இலங்கைக்கு எதிரான சர்வதேச நெருக்கடியை புதிய வெளியுறவு அமைச்சர் வெற்றி கொள்வாரா? -ஜ.வி.மகாசேனன்-

இலங்கை மக்கள் கொரோனா பரவலின் அதிகரிப்பாலும், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றினை சீர்செய்யாத ராஜபக்ஷாக்களின் அரசாங்கத்தின் மீது பெரும்பான்மை சமூகத்தினரிடையே கடுமையான எதிர்ப்புணர்வு அதிகரித்துள்ளது. ராஜபக்ஷாக்களின் பொதுஜன பெரமுன அரசாங்க உருவாக்கத்திற்கு பெருந்துணையாக இருந்த பேரினவாத தரப்பினரே அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வசைபாட ஆரம்பித்துள்ளளர். இந்நிலையில் இலங்கையின் அரசாங்கம் அமைச்சர்களை இடமாற்றுவதனூடாக அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுவிடலாமெனும் புதியதொரு உத்தியை வகுத்து வைத்துள்ளனர். இவ்வடிப்படையிலேயே பஷில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மீள்வருகை நிதியமைச்சு பொறுப்பு மற்றும் அண்மையில் இலங்கை அமைச்சரவையில் ஏற்படுத்திய மாற்றங்கள் அமைகின்றன. இக்கட்டுரையும் அமைச்சரவை மாற்றத்தை மையப்படுத்தியே வெளிவிவகார அமைச்சின் மாற்றத்துக்கான அரசியல் பின்னணியை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட்-16அன்று இலங்கை அமைச்சரவையில்  அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்களிடையே சுகாதாரம், கல்வி, மின்சாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஏழு முக்கிய அமைச்சுக்கள் அமைச்சரவைக்குள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் புதிய வெளியுறவு அமைச்சராகவும், தினேஷ் குணவர்த்தனா புதிய கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். சுகாதார அமைச்சராக பணியாற்றிய பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  கெஹெலிய ரம்புக்வெல்ல புதிய சுகாதார அமைச்சராவும்,  மின்துறை அமைச்சராக இருந்த டல்லஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் காமினி லோகுகே மின் மற்றும் எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சராக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூடுதல் அமைச்சை பெற்றுள்ளார்.

இவ்அமைச்சரவை இடமாற்றங்கள் தொடர்பில் ஊடகப்பரப்பிலும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் அதிகரித்துவரும் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளை சீர்செய்ய இயலாத கையறு நிலையிலேயே இலங்கை அரசாங்கம் மக்களின் எதிர்ப்பை தற்காலிகமாக திசைமாற்ற அமைச்சரவை இடமாற்றங்களை செய்துள்ளனர். பஷில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மீள்வருகையின் போதும் மீட்பாராக பெரும் விம்பமொன்று அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட்டது. பஷில் ராஜபக்ஷா நிதியமைச்சராக பொறுப்பேற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை நிறைவேற்ற முடியாத நிலையில், 'தான் நிதியில்லா நிதியமைச்சராக காணப்படுவதாக' பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். மீளவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வாய் சிரேஷ்ட அமைச்சர்களின் இடமாற்ற நாடகத்தை இலங்கை அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது.

புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹெகலிய ரம்புக்வெல-இன் கொரோனா பற்றிய முன்னைய செய்தியறிக்கைகள் தற்போது சமூக ஊடகங்களில் நகைச்சுவை துணுக்குகளாக உலா வருகின்றது. கொரோனா பரவலின் ஆரம்ப காலத்தில் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிரான கொரோனா வைரஸை விடுதலைப்புலிகளுடன் ஒப்பிட்டு விடுதலைப்புலிகளை அழித்த தமது அரசாங்கத்தால் கொரோனாவை இலகுவாக கட்டுப்படுத்த இயலுமென கருத்துரைத்துள்ளார். மேலும் அண்மையில், 'தடுப்பூசி மட்டுமே தற்போது எங்களிடம் உள்ள ஒரே தீர்வு. நாங்கள் மக்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு, அது கடவுளைப் பொறுத்தது' என கடவுளிடம் கொரோனா வைரஸ் பரவலுக்கான தீர்வை ஒப்படைத்தவரிடம் சுகாதார அமைச்சு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தவொரு அமைச்சு இடமாற்றமே அமைச்சுக்களின் இடமாற்றம் கண்துடைப்புக்கானது என்பதை உறுதி செய்கிறது.

