பீரிஸ்-சுமந்திரன் சந்திப்பு தமிழர் அரசியலில் இன்னொரு ஏமாற்றுதத்தின் ஆரம்பமா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் கோர தாண்டவம் அரசியல், சமுக பொருளாதார ரீதியாக இலங்கைக்கு பேரிடரை வழங்கி வருகிறது. அதேநேரம் சர்வதேச வல்லாதிக்க அரசியல் போட்டியும், தீர்வற்ற தேசிய இனப்பிரச்சினை கேள்விகளும் இலங்கை அரசியலில் ஒருங்கே பயணிக்கிறது. இலங்கையின் ஆட்சி தலைமைகள் கொரோனா பேரழிவை மௌனமாய் கடந்து செல்கின்ற போதிலும், இலங்கையை மையப்படுத்தி நிகழும் சர்வதேச வல்லாதிக்க அரசியல் போட்டியையும் தேசிய இனப்பிரச்சினையையும் ஒரே தளத்தில் நகர்த்தி செல்ல முனைகின்றர். இவ்வாறான களநிலவரத்திலேயே தென்னிலங்கையின் மூத்த அரசியல் தலைவர் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்-க்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலோர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின் பின்னாலுள்ள அரசியலை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட்-04(2021) அன்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ்-உம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் சந்தித்து உரையாடியுள்ளார்கள். இவ்உரையாடலுக்கான முன்முயற்சியை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெப்லிஸ் மேற்கோண்டிருந்தார். இதன்போது, அரச தரப்பில் கலந்து கொண்ட ஜி.எல்.பீரிஸ், பேச்சு முயற்சிகளை உடனடியாக ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கான பொறுப்பை பசில் ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவர் தலைமையிலான குழுவுடன் பேச்சை ஆரம்பிக்கலாமென்றும் தெரிவித்துள்ளார். இந்தச்சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இருவரும் பரஸ்பரம் கலந்துரையாடியுள்ளதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இந்திய ஆட்சி தலைவர்களுடன் சந்திப்பதற்கான உரையாடல்கள் இடம்பெறுவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரம் கடந்தவாரம் இடம்பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார். சமகாலப்பகுதியிலேயே, இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குமிடையிலான சந்திப்புக்கான முன்னாயர்த்தங்கள் அமெரிக்க தூதரகத்தின் தலையீட்டில் இடம்பெற்றுள்ளது. இவ்இருநிகழ்வுகளின் தொடர்பில் இலங்கையின் வெளியுறவுக்கொள்கை ஆழமாக வெளிப்படுத்தப்படுகிறது.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் இந்தியாவை கடந்து நேரடியாக அமெரிக்காவுடனான வெளியுறவுக்கொள்கையை வடிவமைக்க திட்டமிட்டுள்ளார்கள். இதனையே இனப்பிரச்சினை தீர்வுசார் சந்திப்புக்கான அமெரிக்க தூதரகத்தின் அழைப்புக்கு இலங்கை அரசாங்கமும் நகர்ந்துள்ளமை வெளிப்படுத்துகிறது. மறுதலையாய் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இந்திய அரசுடன் சந்திப்பை திட்டமிட்டுள்ள சூழலில் அமெரிக்க தூதரகத்தின் தலையீடு இலங்கை விடயத்தில் அமெரிக்காக நேரடிhக தலையிட ஆரம்பித்துள்ளது என்பதையே உறுதி செய்கிறது. இந்து சமுத்திர பிராந்திய அரசியலுக்குள் இந்தியாவை உதறித்தள்ளிவிட்டு அமெரிக்காவின் நேரடியான தலையீடு சாத்தியமில்லை என்பதே அரசியல் பொதுவெளி உரையாடலாக காணப்படுகிறது. அது மறுதலிக்க முடியாத உண்மையே