பொதுக்கட்டமைப்பு மாத்திரம் தமிழர்கள் மீதான அரச இயந்திரத்தின் ஆக்கிரமிப்பை தடுக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர்களின் அரசியலில் பொதுக்கட்டமைப்பு பற்றிய உரையாடல்கள் காலத்துக்கு காலம் மீள மீள சுழற்சி பெறுகின்றது. குறிப்பாக ஈழத்தமிழர்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும் காலங்களில் பொதுக்கட்டமைப்பு பற்றிய உரையாடல்களும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமுகத்தினரிடையே எழுச்சி பெறுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. சமகாலத்தில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டமை மற்றும் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய சிவலிங்கம் இடிக்கப்பட்டமை போன்ற பௌத்த ஆக்கிரமிப்புக்கள் குறுகிய கால இடைவெளியில் நிகழ்ந்ததை தொடர்ந்து மீள பொதுக்கட்டமைப்புக்கான உரையாடல் புத்தெழுச்சி பெற்றுள்ளது. அதன் விளைவாக கடந்த ஏப்ரல்-09அன்று அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை தமிழர்கள் மீதான அரசு இயந்திரத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக பொதுக்கட்டமைப்பு உருவாக்கம் மாத்திரம் தீர்வை வழங்க போதுமானதாக அமையுமா என்பதனை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை அரச இயந்திரத்தின் நெருக்கடிகள் மற்றும், பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் வவுனியாவிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஏப்ரல்-09அன்று இடம்பெற்றது. இதன்போது, தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், வனவளத்திணைக்களத்தால் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை மற்றும் தொல்பொருள்திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பான தரவுகளை சேகரித்து அவற்றை துல்லியமாக இனம் காண்பதற்காக 7 பேர் கொண்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மேலும், அரச இயந்திரத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் சாத்வீகப்போராட்டத்தை முன்னெடுப்பதற்காக மற்றொரு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் மதகுருமார்கள், தமிழ் அரசுக் கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சி, தமிழர் விடுதலைகூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் போன்ற அரசியல் கட்சிகளும், பொது அமைப்பினரும் கலந்துகொண்டனர்.

இத்தகைய கலந்துரையாடலும் பொதுக்கட்டமைப்பு உருவாக்கமும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அவசியமானதேயாகும். தேசியம் என்பது மக்களின் திரட்சியிலேயே கட்டமைக்கப்படக்கூடியதாகும். எனினும் ஈழத்தமிழர்களிடையே 2009களுக்கு பின்னர் திரட்சி என்பது சாத்தியமற்றதாக காணப்படுகின்றது. அரசியல் கட்சிகளின் பிளவு மற்றும் சீரற்ற பொதுக்கட்டமைப்புக்களிள் உருவாக்கம் என்பன தொடர்ச்சியாக தமிழ் மக்களின் திரட்சியை உறுதி செய்வதில் சவாலாக அமைகின்றது. உலகில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் குரலாய், அரசிற்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்துக்குமிடையான தொடர்பாளராக அத்தேசிய இனத்தின் ஐக்கியத்தின் வெளிப்பாடாக அமைக்கப்படும் பொதுக்கட்டமைப்புக்களே செயற்பட்டு வருகின்றது. சர்வதேசத்துக்கு மக்களினுடைய உரிமைகளை மையப்படுத்திய நகர்வுகளையும் அவ்அமைப்புக்களே மேற்கொண்டு வருகின்றது. எனினும், ஈழத்தமிழர் அரசியலை பொறுத்த வரை அப்படியானதொரு அமைப்பு நிலைபெறவில்லை என்பதே உண்மை ஆகும். ஈழத்தமிழர்களிடையே நெருக்கடிகளை மையப்படுத்தி பொதுக்கட்டமைப்புக்கான உரையாடல் மேலெழுகின்ற போதிலும், நெருக்கடி காலத்திற்குரியதாக மாத்திரமே அவ்உரையாடல் காணப்படுகின்றதேயன்றி பொதுக்கட்டமைப்புக்குரிய முழுமையை பெற தவறி வருகின்றது. இப்பின்னணியிலேயே தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சமகாலத்தில் உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பும் நோக்கப்படுகின்றது.

