சர்வதேசரீதியாக அரசியல் பொருளாதார ஆதரவை திரட்டும் இலங்கை வெளியுறவு அமைச்சகம்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசாங்கம் தனது அரசியல் பொருளாதார நெருக்கடியிலிருந்து கடந்து செல்வதற்கான செயற்றிட்டங்களை விரைவுபடுத்தி வருகின்றது. குறிப்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மார்ச் ஆரம்பத்தில் இந்தியாவில் நடைபெற்ற புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடலின் கலந்து கொள்வதற்காக மார்ச்-2ஆம் திகதி முதல் 04ஆம் திகதி வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தர். தொடர்ச்சியாக மார்ச் இறுதியில் வெளிவிவகார அமைச்சர், சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவுடன் இணைந்து, தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் நலேடி பாண்டூரின் அழைப்பின் பேரில் மார்ச்21-25ஆம் திகதிகளில் தென்னாப்பிரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளனர். உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்திற்கு தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளதாக சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கம் அறிவித்த கொள்கைக்கு இணங்க இந்த விஜயம் அமைந்துள்ளது. இக்கட்டுரை குறித்த இரு சந்திப்புக்களினதும் இலங்கை அரசாங்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஓன்று, ரைசினா உரையாடல் இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை இந்த மாநாட்டை நடாத்தியது. மாநாட்டில் 'பிளவுபட்ட உலகத்தை குணப்படுத்துதல்' மற்றும் 'வாக்குறுதியின் கொத்துக்கள்: தொழில்நுட்பம் எவ்வாறு சமூகங்களை உயர்த்துவது' ஆகிய தலைப்புகளில் இரண்டு சிறப்பு குழு விவாதங்களில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பங்கேற்றிருருந்தார். குறித்த மாநாட்டில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரி ஜோசப் பொரெல், குவாட் அரசுகளின் (அவுஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா) வெளியுறவு மந்திரிகள், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் மற்றும் மெக்சிகோ, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவின் வெளியுறவு அமைச்சர்கள் ஆகியோர் பேச்சாளர்களாய், குழு உறுப்பினர்களாய் மற்றும் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். நட்சத்திர வரிசையில் இருந்தனர். ஜனவரியில் நடைபெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாட்டை விட பரந்த அளவில் உலகின் பல்வேறு மற்றும் அதிக பிரதிநிதிகளை கொண்ட மாநாடாக ரைசினா மாநாடு அமைந்தது. மாநாட்டின் ஒருபுறம், அமைச்சர் பல நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வழிகளில் கவனம் செலுத்தினார்கள். சில பக்க நிகழ்வுகளின் போது சிலோவேனியன், பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா அமைச்சர்களையும் அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் எழுச்சியை வெளிப்படுத்தும் ரைசினா மாநாட்டில் தென் பூகோளத்தின் பிரதான அரசாக இந்தியா இலங்கை சார்ந்து கொண்டுள்ள இணைப்பை அழுத்தி உரையாடியுள்ளது. இந்தியா வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், 'தெற்கு அண்டை வீட்டாருக்கான உதவி, துணை நிற்கும் போது, தண்ணீரை விட ரத்தம் போல் கெட்டியானது' எனக்குறிப்பிட்டார். குறிப்பாக ':இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஆதரவாக நிற்க என்ன செய்ய முடியும் என்பதை இந்தியா பார்ப்பது இயற்கையானது' என்று மேலும் கூறினார். ஜெய்சங்கரோ அல்லது இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய ஆளும் அரசாங்க அதிகாரிகள் இலங்கை மீதான தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது இது முதல் முறையல்ல. நீண்டகால வரலாற்று தொடர் பிணைப்பாகவே அமைகின்றது. மறுதளம் சிங்கப்பூரின் ஷங்ரிலா உரையாடலுக்கு நிகரான இந்தியாவின் ரைசினா உரையாடல் நிகழ்ச்சியில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, 'தேவைப்படும் நண்பன் உண்மையில் நண்பன்' என இந்திய-இலங்கை அரச நட்பின் ஆழமான பகுதியை வெளிப்படுத்தினார்கள்.
