தென்கிழக்காசியா பாணியிலான ஆட்சி முறைக்குள் இலங்கையின் அரசியல் கலாசாரம் நகர்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாராளுமன்றத்திற்கு வெளியே பொது இடங்களிலும், ஊடகப்பரப்பிலும் தினசரி சூடான விவாதங்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கி வருகிறது. அண்மையில் பாராளுமன்றில் அமைச்சரவை ஒப்புதலுடன் முன்மொழியப்பட்டுள்ள சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான எதிர்ப்புக்கள் விவாதங்களை தாண்டி களத்திலும், சமூக வலைத்தளத்திலும் சாத்வீக முறையிலான போராட்டங்களையும் உருவாக்கி உள்ளது. களப்போராட்டங்களை முடக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் மேலும் பூதாகரமாக மாற்றியுள்ளது. இது இலங்கை அரசியல் கலாசாரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்ற முயலுகிறது என்ற விமர்சனத்தை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது. இந்நிலையிலேயே இக்கட்டுரை இலங்கை அரசியல் கலாசாரம் தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் மாறும் போக்கை தேடுவதாக உள்ளது.
சர்வதேச வல்லாதிக்க சக்திகளால் நிராகரிக்கப்பட்டு வந்த அரசியல் கலாச்சாரங்கள் சில கொரோனாவிற்கு பின்னரான உலக ஒழுங்கில் புத்தெழுச்சி பெறலாயிற்று. கொரோனா தொற்றின் வேகம் கட்டுப்படுத்தப்பட்ட நாடுகள் பட்டியலில் சீனா, ரஷ்சியா, வடகொரியா, கியூபா போன்ற ஒரு கட்சி ஆதிக்கம் அல்லது தனிமனிதவாத ஆட்சி நாடுகள் முதன்மை வகிக்கின்றன. அதனால் அத்தகைய நாடுகளிலும், இராணுவ ஆட்சியுடைய நாடுகளிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி வரும் நிர்வாக இயந்திரமாக இராணுவம் மாறிவருகிறது. இதனால் தாராள ஜனநாயக அரசுகளின் இயலாமையையும் குறைபாடுகளையும் உலகம் கண்டு கொண்டுள்ளது. இதனால் ஒருகட்சி ஆதிக்கம், தனிமனித வாதம், இராணுவ வாதம் போன்ற சிந்தனைகள் மேலெழுவதற்கான சூழல் அதிகமாகியுள்ளது. இது ஏற்கனவே உலக நாடுகளால் சுவர்க்கம் என்று கருதப்பட்ட தாராளவாத அரசுகளின் இயல்புகளின் பலவீனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலைக்குள் அரசுகளது கோட்பாடுகள் தள்ளப்பட்டுள்ளது. யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த தத்துவவியலாளர் ஸ்லோவாச் சிசிக், 'முதலாளித்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையிலான திருமணம் முடிவுக்கு வந்துவிட்டது' என 20ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கூறினார். எனினும் அதன் யதார்த்தத்தை கொரோனாவிற்கு பின்னரான உலக ஒழுங்கே உறுதி செய்துள்ளது. அதாவது ஜனநாயகமற்ற சீனா திறந்த சந்தை பொருளாதாரக் கட்டமைப்பைக் கைப்பற்றிவிட்டது. இதன்வழி சீனா, ரஷ்சியா, வடகொரியா நாடுகள் பின்பற்றும் ஒரு கட்சி ஆதிக்கம், தனிமனித வாதம், இராணுவ வாதம், எதேச்சதிகாரம் எனும் அரசியல் கலாசாரம் உலக நாடுகள் தொடரக்கூடிய வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசாங்கமும் சீனா, ரஷ்சியா, வடகொரியா நாடுகள் பின்பற்றும் அரசியல் கலாசாரத்தை பின்பற்ற முயல்கிறதா என்பதை நுணுக்கமாக அவதானிக்க வேண்டும்.
