உத்தியற்ற ஈழத்தமிழரின் அரசியலும் இலங்கையின் இராஜதந்திர செயல்பாடுகளும் -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையை கொரோனா வைரஸ் பேரிடரும் சமதளத்தில் சர்வதேச நெருக்கடிகளும் உச்ச கட்டத்தில் சூழ்ந்துள்ளது. அரசியல் தலைமைகளின் உயிர்களும் கொரோனா வைரஸால் காவு கொள்ளப்படுகிறது. எனினும் மறுமுனையில் அமைச்சரவை மாற்றத்துக்கு பின்னர் வெளிவிவவகார அமைச்சின் செயற்பாடுகள் இலங்கையை சூழ்ந்துள்ள சர்வதேசநெருக்கடிகளை நீர்த்து போகச்செய்வதற்கான சூழலை வெளிப்படுத்துகிறது. வெளிவிவகார அமைச்சின் செயலகம் சர்வதேச தூதுவர்களின் வரவால் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துள்ளது. இப்பகுதியின் சென்ற வார கட்டுரையில் அமைச்சரவை மாற்றத்தினில் வெளிவிவகார அமைச்சின் ஜி.எல்.பீரிஸ் நியமனத்தில் காணப்படும் இராஜதந்திர மூலோபாய செயற்பாடு விபரிக்கப்பட்டிருந்தது. அதன் இன்னோர் நகர்ச்சியாக இக்கட்டுரை புதிய வெளிவிவகார அமைச்சு நியமனத்தை தொடர்ந்து இடம்பெற்றுள்ள அரசியல் நிகழ்வுகள் ஏற்படுத்த உள்ள மாற்றங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜி.எல்.பீரிஸ் (18.08.2021) உத்தியோகபூர்வமாக வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் சர்வதேச தூதுவர்களுடனான சந்திப்பு தென் இலங்கையை பரபரப்பான இயங்கு தளத்திற்குள் நகர்த்துகிறது. இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே,(19) சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்,(20) அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சாய்பி, ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி பி. மடேரி, ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டக் மற்றும் கொரியக் குடியரசின் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங்(24) ஆகியோர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததுடன் இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் தொடர்பில் உரையாடியுள்ளனர்.
சர்வதேச நாடுகளின் தூதரகர்களுடனான சந்திப்புக்கள் மற்றும் உரையாடல்களினை செய்திகளாய் கடந்து செல்வதற்கு அப்பால், அதன் அரசியல் தார்ப்பரியங்களை நுணுக்கமாக அவதானிப்பது அவசியமாகிறது.
ஒன்று, சர்வதேச நாடுகள் துருவ வேறுபாடின்றி பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை அங்கீகரித்துள்ளனர் என்ற செய்தி தூதுவர்களின் சந்திப்புக்ளும் வாழ்த்துகளும் புலப்படுத்துகிறது. ஜி.எல்.பீரிஸ்-இன் வெளிவிவகார அமைச்சு நியமனம் என்பது சீனாவிற்கு நிகராக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இலங்கை உறவை பலப்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் மூலோபாய முயற்சியாகவே காணப்பட்டது. உத்தியோகபூர்வ கடமைகளை பதவியேற்ற மறுநாளே இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு தொடர்ச்சியாக சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஸ்சியா, ஜப்பான், பாகிஷ்தான் மற்றும் கொரியா தூதுவர்கள் என துருவ வேறுபாடின்றி வந்து வாழ்த்து தெரிவித்துள்ளமை ஜி.எல்.பீரிஸை அனைத்து தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளமையே உறுதி செய்கிறது. இது இலங்கைக்கு சர்வதேசரீதியாக எழுந்துள்ள நெருக்கடியை சீர்செய்யக்கூடிய சூழலை வெளிப்படுத்துகிறது.
இரண்டு, இலங்கை சர்வதேச நாடுகளின் உதவிகளுக்கு நன்றி கடமையுடையோர் என்ற எண்ணத்தை சர்வதேச தூதரகர்களிடம் ஏற்படுத்துவதனூடாக நெருக்கடியான உறவுகளை மீளப்புதுப்பிப்பதற்கான முயற்சி செய்துள்ளார். அதாவது ஜி.எல்.பீரிஸ் கடந்த வாரம் சந்தித்த அனைத்து தூதுவர்களிடமே கடந்த காலங்களில் குறித்த நாடுகள் இலங்கைக்கு செய்த உதவிகளை குறிப்பிட்டு நன்றிகளை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இலங்கையுடன் நெருக்கடியான உறவுநிலையில் உள்ள ஜப்பான் தூதுவருடனான உரையாடலில் போர்க்கால அனுபவங்களை மீட்டு அனைத்து கடினமான காலங்களிலும் இலங்கைக்கு உறுதியான ஆதரவை வழங்கியதாகவும், ஜப்பான் அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராக சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது திரு. யசுஷி ஆகாஷியின் மதிப்புமிக்க பங்களிப்பை நினைவுகூர்ந்து நன்றிகளைத் தெரிவித்தார். நன்றி பாராட்டுதல் குறைபாடுகள் தவிர்க்கப்பட்டு உறவுகள் புதுப்பிக்கப்படும் என்ற நம்பிக்கையளிக்கும் இராஜதந்திர உரையாடலாகவே அமைகிறது.
