ஜெனிவா களம் ஈழத்தமிழ் விவகாரத்திலிருந்து கைநழுவி செல்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கடந்த மாதங்களில் நடைபெற்ற போராட்டங்களை இலங்கை தீவின் ஜனாநாயக மீட்சிக்கான புரட்சியாக பலரும் சிலாகித்தனர். அத்துடன் இலங்கை புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி நகருவதாகவும் வரவேற்றிருந்தனர். எனினும், சமாந்தரமாக புதிய இடைக்கால அரசாங்கம் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில், சர்வதேச சமூகத்திடமிருந்தும் கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரிலும் புதிய இடைக்கால அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் விவகாரங்கள் முதன்மை பெறக்கூடிய எதிர்பார்ப்பு அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது. எனினும் இலங்கை அரசாங்கங்கள் கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கையாள்வதற்கான இராஜதந்திரத்தில் தேர்ச்சிமிக்கவர்களாக உள்ளனர். அவ்வாறானதொரு பொறிமுறையையே செப்டெம்பர் கூட்டத்தொடரிலும் நகர்த்த முற்படுகின்றார்கள். இக்கட்டுரை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் எதிர்கால போக்கினை தேடுவதாக அமையவுள்ளது.

இலங்கையின் புதிய இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டங்களை ஒடுக்குவதாக உறுதியளித்துள்ளார். அவற்றை சட்டத்திற்கு எதிரானது என்று கண்டித்தும், எதிர்ப்பாளர்களை பாசிஸ்டுகள் என்றும் அழைத்தார். இது அவர் கடுமையாக பதிலளிக்க தயங்க மாட்டார் என்பதையே சுட்டிக்காட்டியது. ஊடனடியாக பிரதிபலிப்பும் வெளிப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்ட அதே நாளில், கொழும்பில் காலி முகத்திடலில் உள்ள முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க சிலைக்கு 50 மீட்டருக்குள் யாரும் கூடுவதைத் தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசியல் அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மக்களைத் தடுத்து வைப்பதற்கும், பொதுக் கூட்டங்களை மட்டுப்படுத்துவதற்கும், தனியார் சொத்துக்களைத் தேடுவதற்கும் அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில், புதிய இடைக்கால அரசாங்கம் மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகால நிலையை நீட்டித்துள்ளது. ஆயுதமேந்திய வீரர்கள் கலகக் கவசத்தில் கூடாரங்களை இடித்துத் தள்ளுவதைக் காட்டும் காட்சிகளுடன், அதிகாரிகள் அரசாங்கச் சொத்துக்களில் ஒரு எதிர்ப்பு முகாமை சோதனை செய்து அகற்றினர். இந்த தாக்குதலில் குறைந்தது 50 போராட்டக்காரர்கள் காயமடைந்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மேலும் தொடர்ச்சியாக ஜனநாயக போராட்டக்காரர்களை அத்துமீறி கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை இடைக்கால அரசாங்கம் விரைவுபடுத்தியுள்ளது.

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கைதுகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச மன்னிப்புச் சபையும் கண்டித்துள்ளன. பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஆகியோர் தங்கள் கவலையை கோடிட்டுக் காட்டும் பொது அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். மற்றும் அதிகாரிகள் கட்டுப்படுத்துதலுடன் செயல்பட வேண்டும் மற்றும் வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், கடந்த ஆகஸ்ட்-09அன்று  மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட கடிதத்தில், 'இலங்கையின் புதிய இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனைத்து இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தனது நிர்வாகம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்' என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.

இவ்வாறாக இலங்கை அரசாங்கத்தின் அண்மைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் அதிருப்தியை வெளியிடும் பின்னணியிலேயே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இலங்கை குறித்த விவாதம் தொடக்க நாளான 12ஆம் திகதியே நடைபெற நிகழ்ச்சி நிரலிடப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 46ஃ1 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு மேலும் இருவருட காலஅவகாசம் வழங்கப்படுமா? அல்லது நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரத்தை அடிப்படையாகக்கொண்டு இணையனுசரணை நாடுகளால் புதிய தீர்மானம் கொண்டுவரப்படுமா? என்ற கேள்வியே நிலவுகின்றது. இவ்இரண்டு கேள்விகளுமே கடந்த ஒரு தசாப்தகாலமாக போர்க்குற்றத்துக்கான நீதியை கோரும் ஈழத்தமிழர்களின் அபிலாசைகளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை கருத்திற் கொள்ளாமையையே உறுதி செய்கின்றது.