ஆகும். பனிப்போருக்கு பின்னான சூழலில் இதுவரை காலமும் இலங்கை-அமெரிக்க உறவு என்பது இந்தியாவின் தலையீட்டோடேயே முழுமை பெற்றது. எனினும் தற்போது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில் சீனாவுக்கு நிகரான போட்டிக்களமாக அமெரிக்காவையே இலங்கை நோக்குகிறது. இந்நிலையில் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடனான நேரடி உறவை வளர்ப்பதிலேயே இந்தியாவை கையாள முற்படுது. நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மீள்வருகை இலங்கை-அமெரிக்கா நேரடி உறவை கட்டமைப்பதனையே பிரதான வெளியுறவாக கொண்ட செயலாற்றுகிறது. அதனோர் சான்றே கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு நிராகரிக்கப்பட்ட சூழலில், திருகோணமலை துறைமுக பகுதியில் 33000ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு நேரடியாக குத்தகைக்கு வழங்கியுள்ளமையும் அமெரிக்காவின் குத்தகைக்கூடாக இந்தியா முதலீடு வருவதென்பதுவும் இலங்கை அமெரிக்கா ஊடாகவே இந்தியா உறவை கட்டமைக்க முயலுகிறது என்பதை உறுதி செய்கிறது.
எனவே, இத்தகு இலங்கையின் வெளியுறவு கொள்கை கட்டமைப்பினுள் அமெரிக்க தூதரகத்தின் அழைப்பிலான ஜி.எல்.பீரிஸ் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பு தமிழரசியலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் தெளிவாக அறிதல் வேண்டும்.
முதலாவது, இலங்கைக்கான சர்வதேச நெருக்கடிகளை நீர்த்து போக செய்ய கூட்டமைப்பு துணை போகும் சூழல் காணப்படுகிறது. பொருளாதார நெருக்கடி, சர்வதேச உறவுகளில் நெருக்கடி என எல்லாப் பக்கங்களிலும் நெருக்கடிகளை இலங்கை அரசாங்கம் சந்தித்துள்ளது. இவ்நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான சுலபமான ஒரே வழியாக தமிழர் தரப்புடனான பேச்சுக்களை ஆரம்பிப்பது என ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2010-2015 வரையான காலப்பகுதியை அவ்வாறே நகர்த்தி சென்றிருந்தார்கள். மீளவும் அவ்வாறானதொரு பொறிமுறையை ஜி.எல்.பீரிஸ் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பினூடாக அரசாங்கம் முன்னகர்த்த முற்பட்டுள்ளது. இலங்கைக்கான சர்வதேச நெருக்கடி அதுசார்ந்து எழுந்த பொருளாதார நெருக்கடிகள் என்பன தேசிய இனப்பிரச்சினையை மையப்படுத்தியே எழுந்துள்ளன. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்ட தொடரில் கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு நிதியிடல் மற்றும் செயற்பாட்டு பொறிமுறை ஆரம்பித்தல் தொடர்பான விவாதங்கள் மேலெழ திட்டமிடப்பட்டுள்ளன. ஏற்கனவே அரசியல் பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு செப்ரெம்பர் கூட்டத்தொடர் நெருக்கடிகளை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இதனை சீர்செய்யவே ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கான ஏற்பாட்டுக்காலப்பகுதிக்கு சமாந்தரமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளூடான உரையாடலை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இது ஜெனீவா நெருக்கடி மற்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள நெருக்கடிகளை நீர்த்து போகச்செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடேயாகும். இதனுள் தமிழரசியல் பிரதிதிநிகளும் துணைபோகின்றனர்.
