தடைநீக்கமும் ஜெனீவா அரசியலும் எதிர்வினையற்ற தமிழரசியலும் -ஐ.வி.மகாசேனன்-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் காலப்பகுதியில் சில அதிரடியான அரசியல் முடிவுகளால் தமது அரசின் மீதுள்ள மனித உரிமை குற்றச்சாட்டுக்களை இழுத்தடிப்பு செய்வதில் இலங்கை அரசாங்க கட்டமைப்பு மிகவும் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாகவே அவ்வாறான பொறிமுறையையே ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கான வியூகமாக இலங்கை அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது. சமகாலத்தில், முன்னர் தடைப்பட்டியலில் அறிவித்திருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் ஒரு தொகுதியினரையும் இலங்கை அரசாங்கம் தடைப்பட்டியலிலிருந்து நீக்கியுள்ளமையும் அவ்வாறான பொறிமுறையாகவே தமிழ்த்தரப்பில் விமர்சிக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரத்தை சீர்செய்ய புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துமே குறித்த தடை நீக்கம் முக்கியத்துவம் பெறுகின்றது. மறுதலையாக இலங்கை அரசாங்கத்தின் ஸ்திரமற்ற முடிவாகவும் தென்னிலங்கை அரசியல் பரப்பில் தடைநீக்கம் தொடர்பில் விவாதிக்கப்படுகின்றது. இக்கட்டுரை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைநீக்கத்தின் அரசியல் தாக்கத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

 

ஆகஸ்ட்-13அன்று அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு, திராவிட ஈழ மக்கள் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை ஆகிய 6 சர்வதேச தமிழ் அமைப்புகள் மற்றும் 316 தனிநபர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கத் தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு அமைப்புகள், சட்ட அமுலாக்க முகவர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகியோர் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்தத் தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, '2012ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண்.01இன் கீழ் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததற்காக 577 தனிநபர்கள் மற்றும் 18 நிறுவனங்கள் 2021 இல் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், நீண்ட பரிசீலனைகளுக்குப் பிறகு 316 தனிநபர்கள் மற்றும் 6 அமைப்புகளை அவர்கள் தொடராததால் நீக்க முடிவு செய்யப்பட்டது.  எனத் தெரிவித்துள்ளது. மேலும், 'தடுப்புப் பட்டியலில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான இத்தகைய சேர்த்தல் மற்றும் விலக்குகள் தொடர்ச்சியான கால அவதானிப்பு மற்றும் கவனமாக ஆய்வுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழக்கமாக மேற்கொள்ளப்படுகின்றன. பட்டியலிடப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகம் விழிப்புடன் இருக்கும். பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காக அல்லது நிதி திரட்டுவது கண்டறியப்பட்டால் நாங்கள் அவற்றை மீண்டும் தடை செய்வோம்' என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்விளக்கங்களானது, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் தென்னிலங்கை பேரினவாத தரப்புக்களிடமிருந்து ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சீர்செய்ய இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை சார்ந்ததாகும். தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு (குNழு) சார்பாக கலாநிதி குணதாசா அமரசேகர, 'அரசாங்க அறிவிப்பின் நேரம் எங்களை மிகவும் கவலையடையச் செய்கிறது. பல புலம்பெயர் தமிழ் குழுக்கள் மற்றும் தனிநபர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான காரணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விளக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நெருக்கடிகளுக்கு பதிலளிக்கு வகையிலானதாகவே அரசாங்கத்தின் விளக்கங்கள் காணப்படுகின்றது. எனவே, செய்திகளினூடாக அரசாங்கத்தின் முடிவுகளை அணுகுவது பலவீனமான நிலைமைகளையே ஏற்படுத்தக்கூடியதாகும். செய்திகள் விளக்க அறிக்கைகளுக்கு அப்பால் தடைநீக்கத்துக்கு பின்னாலுள்ள அரசியலை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.

முதலாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில், ஆகஸ்ட் முற்பகுதியில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடைநீக்கமானது, ஜெனிவா களத்தை கையாள்வதற்கான உத்தி என்பதையே தடைநீக்க காலப்பகுதி அடையாளப்படுத்துகின்றது. முன்னைய அனுபவங்களும் அதனையே உறுதி செய்கின்றது. புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையும் தடைநீக்கமும் புதியதல்ல. முன்னைய ஆண்டுகளிலும் இவ்வாறான பொறிமுறையை ஜெனீவா களத்தில் இலங்கை அரசாங்கம் கையாண்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்த ஆண்டு ஜூன் நடுப்பகுதியில் நடைபெற்ற 50வது ஜெனிவா கூட்டத்தொடரில் தடைசெய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் நீக்கம் தொடர்பிலே அறிவித்துள்ளார். அதாவது, '2012ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண்.1இன் கீழ் நியமிக்கப்பட்ட தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. தற்போது 318 தனிநபர்கள் மற்றும் நான்கு அமைப்புக்கள் பட்டியலில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளது. இது ஒரு தொடர் பயிற்சி' எனத் தெரிவித்துள்ளார். 50வது கூட்டத்தொடரின் அறிவிப்பை 51வது கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் தருவாயில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. புலம்பெயர் அமைப்புக்களின் தடைநீக்கம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை கண்டித்துள்ள கலாநிதி குணதாசா அமரசேகர, 'ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் அமர்வுகளின் அடிப்படையில் இவ்வாறான நகர்வுகளை வெறுமனே நியாயப்படுத்த முடியாது' என்றார். ஜெனீவாவுக்கான நாடகமே தடைநீக்கம் என்பதுவே தென்னிலங்கை களஉரையாடலாகவும் காணப்படுகின்றது என்பதையே அமரசேகராவின் கருத்து வெளிப்படுத்துகின்றது.

இரண்டாவது, இலங்கை எதிர்கொண்டுவரும் அரசியல் பொருளாதார நெருக்கடி தீர்வு தொடர்பான உரையாடல்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைநீக்கமும் முதன்மையான நிலையை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெருக்கடி காலப்பகுதியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பிரதமர் பதவியை ஏற்றபோது பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கி பொருளாதார நெருக்கடி தீர்வினை கண்டறிவதற்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்கினார். குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் வடக்கு-கிழக்குக்கு தனியான பொருளாதார வலயமொன்று உருவாக்கப்படுவது தொடர்பாகவும் தமிழ் புலம்பெயர் சமூகத்தின் முதலீடுகளை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பாகவும் விளக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் புலம்பெயர் சமூகமும் பல உரையாடல்களில் இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்க முன்வருமாயின் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாரென தெரிவித்துள்ளனர். தடைப் பட்டியலிடப்பட்டவர்களில் ஒருவரான உலகத்தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் வுhந ஐளடயனெ பத்திரிகைக்கு வழங்கிய கருத்தில், '2014 மற்றும் 2021ஆம் ஆண்டுகளின் இந்த தடைகளுடன் நேரடியாக தொடர்புடைய வெளிநாட்டு நாணயத்தின் உள்நோக்கிய இழப்பு குறித்து நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர் முதல் அரை பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷh, கோட்டாபய ராஜபக்ஷh, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் 'பயங்கரவாத நிபுணர்' என்று அழைக்கப்படும் ரொஹான் குணரத்ன ஆகியோர் இலங்கை மக்களுக்கு இந்த இழப்புகளை விளக்கி, அவர்களின் தன்னிச்சையான முடிவுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும், மேலும் இந்த தடைகளால் என்ன நன்மைகள் அடையப்பட்டன என்பதை விளக்க வேண்டும்.' எனத்தரிவித்துள்ளார். தமிழ் புலம்பெயர் சமூகத்தை அரவணைப்பதால் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு நகர்த்தலாம் என்ற எதிர்பார்க்கை அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.

