அரசாங்கத்தின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவார பஷில் ராஜபக்ஷா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியலில் ராஜபக்ஷாக்களின் நாமம் தவிர்க்க முடியாத நிலையை பெற்றுவிட்டது. இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா, பிரதமர் மகிந்த ராஜபக்ஷா மற்றும் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷா, நாமல் ராஜபக்ஷா எனும் பெயர்களை தாண்டி, ஜுன் நடுப்பகுதியிலிருந்து ராஜபக்ஷா சகோதர்களின் நடுவான் (நடுச்சகோதரர்) பசில் ராஜபக்ஷா-இன் நாமம் ஆளும் கட்சி உறுப்பினர்களாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களாலும் அரசியல் விமர்சகர் பரப்பிலும் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயராக காணப்படுகின்றது. குறிப்பாக ராஜபக்ஷாக்களின் சரிவு மற்றும் இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளின் மீட்பாராக பசில் ராஜபக்ஷா தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றது. இதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் பசில் ராஜபக்ஷாவின் அரசியல் ஆளுமையை தேடுவதனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
2020 ஆகஸ்ட் பொதுத்தேர்தல் மூலம் பொதுஜன பெரமுனா ஆட்சிப்பீடமேறியதும் சடுதியாக செய்த அரசியல் செயற்பாடாய் 20வது சீர்திருத்தமே காணப்படுகிறது. இது மைத்திரி-ரணில் அரசாங்கம், ராஜபக்ஷாக்களின் அரசியலை ஸ்தம்பிக்க செய்வதற்காக 19வது சீர்திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட ஏற்பாடுகளை நீக்குவதையே பிரதான ஏற்பாடாக கொண்டிருந்தது. அவற்றிலொன்றான இரட்டை குடியுரிமை உடையோர் இலங்கை அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவதை தடுக்கும் விடயத்தை 20வது சீர்திருத்தத்தில் நீக்க முற்படுகையில் அரசாங்க தரப்பிலேயே பங்காளி கட்சிகளிடமிருந்தும், அரசாங்க ஆதரவுத்தளமான பேரினவாத தரப்புக்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புக்ககள் கிளம்பியது. எனினும் ஜனாதிபதி உருவாக்கப்பட உள்ள புதிய அரசியலமைப்பில் இரட்டை குடியுரிமை அரசியல் பிரதிநிதித்துவம் நீக்கப்படும் என்ற உறுதிமொழியை அளித்திருந்தார். இந்நிலையில் 2020 ஒக்டோபரில் 20வது சீர்திருத்தம் 156 வாக்குகளை பெற்று நிறைவேறியது. அன்றைய சூழலில் பசில் ராஜபக்ஷா தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றம் வருகின்றார் என்ற உரையாடலும் காரசாரமாக காணப்பட்டது. குறிப்பாக 20வது சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பிரதான காரணமே இரட்டை பிரஜாவுரிமை உடைய பசில் ராஜபக்ஷாவை மீள பாராளுமன்றத்துக்குள் உள்வாங்குவதற்காகவே என்ற கருத்தாடல்கள் அதிகமாகவே உரையாடப்பட்டது. எனினும் இரட்டை குடியுரிமை விவகாரம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையேயே சர்ச்சை நிலவியமையால் பசில் ராஜபக்ஷா தனது பாராளுமன்ற விஜயத்தை கிடப்பில் போட்டு கனியும் காலத்துக்காக காத்திருந்தார்.
