தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த்தேசியத்தை பாதுகாக்க முன்வைத்துள்ள வேலைத்திட்டங்கள்? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் கட்சிகளின் தமிழ்த்தேசிய நிலைப்பாடு மற்றும் புரிதல் தொடர்பில் தொடர்ச்சியாக சந்தேகங்களே அதிகரித்து வருகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியில் தமிழ் மக்களும் கடுமையாக பாதித்துள்ளது. தற்போது நிவர்த்தியற்று அதனோடு வாழவும் தயாராகிவிட்டனர். தென்னிலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை கோரி அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களுக்கு தென்னிலங்கை கட்சிகள் முழுமையான ஆதரவை வழங்கி இருந்தன. இன்று போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாய் கைது செய்யப்படுகின்ற போதிலும் அவர்களுக்கான குரலை தென்னிலங்கை கட்சிகள் எழுப்புகின்றன. மற்றும் மக்களின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் தொடர்ச்சியாய் குரலெழுப்புகின்றார்கள். எனினும் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்டுள்ள எந்த அரசியல்வாதியும் பொருளாதார நெருக்கடியில் மக்களுடன் வரிசையிலும் இல்லை. பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கான வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வரவில்லை. மேய்ப்பானற்ற மந்தைகளாகவே தமிழ் மக்கள் அரசியல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவருகின்றனர். இக்கட்டுரை தேசியத்தின் உள்ளடக்கங்களையும், தமிழரசியல் கட்சிகள் அது தொடர்பாக வேலைத்திட்டங்கள் ஏதும் கொண்டுள்ளனவா என்பதை தேடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

தேசியவாதத்துக்கான அறிவியல் தள விளக்கங்ளுடனேயே இக்கட்டுரை ஆரம்பிக்கப்பட உள்ளது. ஏனெனில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல்வாதிகள் பலரிற்கு தேசம், தேசியம், தேசியவாதம் தொடர்பான நேரிய பார்வை இருப்பதாக தெரியவில்லை. 2015ஆம் ஆண்டு தேர்தல் காலப்பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு எதிரான பிரச்சாரமாக தேசம் மற்றும் நாடு இரண்டுமே ஒரே விதமான கருத்துக்களாக பிரச்சாரம் செய்திருந்தார். தமிழரசியரல் தரப்பினரில் பாகுபடுத்தப்படும் தமிழ்த்தேசிய கட்சியினர் என்பது ஊடகங்கள் அவர்கள் மீது பூசும் முலாமாகவே காணப்படுகின்றது. அவர்களில் பலரும் தமிழ்த்தேசிய பெயர்ப்பலகை பொறிக்கப்பட்ட அரசியல்வாதிகளேயன்றி, தமிழ்த்தேசியத்தின் பிரதிநிதிகளாக செயற்படுவதில்லை. இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியில் தமிழரசியல் தரப்பின் மெத்தன செயற்பாடுகளும் அதனையே உறுதி செய்கின்றது.

தேசியவாதம் என்பது பல்பரிமாணமிக்க சொற்பதமாகும். அதனை ஓர் அரசியல் சொல்லாடலாக மட்டுப்படுத்த இயலாது. தமிழரசியல் தரப்பில் தேசியம் என்பது அரசியல் மேடைச்சொல்லாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் விளைவே செயற்பாட்டு தளத்தில் தேசியம் வறுமைப்பட காரணமாகியது. தமிழரசியல் தரப்பினரும் தமது பாதுகாப்பிற்காக தேசியம் தொடர்பான சமூகத்தின் தேடலை தவிர்த்து வந்தனர். தேசியவாதம் நவீன தோற்றம் என்ற கருத்தாடல் காணப்படுகின்ற போதிலும், பழைய காலத்திலும் அதன் செயற்பாடுகள் கண்டறியக்கூடியதாக உள்ளது. ஒருவர் பிறந்து வளர்ந்த மண்ணின் மீதும், மரபுகள் மீதும், நிறுவப்பட்ட பிரதேச அதிகாரத்தின் மீதும் வலுவான பற்றுதலைக் குறிப்பதாகும். அதொரு மக்கள் திரட்சியின் வடிவமாகும். தேசியவாதம் அதன் வளர்ச்சியின் போக்கில், பல வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் எடுத்துள்ளது. அதை சரியான வார்த்தைகளில் வரையறுப்பது சாத்தியமில்லை. இருப்பினும், அதன் அர்த்தத்தையும் கருத்தையும் தேசியவாதத்தின் நன்கு அறியப்பட்ட வரலாறுகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்யலாம்.

