாக குரலெழுப்பி தீர்வினை கண்டு மக்கள் மனங்களையும், சிங்கள பேரினவாத தரப்புக்களின் விருப்புக்களையும் சரிசெய்யும் அரசாங்கம் ஒன்றின் அவசியப்பாடு தென்இலங்கையால் உணரப்படுகிறது. ஆனாலும் எதிர்க்கட்சியின் பலவீனமும், ஆளும் தரப்பின் இறுக்கமான பிடியும் அதற்கு முண்டுகொடுக்கும் இராணுவமும் அதிக நெருக்கடியிலிருந்து அரசாங்கம் தப்பிப்பிழைக்க வழிவகுத்துள்ளது.
Comments
Post a Comment