இலங்கையில் தற்போது நிலவும் கோவிட் -19 தொற்றுநோயின் மூன்றாவது அலை, மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச சமூகத்தின் கோபத்தை எதிர்கொள்ளும் சூழலில் ஒரு மீட்பாளராக பசில் ராஜபக்ஷாவை அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை சீர்செய்யும் திறன் கொண்ட ஆளுமையாக பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு தனது மறுபிரவேசமும் செய்கிறார். 6ஆம் திகதி வரை ஆருட உரையாடலாய் இருந்த பசில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மறுபிரவேசம், பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜனந்த கோட்டேகொட கடந்த 6ஆம் திகதி சபாநாயகரிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தமையிலிருந்து உறுதியாகியது. தொடர்ச்சியாக 7ஆம் திகதி பசில் ராஜபக்ஷா பாராளுமன்ற உறுப்பினராக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
பசில் ராஜபக்ஷாவின் மறுபிரவேசம் என்பது பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் ரீதியாய் உறுதியாகி உள்ள போதிலும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சிவில் சமுக நிறுவனங்களால் ஜனநாயக விரோத செயற்பாடாயும் சட்ட மீறலாகவும் அதிகமாக உரையாடப்பட்டு வருகிறது. மாற்று கொள்கைகளுக்கான நிலையம், 'அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தில் எழும் காலியிடங்களை நிரப்ப விரும்பும் நபர்களை நியமிக்க அனுமதிப்பது, மக்களின் உரிமையின் மதிப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் அரசியல் கட்சிகளின் தலைமையின் அதிகாரத்தை தேவையின்றி மற்றும் தன்னிச்சையாக உயர்த்துகிறது' என்று கூறியுள்ளது. எனினும் மறுதலையாய் இதனை ஏற்கும் சட்டவலுவினையும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். 'இந்த அரசியல் அரசியல் கட்சிகள் 1981ஆம் ஆண்டு இலக்கம்-1இன் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 64(5)க்குப் பின்னால் ஒளிந்து கொள்கின்றன. இது அத்தகைய காலியிடத்தை நிரப்ப அரசியல் கட்சியின் எந்தவொரு உறுப்பினரையும் நியமிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது' என்று கூறியுள்ளது. மேலும், யூ.என்.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி/ மக்கள் கூட்டணி முந்தைய சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திற்கு இதேபோன்ற நியமனங்கள் செய்தன என்பதையும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் பசில் ராஜபக்ஷாவின் மறுபிரவேசத்தை சட்டரீதியாக அணுக இயலாது என்பது உர்ஜிதமாகிறது.
எனவே எதிர்ப்புக்களின் மத்தியிலும் பசில் ராஜபக்ஷாவின் மறுபிரவேசம் தடையின்றி தொடரக்கூடியது என்பது உறுதியாகிறது. இந்நிலையில் பசில் ராஜபக்ஷா மறுபிரவேசம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் எதிர்பார்ப்புகள் அறிதல் அவசியமாகிறது.
முதலாவது, ராஜபக்ஷாக்களில் நிறுவன உருவாக்கியாக பசில் ராஜபக்ஷா வெற்றி பெற்றவர் என்பதற்கான சான்றே பொதுஜன பெரமுன ஆகும். 2015ஆம் ஆண்டின் ராஜபக்ஷாக்களின் தோல்வியை ஏற்று, அதில் ராஜபக்ஷாக்களின் பலம், பலவீனங்களை நுணுக்கமாக ஆராய்ந்து, ராஜபக்ஷாக்களின் பலமான யுத்த வெற்றிவாதம் மற்றும் சிங்கள பேரினவாதங்களை நிறுவனமயமாக்கி உருவாக்கப்பட்டதே பொதுஜன பெரமுன ஆகும். அதன் சீரான கட்டமைப்பிலேயே குறுகிய காலத்தில் 2018 உள்ளூராட்சி சபை தேர்தல், 2019 ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020 பொதுத்தேர்தல்களின் இமாலய வெற்றி சாதகமாகியது. இதனடிப்படையில் இன்று இலங்கை எதிர்கொள்ளும் இடர்களுக்கு நிறுவன உருவாக்குனராக தீர்வுகளை பெறுவார் என்ற நம்பிக்கை ஆதரவாளர்களால் மக்களிடம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இரண்டாவது, ராஜபக்ஷாக்களுக்குள் மேற்கிற்கான முகமாக பசில் ராஜபக்ஷாவே காணப்படுகிறார். சீனாவுடனான இலங்கைக்கான அதிநெருக்கமான உறவை கட்டமைத்த நவீன தலைவராக மகிந்த ராஜபக்ஷா காணப்படுகிறார். தொடர்ச்சியாக கோத்தபாய ராஜபக்ஷாவும் அவரை பின்தொடர்பவராகவே செயற்பட்டு வருகிறார். இந்நிலையில் மேற்கின் அதிருப்தி இலங்கையை மனித உரிமைகள் சார்ந்தும், பொருளாதார