இரண்டு, இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தினை முன்னெடுப்பது குறித்து தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் குழு தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். முன்னர் புதுடில்லியில் இடம்பெற்ற ரைசினா உரையாடலின் பக்க நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் நலேடி பண்டோவுடன் சந்திப்பொன்றில் பங்கேற்றபோதே மேற்படி விடயம் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளது. குறித்த விஜயத்தில் உள்நாட்டில் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது பற்றிய தென்னாபிரிக்காவின் கடந்த கால அனுபவங்கள் தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தில் இலங்கை அமைச்சர்கள், தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததுடன், தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் நலேடி பாண்டூர் மற்றும் நீதி மற்றும் அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ரொனால்ட் லமோலா ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை மேற்கொண்டனர். மேலும், தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தாபோ எம்பெக்கி மற்றும் முன்னாள் அரசியலமைப்பு மேம்பாட்டு அமைச்சரும், தலைமைப் பேச்சுவார்த்தையாளர்களில் ஒருவருமான ரோல்ப் மேயர் ஆகியோரையும் சந்தித்து உரையாடியுள்ளனர். தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி ரமபோசாவுடனான சந்திப்பின் போது, ரணில் விக்கிரமசிங்கவுடனான தனது நட்பை அன்புடன் நினைவு கூர்ந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார். மேலும் இலங்கைக்கு நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு உதவும் நோக்கில், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தென்னாபிரிக்கா அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மார்ச் மாதத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புக்களும், அரசியல் இராஜதந்திர செயற்பாடுகளும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் கனதியான நிலையினை பெறுகின்றது. இவ்நிகழ்வுகளின் அரசியல் முக்கியத்துவத்தை ஆழமாக நோக்குதல் அவசியமாகின்றது.
முதலாவது, இலங்கை மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் மார்ச் மாதம் பிரதானமானதாகும். 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌணிக்கப்பட்ட பின்னர் 2012களில் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போர்க்குற்ற தீர்மானமும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கையும் முன்னெடுக்கப்பட்டது முதல் மார்ச் மாதம் சர்வதேச ரீதியாக இலங்கை அரசாங்கத்துக்கான நெருக்கடியான காலமாகவும், ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச ஆதரவை குறிக்கும் மாதமாகவும் முதன்மை பெறுகின்றது. எனினும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை இலங்கை அரசாங்கம் கடந்த பத்தாண்டு கால நிலைமைகளை மாற்றி இலங்கைக்கு சர்வதேச ஆதரவை வெளிப்படுத்தும் காலமாக வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் சர்வதேச அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் சர்வதேச மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய இலங்கை உறவை மனித உடலின் உயிர்ப்பில் பிரிக்க முடியாத இரத்தத்துடன் ஒப்பிட்டுள்ளமையானதும், இலங்கைக்கான நெருக்கடி காலப்பகுதியில் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவாகவே காணப்படுமென்ற பெரும் உறுதியளித்துள்ளமை கவனிக்கத்தக்கதாகும். அதேவேளை நல்லிணக்கத்துக்கான நாடகத்தை தென்னாபிரிக்காவில் நிகழ்த்தி தென்னாபிரிக்கா ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளமை இலங்கை அரசாங்கத்தின் வெற்றியாகவே அமைகின்றது.