இரண்டாவது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுள்ளேயே ஒற்றுமை சிதைக்கப்பட்டு தமிழரசுக்கட்சி ஆதிக்கம் மீள ஆரம்பித்துள்ளதுள்ளமையை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிவுக்கான காரணங்களில் ஒன்றாக தமிழரசுக்கட்சியின் தனித்த முடிவுகளும் ஆதிக்கமுமே காணப்படுகிறது. மீளவும் அவ்வாறானதொரு வடிவம் கூட்டமைப்புக்குள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு பிரிவே ஆரம்பித்துள்ளது. அமெரிக்க தூதரகத்தின் ஒருங்கிணைப்பிலான சந்திப்பு குறித்து தாம் எந்த தகவலையும் அறிந்திருக்கவில்லையென தமிழரசுக்கட்சியின் தலைமை உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். தமிழ்த்தேசியப்பரப்பில் தேர்தல் அரசியலுக்கு அப்பால் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயங்களை கையாள அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் இணைந்த பொதுக்கட்டமைப்புக்கான உரையாடல் தமிழ்த்தேசிய பரப்பில் இடம்பெறும் சூழலில், தமிழரசுக்கட்சியின் ஒருதரப்பினர் ஏதேச்சதிகாரமாக தமது பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கே தெரியாமல் செயற்பாடுகளை மேற்கொள்வது என்பது தமிழ்தேசிய ஒற்றுமைப்பட்ட பொதுக்கட்டமைப்புக்கு சாத்தியம் இல்லை என்பதையே மீள மீள உறுதிசெய்கிறது. இந்நிலைமையில் தமிழ்த்தேசியத்துக்கு ஆரோக்கியமான தேசிய இனப்பிரச்சினை தீர்வை தமிழரசுக்கட்சியின் எதேச்சதிகாரமாக செயற்படும் தரப்பு பெற்று தருமா என்பதும் சந்தேசகத்திற்குரியதாகும்.
மூன்றாவது, மீளவும் இரகசிய உறவுக்குள் தமிழர்களின் உரிமைகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு தரப்பு விற்க தயாராகி விட்டனர் என்ற எண்ணப்பாட்டை உருவாக்குகிறது. ஜி.எல்.பீரிஸ்-எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பு தொடர்பிலே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு தகவல் வெளிப்படுத்தாமை என்பதே இரகசிய உறவுக்குள் பயணிப்பதற்கான எத்தனிப்பின் வெளிப்பாடே ஆகும். இது தொடர்பிலான விமர்சனத்துக்கு தமிழ் ஊடகப்பரப்பின் மூத்த ஆசிரியர் இரகசியமாகவே இவ்நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென தன் ஆதரவு கருத்தை பதிவு செய்துள்ளார். 2010ஆம் ஆண்டிலிருந்தேயே மகிந்த ராஜபக்ஷா அரசாங்கத்துடனும் தொடர்ச்சியாக ரணில்-மைத்திரி அரசாங்கத்துடனும் இரகசிய உறவிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் உரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். அதன்பெறுபேறுகள் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்;தில் பூச்சியம் என்பதுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. இதனை தழுவியே கரு ஜெயசூரியா தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சியில் இனிவரும் காலங்களில் இரகசிய உறவின்றி வெளிப்படையான உரையாடல்கள் அவசியமென எம்.ஏ.சுமந்திரனும் குறிப்பிட்டிருந்தார். எனினும் அரசாங்கத்துடனான உரையாடலை மீள எம்.ஏ.சுமந்திரன் அவர்களே இரகசிய உறவுக்குள்ளால் கட்டமைக்க முன்னகர்வது மீள தமிழ் மக்களை முட்டாளாக்கும் எண்ணமோ என்ற சிந்தனையையே தூண்டுகிறது. தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் எண்ணங்களும் முடிவுகளும் முரண்படும் தன்மைகள் பல சந்தர்ப்பங்களில் முன்னைய கட்டுரைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீளவும் அவ்வாறான எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் முரணான பயணத்தை உறுதி செய்வதாகவே ஜி.எல்.பீரிஸ் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பு உறுதி செய்கிறது.