இலங்கை அரசாங்கத்தின் மீது ஈழத்தமிழர்கள் கடந்த ஒரு தசாப்தமாக முன்வைத்துவரும் போர்க்குற்றச்சாட்டு விவகாரங்களுடனேயே, அண்மைய இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் பற்றிய விவகாரமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நகர்த்தப்படுகின்றது. இரண்டும் மனித உரிமை விவகாரமாக பொதுப்பயன்பாட்டில் ஒரே வடிவம்பெறினும், அரசியல் அர்த்தத்தில் இரண்டிற்குமிடையில் நெடுந்தூர வேறுபாடு காணப்படுகின்றது. இந்நிலையில் இரண்டையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை சமச்சீராக கையாள்வது வலுப்பொருந்திய ஈழத்தமிழர்களின் கோரிக்கையை சர்வதேச அவையில் நீர்த்துப்போக செய்யுமா என்ற கவலை தமிழ்த்தரப்பில் எழுப்பப்படுகின்றது. இதனை நுணுக்கமாக நோக்குதல் அவசியமாகும். 

முதலாவது, செப்டெம்பர் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் அண்மைய மனித உரிமைகள் விவகாரமே முதன்மையான உரையாடலாக மேலெழுவதற்கான வெளிப்பாடுகளே காணப்படுகின்றது. குறிப்பாக அண்மைய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பிலேயே, சர்வதேச நாடுகளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புக்களும் தீவிர கரிசனையை வெளிப்படுத்திவருகின்றன. ஆகஸ்ட்-09அன்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான தனது அறிக்கையில், 'ஜனாதிபதி விக்கிரமசிங்க பாரிய சவால்களை எதிர்கொள்கிறார். ஆனால் கடுமையான அவசரகாலச் சட்டங்களை விதிப்பது, போராட்டத் தலைவர்களை அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்ட கைதுகள் மற்றும் செயற்பாட்டாளர் குழுக்களின் தீவிர கண்காணிப்பு ஆகியவை இலங்கையின் பயங்கரமான பிரச்சினைகளைத் தீர்க்காது' என்று தெரிவித்தார். அவ்வாறே கடந்த ஆகஸ்ட்-08அன்று ஐ.நா மனித உரிமை நிபுணர்கள், '2022 ஏப்ரல்-2 முதல் இலங்கை அதிகாரிகள் அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் அவர்கள் குறைகளை தெரிவிப்பதை தடுப்பதற்கும் அவசரகால சட்டத்தை விரிவான, நீடித்த மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை கண்டித்துள்ளனர்'. இவ்உரையாடல்கள் சர்வதேச சமூகத்தில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் முதன்மை பெறும் எண்ணங்களையே பிரதிபிலிக்கின்றது.

இரண்டாவது, கடந்தகால அனுபவங்களும் செப்டெம்பர் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஈழத்தமிழரின் கடந்த பத்தாண்டு கால கோரிக்கை நீர்த்துப்போவதற்கான வாய்ப்புக்களையே உறுதி செய்கின்றது. 2018ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமிய சமூகம் மீதான இலங்கை அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அதிகரிக்கப்பட்ட சமகாலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரிலும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் போர்க்குற்றங்களை மிஞ்சிய முக்கியத்துவம் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரான ஒடுக்குமுறையே காணப்பட்டது. அவ்வாறானதொரு சூழலே தற்போதும் அமையப்பெற்றுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், சர்வதேச சமூகம் இலங்கையின் ஆட்சிநிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள தோல்வி, ஊழல்மோசடிகள் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு ஆகியவற்றையே முதன்மைப்படுத்துவது புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பையே வெளிப்படுத்துகிறது. பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் இணை ஸ்தாபகரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஷ்ரீன் ஸரூரின் கருத்தின் பிரகாரம், எதிர்வரும் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரின்போது இணையனுசரணை நாடுகள் ஒன்றிணைந்து இலங்கை தொடர்பில் புதிய காத்திரமான தீர்மானமொன்றை முன்வைப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன எனக்குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 1ஃ46 தீர்மானத்திற்கு, மேலும் இரண்டு ஆண்டுகால நீடிப்பு வழங்க முன்னர் தீர்மானிக்கப்பட்ட நிலையிலேயே தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களால் புதிய தீர்மானத்துக்கான உரையாடல் மேலெழுவதாக சர்வதேச மனித உரிமை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே புதிய தீர்மானத்தில் அண்மைய மனித உரிமை விவகாரம் அதுசார்ந்த பொறுப்புப்கூறல்களின் வலியுறுத்தலே உள்ளடக்கம்பெறும். கடந்த கால வரலாறுகளும் இதனையே உறுதி செய்கின்றது.