தேசியவாதம் தொடர்பில் நன்கு அறியப்பட்ட அரசறிவியலாளரான பேராசிரியர் ஹான்ஸ் கோன், 'தேசியவாதத்தை ஒரு மனோநிலை. இதில் தனிநபரின் உச்ச விசுவாசம் தேசிய அரசு காரணமாக இருப்பதாக உணரப்படுகிறது' என்று வரையறுக்கிறார். கோன் மேலும் கூறுகையில், 'இது உயிருள்ள மற்றும் செயலில் உள்ள ஒன்றுபட்ட விருப்பம் ஆகும். இந்த விருப்பத்தை நாம் தேசியவாதம் என்று அழைக்கிறோம். இது பெரும்பான்மையான மக்களை ஊக்குவிக்கும் மற்றும் அதன் அனைத்து உறுப்பினர்களையும் ஊக்குவிக்கும் மனோநிலை ஆகும். தேசிய-அரசு என்பது அரசியல் அமைப்பின் சிறந்த மற்றும் ஒரே சட்டபூர்வமான வடிவம் என்றும், தேசியம் அனைத்து கலாச்சார இருப்பு பேணல் மற்றும் பொருளாதார நல்வாழ்வுக்கும் ஆதாரம் ஆகும்' என்று குறிப்பிடுகின்றார். தேசியவாதம் பற்றிய உரையாடல்களில் பல அரசறிவியலாளர்களும் தேசியவாதத்தை ஒருவரின் சொந்த தேசிய உணர்வுடன் கிட்டத்தட்ட சமன்படுத்துகின்றனர். உதாரணமாக, ஹேய்ஸ் எனும் அரசறிவியலாளர், 'தேசியவாதம் என்பது தேசிய உணர்வுடன் தேசபக்தியின் கலவையாக வரையறுக்கப்படலாம்' என்கின்றார். இதே கருத்தை பின்பற்றி ஸ்னைடர், 'தேசியவாதம் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் வாழும், ஒரு பொதுவான மொழியைப் பேசும், தேசத்தின் அபிலாசைகளை வெளிப்படுத்திய ஒரு இலக்கியத்தை வெளிப்படுத்தும், பொதுவானவற்றுடன் இணைந்திருக்கும் ஒரு குழுவின் மனம், உணர்வு அல்லது பழக்கவழக்கங்களின் நிலை' என்கின்றார். சர்வதேச விவகாரங்களுக்கான ராயல் நிறுவனத்தின் நிபுணர்கள் தேசியவாதத்தை ஒரு குறிப்பிட்ட தேசத்தைச் சேர்ந்த உணர்வு அல்லது பழக்கவழக்கத்துடன் மட்டுப்படுத்த இயலாதென வாதிடுகின்ன்றனர். அவர்கள், 'ஒரு தேசத்தின் வலிமை, சுதந்திரம் அல்லது செழிப்பை, தனியொருவருடையதாக இருந்தாலும், பிறருக்கானதாக இருந்தாலும் முன்னோக்கிச் செல்வதற்கான விருப்பமே தேசியவாதம்' என அடையாளப்படுத்துகின்றனர்.