எனினும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை வெளிநாட்டு விவகாரங்களை நிர்வகிக்க நியமித்தமை என்பது ஒரு புதிய மற்றும் மூலோபாய அணுகுமுறையைக் குறிக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் தினேஷ் குணவர்தன அவர்களிடையே மாற்றப்பட்டுள்ள கல்வி மற்றும் வெளிநாட்டு அமைச்ச்சுக்கள் இரண்டுமே ஒரு கடினமான பாதையிலேயே தற்போது பயணிக்கிறது. குறிப்பாக கல்வி அமைச்சை பொறுத்தவரை கொத்தலாவ பாதுபாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிரான போராட்டம் மற்றும் இன்று நாட்டை பெரும் உலுக்கு உலுக்கும் அதிபர் ஆசிரியர் சங்க போராட்டம் என்பது கல்வி அமைச்சை கடும் சவாலுக்கு உட்படுத்தி உள்ளது. அவ்வாறே வெளிவிவகார அமைச்சை பொறுத்தவரையில் இலங்கைக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையில் அதிகரித்து வரும் விரிசல் மற்றும் அதுசார்ந்து எழுந்துள்ள புளுP10 வரிச்சலுகை நிறுத்த முயற்சி, ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் என்பன வெளிவிவகார அமைச்சை சவாலுக்கு உட்படுத்தி வருகிறது. இந்நிலையிலே இரு அமைச்சரவை இடமற்றம் இடம்பெற்றுள்ளது.

இவற்றுள் ஜி.எல்.பீரிஸ்-இற்கு வெளிவிவகார அமைச்சரவை வழங்கப்பட்டமை நெருக்கடிகளை கண்துடைப்பதற்கு அப்பால் விரிசலடைந்;துள்ள இந்தியா மற்றும் மேற்குலகுக்கான உறவை சீர்செய்வதற்கான ஒரு இராஜதந்திர முன்முயற்சியாக அமையுமா என்ற பார்வையும் அரசியல் பரப்பில் காணப்படுகிறது. அதனை தேடுவதாயின் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்-இன் அரசியல் பாதையை ஆழமாக அறிதல் வேண்டும்.

முதலாவது, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஓர் அரசியல்வாதி என்பதற்கு முன்னால் புலமையாளர் என்பது அவரின் ஆளுமைக்கான முன்சான்றாகும். ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் பெரிதும் உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டதாகும். இக்கூட்டத்தினுள் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்-க்கு அரசியல்வாதி என்ற முகத்தை தாண்டி சட்ட அறிவியல் புலமையாளராய் ஒரு முகம் காணப்படுகிறது. இத்தோற்றம் எவ்விடயத்தையும் சிந்தித்து செயலாற்றவே இடமளிக்கும். பொதுஜன பெரமுன-இன் உருவாக்கத்தில் பஷில் ராஜபக்ஷா ஜி.எல்-பீரிஸையே தலைவரகாக நியமித்தார். பல புலமையாளர்களை பொதுஜன பெரமுன-இன் பக்கம் இணைத்ததில் ஜி.எல்.பீரிஸ்-இன் பங்கு அளப்பெரியது. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சட்டத்துறையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்ற அடிப்படையில் சர்வதேச சட்ட வல்லுநர்கள் மத்தியில் நன்கு அறிமுகமுள்ளவர். அவ்வகையிலே இன்று சர்வதேசரீதியாக எழுந்துள்ள நெருக்கடியை அரசியல்வாதி என்பதற்கு அப்பால் ஓர் பேராசிரியராக புலமையாளரின் சிந்தனையுடன் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இரண்டாவது, மேற்குக்கான முகத்தை பிரதிபலிக்கும் ஆளுமை. அரசியல் இராஜதந்திரத்தில் தோற்றமும் கவர்ந்திழுக்கும் தன்மையும்(உhயசளைஅயவiஉ) பிரதான நிலை பெறுகின்றது. ஆரம்பகால சமூகவியலாளர் மேக்ஸ் வெபர் கவர்ச்சியை அதிகாரத்தின் மூன்று 'சிறந்த வகைகளில்' ஒன்றாக வரையறுத்தார். இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சிவப்பு சால்வையுடன் தென்னாசிய அரசியல் கலாசாரத்தின் விம்ப பிரதிநிதியாகவே செயற்பட்டார். எனினும் ஒப்பீட்டளவில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தென்னாசிய அரசியல் கலாசாரத்திலிருந்து மாறுபட்டவராக மேற்கு அரசியல் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அரசியல் ஆளுமையாக செயற்பட்டு வந்துள்ளார். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்-இன் இவ்மேற்குக்கான தோற்றம் இலங்கைக்கு மேற்கு சார்ந்து எழுந்துள்ள நெருக்கடிகளை சீர்செய்ய உகந்த வெளிவிவகார அமைச்சராக இராஜதந்திரரீதியாக தெரிவு செய்ய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது, ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக முன்அனுபவத்தை கொண்டவராக காணப்படுகின்றார். 48வது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளியுறவு அமைச்சகத்தைப் பெற்றுள்ளார். இருப்பினும், தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் 2010 முதல் ஐந்து வருடங்கள் வெளிவிவகார அமைச்சை வைத்திருந்த காலப்பகுதியிலும் ஜெனீவா சார்ந்த நெருக்கடிகளை எதிர்கொண்ட முன்அனுபவம் காணப்படுகின்றது. எனவே ஜெனீவா சார்ந்த நெருக்கடியை கையாள்வது ஜி.எல்.பீரிஸ்-க்கு கடுமையான சவாலாக காணப்படாது என்ற எதிர்பார்ப்பு இலங்கை அரசாங்கத்திடம் காணப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான உறவை அவர் எவ்வாறு சமநிலைப்படுத்துவார் என்பது சர்வதேச மன்றங்களில் நாட்டின் வெற்றியை தீர்மானிக்கும்.

