பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை ஈழத்தமிழர் புதிய அணுகுமுறையில் எதிர்கொள்ள வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட (ATA) முன்வரைபு ஜனநாயக விழுமியங்களை மீறியுள்ளதாக உள்ளூர் மற்றும் சர்வதேசரீதியிலான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. ஏப்ரல்-25அன்று வடக்கு-கிழக்கில் நடைபெற்ற ஹர்த்தாலிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கண்டனங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது. முன்னைய பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் (PTA) தாண்டி உயரளவில் ஜனநாயக மற்றும் அடிப்படை மனித உரிமைகளை தடை செய்யக்கூடிய உள்ளடக்கங்களை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்வரைபின் ஏற்பாடுகள் கொண்டிருப்பதாகவே தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகள் பிராச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். இந்த தளத்தில் ஈழத்தமிழரசியல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கான எதிர்வினையை இலங்கை தேசியத்துடன் ஒருங்கிணைக்காத வகையில் முன்னெடுக்க வேண்டிய தேவை அடையாளப்படுத்தப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டமானது கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர்களின் சுதந்திரமான வாழ்வியலை முழுமையாக தடைசெய்திருந்தது. ஒப்பிட்டு அடிப்படையில் நிராகரிக்கும் கோரிக்கையானது பின்னையதை நிராகரித்து முன்னையதை பேண வழிகோலக்கூடியதாகவும் அமைகின்றது. இக்கட்டுரை புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட முன்வரைபில் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற விடயங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தினுடாக ஈழத்தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளமையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான், 'ஐ.நா.வின் எல்லாவற்றின் இதயத்திலும் பயங்கரவாதம் தாக்குகிறது என்றும் அது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உலகளாவிய அச்சுறுத்தலாகும். எனவே உலகளாவிய பதில் தேவை' என்று வலியுறுத்தினார். எனினும் இலங்கையில் பயங்கரவாதத்தை நிர்வாகிக்க உருவாக்கப்படுவதாக கூறும் சட்டங்கள் பயங்கரவாதம் ஏற்படுத்தும் ஆபத்துக்களினையும் தாண்டிய கொடிய பாதிப்புக்களை குடிமக்களுக்கு ஏற்படுத்துகின்றது. இலங்கையில் 1979ஆம் ஆண்டு தற்காலிக நடைமுறையாக வந்து நாற்பதாண்டுகளுக்கு மேலாக நிலைத்துள்ள பயங்கரவாத தடைச்சட்டமும், மார்ச் 17 அன்று, இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் கோபி அன்னனின் அறிக்கையில் உள்ள அடிப்படை மதிப்புகளை அழிப்பதாகவே அமைகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்வரைபு ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன. 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் அழிவை ஏற்படுத்தியதாக கடந்த 40 ஆண்டுகளாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் அரசாங்கங்களின் சமீபத்திய முயற்சியே புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட ஏற்பாடுகளாகும். 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அதிகப்படியான விதிகளின் விளைவாக, எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டன. மிகக் கொடூரமான மற்றும் வழமையான சித்திரவதைகள் மற்றும் பல தசாப்தங்களாக விசாரணைகள் முடிவடையாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தமிழ் குடிமக்கள் பல தசாப்த கால யுத்தத்தின் போது அனுபவித்தனர். மிக சமீபத்தில், மனித உரிமைகள் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர் வசந்த முதலிகே ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியமை, அரசியல் எதிரிகள் மற்றும் குடிமக்கள் எதிர்ப்பாளர்களை குறிவைக்க அரசாங்கத்தால் எவ்வாறு அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தென்னிலங்கை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பின்னணியில் பொது விழிப்புணர்வு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள் அதிகரித்துள்ள இந்த சூழலில்தான், அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மாற்றாக முன்மொழிந்துள்ளது. இது ஒரு சில சீர்திருத்தங்களை வழங்குகிறது. ஆனால் உண்மையில் குடிமக்களின் உரிமைகள் மற்றும் தேசத்தின் ஜனநாயக வாழ்க்கைக்கு புதிய மற்றும் இன்னும் பெரிய அச்சுறுத்தல்களை அறிமுகப்படுத்துகிறது என்ற கண்டனத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச பரப்பில் ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தமிழ் பரப்பில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது பெயர் மாற்றீடு செய்யப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் இன்னொரு வடிவமாக அலசுவதே ஆரோக்கியமான