தென்னிலங்கை எதிர்க்கூட்டணியின் உபாயத்திற்குள் மீண்டும் பலியாவார்களா தமிழ் அரசியல் தரப்பினர்? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியலில் அண்மைக்காலங்களில் சூடான விவாதமாக அமைவது எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கட்டமைப்பு உருவாக்கங்களும் ஆகும். இவ்முயற்சிகளின் உரையாடல்களில் எதிரணியினை பலப்படுத்தம் உத்திகளில் தமிழ் தேசிய இனத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் அதிக கரிசனை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும். எனினும் தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் அரசியல் தலைமைகள் எதிரணிகள் தமிழ் தேசிய இனத்துக்கு அளித்துவரும் முக்கியத்துவத்தை ஒருங்கினைக்கும் வல்லமையுடன் செயற்படுகிறார்களா? என்பது தேட வேண்டியுள்ளது. அதனடிப்படையிலேயே இக்கட்டுரை எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளில் தமிழ்த்தேசிய இனம் முக்கியத்துவப்படுத்தப்படுவதும் தமிழ் அரசியல் தலைமைகளின் பலவீனங்களை அடையாளப்படுத்தப்படுவதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர தூய தேசப்பற்றாளர்கள் எனும் இயக்கத்தை உருவாக்கி நிகழ்த்திய ஊடக சந்திப்பில் இலங்கையின் நிலைத்த இருப்புக்கு தமிழ்த்தேசிய இனத்தினை அரவணைத்து செல்ல வேண்டும் என்ற கருத்தை விளக்கியிருந்தார். 'இனவாத, மதவாத காலம் கடந்த பழைய கொள்கைகள் கோட்பாடுகள் தோல்வியடைந்துள்ளன. உண்மையில் நாட்டுபற்று என்ன என்பதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள பௌத்த பெயரில் தமிழரை கொல்வது தேசப்பற்றாகாது. சிங்களம் என்று சொல்லி கடைகளை எரிப்பதனாலும், வீடுகளை உடைப்பதனாலும் அதிகளவில் பாதிக்கப்படுவது இறுதியில் சிங்களவர்களே. அனைத்து அரசியல்வாதிகளும் தங்களுடைய சொந்த கொள்கைகளை முன்வைப்பதற்கு தேசபக்தி என்ற முழக்கத்தை விற்கின்றார்கள்.' எனவும் 'தமிழ்த்தேசிய இனத்தையும் ஒருங்கினைத்து நடுநிலையான கொள்கைகளை பின்பற்றுவதே மெய்யான தேசப்பற்றை உருவாக்கும்' எனவும் குறிப்பிட்டுள்ளார். மங்கள சமரவீர-இன் கருத்தை தோல்வியுற்ற அரசியல்வாதியின் கருத்தாக எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. கடந்த காலங்களில் அரசாங்கங்களின் வெற்றியில் முக்கிய பங்கை வகித்ததுடன் பிரதான அமைச்சுக்களிலும் இருந்துள்ளார். இன்று ராஜபக்ஷாக்களுக்கு ஏற்பட்டுள்ள சரிவு ஆழமாக கணிக்கப்பட்டே மங்கள சமரவீர-இன் உரையாடலும் அமைந்துள்ளது. 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை வன்முறையின் காரணகர்த்தாக்களை குறிப்பிட்டு அவர்களிற்கு எதிராக கருத்துக்களை முன்வைக்க திராணியற்று தமிழ் அரசியல்வாதிகள் காணப்படுகையில், கறுப்பு ஜூலை நினைவு காலத்தில் தமிழ் மக்கள் மீதான சிங்கள பௌத்த வன்முறை தவறு என்ற கருத்து சிங்கள அரசியல் தரப்பிடமிருந்து வருவது தமிழ்த்தேசிய இனத்தின் முக்கியத்துவம் தென்னிலங்கையால் உணரப்படுகின்றது என்பதனையே வெளிப்படுத்துகின்றது.
