எதிர்க்கட்சிகளின் கூட்டு பொதுஜன பெரமுனாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருமா? -ஐ.வி.மகாசேனன்-

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா அரசாங்கத்தின் மீது மக்களுக்கு சமீபத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை தமக்கு சாதகமாக்கி கொள்ள இலங்கையின் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துவரும் முயற்சிகளே இலங்கையின் அண்மைய சூடான அரசியல் களநிலவரமாக காணப்படுகிறது. குறிப்பாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டணி உருவாக்கத்திற்கான முன்முயற்சிகள் அதிக விவாதங்ளை உருவாக்கி இருந்தன. எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் ஆளுங்கட்சியை பலப்படுத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் மற்றும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இரண்டாவது அதிக ஆசனங்களை(10) தக்கவைத்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஸ்திரமற்ற கொள்கை நிலைப்பாடுகள் தொடர்பிலும் அரசியல் அரங்கில் பல உரையாடல்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இக்கட்டுரை எதிர்க்கட்சிகளின் முயற்சிகளையும், அவற்றின் அரசியல் செல்நெறியை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பூசல்களையும் மற்றும் மக்களிடம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திகளைம் தமக்கு சாதகமாகமாக பயன்படுத்திக்கொள்ள ஏதிர்கட்சிகள் எடுத்த முன்முயற்சிகளினை தெளிவாக அறிதல் வேண்டும்.

முதலாவது, ஜூன்-11 நள்ளிரவு எரிபொருட்களின் விலையேற்றத்தை தொடர்ந்து மக்களிடமிருந்து ஏற்பட்ட எதிர்மறையான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ள ஆளுங்கட்சியினுள்ளேயே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கருத்துக்கள் மேலோங்கின. எரிபொருட்களின் விலை உயர்வுக்கு, பொறுப்பான அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்;. இதை தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷா மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் என்பன ஆளுங்கட்சிக்குள் காணப்பட்ட பிளவுகளை பொதுவெளிக்கு கொண்டு வந்தது. இந்நிலையிலேயே இதனை தமக்கு சாதாகமாக பயன்படுத்தலாம் என்ற முனைப்போடு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஜூன்-22 அன்று சபாநாயகரிடம் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்தனர். அதன் மீதான வாதங்கள் மற்றும் கடந்த 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெற்று 20ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது. உதய கம்மன் பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத்தீர்மானம் பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 61 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 152 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனூடாக உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 2/3 பெரும்பான்மை எதிர்ப்புக்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது, ஜூலை-17அன்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றினைத்து அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான சந்திப்பு ஒன்று கொழும்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி உட்பட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் பங்குபற்றி இருந்தனர். பங்குபற்ற முடியாத தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். இக்கூட்ட முடிவில் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் குரல் எழுப்புவதற்கும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், நாட்டை நல்வழிப்படுத்துவதற்கும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயத்தீர்வையும் உள்ளடக்கி வெளிப்படையாக அதைப்பேசி உறுதிப்படுத்துகின்ற ஒரு நடவடிக்கை திட்டத்துக்கு தான் இனித்தமிழர்கள் ஆதரவு தருவார்கள், தரமுடியுமென அக்கூட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்நிலையிலே இம்முயற்சியும் காணப்படுகிறது.

மேற்குறித்த இரு முயற்சிகளின் களநிலவரங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளின் அரசியல் செல்நெறியை நுணுக்கமாக ஆராய வேண்டி உள்ளது.

ஒன்று, உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீள ஆளும் கட்சியை இறுக பிணைத்துள்ளது. ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தினுள் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் பங்காளி கட்சிகளை உதாசீனப்படுத்துவதாக அதிகளவு விமர்சிக்கப்பட்டிருந்தது. பங்காளி கட்சிகளின் தலைவர்களும் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்தனர். ஜனாதிபதி, பிரதமருடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர். எரிபொருள் விலையேற்றத்தின் போது அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஆளும்கட்சியால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்ளும் பங்காளி கட்சிகள் மீதான வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே அமைந்தன. இந்நிலையில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியினுள் முரண்பாட்டுடன் காணப்பட்ட  பங்காளி கட்சிகளை தமது கூட்டுக்குள் இணைப்பதற்கான நகர்வுகளையே முன்னெடுத்திருக்க வேண்டும். மாறாக அரசாங்கத்தின் பிணக்கை பொதுவெளிக்கு உணர்த்த முற்பட்டு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பொதுஜன பெரமுன தமது பங்காளி கட்சிகளை மீள அனைத்துக்கொள்ள வாய்ப்பாக்கி உள்ளது. அரசாங்கத்தினுள் அதிக முரண்பாடுடன் காணப்பட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, 'அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அரசாங்கத்தில் உள்ள கட்சிகளிடையே ஒற்றுமை மேலும் வலுப்பெற்றுள்ளது' எனத்தெரிவித்துள்ளார். இது எதிர்க்கட்சியின் நகர்வின் தவறையே உணர்த்துகிறது.