முதலாவது, மக்கள் இராணுவம் என்ற எண்ணக்கருவுடன் இராணுவமயமாக்கம் நிறைந்து வருகிறது. ராஜபக்ஷாக்களின் அரசாங்கத்தின் இரண்டாவது பருவகால ஆட்சியில் ஆரம்பத்திலிருந்தே நிர்வாகத்தில் இராணுவ பிரசன்னம் அதிகமாகவே உள்வாங்கப்பட்டு வருகின்றது. போர்வெற்றியை பிரகடனப்படுத்தி ஆட்சியை பெற்றுக்கொண்டமையால் இராணுவத்தை மக்கள் இராணுவமாக சமூகமயப்படுத்தும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்கிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், கைத்தொழில் அமைச்சின் செயலாளர் என அமைச்சுக்களின் செயலாளர்களாக பொது நிர்வாகத்துறையில் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் உச்ச கட்டமாகவே உயர்கல்விக்குள்ளும் இராணுவத்தின் செறிவை அதிகரிக்குமோர் ஏற்பாடாக சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கைலக்கழக சட்டமூலமும் காணப்படுகிறது. இலங்கையில் உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள பல்கைலக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே, பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தும் உயர் கட்டமைப்பாக இருந்து வருகிறது. இதற்குக் கீழ் தான் பல்கலைக்கழகங்கள் மற்றும் பட்டங்களை வழங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்குகின்றன. மானியங்கள் ஆணைக்குழுவின் ஒப்புதல் பெற்றால் தான், குறித்த பட்டங்கள் இலங்கையில் செல்லுபடியாகும். ஆனால், சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை தனியானெதாரு சட்டத்தின் மூலம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தான் இப்போதைய பிரச்சினைகளுக்கு காரணம். இவ்வாறான நிலை நிபுணத்துவ கல்வி முiறைய சீரழிக்கவும், அவற்றின் தரம் குறைவதற்கும் காரணமாக கூடும். பொதுக்கல்வி, இராணுவக் கல்வி என்பன வௌ;வேறானவை. அவற்றை ஒன்றிணைத்து, பொதுக்கல்வித் திட்டத்துக்குள் இராணுவத்தை உள்நுழைக்க அரசாங்கம் முனைகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இரண்டாவது, எதேச்சதிகார ஆட்சித்தலைமை. இலங்கையின் 1978ஆம் ஆண்டு நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமையிலான அரசியலமைப்பே எதேச்சதிகார ஆட்சித்தலைமையினையே ஜனநாயக பொறிமுறையூடாக நிறுவுகின்றது. 19வது சீர்திருத்த்தினூடாக நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியின் மீது சில மட்டுப்பாடுகளை உருவாக்கிய போதிலும், தற்போதைய அரசாங்கம் ஆட்சி அமைத்த உடன் மேற்கொள்ளப்பட்ட 20வது சீர்திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தி மீள ஜனாதிபதியை எதேச்சதிகார தலைமையாக உருவாக்கி உள்ளது. அரசியலமைப்பினூடாகவே எதேச்சதிகார ஆட்சித்தலைமை உருவாக்கப்ட்டதன் விளைவாகவே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை கொண்டு கொலைக்குற்றவாளிகளாக நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார். மிருசுவிலில் எட்டு தமிழர்களை கொன்று மலக்குழியில் புதைத்த கொலையாளிச்சிப்பாய் சுனில் இரத்நாக்காவுக்கு வழங்கி இருந்த மரண தண்டனையை நீக்கி 2020இல் விடுதலை செய்தார். தற்போது பாரத லஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள துமிந்த சில்வாவும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது எதேச்சதிகார ஆட்சியின் இயல்பாகவே நோக்கப்படுகிறது. மேலும், 2020 செப்ரம்பர் 25 அன்று ஹல்துமுல்லவுக்கு அருகில் தூரத்து மலையக கிராமம் ஒன்றில் நடந்த ஒரு கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா தனது எதேச்சதிகார செயற்பாட்டை அதிகளவில் தெளிவுபடுத்தினார். நாட்டின் அரச அதிகாரிகளின் சோம்பேறித்தனம் எனக் கூறப்படுவது பற்றி மோசமாக கண்டனம் செய்த அவர், 'எனது உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக எடுத்துக்கொள்ளுங்கள்; எழுத்துமூலமான சுற்றுநிரூபங்கள் அவசியமற்றது. நான் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாகும். எனக்கு அப்பாற்றபட்டு என்ன இருக்கின்றது?' என பிரகடனம் செய்தார்.
மூன்றாவது, ஜனநாயக போராட்டங்களினை ஒடுக்குதல். ஜனநாயக தேசங்களிலும் அரசாங்கங்கள் தவறிழைக்கலாம். எனினும் மக்கள் ஜனநாயக வழியில் போராடுகையின் அரசாங்கங்கள் தங்களை திருத்தி கொள்ள முயலும். உலக நாடுகளில் உயரளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவி கொண்டு இருக்கையிலேயே அமெரிக்காவில் முளைத்த கறுப்பின மக்களுக்கு ஆதரவான ஜனநாயக போராட்டம் ஐரோப்பிய தேசங்களிலும் வியாபித்தது. அமெரிக்க, ஐரோப்பிய தேச அரசாங்கங்கள் கொரோனாவை காரணங்காட்டி அதனை அடக்க முற்படவில்லை. எனினும் இலங்கையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக இடம்பெறும் ஜனநாயக போராட்டங்களை கொரோனா தொற்றை காரணங்காட்டி இலங்கை அரசாங்கம் முடக்கி வருகிறது. மாறாக அரசுக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை ஆதரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்படுவதாக ஜீலை-6 அன்று பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடரந்து ஜீலை-8 அன்று சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழ சட்டமூலத்துக்கு எதிராக போராடிய தொழிற்சங்க உறுப்பினர்களை கைது செய்து தனிமைப்படுத்தலை தண்டகையாக்கி தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி உள்ளது. எனிலும் ஜீலை-8 மற்றும் ஜீலை-9 அன்று இலங்கையில் பல இடங்களில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷாவின் ஆதரவாளர்கள் பெருந்திரளாக கூடி பசில் ராஜபக்ஷாவின் பராளுமன்ற மீள்வருகையை கொண்டாடிய போது எவ்வித கொரோனா சுகாதார நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது அரசாங்கம் கொரோனாவை காரணங்காட்டி மக்கள் ஜனநாயக போராட்டங்களை முடக்குகின்றது என்பதனையே வெளிப்படுத்துகிறது.