ஈழத்தமிழ் அரசியலிடையே காணப்படும் பொதுக்கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பான முன்னைய அனுபங்களிலிருந்து, இன்றைய இலங்கை அரசு இயந்திரத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் பொதுக்கட்டமைப்பு உருவாக்கம் என்ற ஒன்றை உரையாடுவது மாத்திரம் போதுமானதாக அமையுமா என்பதே பொதுப்பரப்பில் விசனமாக அமைகின்றது. ஒடுக்குமுறைக்கு எதிராக கூட்டுக்கள் மாத்திரம் போதுமானதாக அமையாது, திரட்சியுடன் ஒட்டுமொத்த தமிழ்த்தரப்பின் வினைத்திறனான செயற்பாடும் அவசியமானதாகின்றது. அதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

ஒன்று, 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான ஈழத்தமிழர்களின் கொதிநிலை என்பது நீர்க்குமிழி வடிவத்திலேயே காணப்படுகின்றது. நெருக்கடி ஆரம்பித்ததும் எதிர்ப்புக்கள் உயரளவில் வெளிப்படுத்தப்பட்டு, சடுதியாகவே தீர்வு கிடைக்கப்பெறாத நிலையிலேயே அவ் எதிர்ப்பு நீர்த்து போகும் நிலைமைகளே காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டங்களில் ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபி உடைப்புக்கு எதிரான போராட்டம் மாத்திரமே அமைகின்றது. கேப்பாபிலவு உட்பட சில காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்ற தோற்றத்தை வெளிப்படுத்துகின்ற போதிலும் காணி மீட்பு முழுமை பெறவில்லை என்பதுவே நிதர்சனமானதாகும். இவ்வாறான முன்அனுபவங்களை கொண்டே தொல்லியல் திணைக்கள ஆக்கிரமிப்பை பிரதானப்படுத்தி தற்போது கட்டமைக்கப்பட்டுள்ள பொதுக்கட்டமைப்பின் செயற்பாடுகளும் திட்டமிடப்பட வேண்டும். வடக்கு-கிழக்கில் நிகழும் தமிழர்களுக்கு எதிரான அரசு இயந்திரத்தின் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் பெருந்திரளுடன் தொடர்ச்சியானதாக அமைய வேண்டும். சர்வதேச அனுபவங்களையும் உள்வாங்க வேண்டியது அவசியமாகும். எடுத்துக்காட்டாக 2023 ஜனவரியில் இஸ்ரேல் அரசாங்கத்தின் நீதித்துறை சீர்திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் போராட்டம் ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமைகளிலேயே திட்டமிடப்பட்டு நகர்த்த்ப்பட்டிருந்தது. ஆயிரமாய் ஆரம்பித்த போராட்டக்காரர்கள் இன்று இலட்சமாக ஒன்றிணைந்துள்ளார்கள். நான்கு மாதங்களாக இடைவிடாது இஸ்ரேல் மக்களின் போராட்டம் பெருந்திரளாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான வகையில் ஈழத்தமிழர்களின் அரச இயந்திரத்தின் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை தொடர்ச்சியாக பேண வேண்டியது அவசியமாகிறது. அதற்கு நேர்த்தியான திட்டமிடலும் அவசியமாகின்றது. மாறாக ஒரு நாள் அல்லது ஒரு வார பேரணி என்பது முன்அனுப விளைவுகளையே மீள அளிப்பதாகவே அமையக்கூடியதாகும்.

