கூட்டரசாங்க முயற்சி அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகுமா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடியானது தீர்வற்ற வகையில் நீண்டு கொண்டே செல்கின்றது. அரசாங்கத்ததின் தலைமையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் அரசியல் பொருளாதார நெருக்கடி தீர்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தினதோ அல்லது மேற்கின் உதவியோ தொடர்ச்சியாக நம்பிக்கையற்றதொன்றாகவே காணப்பட்டு வருகின்றது. அத்துடன் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த நாட்களிலிருந்து அரசியல் கட்சிகள் முன்வைக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்த கூட்டரசாங்கம் என்பதும் அதிக உரையாடல்களுடனேயே கடந்து செல்கின்றது. கூட்டரசாங்க உருவாக்கம் என்பது இலங்கை அரசியல் கட்சிகளிடையே முதன்மையான உரையாடலாக காணப்படுகின்ற போதிலும், நடைமுறை அரசாங்கங்கள் கூட்டரசாங்ககங்களை உருவாக்க எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. இந்நிலைமை கூட்டரசாங்க உருவாக்கம் என்பது, இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு உகந்த தீர்வா? அல்லது அரசியல் கட்சிகளின் அரசியல் நலனுக்கான கோரிக்கையா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரையும் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் கூட்டரசாங்கா உருவாக்கத்தின் நோக்கத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலிருந்து அனைத்து கட்சி கூட்டரசங்காத்தை பற்றி உரையாடி வருகின்றார். முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷாவின் அவ்வாறானதொரு கூட்டரசாங்க முயற்சியிலேயே ரணிலி விக்கிரமசிங்க பிரதமர் பதவியேற்று தற்போது இடைக்கால ஜனாதிபதியுமாகி உள்ளார். இடைக்கால ஜனாதிபதியான பின்னர் மக்களுக்கு ஆற்றிய சிறப்புரையிலும் கூட்டரசாங்க உருவாக்க முயற்சி பற்றி குறிப்பிட்டிருந்தார். தற்போது மீளவும் கடந்த ஆகஸ்ட்-03அன்று நடைபெற்ற 9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆரம்ப நிகழ்வில் புதிய அரசாங்கத்தின் கொள்கை உரையிலும் ரணில் விக்கிரமசிங்க கூட்டரசாங்கத்தை மீள வலியுறுத்தியுள்ளார். 'நாடு எதிர்பார்க்கும் சமூக, அரசியல் மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபை ஒன்றை நிறுவுவதாலேயே, அனைவரது இணக்கப்பாட்டுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்றை இதனூடாக தயாரித்து முன்னெடுக்க முடியுமெனவும்' தெரிவித்த இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினருக்கும் மீண்டும் அழைப்பு விடுத்தார். 

உயர் அரசியல் கலாசாரமுடைய தேசங்களில் நாடு பெரும் நெருக்கடிக்குள் காணப்படுகையில், கட்சி நலன்களை பொருட்படுத்தாது, தேச நலனிற்காக அரசியல் கட்சிகள் கூட்டரசாங்கத்தினூடாக நாட்டை மீட்டெடுக்க செயற்படுவது இயல்பான அரசியல் செயற்பாடாகும். இதனடிப்படையில் அரசியல் விமர்சகர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதும், கூட்டரசாங்கத்தை அமைப்பதும் காலத்தின் தேவையாகும். எனினும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் இடைக்கால ஜனாதிபதியின் கூட்டரசாங்க உருவாக்க முயற்சியானது தூய்மையாக பொருளாதார மீட்சியை மையப்படுத்தியதா என்பதை நுணுக்கமாக ஆராய வேண்டியுள்ளது.

முதலாவது, இலங்கையின் நிறைவேற்றுத்துறையின் எதேச்சதிகாரம், அதிகாரத்தில் இருப்பவரை ஏனையவருடன் ஒத்துழைத்து போக அநுமதிக்குமா என்பதை கவனமாக நோக்க வேண்டியுள்ளது. இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதவியை பெறுவதற்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷாவுக்கு எதிராக இடம்பெற்ற போராட்மே பிரதான காரணமாகும். பாராளுமன்ற உறுப்பினராக மற்றும் பிரதமராக இருக்கையில் போராட்டத்தை ஆதரித்து கருத்துரைத்த ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்ற மறுகணமே அவசரகால சட்டத்தை அறிவித்து போராட்டத்தை மிலேச்சத்தனமாக அடக்க முற்பட்டார். தொடர்ச்சியாக போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டளார்களை கைது செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். கடந்த ஆகஸ்ட்-03ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னர் கோத்தபாய ராஜபக்ஷ ஆட்சிக்காலப்பகுதியில் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்ட போது, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக கடுமையாக கண்டித்திருந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது இடைக்கால ஜனாதிபதியாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னெடுத்த எதேச்சதிகார போக்குகளையே செயற்படுத்தி வருகின்றார். மக்கள் வெகுஜன போராட்டத்தினூடாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் கூட்டரசாங்க கோரிக்கையில் வெகுஜன போராட்டக்காரர்களின் ஈடுபாட்டையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆயினும் இங்கு போராட்டக்காரர்களை மிலேச்சத்தனமாக முடக்கி கொண்டு அரசியல் கட்சிகளுக்கு கூட்டரசாங்க கோரிக்கை முன்வைப்பது ரணில் விக்கிரமசிங்காவின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகங்களையே உருவாக்குகிறது.