நான்காவது, ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் இலங்கையில் ஒரு கட்சி பண்பாட்டை வளர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதனை அவதானிக்க முடிகிறது. பொதுஜன பெரமுனா ஆட்சியை தொடர்ந்து நிலைப்படுத்துவதற்கான சூழலை உருவாக்குகின்றனர். ஆளும் கட்சி கூட்டணியாக உள்ள போதிலும் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டி பொதுஜன பெரமுனாவை முதன்மைப்பத்தும் செயற்பாடுகளே நடைபெறுகின்றது. மேலும் எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கான பொதுஜன பெரமுனாவின் ஆட்சித்தலைமைகளாக பசில் ராஜபக்ஷா, நாமல் ராஜபக்ஷாவை பொது வெளியில் அடையாளப்படுத்தி வருகின்றனர். இது பொதுஜனபெரமுனாவை தனி ஆதிக்க கட்சியாக முதன்மைப்படுத்தும் செயற்பாடாகவே காணப்படுகிறது. யதார்த்தத்திலும் எதிர்க்கட்சிகளின் பலவீனம், சரியான எதிர்கால தலைமைகளை அடையாளம் காட்ட இயலாத சூழலில் பொதுஜன பெரமுனா எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கான தலைமைகளை அடையாளப்படுத்துகையில் மக்கள் மனங்களிலும் பொதுஜன பெரமுனா தனித்து ஆழமாக பதிய வாய்ப்புள்ளது. மேலும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷா ஒரு கட்சி பண்பாட்டை ஆதரிக்கும் உரையாடலை சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றி உரையாடியுள்ளமையும் அவ்வாறானதொரு பண்பாட்டை இலங்கையின் தொடரும் எதிர்பார்க்கை உள்ளமையையும் அடையாளப்படுத்தகிறது.
ஐந்தாவது, ராஜபக்ஷாக்களின் நிர்வாகம் அதிகமாக ஆசியவாத கருத்தியலை முன்னிலைப்படுத்துகிறது. குறிப்பாக மகிந்த ராஜபக்ஷா தனது முன்னைய ஆட்சிக்காலப்பகுதியிலும் ஆசிய தனியானதொரு அலகு என்பதை பிரகடனப்படுத்தி மேற்கை தவிர்த்து ஆசிய நாடுகளுடன் அதிக உறவை கொண்டிருந்தார். தென்கிழக்காசியா பாணியிலான நகர்வொன்றை இலங்கை திட்டமிட்டு நகர்த்தி வருகிறது. இதனை 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பிலிருந்தே ஆரம்பித்து விட்டது என்ற புரிதல் அவசியம். மேலும், மேற்கால் ஈரான் புறக்கணிப்பட்ட பேதெல்லாம் ஈரானுக்கான நேசக்கரத்தை மகிந்த ராஜபக்ஷா ஜனாதிபதியாக இருந்த போது வழங்கி இருந்தமை மேற்கின் கலாசாரத்திலிருந்து விலகலை வெளிப்படுத்துகிறது. ஆசியவாத கருத்தியலுடன் தொடர்புடையதாகவே இலங்கை – சீன நெருக்கமும் காணப்படுகிறது. மேற்கு அதிகமாக தமது அரசியல் கருத்தியல்களூடாகவே ஏனைய நாடுகள் மீது அதிகம் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. ஆசியவாதத்தை முதன்மைப்படுத்தும் ராஜபக்ஷாக்களின் அரசாங்கம், மேற்கின் அரசியல் கருத்தியலை தவிர்த்து ஆசிய நாடுகளாகிய சீனா, வடகொரிய, ஈரான் சாயலிலான அரசியல் கலாசாரத்தை முதன்மைப்படுத்த முயலுகின்றனர்.
எனவே, இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மேற்கிலிருந்து விலகல் என்பதை பொருளாதாரத்திலிருந்து மாத்திரமின்றி அரசியல் கலர்சாரமாகவும் மாற முற்படுகின்றது. முழுமையாக சீன, ரஸ்சிய, வடகொரிய அரசியல் கலாசாரத்துக்குள் இலங்கை இதுவரை செல்லாத போதிலும், இலங்கையின் அண்மைய அரசியல் நடவடிக்கைகள் அவ் அரசியல் கலாசாரத்துக்குள் நுழைவதற்கான முனைப்புக்களையே வெளிப்படுத்துகிறது. உலக ஒழுங்கின் மாற்றமும் இலங்கையிக் அரசியல் கலாசார மாற்றத்துக்கு தீனி போடுவதாக அமைகிறது.
Comments
Post a Comment