ரீதியிலும் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. இவற்றை சீர்செய்யக்கூடியதாய் மேற்குடன் நெருக்கமான உறவை பேணக்கூடியவராய் பசில் ராஜபக்ஷா எதிர்பார்க்கப்படுகிறார். குறிப்பாக 2006-2009 யுத்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் சார்பாக மேற்குடன் நெருக்கமான உரையாடல்களில் ஈடுபட்டவராக பசில் ராஜபக்ஷாவே காணப்படுகிறார். பசில் ராஜபக்ஷாவின் வெளிநாட்டு தொடர்புகள் நாட்டிற்கு பொருளாதார ரீதியாக பயனளிக்க பயன்படுத்தப்படலாம் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது, ராஜபக்ஷாக்களில் சிங்கள பேரினவாத முகம் வெளிப்பாடற்றவராக காணப்படுபவர் பசில் ராஜபக்ஷா ஆவார். இன்று இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கான மூலகாரணங்களில் ஒன்று சிங்கள பேரினவாத சாயலாகும். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஒரு தனிச்சிங்கள அரசாங்கம், சிறுபான்மைகளை புறக்கணித்திருக்கும் அரசாங்கம் எனும் அபிப்பிராயம் இருக்கின்ற நிலையில், இந்த முகத்தை மாற்றுவதற்கு பசில் ராஜபக்ஷா முயற்சிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா உடனான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சந்திப்பு பிற்போடப்பட்டதன் பின்னணியில் பசில் ராஜபக்ஷாவின் மீள்வருகைக்கு பின்னர் அவருடன் இணைந்து உரையாட உள்ளதாக செய்திகள் உலாவியது. மேலும் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வரவுள்ள நிலையில் பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர், 'இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் அச்சுறுத்தலிருந்து நாடு இன்னும் விடுபவில்லை.' என்று தெரிவித்துள்ளார். இவ்விடயம் பசில் ராஜபக்ஷா அரசாங்கத்தின் தனிச்சிங்கள தோற்றத்தை உடைப்பார் என்ற அச்சம் சிங்கள பேரினவாத தரப்பிடம் காணப்படுவதனையே வெளிப்படுத்துகிறது.
இவ்வாறான பார்வைகள் பஷில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மறுபிரவேசத்துக்கான சாதகமான பார்வை காணப்படுகின்ற போதிலும் எதிர் விமர்சனங்களையும் அறிதல் வேண்டும்.
ஒன்று, முன்னைய கால அமைச்சரவை அனுபவம். பஷில் ராஜபக்ஷா ராஜபக்ஷாக்களின் முதலாவது பருவ ஆட்சிக்காலத்தில் 2010-2015ஆம் ஆண்டு வரையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டிருந்தார். இக்காலப்பகுதியில் ஏற்பட்ட நாட்டின் கடன் அதிகரிப்பு, ஊழல் எனும் பொருளாதார இடர்களினை குற்றஞ்சாட்டியே 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றமும் இடம்பெற்றிருந்தது. பசிலின் மறுபிரவேசத்தை எதிர்க்கும் தரப்பினர், இதனையே பிரதான காரணமாக சுட்டிக்காட்டுகின்றது. ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதா ஹெராத், '2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில், ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தார், ஆனால் பொருளாதாரம் சரிந்து மோசடி மற்றும் ஊழல் அதிகரித்தது.' என பசில் ராஜபக்ஷாவின் மறுபிரவேசம் தொடர்பான செய்தியாளர் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு, செயலணிகளின் தலைவராய் செயற்பாடற்ற தன்மை. கோத்தபாய ராஜபக்ஷா தலைமையிலான அரசாங்கத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தால் நேரடி அரசியல் பிரதிநிதித்துவத்தை பசில் தவிர்த்திருந்தார். எனினும் பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளராகவும், செயலணிகளின் தலைவராகவும் கோத்தபாய அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகளில் ஆரம்பத்திலிருந்தே பசில் ராஜபக்ஷாவும் இணைந்தே செயலாற்றி வந்துள்ளார். குறிப்பாக பொருளாதார புத்துயிர் மற்றும் வறுமை ஒழிப்பு, கோவிட் நலன்புரி பணிக்குழு மற்றும் கரிம உர பணிக்குழுவின் ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவராக உள்ளார். இந்த மூன்று பணிக்குழுக்களும் வெற்றிபெறவில்லை. இவற்றை மையப்படுத்தியே நாடும் பெரும்பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இவற்றை சீர்செய்யக்கூடியவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷா என்பதுவே இவரது ஆதரவாளர்களது பிரச்சாரமாகவும் காணப்படுகிறது. இத முரணான தன்மையை வெளிப்படுத்துகிறது.