மூன்றாவது, தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் தடைநீக்கத்தின் பின்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் நலன் சார்ந்த எதிர்பார்க்கையும் காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்மானமெடுக்கும் சக்திகளாக புலம்பெயர் சமூகத்தின் ஆற்றல் வலுப்பெற்று வருகின்றது. எழுகதமிழ் திரள் மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் திரள்களுக்கு பின்னால் புலம்பெயர் சமூகத்தின் ஈடுபாடு ஆழமாக காணப்பட்டமை நிதர்சனமானதாகும். இலங்கை பாதுகாப்பு துறையும் அப்போராட்ட காலங்களில் புலம்பெயர் சமூகத்தின் ஈடுபாடு தொடர்பில் எச்சரிக்கை செய்திருந்தார்கள். மேலும், புலம்பெயர் சமூகம் மீதான தடை என்பதுவும் தாயகத்தையும் புலம்பெயர் சமூகத்தையும் பிரிப்பதனூடாக ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை வலுவிழக்க செய்வதே பிரதான இலக்காகும். இன்று ரணில் விக்கிரமசிங்காவிற்கு தமிழ் அரசியல் கட்சிகளிடம் போதிய ஆதரவு காணப்படாத நிலையில், புலம்பெயர் சமூகத்தினூடாக வடக்கு-கிழக்கில் எதிர்கால அரசியலுக்கான வாக்கு சேகரிப்புக்கான முன்முயற்சியை மேற்கொள்கின்றாரா எனும் சந்தேகம் மறுக்கஇயலாத விடயமாகவே காணப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைநீக்கத்தை தமிழ் அரசியல் கட்சிகள் வரவேற்று அறிக்கைவிடுவதனூடாக நகர்ந்து செல்ல முயலுகின்றனர். இது ஆபத்தான அரசியல் நகர்வாகும். தடைநீக்கத்தின் பின்னால் இலங்கை அரசாங்கம் பொருளாதார இலாபத்தை மாத்திரமின்றி அரசியல் இலாபத்தையும் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு அரசியல் இலாபம் என்பது அதன் கீழ் ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கு பாதகமானது என்பதே யதார்த்தமானதாகும். இவ்யதார்த்தத்தை புரிந்து கொண்டே தமிழ் தரப்பின் பதில்வினைகள் அமையவேண்டியுள்ளது. தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது அறிக்கையில் கடந்த காலங்களில்(தேசிய அரசாங்க காலப்பகுதியில்) மங்கள சமரவீர புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கி பேச்சுவார்த்தை நிகழ்த்தியமையை சுட்டிக்காட்டி அவ்வாறானதொரு செயற்பாட்டிற்கு தற்போதைய அரசாங்கம் நகர வேண்டுமென்ற அழைப்பில் கருத்துரைத்துள்ளார். எனினும் மங்கள சமரவீரா புலம்பெயர் அமைப்புக்களை அணைத்துக்கொண்டு ஐ.நா அரங்கில் தமிழர்களின் இனப்படுகொலை கோரிக்கைகளை நசுக்கியதை இலாபகரமாக மறைக்க முயலுகின்றார். அல்லது தற்போதைய அரசாங்கத்தையும் அவ்வாறான நகர்வுக்கு தான் அழைப்பு விடுகின்றாரா என்பதில் சந்தேகம் காணப்படுகின்றது. தற்போது தடைப்பட்டியல் நீக்கப்பட்டுள்ள அமைப்புக்கள் கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்க காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்காவின் தொடர்பில் ஐ.நாவில் தமிழர்களின் கோரிக்கைகளை தளர்த்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களென்ற விமர்சனங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைநீக்கத்தை தமிழ்த்தரப்பு பெருமையாக சிலாகிப்பதையும் வரவேற்பதையும் தவிர்த்து, இலங்கை அரசாங்கத்தின் அரசியல் நலன் சார்ந்த நகர்வுக்கு எதிராக இராஜதந்திரரீதியிலான நகர்வை முன்னெடுக்க வேண்டும். தடைகளும் நீக்கமும் 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்தின் ஜெனீவா களத்தை அடிப்படையாய் கொண்ட பொறிமுறைகளிலொன்றாகவே அமைகின்றது. ஆகஸ்ட்-13அன்று தடைநீக்கம் பற்றி உரையாடும் சமதளத்தில், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதில் செயலில் ஈடுபட்டதாக 55 தனிநபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மூன்று அமைப்புகளையும் இந்த வாரம் தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளாதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கம் தடைநீக்கத்தை முதன்மையான செய்தியாக்குவதுடன், தமிழரசியல் தரப்பினரும் அதனை வரவேற்று அறிக்கை விடுவதனூடான அதனை முதன்மைப்படுத்துகின்றார்கள். ஆயினும் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை அரசாங்கம் வெளியுலகிற்கு மறைக்க முயலுவதனை, தமிழரசியல் தரப்பும் முதன்மைப்படுத்த தவறுகிறன்றார்கள். இத்தந்திரமற்ற அரசியலுக்குள்ளேயே ஈழத்தமிழர்களின் உரிமைக்கோரிக்கைள் ஊருகின்றது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-