மூன்றாவது, இலங்கை அரசாங்கம் எவ்வாறாயினும் தனக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள மனித உரிமைகள் விவகாரங்களுக்கு பதிலளிக்க அரச இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி தயாராகும் அதேவேளை தென்னிலங்கையும் தமது சிவில் சமூகங்களும் செயற்பாடுகளூடாக தமது மனித உரிமை விவகாரங்களை முதன்மைப்படுத்தும் செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும் ஈழத்தமிழ்த்தரப்பில் ஜெனிவாவை கையாள்வதற்கான வியூகம் கடந்த பத்தாண்டு கால அநுபவத்திலும் இன்னும் தேர்ச்சி பெறாத நிலையிலேயே காணப்படுகின்றது. இலங்கையின் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கையாள நெறிப்படுத்துவதாக கொழும்பு அரசியல் செய்திகள் உறுதி செய்கின்றன. கடந்த காலங்களில் 2015ஆம் ஆண்டு போர்க்குற்றம் தொடர்பிலே இலங்கை அரசாங்கத்துக்கு காணப்பட்ட அழுத்தத்தை நீர்த்து போகச்செய்தமையில், ரணில் விக்கிரமசிங்காவின் நெறியாள்கையில் முன்னாள் அமைச்சர் மறைந்த மங்கள சமரவீரவின் இராஜதந்திர அணுகல் இருந்தமை குறிப்பிடத்தக்கது. துற்போதும் அவ்வாறான நகர்வையே அலி சப்ரியை முன்னிறுத்தி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது.

நான்காவது, இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி இலங்கை அரசாங்கத்துக்கு சாதாகமான வாய்ப்பை வழங்குகின்றது. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான நெருக்கடியாக இலங்கையின் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடி அமைந்துள்ளது. முன்னாள் அரசாங்கத்தின் மோசமான பொருளாதார நிர்வாகத்தால், 51 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனை நாட்டை விட்டுச்சென்றுள்ளது. இதனால் உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் போன்ற அடிப்படைப் பொருட்களின் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியவில்லை. இதனால் உணவு மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்து, பெட்ரோல் நிலையங்களில் மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் நிலையில், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நெருக்கடியை சாதகமாக கொண்டு இலங்கை அரசாங்கம் மனித உரிமை விவகாரங்களை இழுத்தடிப்பு செய்வதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க போராட்டத்திற்கெதிரான ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்கு அதிகம் மேற்கு நாட்டு உதாரணங்களை முதன்மைப்படுத்துவது மேற்கின் இயல்பையே தான் பிரதிபலிப்பதை அடையாளப்படுத்துவதாக காணப்படுகின்றது. இது காலநீடிப்புக்கான வாய்ப்புக்கான ஏதுவான சமிக்ஞையாகவே காணப்படுகின்றது.

எனவே, செப்டெம்பர் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரை ஈழத்தமிழர்கள் பார்வையாளராக கடந்து செல்லும் நிலையே காணப்படுகின்றது. சர்வதேச சமூகத்திலும், உள்ளூர் அரசியல் களத்திலும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரை இலங்கையின் காலிமுகத்திடல் போராட்டத்துக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட உரையாடலுக்குள் நகர்த்தப்பட வாய்ப்புள்ளது. இலங்கை அரசாங்கமும் அதனை வாய்ப்பாக மாற்றிக்கொள்ள எத்தணிக்கின் றவேளை ஈழத்தமிழர் மீதான போர்க்குற்றம் இன்னோர் நெருக்கடியை உருவாக்கக்கூடிய சூழலை தரக்கூடுமென்பதை நிராகரித்து விட முடியாது. அதேநேரம் புதிய இடைக்கால ஜனாதிபதி இலங்கையிலுள்ள அனைத்து தூதர்களையும் சந்தித்து உரையாடியதோடு ஜெனிவா விவாகரம் பற்றிய உரையாடல்களையும் முன்னெடுத்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஜெனிவா பொறுத்து முதிர்ச்சியான அனுபத்தை ஈழத்தமிழ்த்தரப்பு அடையாளங்காணவில்லையென்பது, ஈழத்தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்று தவறின் இன்னொரு பதிவாகவே ஜெனிவாவும் அமையவுள்ளது என்பதையே அரசியல் நிலவரம் சுட்டி நிற்கின்றது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-