மூன்று, பசில் ராஜபக்ஷாவின் மறுபிரவேசம் ஆளும் கூட்டணியை சிதைக்க வாய்ப்புள்ளது. பசில் ராஜபக்ஷாவின் அரசியல் பிரவேசத்தை ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகள் எதிர்க்கின்றனர். பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர பசில் ராஜபக்ஷாவின் மறுபிரவேசம் பற்றி குறிப்பிடுகையில், 'பசில் புதுமை படைப்பார் என்பதை ஏற்க முடியாது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை நியமித்ததே அவர்தான்' என்ற சாhரப்பட தன்விமர்சனத்தை முன்வைத்தார். மேலும் ஆளும் கூட்டணி தற்போது பொதுஜன பெரமுனா பசில் அணியாகவும், பங்காளி கட்சிகள் தனிக்கூட்டாகவும் பிளவுற்றுள்ளது. பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சிகளில் பிறிதொன்றான பிவித்றுஹெல உறுமயவின் தலைவருமான கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையின் போது, பொதுஜன பெரமுன எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதிலும் தெளிவற்ற நிலைமையே காணப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் தங்களுக்குள் ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றன. விரைவில் ஆளும் கூட்டு சிதையலாம். எனினும் பசில் ராஜபக்ஷா தனது சிறுபான்மை நல முகத்தினூடாக சிறுபான்மைகட்சிகளை இணைத்து சிதைவை சரிசெய்யக்கூடிய வாய்ப்பும் உரையாடப்படுகிறது.
எனவே, பசில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மறுபிரவேசம் தொடர்பான பொதுஜன பெரமுனாவின் பிரச்சாரம் அதிகளவு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் அமைகின்ற போதிலும் களநிலவரங்களின் யதார்த்தங்களூடாக அவதானிக்கையில் பசில் ராஜபக்சாவின் வரவு மக்களிடம் செல்வாக்கிழந்து செல்லும் ராஜபக்ஷாக்கள் பற்றி நேரான சிந்தனைகளை தற்காலிகமாக விதைக்கும் முயற்சியாகவே காணப்படுகிறது. கடந்த கால பசில் ராஜபக்ஷாவின் அரசியல் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 'மீட்பார் பிரச்சாரத்தின்' நிரந்தரத்தன்மைகள் கேள்விக்குறியாகவே உள்ளது. பசில் ராஜபக்ஷ வருவதால் நாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனால், பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றவாறான தோற்றம் காண்பிக்கப்படுகின்றது. ஒரு ராஜபக்ஷ பிரபலமடையாதபோது, அவர்கள் மற்றொரு ராஜபக்ஷாவை ஒரு புதிய தலைப்பின் கீழ் மேடைக்கு கொண்டு வருகிறார்கள். இத்தகைய நகர்வு ஆட்சியை தக்க வைக்க உதவுமே அன்றி, இலங்கை மக்களின் இருப்பை தக்க வைக்குமா என்பதே தற்போதைய கேள்வியாகும்.
Comments
Post a Comment