இரண்டாவது, பொதுஜன பெரமுனவின் ஆதரவுத்தளத்துக்குள் இயங்கும் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவால் அக்களத்திற்கு வெளியே வந்து கூட்டரசாங்கத்தில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது பெரும் சவாலான விடயமாகும். பாராளுமன்றத்தில் ஒரு ஆசனங்களை மாத்திரம் கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாகியிருப்பது முழுமையாக பொதுpன பெரமுனவின் ஆதரவுடேனேயாகும். பாராளுமன்றத்தில் 2ஃ3க்கு அண்மித்த பெரும்பான்மையை பெற்றுள்ள பொதுஜன பெரமுனவின் எண்ணங்களுடன் முரண்படுகையில் ரணில் விக்கிரமசிங்காவின் இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான இருப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாக கூடியதாகும். இதுதொடர்பில் அனடோலு ஏஜென்சி(யுயெனழடர யுபநnஉல) ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த இலங்கையின் பிரபல அரசியல் விமர்சகர் ஜெயதேவ உயங்கொட, 'ராஜபக்ஷாக்களின் பொதுஜன பெரமுனவின் அதிக பிரசன்னம் இல்லாமல் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவது சவாலானதாகும். அதன் மூலம் அவர் ராஜபக்ஷாக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் மற்றும் பாதுகாக்கிறார் என்ற எதிர்க்கட்சியின் அவநம்பிக்கையை அகற்றுவது சவாலானது. ஜனாதிபதியாக அவரது தலைமைத்துவத்திற்கான நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையை மீட்டெடுப்பதற்கு இது ஒரு முன்நிபந்தனையாகும்.' என்று குறிப்பிட்டுள்ளார். பெரமுனாவின் பாசறைக்குள்ளிலிருந்து கூட்டரசாங்க முயற்சி சவாலுக்குரியது. அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டரசாங்க முயற்சியானது பெரமுனாவால் தனது இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு வரக்கூடிய அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முன்னாயர்த்தமா என்ற சந்தேகங்களும் இயல்பானதாகவே காணப்படுகின்றது.

மூன்றாவது, இலங்கை அரசியல் கட்சிகள் அடிப்படையில் கட்சி நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவையாக காணப்படுகின்றது. இலங்கை அரசியல் கட்சிகளிடையே தேசிய நலன் மற்றும் இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்காக கட்சி நலன்களை கடந்த கூட்டரசாங்கம் தொடர்பிலான இதயபூர்வ சிந்தனை கொண்டிருப்பார்களாயின், வெகுஜன போராட்டத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கான இடைக்கால ஜனாதிபதி தெரிவில் கட்சி நலன்களை கடந்து பொதுவான ஆளுமையை ஒருமித்த முடிவில் தேர்வு செய்திருக்க வேண்டும். கூட்டரசாங்கம் தொடர்பான உரையாடல்களை சமதளத்தில் வைத்து கொண்டு இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கு மூவரை நிறுத்தி போட்டியை எதிர்கொண்டமையானது, இலங்கை அரசியல் கட்சிகளுக்கு கூட்டரசாங்கம் தொடர்பில் அக்கறையின்மையையே வெளிப்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் யாவும் தங்கள் அரசியல் கட்சிகளின் நலன்களையே முதன்மைப்படுத்தி செயற்படுகின்றன. இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினை பொறுத்தவரை தனது நீண்ட கால இலக்கான ஜனாதிபதி பதவியை தக்கவைப்பதே முதன்மையான எண்ணமாக காணப்படுகின்றது. இவ்வாறே ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்தவரை ரணில் விக்கிரமசிங்காவின் முழுமையான இடைக்கால ஜனாதிபதி பதவி இருப்பானது ஐக்கிய மக்கள் சக்தியின் இருப்புக்கு அச்சுறுத்தலாகக்கூடியது என்ற எண்ணம் காணப்படுகின்றது. இவ்வாறான முரணகையான கட்சி நலன் சார்ந்த எண்ணங்களுடனேயே இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டரசாங்கத்துக்கான அழைப்பை விடுத்துள்ளார்.