மேலும் ஜூலை-17அன்று கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான முன்முயற்சி கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கு அடுத்ததான உரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருக்கு வழங்கப்பட்டிருந்தது. இது தமிழ் மக்களுக்கு எதிரணி கூட்டணி முன்முயற்சியில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தினையே பறைசாற்றுகின்றது. அரசியலில் சொற்களுக்கு அப்பால் செயல்களும் கனதியான விடயங்களை கூறவல்லாதாகும். அதுவே அரசியல் இராஜதந்திர செயலாகவும் கணிக்கப்படுகிறது.
இவற்றை வலுப்படுத்தும் கருத்தாடலாகவே சிங்கள புத்திஜீவிகளிடம் இன்று வலுப்பெற்றுள்ள தனிசிங்கள தேசியவாத கருத்தியலின் தோல்வி சார் உரையாடல்களையும் அவதானிக்க வேண்டியுள்ளது. ஆளும் பொதுஜன பெரமுனவின் வெற்றி சிங்கள பௌத்த தேசியவாத கருத்தெழுச்சியினாலேயே சாத்தியமாகியது. எனினும் சமீபத்தில் மேலெழுந்துள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பலவீனமே சிங்கள பௌத்த தேசியவாத கருத்தியலின் தோல்வியையும் மக்களிடம் வெளிப்படுத்தியுள்ளது என்பதே உண்மையாகும். 1950களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாராநாயக்கா தன் அரசியல் இருப்புக்காய் சிங்கள பௌத்த மக்களிடையே கட்டியெழுப்பிய நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனவாத சிங்கள பௌத்த அரசின் எண்ணங்களையே, 2015ஆம் ஆண்டு தோல்விக்கு பின்னரான மீளெழுச்சிக்கு ராஜபக்ஷாக்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். போர் வெற்றி என்பது ராஜபக்ஷாக்களுக்கு மேலுமொரு வாய்ப்பாக அமைந்தது. எனினும் நடைமுறையில் ராஜபக்ஷா அரசாங்கம் சீனாவிற்கு நாட்டை விற்பதுடன் நெறிமுறையற்றதொரு அரசியல்கொள்கையை பின்பற்றுவதாக சிங்கள பௌத்த மக்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகி வருகின்றது. இது தனித்த சிங்கள பௌத்த தேசியவாதம் இலங்கையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையாது என்ற சிந்தனை தூண்டலை பெரும்பான்மை சமூகத்திடம் விதைக்க வழி ஏற்படுத்தியுள்ளது.
இவற்றினடிப்படையில் இலங்கையினை மீளக்கட்டமைப்பதில் தமிழ்தேசிய இனத்தின் முக்கியத்துவமும், இலங்கையின் வளர்ச்சிக்குள் தனித்து சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பங்களிப்பு மாத்திரமின்றி தமிழ் தேசியவாதத்தின் பங்கும் செறிவான நிலை பெறுகின்றது என்பதுவும் தென்னிலங்கை அரசியலின் பிரதான பங்காளிகளின் உரையாடல்களில் மேலெழுகின்றது. இது தமிழ்த்தேசியத்திற்கொரு சாதகமான முன்னேற்றமே ஆகும். எனினும் தென்னிலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கு கிடைக்கும் வாய்ப்பை தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளால் சரியாக ஒருங்கிணைத்து நகர்த்த முடியுமா என்பதை ஆழமாக நோக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது.