இரண்டு, பஷில் ராஜபக்ஷா மீட்பார் என பொதுஜன பெரமுனா அரசாங்கம் அளித்த விம்பத்தை உறுதிப்படுத்தும் வாய்ப்பை எதிர்க்கட்சியினர் பெற்றுக்கொடுத்துள்ளனர். ஆளுங்கட்சியினுள்ளே காணப்பட்ட விரிசலானது பல சந்தர்ப்பங்களில் பொது வெளியில் மறைவின்றி வெளிப்பட்டிருந்தது.  பஷில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மீள் வருகையை ஆதரித்தோர், பஷில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற வருகை அரசாங்கத்தினுள் காணப்படும் பிளவுகளை சீர்செய்து மீளக்கட்டமைக்க உதவும் என கருத்துரைத்தனர். இந்நிலையில் அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒன்றினைந்து தோற்கடித்ததனூடாக பஷில் ராஜபக்ஷா மீள பொதுஜ பெரமுன அரசாங்கத்தை சிதைவின்றி பலமாக கட்டமைத்துள்ளார் என்ற விம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது பஷில் ராஜபக்ஷா வருகையூடாக மக்களுக்கு புதுநம்பிக்கை அளிக்க முடியுமென்ற பொதுஜன பெரமுனா அரசாங்கத்தின் எதிர்பார்ப்பையே நிறைவேற்றியுள்ளது.

மூன்று, எதிர்க்கட்சிகளின் ஸ்திரத்தன்மை இன்மையை நம்பிக்கையில்லா தீர்மான முடிவுகள் மேலும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியால் முன்னெடுக்கப்பட்ட உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராகவே எதிர்க்கட்சி வரிசையில் உள்ள இலங்கை மக்கள் காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், முஷாராவ் மற்றும் முஸ்லீம் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ராஹீம் ஆகியோர் வாக்களித்திருந்தனர். மேலும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆதரவாக வாக்களித்த போதிலும் அக்கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான ஹாரிஸ், பைசல் காசிம், நசீர் அஹமட், தௌபீக் ஆகியோர் சபைக்கு வருகை தரவில்லை. 20ஆம் சீர்திருத்தத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து ஆதரவளித்தோருக்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் அவர்கள் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி வரிசையிலிருந்து அரசாங்கத்திற்கான ஆதரவை நல்கி வருகின்றனர். இது எதிர்க்கட்சியின் பலவீனத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது.

நான்கு, எதிரணியினர் கூட்டுக்கான உரையாடல்களை திறந்துள்ள போதிலும் இன்னும் முழுமையான கூட்டுத்தன்மையை பெற்றிருக்கவில்லை. கடந்த ஜூலை-17 அன்று எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி உரையாடியுள்ள போதிலும் ஜூலை19-20ஆம் திகதிகளில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவை விமர்சித்திருந்தனர். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான தனது எதிர்க்கருத்தை தீர்மானம் முன்வைக்கப்பட்ட நாள் முதலாகவே கூறி வருகிறது. மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமரதிசநாயக்க, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் முட்டாள் தனமான ஒரு முடிவு மற்றும் ஊடக விம்பத்துக்காக எடுக்கப்பட்ட முயற்சி என கடுமையாக சாடியிருந்தார். எனினும் இருவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளித்துள்ளமையானது கூட்டிணைவுக்கு உள்ள வாய்ப்பையே வெளிப்படுத்தகிறது. எனினும் ஏதிரணிக்குள் வெளிப்படையான உரையாடல்கள் அதிகரிக்க வேண்டும் என்ற தேவைப்பாட்டையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

ஐந்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஸ்திரமற்ற கொள்கையை வெளிப்படுத்தி நிற்கிறது. இது எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சாதகமான எதிர்வினையாற்றி உள்ள போதிலும், தமிழ் மக்களை மீள ஏமாற்றும் அரசியல் நாடகத்தை அரங்கேற்ற முற்பட்டுள்ளது. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் ஏற்பாட்டில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் அரசியல் தீர்வு தொடர்பிலான வெளிப்படை பேச்சுவார்த்தைக்கு உடன்படுகையிலேயே ஒன்றிணைந்து செயற்படுவோம் என சூளுரைத்தோர், எவ்வித பதில்களும் வெளிப்படையாக கிடைக்காத நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆதரவாக வாக்களித்தமை ஸ்திரமற்ற கொள்கை நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி நிற்கிறது. எரிபொருள் விலையேற்றத் தவறை சுட்டிக்காட்ட முற்பட்டிருப்பின், பட்ஜெட்டுக்கு எதிராக கதைத்து விட்டு பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்காது வெளியேறியது போன்று எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்துவிட்டு வாக்களிக்காது வெளியேறி இருக்கலாம். இது எதிர்க்கட்சிகளுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பொறுப்புடன் உரையாட வேண்டிய தேவைப்பாட்டை உணர்த்தி இருக்கும். எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கையறு நிலையில் எதிர்க்கட்சியுடன் கூட்டுச்சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பை எதிர்க்கட்சியிடம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலை தமிழ்மக்களிடம் கூட்டமைப்பை மேலும் சரிவுக்கே கொண்டு செல்லும்.

எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தி மக்களிடம் பலம் பெறும் ஆற்றல் எதிரணியிடம் இல்லை என்பதையே களநிலவரங்கள் வெளிப்படுத்தி நிற்கிறது. எனினும் எதிரணியினர் கூட்டுக்கான உரையாடல்கள் வினைத்திறனாக முன்னெடுத்து அரசியல் கட்சிகளின் நலன்களுக்கு அப்பால் மக்கள் நலன்களை உள்ளீர்த்து ஒரு ஒன்றினைவை மேற்கொள்வார்களாயின் தேசிய ரீதியிலான ஆதரவு தளத்தை எதிர்க்கூட்டணியால் உருவாக்க முடியும். மாறாக தனியன்களாக எதிரணிகள் ஆளுமையற்ற தலைமைகளாகவே சமூக விம்பங்கள் காணப்படுகிறது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-