மூன்று, தூதுவர்களிடம் நாடுகளிடையிலான உறவின் வரலாற்று முக்கியத்துவத்தை நினைவுபடுத்துவதனூடாக தொடர்ச்சி பேண வேண்டியதை வலியுறுத்தி உள்ளார். குறிப்பாக இந்திய உயர்ஸ்தானிகருடனான உரையாடலில் நெருங்கிய அண்டை நாடுகளாக காலத்தின் சோதனைகளைத் தாண்டி தற்போதைய ஒத்துழைப்பு மட்டத்தில் திருப்தியை வெளிப்படுத்தியதுடன், பல துறைகளில் இருதரப்பு உறவுகளை இன்னும் உயர் மட்டத்திற்கு உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ள இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர். மேலும் ரஷ்சிய தூதுவருடனா உரையாடலில் 2022இல் இரு தரப்புக்கிடையிலான உறவு 65ஆம் ஆண்டு நிறைவடைவதையும், ஜப்பானிய தூதுவருடனான உரையாடலில் 70 ஆண்டுகள் நிறைவடைவதும் பகிர்ந்ததன் மூலம் உறவை உறுதிப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.ஜெனீவாவிலும் ஐரோப்பிய நாடுகள் மத்தியிலும் மனித உரிமை செயல்பாடுகளிலும் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்க்க இந்த நாடுகளை அணுகுவதில் பீரிஸ் வெற்றி கண்டுள்ளார்
நான்கு, சர்வதேச நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாடுகளின் நலன்களை பூர்த்தி செய்யும் வகையில் பொருளாதார ரீதியிலான உரையாடல்களையே தூதுவர்களுடனான சந்திப்பில் முதன்மைப்படுத்தி உள்ளார். அமெரிக்க - இலங்கை கூட்டாண்மைப் பேச்சுவார்த்தை, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் கூட்டு ஆணைக்குழு மற்றும் அமெரிக்க - இலங்கை துறைசார் உரையாடல்கள் உள்ளிட்ட ஏனைய இருதரப்பு விடயங்களும் அமெரிக்க தூதுவருடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. அவ்வாறே ஜப்பானுடனும் இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை மேலும் உயர்த்துவதற்கு அயராது உழைக்க ஒப்புக்கொண்டனர். இது இலங்கையின் புதிய வெளியுறவுக்கொள்கை பொருளாதார பார்வைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தையே வெளிப்படுத்துகிறது. பஷில் ராஜபக்ஷா நிதி அமைச்சை ஏற்றுக்கொண்டதிலிருந்து இலங்கையின் வெளியுறவு கொள்கை புதிய மாற்றத்தை பெற்று வந்துள்ளது. பஷில் ராஜபக்ஷா நிதி அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் கெரவலப்பிட்டி திரவ இயற்கை வாயு மின் திட்டம் அமெரிக்காவிற்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மறுபுறம் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தில் சீனாவின் ஆதிக்கங்கள் குறித்து பிராந்திய அளவில் பேசப்பட்ட நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கை சார்ந்த பல நாடுகளுக்கும் துறைமுக நகர் திட்டத்திற்கு உள்வாக்கப்படுவதற்காக சூழல் ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறே இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொறகொடன் 'ஒருங்கிணைந்த நாட்டுக்கான வியூகமும்' முழுமையாக இந்தியா மற்றும் இலங்கைக்கான பொருளாதார உறவை கட்டியெழுப்பும் வியூகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனான சர்வதேச தூதுவர்களின் சந்திப்பும் உரையாடலினதும் அரசியல் தாற்ப்பரியம் இலங்கைக்கு ஏற்பட்ட சர்வதேச நெருக்கடி நீர்த்து போகும் வாய்ப்பையே புலப்படுத்துகிறது. இலங்கை மீதான சர்வதேச நெருக்கடி என்பது அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் தங்கள் அரசியல், பொருளாதார நலன்களை மையப்படுத்தியே உள்ளது. எனினும் அதனை வெற்றி கொள்ள இரு தரப்பும் ஈழத்தமிழர் அரசியல் அபிலாஷைகளை சர்வதேச அரங்கில் முன்னிறுத்தி செயற்படுகின்றனர். ஈழத்தமிழர் நலனை ஈடேற்ற விருப்பமற்ற இலங்கை அரசாங்கம் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் நலன்களை ஈடேற்றும் பொறிமுறைகளை மேற்கொள்ள எத்தணிக்கிறார்கள். இதன்மூலம் சர்வதேச நிகழ்ச்சி நிரலில் முதன்மைபெறும் ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களை நீர்த்து போகச்செய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்;.
சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் தமிழர் உரிமைகளை முடக்குவதென்றும் தமது பிரதான கடமையாக முன்னிறுத்தி செயற்பட்டு வந்துள்ளன. இடையிடேயே சர்வதேச அரங்கில் தமிழர் உரிமைகள் மேலெழுகையில் அதனை நீர்த்து போகச்செய்வதில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் வேறுபட்டு நின்றதில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றமும் சர்வதேச அரங்கில் முன்னுரிமை பெற்ற தமிழர் நலனை நீர்த்து போகச்செய்வதனையே பிரதான கைங்கரியமாய் கொண்டு செயலாற்றியது. அதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவும் கிடைத்திடவே அதில் வெற்றியும் பெற்றது. சிறீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமும் கொரோனா பேரிடர் காலத்திலும், சர்வதேச அரங்கில் முதன்மை பெறும் தமிழர் நலன்சார் உரையாடலை நீர்த்து போகச்செய்வதில் ஆர்வமாய் செயற்பட்டு வருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஆகஸ்ட்-23அன்று கண்டி ஸ்ரீதலதா பெரஹரா விழாவின் இறுதியில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா ஆற்றிய உரை ஜி.எல்.பீரிஸ்-இன் வெளிவிவகார அமைச்சு நியமனத்தின் இராஜதந்திர மூலோபாய் நகர்வையே உறுதி செய்கிறது. குறித்த உரையில், 'நாட்டின் முன் எத்தகையச் சவால்கள், தடைகள் இருந்தாலும், நாம் கைவிட முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன' என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இக்கூற்று நேராக பெரஹரா விழாவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பினாலும் நேரிடையாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா அளிக்கும் முக்கியத்துவத்தையே வெளிப்படுத்துகிறது. இலங்கையில் தமிழர் நலன்சார் கோரிக்கைககளை முடக்குவதும்; சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிலைநாட்டுவதும் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் தேசிய பொறுப்பு கடமையாகவே நோக்கப்படுகிறது. எனவே அதனை முன்னிறுத்திய செயற்பாடுகளை பேரிடர் காலத்திலும் பொதுஜன பெரமுன அரசாங்கம் செவ்வனவே செயலாற்றி வருகிறது. அதன் சான்றுகளே கடந்தவாரம் வெளிவிவகார அமைச்சரின் சந்திப்புகளும் உரையாடல்களும் உறுதி செய்கின்றன.
எனவே, இலங்கை அரசாங்கம் இயற்கை பேரிடரிலிருந்து மீளுவதில் சிரமப்பட்டாலும், சர்வதேச நெருக்கடி எனும் செயற்கை அனர்த்தம் நீர்த்து போவதற்கான வாய்ப்பே வெளிவிவகார அமைச்சின்; நகர்வுகள் புலப்படுத்துகிறது. மறுமுனையில் இராஜதந்திர செயற்பாடற்ற ஈழத்தமிழரசியல் தரப்பு மீளவும் சர்வதேச அரங்கில் பிரகாசிக்கப்பட்ட வாய்ப்பை வளைத்து பயன்படுத்த திராணியற்றவர்களாய் நகரும் நிலைப்பாட்டையே உருவாக்கியுள்ளது. அண்மையிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் வழங்கிய பேட்டி ஒன்றில் சர்வதேச தரப்புகளுடன் தனிப்பட உரையாடுவதாகவும் சர்வதேச அரங்கில் தமிழர் நலன் பாதுகாப்பான இடத்திலேயே காணப்படுவதாக மெய்சிலிர்த்துள்ளார். அரசுடைய தரப்பு வெளிப்படையான உரையாடலில் இராஜதந்திர ரீதியாக சர்வதேச சக்திகளை கையாண்டு செல்கையில் அரசற்ற தரப்பின் சார்பாய் தனிப்பட ஒருவர் உரையாடுவதென்பது இராஜதந்திரமற்ற உத்தியைத் தருவதாகவே தெரிகிறது.
Comments
Post a Comment