இரண்டு, போராட்டம் என்பது மக்களுடன் மட்டுப்படுத்ததாக அமையக்கூடியது. தமிழரசியல் பிரதிநிதிகள் பாதுகாப்பான போராட்ட நெறிமுறைகளுக்கு வெளியே வந்து முனைப்பான சாத்வீக போராட்டங்களில் ஈடுபடுதல் வேண்டும். பொதுக்கட்டமைப்பு அதனை ஊக்கப்படுத்தல் வேண்டும். 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் ஈழத்தமிழர்களின் பெரும்பாலான போராட்டங்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு இடம்பெறும் பேரணிகளாகவும் கவனயீர்ப்பு போராட்டங்களாகவுமே அமைகின்றது. மாறாக எழுக தமிழ் மற்றும் 13ஆம் திருத்ததுக்கு எதிரான போராட்டம் என்பன தமிழ் மக்கள் பேரவை மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் ஒழுங்கமைக்கப்பட்டதாக அமைந்தது. எனினும் போராட்டங்களின் உச்ச எல்லை என்பது பேரணியுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைகின்றது. ஈழத்தமிழரசியலின் தற்போதைய தலைவர்களிடையே சாத்வீக போராட்டம் என்பதுள் பேரணி மற்றும் பாராளுமன்றத்தின் ஆவேச உரைகள் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டு காணப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றிலேயே முன்னைய தமிழரசு கட்சியின் ஸ்தாக தலைவர்கள் செல்வநாயகத்தின் காலிமுகத்திடல் போராட்டம், இரும்பு மனிதன் நாகலிங்கத்தின் கச்சேரி முடக்க போராட்டம் மற்றும் செல்வநாயகம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ராஜினாமா செய்தமை என முனைப்பான சாத்வீக போராட்டங்களுக்கான அனுபவமாக காணப்படுகின்றது. எனினும் இன்றைய தமிழரசியல் தலைவர்கள் யாருமே கடினமான போராட்டங்களை தேர்வு செய்ய தயாரில்லாத நிலையிலேயே காணப்படுகின்றார்கள். உரிமைக்காக போராடும் தேசிய இனத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்ற எண்ணங்களுக்கு புறத்தேயே தமிழரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றது. நீதிமன்ற தீர்ப்பை மீறி அரச இயந்திரம் ஆக்கிரமிப்பை நிகழ்த்துதாயின், சட்ட புறக்கணிப்பு போராட்டம், பாராளுமன்ற அமர்வு புறக்கணிப்பு போராட்டம், பாராளுமன்றத்துக்குள்ளே உண்ணாவிரத போராட்டம், சிறை நிரப்பு போராட்டம் என சட்டத்தை மையப்படுத்திய போராட்டங்களினை ஒழுங்குபடுத்தி நடாத்துவதே தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கடமையாக அமைய வேண்டும். மாறாக தேர்தல் காலங்களில் சிங்கள பெரும்பாண்மை பாராளுமன்றம் எனக்குறை கூறும் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு நீதியை தாருங்கள் என வீரவசனங்களை பேசுவதால் தமிழர்களின் ஒடுக்குமுறைக்கெதிரான எவ்வித மாற்றங்களும் வரப்போவதில்லை. தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் போராட்டமானது கவனயீர்ப்பு போராட்டம் என்ற வரையறையை தாண்டி பயணிக்க வேண்டும். தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காக முழுமையாக உண்ணாவிரதப்போராட்டத்தை நகர்த்தவில்லையென குற்றஞ்சாட்டும் ஈழத்தமிழர்கள், தமது அரசியல் பிரதிநிதிகளிடமும் அத்தகைய கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். புறமொதுங்குவரை அரசியல் அரங்கிலிருந்து அகற்றும் வல்லமை தமிழ் மக்களிடம் காணப்பட வேண்டும்.