இரண்டாவது, ஈழத்தமிழ் அரசியல் சர்வதேச தளத்தில் கையறுநிலைக்கு செல்லும் நிலையையே அலி சப்ரியின் 2023-மார்ச் அரசியல் விஜயங்கள் வெளிப்படுத்துகின்றது. நல்லிணக்கத்துக்கான உரையாடல் இடம்பெறும் சமதளத்தில், இலங்கையின் தேசிய இனங்களிடைய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இலங்கை அரச கட்டமைப்பான தொல்லியல் திணைக்களம் தமிழர் பூர்வீக நிலங்களில் தமிழர்களின் இறைவழிபாட்டை நிர்மூலமாக்கி பௌத்த விகாரை நிர்மாணித்துள்ளது. எனினும் ஈழத்தமிழரசியல் அதனை அரசியல் இராஜதந்திர நகர்வுடன் சர்வதேச அரங்கில் முன்னிறுத்த முடியாத நிலையில் உள்ளார்கள். தமிழ்த்தேசியத்தின் திரட்சி சமீபகாலமாக திரணற்ற காணப்படுகின்றது. வடக்கு-கிழக்கு தமிழர் தாயங்களில் அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக தொல்லியல் திணைக்களத்தின் வடிவத்தில் நில அபகரிப்பு தொடர் கதையாக அரங்கேறுகின்ற போதிலும் தமிழ்த்தேசியம் பலமான திரட்சியுடன் தம்எதிர்ப்பை வெளிப்படுத்த திராணியற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.
மூன்றாவது, தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான உரையாடல் இதுவரை சர்வதேசம் முன்வைக்கும் சர்வதேச நீதி விசாரணையை புறந்தள்ளி உள்ளக விசாரணைக்கான சர்வதேச ஆதரவை குறிக்கும் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர நகர்வாகவே அமைகின்றது. தென்னாபிரிக்கா சந்திப்பில் தனக்கு 'சில நுண்ணறிவு உள்ளீடுகள்' கிடைத்ததாக அலி சப்ரி ட்வீட் செய்துள்ளார். மேலும் 'நம்பகமான மற்றும் வெளிப்படையான உள்நாட்டு நல்லிணக்க நிகழ்ச்சி நிரல் சார்ந்த முயற்சிகளை சமாளிக்க தீர்வாக இருக்கும்' எனவும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு பங்கேற்புடன் கூடிய நீதித்துறை செயல்முறை மூலம் வழங்கப்படும் பொறுப்புக்கூறும் நீதியின் அடிப்படையில் இன நல்லிணக்கத்தை அடைவதற்கான பொறிமுறைகளை இலங்கை மீது ஐ.நா மனித உரிமைகள் முன்னிறுத்துகின்றது. எனினும் அம்முயற்சிகளை இலங்கை கண்டித்துள்ளது. அத்துடன் இலங்கை நல்லிணக்க பொறிமுறையை அமைப்பதற்கு முயற்சிப்பது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை சமூகம் அதைச் செயல்படுத்த முடியாத அளவுக்கு பிளவுபட்டுள்ளதால் கைவிடப்பட்டது. சர்வதேச மனித உரிமைகள் பரப்புரையைத் தூண்டுவதற்கு தற்காலிகத் தேவை ஏற்படும் போது நல்லிணக்க பொறிமுறை முன்மொழியப்பட்டு அச்சுறுத்தல் குறைந்த பிறகு கைவிடப்படும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தம் காரணமாகவே இது 2015 மற்றும் 2022 இல் முன்மொழியப்பட்டது. ஆனால் அது பின்பற்றப்படவில்லை. இது இப்போது முதன்மையாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை மகிழ்விப்பதற்காக முன்வைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அதை அமைக்க எந்த நோக்கமும் இல்லை.
எனவே, இலங்கை அரசாங்கமானது மார்ச் மாத அரசியல் நிகழ்ச்சி நிரலில் கடந்த காலங்களில் சர்வதேச ரீதியாக நெருக்கடிகள் வந்த முன்அனுபவத்தை 2023இல் முழுமையாக மாற்றியுள்ளது என்பதுவே நிதர்சனமாகும். இது இலங்கை வெளியுறவுத்துறையின் நேர்த்தியான இராஜதந்திர சுற்றுப்பயணங்கள் மாத்திரமின்றி ஈழத்தமிழரசியலின் கையறு நிலையின் வெளிப்பாடே ஆகும். குறிப்பாக இவ்வருடம் உள்ளூராட்சி தேர்தலை மையப்படுத்தி பிளவுற்ற தமிழ்த்தேசிய அரசியல் தரப்பினர் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரள தவறியுள்ளார்கள் என்பது நிதர்சனமான செய்தியாகவே அமைகின்றது.
Comments
Post a Comment