தேசியவாதம் தொடர்பான அறிஞர்களின் கருத்தாடல்கள் தேசியவதத்தின் இருப்பு சார்ந்த சில அடிப்படை நியமங்களை அடையாளப்படுத்துகின்றது. குறிப்பாக தனிநபரின் உச்ச விசுவாசம், ஒன்றுபட்ட விருப்பம், கலாச்சார இருப்பு பேணல், பொருளாதார நல்வாழ்வு, முன்னோக்கி செல்வதற்கான விருப்பம் போன்ற விடயங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றது. தமிழ்த்தேசிய அரசியலில் இவ்விடயங்களின் ஈடுபாட்டை ஆழமாக நோக்குதல் அவசியமாகிறது.

ஓன்று, தனிநபரின் உச்ச விசுவாசம் தமிழ்த்தேசிய அரசியலில் கேள்விக்குறியாகவே உள்ளது. இங்கு தமிழரசியல் தரப்பிலாயினும், தமிழ் மக்கள் மத்தியிலாயினும் சுயநலதேவைகளுக்கு அப்பாலேயே ஏனையவற்றை பற்றிய கரிசணைகள் வெளிப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக சமகாலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட போது எரிபொருள் விநியோகஸ்தர்கள் சிலரின் நடத்தை மக்கள் நலனுக்கு புறத்தே அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இது தனிநபரின் தேசியம் சார்ந்த விசுவாசமின்மையையே வெளிப்படுத்துகின்றது. தேசியம் என்பது ஒவ்வொருவரதும் கடமை பொறுப்புக்களில் பிணைந்தது. தமது கடமை பொறுப்புக்களை தேசத்துக்கான விசுவாசத்துடன் புரிகையிலேயே அங்கு தேசம் பற்றிய உணர்வு உயிர்ப்புடன் பேண முடியும். தேசம் பற்றிய விசுவாமற்ற நிலைமைக்கு தமிழ்த்தலைமைகளின் விசுவாசத்தின் அளவும் பிரதான காரணமாகின்றது. தமிழ்த்தலைமைகள் தமிழ்த்தேசியத்தின் மீது விசுவாசத்தை வைத்திருப்பின் நெருக்கடியில் தமிழ் மக்களின் துன்பங்களோடு இணைந்திருப்பார்கள். எனினும் தமிழ் அரசியல் தலைமைகள் எவரையுமே மக்களோடு வரிசையில் காணமுடியவில்லை. வரிசைக்கு வரும் உள்ளூராட்சி உறுப்பினர்களும் காவல்துறையின் அனுசரணையோடு வரிசையை குழப்பி தங்கள் தேவையை நிறைவேற்றி கொண்டு செல்லும் அவலங்களே இடம்பெற்றிருந்தது.

இரண்டு, தேசியவாதத்தில் ஒன்றுபட்ட விருப்பம் முதன்மையான கூறாகின்ற போதிலும், தமிழரசியல் களத்தில் ஒன்றுபட்ட விருப்பம் பலவீனமான அம்சமாகவே காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு வரையில் ஏதொவொரு அழுத்தத்தில் தமிழரசியல் முடிவுகள் ஒன்றுபட்ட விருப்பமாக வெளிப்படுத்தப்பட்டது. எனினும் 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்ட முடிவிற்கு பின்னர் தமிழரசியலை நகர்த்தி செல்லும் தமிழரசியல்வாதிகளால் தமிழ்த்தேசியத்தின் ஒன்றுபட்ட விருப்பை இனங்காட்ட முடியவில்லை. வடக்கு-கிழக்கு தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தமது அரசியல் கொள்கைகளாக முன்னிறுத்தியுள்ள சமஷ்டி ஆட்சி ஆயினும், இரு தேசம் ஒரு நாடு ஆயினும், கூட்டு சமஷ்டி ஆயினும் பொதுவில் ஒரே கருத்துக்களையே வேறுபட்ட வடிவில் வழங்குகின்றது. எனினும் தமிழரிசியல் தீர்மானமெடுக்கும் சூழல்களில் அனைத்து கட்சிகளும் பிளவுபட்டு தமிழ்த்தேசத்தின் ஒன்றுபட்ட விருப்பை வெளிப்படுத்த முடியாதவர்களாகவே உள்ளனர். அதேநேரம் அத்தகைய இலக்கினை அடைய கடந்த ஒரு தசாப்தமாக தமிழ் கட்சிகள் கொண்டுள்ள வேலைத்திட்யங்கள் எவை? அவற்றை எப்போதாவது மக்கள் முன் நிறுத்தியுள்ளார்களா? அப்படியாயின் இவர்கள் முன்வைத்துள்ள சமஷ;டி, இருதேசம் ஒரு நாடு, கூட்டு சமஷ;டி ஆகிய அனைத்தும் போலி தேசத்தின் போலி வடிவங்களேயாகும். தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக முன்னிறுத்தப்படும் போலி சுலோகங்களாகவே இவை காணப்படுகின்றது. இத்தகைய கட்சிகளாலோ, அரசியல்வாதிகளாலோ அல்லது கட்சிகளின் தலைவர்களாலோ தமிழ் மக்களிள் அபிலாசைகளை ஒருபோதும் அடைய முடியாது.