ஒன்று, தமிழ் தேசியத்திற்கு 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தலைமைத்துவம் என்பது பேரிடராக காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டத்துக்கு பின்னர் 2018ஆம் ஆண்டு வரை அரசியல் தளத்தில் ஏக பிரதிநிதித்தவத்தையும் 2018இற்கு பின்னர் பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கி வருகின்றது. சர்வதேச தரப்புக்களும் தமிழர்களின் பிரதிநிதிகளாய் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடனேயே உரையாடல்களை மேற்கொள்கின்றனர். எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர்களுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்குகின்றதா மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு பலமான தலைமை காணப்படுகிறதா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாக உள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பலவீனமே 2018ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்த்தேசிய அரசியலில் பிற கட்சிகளின் செல்வாக்குகள் அதிகரிக்க காரணமாயிற்று. மேலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் அண்மைய செய்தியொன்று தமிழரசியலை கேலிக்கு உள்ளாக்கியுள்ளது. யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் உடனடியாக அதனை நிறுத்தக்கோரியும் பிரதமருக்கு இரா.சம்பந்தன் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார். எனினும் ஊடகப்பரப்பு அறிந்த வரையில் அவ்வாறான நியமனம் தொடர்பாக எவ்வித உரையாடலும் தென்னிலங்கையில் காணப்படவில்லை. இது தொடர்பாக யாழ்ப்பாண பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கூட்டமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை சந்தித்து வினாவிய போது, 'சாம் அண்ணர் இப்போது மற்றவர்கள் சொல்வதை சரியாக புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. தலைமைச்செயலாளர் நியமனம் தொடர்பாக அவருக்கு சொல்லப்பட்ட போது அவர் அதனை அரச அதிபர் என்று புரிந்து கொண்டுவிட்டார் போலும்..' என்று குறிப்பிட்டிருந்தார். இரா.சம்பந்தனின் கடிதத்திலும் தலைமைச்செயலாளர் நியமனம் தொடர்பான எந்த கண்டனங்களும் இல்லை. எனவே பத்திரிகை ஆசிரியருக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் கூறியது சரிபோல் தான் புலப்படுகிறது. கருத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாத ஒருவர் தமிழ்த்தேசியத்துக்கான தலைமையாக பொதுவெளியில் தோன்றுவது தான் இன்றைய தமிழ்த்தேசியத்தின் அவலம்.
இரண்டு, தமிழ்த்தேசிய அரசியல் தலைமையின் எண்ணங்ளுக்கும் முடிவுகளும் முரணான நிலையில் காணப்படுகிறது. இதற்கான அண்மைய சான்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சமூக நிதிக்கான தேசிய இயக்கத்தின் கூட்டத்தில் கூறிய கருத்துக்களும் அதன் பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் தெளிவாக புலப்படுத்துகிறது. அதாவது, குறித்த கூட்டத்தில் அரசியல் தீர்வு தொடர்பிலான வெளிப்படை பேச்சுவார்த்தைக்கு உடன்படுகையிலேயே ஒன்றிணைந்து செயற்படுவோம் என கூட்டமைப்பின் பேச்சாளர் சூளுரைத்தார். எனினும் எவ்வித பதில்களும் வெளிப்படையாக கிடைக்காத நிலையில் எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆதரவாக வாக்களித்தமை எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் முரணான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி நிற்கிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எண்ணங்களுடன் முடிவுகள் முரண்பட்டு செல்லும் வரலாற்றை பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் 'தமிழ்த்தேசிய அரசியலின் நீடித்த நெருக்கடிக்கு பின்னாலுள்ள அரசியல்?' எனும் தலைப்பிலான கட்டுரையில் சென்றவாரம் இப்பகுதியில் தெளிவான பார்வையை வழங்கி இருந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை போன்றே தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து தரப்பினரும் முரணாகவே செயற்படுகின்றனர். தேர்தலுக்கு முன்னர் தங்களை கொள்கைவாதிகளாகவும் போராட்டக்காரர்களாகவும் பொதுவெளியில் விம்பத்தை உருவாக்கியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற அரசியலுக்குள் சென்றதும் தேர்தலுக்கு முன்னம் பொதுவெளியில் காட்டிய விம்பங்களுக்கு முரணாக பாராளுமன்ற அரசியலுக்குள் மென்வலு அரசியலையே நகர்த்த முடியுமென பயணித்து செல்கின்றார்கள். இவை தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் பயணிக்கும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை தென்னிலங்கை உணர்வதை புரிந்து கொள்ள முடியாத அரசியல் வெளிப்பாடேஆகும். இதுவே தென்னிலங்கை அரசியலிடம் தமிழரசியல் காலம் காலமாய் தோல்வியடையவும் காரணமாகிறது.