எதிர்வினையாகும். பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் பகுப்பாய்வு, முன்மொழியப்பட்ட சட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மிகவும் நுட்பமான பதிப்பு என்பதை வெளிப்படுத்துகிறது. இதை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சாதாரண குற்றவியல் சட்டங்களை பயங்கரவாத செயலாக முன்மொழிகின்றது. இவ்ஏற்பாடுகள் கடந்த காலங்களிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் மீது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் சாதாரண குற்றவியல் சட்டத்துக்கு உட்படாத போதிலும் அவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 2020ஆம் ஆண்டு முன்னரைப்பகுதியில் கொரோனா நெருக்கடி காலப்பகுதியில் கிளிநொச்சி பகுதியில் பெருந்தொகையானோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அக்காலப்பகுதியில் பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டிருந்தான். அச்சிறுவனின் கைதின் பின்னணியாக அமைவது, ஒருவர் புலம்பெயர் உறவுகளிடமிருந்து வாழ்வாதார நிதி உதவிகளை பெற்றுள்ளார். வாழ்வாதார உதவிகளை வழங்குபவர் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளோடு தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் வாழ்வாதார உதவி பெறுபவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் நேரத்தில் அவரோடு துவிச்சக்கரவண்டியில் சென்றது குற்றமாக கருதி பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவனும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விசாரணையின்றி வருடக்கணக்கில் சிறைவைக்கப்பட்டான். தமிழர்கள் மீது கடந்த காலங்களிலும் பயங்கரவாத தடைச்சட்டம் குற்றமின்றியே கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவுகளானது பயங்கரவாத தடைச்சட்டத்தின் தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு அதிக வாய்ப்புள்ள அசாதாரண நிர்வாக அதிகாரங்களை நாடுதல் மற்றும் சாதாரண குற்றங்களை பயங்கரவாதச் செயல்களாகக் காட்டுதல் போன்ற ஏற்பாடுகளுக்கு எழுத்திலான அனுமதியை புதிதாக வழங்குகின்றது.

இரண்டாவது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவில் பயங்கரவாதத்துக்கு அளிக்கப்பட்டுள்ள வரையறை அடக்குமுறைக்கான புதிய வடிவமாக விமர்சிக்கப்படுகின்றது. இலங்கை என்றும் பெயரிடலுக்குள் பயணித்த மரபுகள் காணப்படுவதில்லை. அதனை தாண்டி ஆட்சியாளர்களின் நலனுக்கேற்ப அதிகாரங்களும் சட்டங்களும் வளைந்து செல்லும் இயல்பே பேணப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் பரந்த வரையறையானது, பயங்கரவாதம் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது, தடுப்புக்காவல் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுபவர்களில் நிறைவேற்று அதிகாரத்திற்கு பரந்த சுதந்திரத்தை வழங்குகிறது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் பயங்கரவாதத்தின் வரையறை மூன்று தனித்தனி நிபந்தனைகளின் வரம்பிற்கு உட்பட்டது என்று சர்வதேச தரநிலைகள் பரிந்துரைக்கின்றன. அதாவது, நடைமுறையில் உள்ள சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு உடன்படிக்கைகளில் காணப்படும் அடையாளம் காணப்பட்ட தூண்டுதல் குற்றத்தை உள்ளடக்கியது. உள்நோக்கத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும். மற்றும் மக்களை அச்சுறுத்துதல் அல்லது அரசாங்கம், சர்வதேச அமைப்பை கட்டாயப்படுத்தி பயங்கரவாத நிலையை தூண்டுதல் என்பதாக அமைகின்றது. எனினும் இலங்கையில் பயங்கரவாத சட்டங்களில் பயங்கரவாதத்தின் வரையறைகள் மற்றும் நடைமுறையாக்கங்கள் தொடர்ச்சியாகவே இந்த சர்வதேச தரங்களை உள்வாங்கியதில்லை. இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் பலவும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையின் எண்ணங்களுக்குள்ளேயே பல கைதுகள் அரங்கேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தொடர்ந்து பல்கலைக்கழக சோதனைக்குள் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மாணவர் ஒன்றிய தலைவரின் கைதுக்கு கூறப்பட்ட காரணம் மாணவர் ஒன்றிய தலைவரின் அலுவலகத்தில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்ட பதாகைகள் காணப்பட்டமையானது விடுதலைப்புலிகள் மீளுருவாக்கத்துக்கு ஒப்பானது என்பதாகும். அன்றையக காலப்பகுதியில் இக்கைது தொடர்பாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிதிகள் பாதுகாப்பு செயலாளரிடம் சந்திப்பை மேற்கொண்ட போது இதெல்லாம் பயங்கரவாத செயலா என்ற சாரப்பட கருத்துரைத்தார். எனினும் மாணவர் ஒன்றியத்தினரின் விடுதலை தொடர்பில் காத்திரமான செயலாற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் அடக்குமுறைக்கெதிரான ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாத செயலாக முத்திரை குத்தும் அனுபவத்தையும் ஒடுக்குமுறைகளையும் ஈழத்தமிழர்கள் நீண்டகாலமாகவே எதிர்கொண்டு வருகின்றார்கள்.