நான்காவது, கூட்டரசாங்கத்துக்கான கோரிக்கை இலங்கையில் பரவலாக காணப்படும் விடயமாக காணப்படுகின்றது. அதனை ஒட்டியே இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும் கூட்டரசாங்கத்துக்கான அழைப்பினை தொடர்ச்சியாக முன்வைக்கின்றார். எனினும் கூட்டரசாங்கத்தினூடாக பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகளை பகிரங்கப்படுத்த தவறி வருகிறார். இலங்கைத்;தீவு பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகிய மும்மடங்கு நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. பொருளாhர மீட்சி என்பது குறித்த மூன்று துறைகளின் நெருக்கடியையும் சீர்செய்வதனாலேயே உருவாக்கக்கூடியதாகும். நடைமுறை திட்டங்களற்ற வகையில் கூட்டரசாங்க உருவாக்கம் முத்துறை நெருக்கடிக்கு தீர்வாக அமையாது. பேராசிரியர் உயங்கொட இதுதொடர்பில், 'அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு ஜனநாயக அரசாங்கத்திற்கான அடித்தளத்தை அமைப்பதும், ஜனநாயகம் மற்றும் மக்கள் நட்பு கட்டமைப்பிற்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புதிய அணுகுமுறையின் செயல்முறையைத் தொடங்குவதும் ஆகும்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் பட்டியலிட்டார். 'ஜனநாயகத்தின் மறுசீரமைப்பு இருக்க வேண்டும்; வெளிப்படையான மற்றும் பொறுப்பான பொருளாதார நிர்வாக முறையை அமைத்தல்; ஏழை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சமூக ஆதரவு திட்டத்தை செயல்படுத்துதல்; அரசாங்கம் மற்றும் அரசியல் வர்க்கத்தின் பொது நம்பிக்கை மற்றும் சட்டபூர்வமான தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.' என்றவாறாக கருத்துரைத்துள்ளார். எனினும் அரசியலமைப்புரீதியாக கிடைக்கப்பெற்ற எதேச்சதிகாரத்தினூடான ஜனநாயக போராட்டத்தை மேற்கொண்டவர்களை முடக்கும் ரணில் விக்கிரமசிங்காவிடம் ஜனநாயக மறுசீரமைப்புக்கான முயற்சிகளை எதிர்பார்க்க இயலாது. அவர் உரையாடும் அரசியலமைப்பு மாற்றங்களும் அதிக சந்தேகத்தையே உருவாக்குகின்றது.

எனவே, கூட்டரசாங்கத்துக்கான உரையாடல் பொருளாதார மீட்சிக்கான வடிவமாக இலங்கையில் கட்டமைக்கப்படுவது என்பது இயலாத விடயமாகவே உள்ளது. இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வார்த்தைகளில் உச்சரிக்கப்படும் இடைக்கால அரசாங்க அழைப்பானது, இரண்டரை ஆண்டு இடைக்கால ஜனாதிபதி ஆசன இருப்புக்கான முயற்சியாகவே அவதானிக்கப்படுகின்றது. அவ்வாறே இலங்கையின் அரசியல் கட்சிகள் உரையாடும் கூட்டரசாங்கம் என்பது தமது கட்சிகளின் நலனை மையப்படுத்தி தம்மை முதன்மைப்படுத்திய உரையாடலாகவே காணப்படுகின்றது. எனவே கூட்டரசாங்கம் என்பது இலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடி காலப்பகுதி உரையாடலாக மாத்திரமே தொடர வாய்ப்புள்ளது. புதிய இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை பலரும் ராஜபக்ஷாக்களின் பினாமியாகவே பார்க்கிறார்கள். இதனால் இடைக்கால ஜனாதிபதி எதிர்க்கட்சிகளினதோ, மக்களினதோ ஆதரவற்ற நிலையிலேயே காணப்படுகின்றார். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மையான நிபந்தனையான அரசியல் ஸ்திரத்தன்மைக்கான உத்தரவாதத்தை இடைக்கால அரசாங்கத்தால் வழங்க இயலாது. பொருளாதார மீட்சிக்காக கூட்டரசாங்க உருவாக்கத்துக்கான அழைப்பென்பது, தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றுவதற்கான உரையாடலாகவே காணப்படுகின்றது. 

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-