நான்காவது, இனப்பிரச்சினை மையப்படுத்தி எழுந்துள்ள நெருக்கடிகளை நீர்த்து போகச்செய்யக்கூடிய ஆளுமையாக ஜி.எல்.பீரிஸ் அரசாங்கத்தால் நோக்கப்படுகின்றார். இலங்கைக்கு சர்வதேச ரீதியாக எழுந்துள்ள நெருக்கடிகள் யாவும் இலங்கை இனப்பிரச்சினையை மையப்படுத்தியே இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. ஆதலால் இனப்பிரச்சினையை கையாள்வதன் மூலம் இலங்கைக்கு மேற்கு சார்ந்து எழுந்துள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளை சீர்செய்யலாம் என்பதுவே இன்றைய இலங்கை அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக காணப்படுகின்றது. இவ்வடிப்படையிலேயே இனப்பிரச்சினை தீர்வுசார் செயற்பாடுகளில் முன்அனுபவம் கொண்ட ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 2002இல் நோர்வேயின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டபோது இலங்கை அரசின் தலைமைப்பேச்சாளாராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பங்குபற்றியிருந்தார். 2009இல் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மறைமுக பேச்சுக்களும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் நோக்கினால் அரசியல் பேச்சுகளில் நீண்ட அனுபவம் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்-இற்கு இருக்கின்றது. இவ்வாறான சூழலில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதன் மூலம் சர்வதேசத்துக்கு இனப்பிரச்சினை தீர்வாக்கான முயற்சிகள் மேற்கொள்வதாக வெளிப்படுத்த முற்படும் உத்தியை இலங்கை அரசாங்கம் கையாண்டுள்ளது. அதன் முன்முயற்சியாகவே ஆகஸ்ட்-04 அமெரிக்க தூதரகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சுமந்திரன்-பீரிஸ் இரகசிய சந்திப்பும் அமைந்துள்ளது.

எனவே, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்-இன் வெளிவிவகார அமைச்சு பதவி என்பது மேற்கை கையாள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர உத்தியாகவே காணப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சின் இடமாற்றமானது ஏனைய அமைச்சுக்களின் இடமாற்ற கண்துடைப்பு போலானது இல்லை. முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான சர்வதேசத்துடனான போரை கையாள்வதற்கான ஆயுதமாவே  பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்-இன் வெளிவிவகார அமைச்சு பதவி நியமனத்தை இலங்கை அரசாங்கம் கையாண்டுள்ளது. சர்வதேச நெருக்கடி போரை வெற்றி கொள்வதற்கு மிலிந்த மொறகொட-இன் இந்திய துணைத்தூதுவர் நியமனம், திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்காவிற்கான குத்தகை முயற்சி என்ற வரிசையிலேயே பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வெளிவிவகார அமைச்சு நியமனம் என பல முனைகளில் இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை தேர்வு செய்துள்ளது. இதனுள் எவ்வித முன்னாயர்த்தங்களுமின்றி தமிழர் வாய்ப்புகளை விற்கும் அரசியலை தமிழ் அரசியல் தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-