மூன்றாவது, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னைய பாதிப்புகளுக்கான பரிகாரங்களை கோருவதாகவும் அமைதல் வேண்டும். முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிரான எதிர்வினைகள் யாவுமே கடந்த பயங்கரவாத தடைச்சட்டத்துடனான ஒப்பிடல்களுடன் அதன் அடக்குமுறைத் திறனிற்கு அப்பால் சென்றதாகவே விமர்சிக்கிறார்களேயன்றி கடந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் துயரை வெளிப்படுத்தவும் ஏற்றுக்கொள்ளவும் தயாரில்லாத நிலைமைகளே காணப்படுகின்றது. பயங்கரவாதம் மற்றும் பிற மோசமான விதிகளின் மோசமான வரையறையின் விளைவாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் துஷ்பிரயோகத்தால் ஏற்பட்ட ஆழமான இழப்பு மற்றும் தீங்குகளின் பதிவு இருந்தபோதிலும், அதன் முன்மொழியப்பட்ட சீர்திருத்தம் அதன் முந்தைய நியாயமற்ற நிகழ்வில் இழப்பீடுகளை அங்கீகரிக்கவோ அல்லது இழப்பீடு வழங்கவோ தவறிவிட்டது. சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளின்படி, சட்டத்திருத்தங்கள் கடந்த கால தவறுகளடிப்படையில் அமையுமாயின் புதிய சட்ட திருத்தம் முன்னைய சட்டத்தால் இடம்பெற்ற தவறுகளுக்கு பரிகாரம் வழங்குவதுடன், எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் இடம்பெறாமையை உறுதிப்படுத்த வேண்டும். எனினும் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது முன்னைய பயங்கரவாத தடைச்சட்டத்தால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பரிகாரம் வழங்குவதை மறுதலித்துள்ளதுடன், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தன்னிச்சையாக பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. முன்மொழியப்பட்டுள்ள சட்ட முன்மொழிவானது, குடிமக்களைப் பாதுகாக்கத் தவறுவது மட்டுமல்லாமல், அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் சட்டமாகவே அமைகின்றது. எனினும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுகளுக்கு எதிரான பிராச்சரத்தை முன்னெடுக்கும் தென்னிலங்கை தரப்பினரும் கடந்த கால பயங்கரவாத தடைச்சட்டத்தால் தமிழர்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களுக்கு பரிகாரத்தை வழங்க முன்வர தயாரில்லை என்பதே உறுதியாகிறது.

எனவே, முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது, தமிழர்களுக்கும் ஆபத்தின் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனினும் தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்குள் ஈழத்தமிழர்களின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான போராட்டம் அமைவது ஆபத்தானதாகும். சமகாலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் வருகையானது, தென்னிலங்கையின் அரசியல்-பொருளாதார நெருக்கடிக்கு எதிரான ஜனநாயக போராட்டத்தை ஒடுக்குவதற்கான முனைப்பாகும். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) ஏற்பாடு செய்த இணையவழி கருத்தரங்கில் கலந்துகொண்ட அரசியல் விஞ்ஞானி பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட, 'முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் 2022ஆம் ஆண்டின் குடிமக்களின் எதிர்ப்பு இயக்கத்திற்கு நேரடியான பிரதிபலிப்பாகும். மேலும் இந்த எதிர்ப்புகளின் தொடர்ச்சி இந்த ஆண்டும் தொடர்கிறது' என்று தெரிவித்தார். இதன்பின்னணியிலேயே புதிய பயங்கரவாத எதிர்ப்புசட்டத்திற்கு எதிரான தென்னிலங்கையின் போராட்டமும் அமைகின்றது. எனினும் ஈழத்தமிழர்களுக்கும் பயங்கரவாத சட்டத்தின் ஒடுக்குமுறைக்குமிடையிலான வலிநிறைந்த உறவு நீண்டது. எனவே, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான ஈழத்தமிழர்களின் போராட்ட அணுகுமுறை வேறுபட்டதாக அமைதல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-