நான்காவது, இலங்கையின் அமெரிக்காசார் வெளியுறவுக்கொள்கையினை ஈழத்தமிழரசியல் கொள்கையாக வரிப்பது ஈழத்தமிழரசியலின் எதிர்கால அரசியலை கேள்விக்குறியாக்க கூடிய வாய்ப்புள்ளது. ஈழத்தமிழரசியல் பிரதிநிதிகள் ஈழத்தமிழ் தேசியத்துக்கான சரியான வெளியுறவுக்கொள்கையை கட்டமைக்க தவறியுள்ளனர். தமிழரசியலை கையாள முற்படும் வெளித்தரப்புக்கள் அனைத்தினதும் சுழலுக்குள் ஈழத்தமிழரசியலை நகர்த்தி செல்லும் வெளியுறவுக்கொள்கையிலேயே தமிழரசியல் பிரதிநிதிகள் நகருகின்றனர். தற்போது இலங்கையின் அமெரிக்க வெளியுறவுக்கொள்கையின் வலைக்குள் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் முன்நகர்வே அமெரிக்க தூதரகத்தின் ஒருங்கிணைப்பிலான ஜி.எல்.பீரிஸ் மற்றும் எம்.ஏ.சுமந்திரன்; சந்திப்பு ஆகும். இதுவோர் அபத்தமான அரசியல் நகர்வாகும். வல்லரசுகளின் நலன்களுக்குள் சுழன்று வல்வரசுகளின் நலன்கள் பூர்த்தியடைந்த பின் அநாதரவற்ற வகையில் தூக்கி எறியப்பட்ட தேசிய இனங்களின் வரலாற்றை ஈழத்தமிழ் அரசியல் தரப்பு அறிந்திருத்தல் வேண்டும். மேற்காசிய அரசியலில் குர்திஸ் தேசிய இனம் வடக்கு சிரியாவில் பிராந்திய அரசான சிரியாவினை பகைத்துக்கொண்டு அமெரிக்காவின் நலனுக்காக செயற்பாடுகளை 2011ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்தது. எனினும் 2019ஆம் ஆண்டு அமெரிக்க தனது நலன்கள் பூர்த்தி அடைந்ததன் பின் குர்திஸ் மக்களை பாதுகாப்பற்ற சூழலில் துருக்கியின் கொடூர தாக்குதலில் தனித்து விட்டு சென்றது. தற்போது பிராந்திய அரசான சிரியாவே குர்திஸ் மக்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. இவ்அரசியல் அனுபவங்களே ஈழத்தமிழரசியலுக்கான வெளியுறவுக்கொள்கையின் தெவைப்பாட்டை உணர்த்தும்.
இவ்வாறான பின்னணிகளில், இராஜதந்திரமற்ற தொடர்ச்சியான முன்னைய வழுக்களுடன் தொடரும் தமிழ்தேசிய அரசியல் நகர்வானது மீளவும் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தாது நீர்த்து போகச்செய்யக்கூடிய சூழலே காணப்படுகிறது. ஜி.எல்.பீரிஸ் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பானது இலங்கை அரசாங்கத்துக்கான நெருக்கடிகளை சீர்செய்யக்கூடிய அரசியல் வெளியை திறக்கக்கூடிய சந்தர்ப்பத்தையே அதிகமாக கொண்டுள்ளது. தமிழரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மையும், சுகபோக எண்ணங்களும் தமிழர் நலனை மீள மீள துடைத்தெறியும் இராஜதந்திரமற்ற அரசியலை நகர்த்தவே முற்படும். செல்வநாயகம் தமிழரசுக் கட்சியின் எதிர்கால தலைமைகளின் சுயநல வங்குரோத்து அரசியல் எண்ணங்களை முற்கூட்டியே சிந்தித்தே தமிழருக்கான தீர்வை கடவுளிடம் பொறுப்பித்துள்ளார் என்றவாறான சிந்தனையே இன்றைய தமிழரசுக்ட்சியின் செயற்பாடுகள் தமிழர் மனங்களில் ஏற்படுத்தி வருகிறது.
Comments
Post a Comment