மூன்று, கலாசார இருப்பு பேணும் செயற்பாடுகளும் தமிழரசியல் தரப்பில் பூச்சிய நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழரசியல் கட்சிகள் தேசியம் என்பதை அரசியல் சொல்லாடலுக்குள் சுருக்குவதால் தேசியத்தின் அடையாளமாகிய கலாசார இருப்பு சார்ந்த கரிசணையில் விழிப்பற்றவர்களாக உள்ளனர். தமிழ் அரசியல் கட்சிகள் எவையுமே தமக்கான கட்டமைக்கப்பட்ட கட்சி செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை. கட்சிகள் தனித்துவமாக மரபுரிமைகள் மற்றும் கலாசாரங்களை பாதுகாக்கும் வினைத்திறனான பொறிமுறைகளை கொண்டிருப்பதில்லை. தமிழர் தாயகங்களில் போதைப்பொருள் பயன்பாட்டின் வேகம் அதிகரித்து வருகின்றது. மாவட்ட செயலகங்களில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் பல சமூக ஆர்வம் கொண்ட செயற்பாட்டாளர்கள் போதைப்பாவனையிலிருந்து இளையோரை மீட்பதற்கான பொறிமுறையை உருவாக்க கோரிக்கைவிடுத்துள்ளனர். எனினும் தமிழரசியல் தரப்பு சமூகத்தின் பிரச்சினை சார்ந்து போதிய கவனத்தை எடுக்க தவறி வருகின்றனர்.

நான்கு, தேசியத்தில் பொருளாதாரம் சார்ந்த கரிசணையையும் முதன்மையான கூறாகவே பேராசிரியர் கான்ஸ் கோன் அடையாளப்படுத்துகின்றார். எனினும் தமிழரசியல் தரப்பு பொருளாதாரத்துக்கு சீரிய முக்கியத்துவத்தை கொடுக்கவில்லையென்பது இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி காலத்தில் தெளிவாக அறியக்கூடியதாக உள்ளது. தமிழ் மக்கள் விலைவாசி உயர்வாலும் பொருட்கள் தட்டுப்பாடுகளாலும் நெருக்கடிக்கு உள்ளாகிக்கொண்டிருக்கையில் வினைத்திறனான பொருளாதார தீர்வு பற்றி தமிழரசியல் தரப்பு தமிழ் மக்களுக்கு வழிகாட்ட தவறியுள்ளார். ஒரு சில கட்சிகள் விட்டுத்தோட்டம் மற்றும் எமது மண்ணுக்குரிய விவசாயத்தை முதன்மைப்படுத்தும் செயற்பாடுகளில் களமிறங்கிய போதிலும் எதிர்ப்பரசியலில் காட்டும் வேகம் மக்களின் பொருளாதார நல்வாழ்வுக்கான தேவையில் தமிழ் அரசியல் கட்சிகள் செய்ய தவறியுள்ளனர். தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் பொருளாதார பசுமை பற்றிய செயற்பாடுகளை தம்இயலுமைக்கேற்ற வகையில் செய்திருந்தார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஓரளவு அச்செயற்பாட்டை முன்னெடுத்த போதும் அவர்களின் செயற்பாட்டில் போதிய செறிவு காணப்படவில்லை. 13ஐ எதிர்த்து பெருந்திரளை கொண்டு போராட்டம் நிகழ்த்திய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒரு சில பாசறைகளில் விதைவழங்கலுடன் பொருளாதார நல்வாழ்வுக்கான செயற்பாட்டை கைவிட்டுள்ளது. ஏனைய தமிழரசியல் கட்சிகள் மத்திய அரசுடன் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான பரந்த உரையாடல்களுடனேயே தமது செயற்பாடுகளை இடைநிறுத்தி கொண்டுள்ளனர்.