மூன்று, அரச இயந்திரத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாட்டில் புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கும் பிரதான வகிபாகம் காணப்படுகின்றது. தமிழ்த்தேசிய இனத்தின் இனப்பரம்பலானது வடக்கு-கிழக்கில் பெருமளவில் குறைவடைந்து வருகின்றது. யுத்த இழப்புக்களுடன் பெருமளவிலானோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளமையும் தமிழ்த்தேசியத்தின் இனப்பரம்பல் குறைவடைந்து செல்வதற்கு ஓர் காரணமாகின்றது. மறுதளத்தில் தேசிய இனப்பிரச்சினையை சர்வதேசத்தில் பலப்படுத்துவதற்கு புலம்பெயர் தரப்பின் அதிகரிப்பே காரணமாகியது. இப்பலத்துடன் புலம்பெயர்வால் ஏற்படும் பலவீனத்தையும் சீர்செய்ய வேண்டும். பெருமளவில் இன்று இளையோர் புலம்பெயர்வில் நாட்டம் காட்டுவதில் வேலையின்மை பெரும் சாவாலான காரணியாக அமைகின்றது. இச்சவாலான காரணியை சீர் செய்யக்கூடிய வல்லமை புலம்பெயர் சமூகத்திடம் காணப்படுகின்ற போதிலும், அதுசார்ந்த முனைப்பான செயற்பாட்டை புலம்பெயர் சமூகம் வெளிப்படுத்த தவறியுள்ளனர். நாவற்குழி தவிர்ந்த வடக்கு-கிழக்கின் பெருமளவிலான சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பானது வடக்கு-கிழக்கு எல்லையோர கிராமங்களை மையப்படுத்தியே இடம்பெறுகின்றது. இதற்கு பிரதான காரணம் எல்லைக்கிராமங்களில் மக்களின் பரம்பல் குறைவாகவே காணப்படுகின்றது. நூற்றுக்கும் குறைவான குடித்தெகையே காணப்படுகின்றது. இதற்கு பிரதான காரணமாக அமைவது வசதியின்மை காரணமாக எல்லைக்கிராம மக்கள் எல்லைக்கிராமங்களிலிருந்து வெளியேறுகின்றமையாகும். இதனை சீர்செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் சமூகத்திடம் காணப்படுகின்றது. எல்லைக்கிராம மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அப்பால், அப்பிரதேசத்தின் வசதி வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய வகையில் தொழிற்சாலைகளை நிறுவுவதே ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையும். வெறுமையான பிரதேசங்களை ஆக்கிரமிப்பது இலகுவானதாகவே அமையும். அதனையே குடியேற்றம் என்ற பெயரில் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கமும் வடக்கு-கிழக்கில் செயற்படுத்தி வருகின்றது.

எனவே, பொதுக்கட்டமைப்பு தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் அவசியமானதே ஆகும். அதேவேளை பொதுக்கட்டமைப்பின் செயற்பாடு வினைத்திறனாக அமைகையிலேயே பொதுக்கட்டமைப்பின் இலக்கு நகரக்கூடியதாக அமையும். மாறாக நெருக்கடிக்கான உரையாடலாகவே பொதுக்கட்டமைப்பு காணப்படுமாயின், வாரந்தோறும் புதிது புதிதாக நெருக்கடிகள் உருவாகுகையில் நெருக்கடிகளை மையப்படுத்திய பொதுக்கட்டடைப்பு உரையாடலே மீதமாகும். பொதுக்கட்டமைப்பினுடைய எழுச்சியானது திரையில் காணும் எழுச்சி போல ஒரு சில நிமிடங்களுக்கானதோ அல்லது ஒரு சில பிரச்சினைகளை மையப்படுத்தியதோகாவோ அமையாது என்ற தெளிவினை பொதுக்கட்டமைப்புக்கான உரையாடலுக்கு முன்னர் புரிந்து கொள்ளல் அவசியமாகின்றது. பொதுக்கட்டமைப்பானது தமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தமிழ்த்தேசிய இனத்தின் ஐக்கியத்தின் வெளிப்பாடாகும். இதில் யாவரும் முழுமையான மற்றும் உயரிய பங்களிப்பை தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலை என்ற ஒற்றைக்கோரிக்கைக்காக முன்வைக்க வேண்டும். அவ்வாறான சூழலியே பொதுக்கட்டமைப்பு தமிழ் மக்கள் மீதான அரச இயந்திரத்தின் ஒடுக்குமறைக்கெதிரான நகர்வில் சற்றேனும் முன்னேறக்கூடியதாக அமையும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-