மூன்று, தமிழ்த்தேசியத்திற்கான புத்திஜீவிகள் பொதுக்கட்டமைப்பை தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் உருவாக்க முயலாமை. இன்று தென்னிலங்கை அரசியலிலில் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் செல்நெறியை கட்டமைப்பதற்கு புத்திஜீவிகள் குழாம் அடங்கிய பொதுக்கட்டமைப்பை உருவாக்கி செயலாற்றி வருகின்றார்கள். குறிப்பாக கரு ஜயசூரிய-இன் சமூக நீதிக்கான இயக்கம், மங்கள சமரவீர-இன் தூய தேசப்பற்றாளர் இயக்கம் மற்றும் சம்பிக்க ரணவக்கா-இன் 43ஆம் படையணி என தென்னிலங்கையில் தனிப்பட்ட அரசியல்வாதிகளே தமது அரசியல் செல்நெறியை நெறிப்படுத்த புத்திஜீவிகள் ஒருங்கிணைப்பில் பொதுக்கட்டமைப்பை உருவாக்கி வருகிறார்கள். மேலும் ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வெற்றியின் பின்னாலும் வியத்கம எனும் அமைப்பின் செயற்பாடே பாரிய பங்களிப்பு செய்திருந்தது. ஆதன்வழி பல பிரதான அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சர் வியத்கம அமைப்பின் உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் நீண்டகாலமாக உரிமைக்காக போராடும் தமிழ்த்தேசிய இனத்தில் அரசியலை நெறிப்படுத்தக்கூடிய வகையில் புத்திஜீவிகள் குழாம் ஒருங்கிணைப்பிலான பொதுக்கட்டமைப்பு பற்றிய எண்ணங்கள் தமிழ்த்தேசிய அரசியல் தரப்பிடம் காணப்படவில்லை. தமிழ்த்தேசிய அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களும் நீண்டகாலமாக புத்திஜீவிகள் குழுக்கட்டமைப்பு தேவைப்பாடு தொடர்பாக வலியுறுத்தப்படுகின்ற போதிலும் தமிழ் அரசியல் தரப்பு தொடர்ச்சியாக கரிசனையின்றியே செயற்படுகிறது. தமிழ்தேசிய அரசியலின் இராஜதந்திர தோல்விகளுக்கும் தென்னிலங்கை அரசியலை சரியாக கையாள முடியாமைக்கும் இதுவே காரணமாகும்.
வரலாற்றில் தென்னிலங்கையில் அரசியல் குழப்பங்கள் உருவாகுகின்ற போதெல்லாம் தமிழ் மக்கள் மீது தென்னிலங்கை அரசியல் தரப்பின் கரிசனைகள் உருவாகுவது இயல்பானதே ஆகும். அதேநேரம் காலம் காலமாக தமிழரசியல் தரப்பும் தென்னிலங்கையின் கரிசனைக்குள் மதிமயங்கி தென்னிலங்கை அரசியல் குழப்பங்களை தீர்த்து வைத்து விட்டு தமக்கான தீர்வுகளை பெறமுடியாது வெறுங்கையுடன் ஏமாற்றி விட்டார்கள் என்ற புலம்பலுடன் வெளியேறுவதும் இலங்கை அரசியல் வரலாற்றின் நிண்டகால தொடர்பதிவாகவே காணப்படுகிறது. ஆயினும் இதுவரை காலமும் தமிழ்தேசிய அரசியலில் ஏகபிரதிநிதித்துவத்தின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டமையால் தமிழ் அரசியல் தரப்பு ஏமாறுகையில் தெரிவின்றி மீள மீள ஏமாறும் தரப்பையே தமிழர்களும் தங்கள் பிரதிநிதிகளாய் தெரிவு செய்து வந்துள்ளார்கள். எனினும் இன்றும் தமிழ்த்தேசிய அரசியலிலும் போட்டிக்களம் உருவாகியுள்ள சூழலில் எத்தரப்பும் தென்னிலங்கை ஏமாற்றி விட்டதாகவும் தாங்கள் எமாந்ததாகவும் கூறி தமிழ் மக்களிடம் பரிதாப அரசியலை நிகழ்த்த முடியாது என்பது தமிழ் மக்களுக்கு சாதகமான சூழலாகும். எனினும் நடைமுறை தமிழரசியல் தரப்பினர் தென்னிலங்கை அரசியலின் வாய்ப்பை கையாளாது ஒதுங்கி செல்வதற்கான வாய்ப்பே அதிகமாக காணப்படுகிறது. தமிழரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பதற்கு பதிலாக தமது கட்சிகளின் இருப்பை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
Comments
Post a Comment