ஐந்து, முன்னோக்கி செல்வதற்கான விருப்பம் என்பது தேசியவாதத்தின் கூறாக தேசியவாதம் தொடர்பான வரையறைகளில் நிபுணர்கள் அடையாளப்படுத்துகின்றனர். தமிழரசியல் தரப்பிடம் முன்னோக்கி செல்வதற்கான விருப்பம் காணப்படுகின்றதா என்பதை ஆய்வுக்குட்படுத்தியே தேட வேண்டியதாக உள்ளது. தமிழரசியல் தரப்பின் செயற்பாடுகள் எவையும் தமிழ் மக்களை தமிழ்த்தேசியத்தை முன்னோக்கி நகர்த்தும் செயற்பாடாக காணப்படவில்லை. சமஷ;டி கேட்டு, தனிநாடு கேட்டு போராடிய தமிழ்த்தேசியத்தை இன்று ஒற்றையாட்சிக்குள் கூடி வாழக்கோரும் நிலையிலேயே தமிழரசியல் தரப்பினர் செல்கின்றார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடந்த ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தில் முன்னகர்த்தப்ட்டிருந்த மாவட்டசபைகள், பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கிய ஏக்கிய இராச்சிய அரசியலமைப்புக்கு இணக்கம் தெரிவித்ததுடன் தமிழ் மக்களிடமும் அதனை பிரச்சாரப்படுத்தினார்கள். இன்று ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாகியுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகளை மேற்கொள்வாராயின் தேசிய அரசாங்க காலப்பகுதியில் வரையப்பட்டதையே மீளவும் தூசு தட்ட வாய்ப்புண்டு. எனவே தமிழரசியலும் தமது பின்னோக்கி செல்வதற்கான விருப்புடன் நகரும் போக்கே வெளிப்படுத்தப்படும்.

எனவே, தேசிய அடையாளப்படுத்தப்படும் தமிழரசியல் கட்சிகள் யாவும் தேசியத்தை மூலாமாகவே பூசியுள்ளதேயன்றி, தமது உயிரோட்டத்தில் இணைக்க தவறியுள்ளார்கள் என்பதே அடையாளப்படுத்தப்படுகின்றது. இனியும் அவ்வாறே தொடர்வார்களாயின் தமிழ் அரசியல் கட்சிகளிடமிருந்து தேசியத்தை பாதுகாப்பது தமிழ் மக்களின் முதன்மையான போராட்டமாக மாறவே வழிஉருவாக்கப்படும். தமிழ் மக்களின் இருப்பு பாதுகாப்பு என்பது தமிழ்த்தேசியத்தின் பாதுகாப்பை சார்ந்தாகும். தமிழ்த்தேசியம் என்பது தனித்து அரசியல் உரையாடல் மட்டுமல்ல அது வாழ்வியல் சார்ந்தது. அந்த வாழ்வியலோடு தமிழரசியல் பயணிக்கையிலேயே தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சுயநிர்ணய உரிமையும் பாதுகாக்கப்படும். தென்னிலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களிடமிருந்து வேரறுக்க நினைக்கும் தமிழ்த் தேசியத்தையே தமிழரசியல் கட்சிகளும் செய்வார்களாயின் தமிழ் மக்கள் முதலில் மாற்ற வேண்டியது தமிழ் அரசியல் கட்சிகளேயாகும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-