புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மக்களின் இறையாண்மையை மீறுகிறது! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியலில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்றும் சூடான விவாத பொருளாகவே காணப்படுகின்றது. 1970களின் இறுதியில் ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசாங்கத்தால் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலாய், பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் கடந்த நான்கு தசாப்தங்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச பரப்பில் விமர்சனங்களை பெற்று வருகின்றது. குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையினை காரணங்காட்டி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமானது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (ATA) எனும் புது சட்ட உருவாக்க முயற்சியினை மேற்கொண்டு வருகின்றது. எனினும் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை தாண்டி உயர்வீச்சில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இலங்கையின் அடிப்படை உரிமைகளை மீறும் அபாயம் இருப்பதாக கண்டனங்களை பெற்று வருகின்றது. குறிப்பாக தென்னிலங்கையும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் அதிக அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளமை ஆழ்ந்த கவனத்தை பெற்றுள்ளது. இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் உள்ளடக்கங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மார்ச் 17 அன்று, இலங்கை அரசாங்கம் அதன் முன்மொழியப்பட்ட 97 பக்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (PTA) வெளியிட்டது. 1979இல் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் அதிகப்படியான விதிகளின் விளைவாக, எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டன. மிகக் கொடூரமான மற்றும் வழமையான சித்திரவதைகள் மற்றும் பல தசாப்தங்களாக விசாரணைகள் முடிவடையாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை போன்றவற்றை தமிழ் மக்கள் பல தசாப்த காலமாக அனுபவித்து வருகின்றனர். மிக சமீபத்தில், மனித உரிமைகள் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர் வசந்த முதலிகே ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியமை, அரசியல் எதிரிகள் மற்றும் குடிமக்கள் எதிர்ப்பாளர்களை குறிவைக்க அரசாங்கத்தால் எவ்வாறு அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தென்னிலங்கையின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பின்னணியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வதற்கான அழைப்புகள் அதிகரித்துள்ளது. இந்த சூழலில்தான், அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மாற்றாக முன்மொழிந்துள்ளது. 

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் பகுப்பாய்வு, முன்மொழியப்பட்ட சட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மிகவும் நுட்பமான பதிப்பு என்பதை வெளிப்படுத்துகிறது. இது ஒரு சில குறுகிய சீர்திருத்தங்களை வழங்குகிறது. ஆனால் உண்மையில் குடிமக்களின் உரிமைகள் மற்றும் தேசத்தின் ஜனநாயக வாழ்க்கைக்கு புதிய மற்றும் இன்னும் பெரிய அச்சுறுத்தல்களை அறிமுகப்படுத்துகிறது. சர்வதேச மன்னிப்புச் சபையானது, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவது குறித்து தீவிர கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய சர்வதேச மன்னிப்புச் சபையின் மூத்த இயக்குனர் டிப்ரோஸ் முச்செனா, அதன் பணி அறிக்கையின் முடிவில், எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்று கூறினார். அத்துடன் இங்குள்ள எதிர்க்கட்சிகளும் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் முன்மொழியப்பட்ட புதிய சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச எதிர்ப்புக்கு நிகராக தென்னிலங்கை அரசியலும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவது ஆழமான கவனத்தை பெறுகின்றது. தென்னிலங்கை இனவாத அரசியல் இதுவரை பயங்கரவாதத்தை தமிழர்களை ஒடுக்குவதற்கான கருவியாகவே பயன்படுத்தி வந்துள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்கா பயங்கரவாதத்தை தனக்கு எதிரான தென்னிலங்கை மீதும் பயன்படுத்த முற்பட்டமையின் விளைவே தென்னிலங்கையின் அச்சத்திற்கு காரணமாகின்றது. தென்னிலங்கையின் அச்சத்தை ஈழத்தமிழர்கள் கவனயீனமாக விலத்தி செல்வது ஆபத்தான எதிர்காலத்துக்கே வழிவகுக்கும். எனவே, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை ஈழத்தமிழர்கள் விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகிறது. 

ஓன்று, முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது, குற்றங்களை மிகவும் பரந்த அளவில் வரையறுக்கின்றது. சாதாரண சட்டங்களின் கீழ் கையாளக்கூடிய பயங்கரவாதத்துடன் நியாயமான தொடர்பு இல்லாத நடத்தைகளையும் பயங்கரவாத செயலாக சித்தரிக்க முற்படுகின்றது. பயங்கரவாதத்தின் பொதுவான குற்றமானது, ஒரு இன்றியமையாத அங்கமாக, பயங்கரவாதத்தை அல்லது தீவிரமான அல்லது பெரும் அச்சத்தின் நிலையை உருவாக்குவதைக் கொண்டிருக்க வேண்டும் என்று சர்வதேச வரையறை காணப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் 2002இல் ஒரு பயங்கரவாதத்தின் மீதான கட்டமைப்பின் முடிவை ஏற்றுக்கொண்டது, இதில் ஒரு பயங்கரவாதச் செயல் குறுகியதாக வரையறுக்கப்படுகிறது. ஒரு நாடு அல்லது ஒரு சர்வதேச அமைப்பை கடுமையாக சேதப்படுத்தும் நோக்கத்துடன் மக்களை அச்சுறுத்தும் அல்லது தேவையற்ற முறையில் கட்டாயப்படுத்தும் நடவடிக்கையாக வரையறை செய்கின்றது. எனினும் இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களையும் பயங்கரவாதத்துக்குள் வரையறுக்கிறது. அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் குடிமக்களைத் துன்புறுத்துவதற்கும், காவலில் வைப்பதற்கும், தண்டிக்கவும் சாதாரண சட்ட அமைப்புக்கு வெளியே செயல்பட அதிகாரம் அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் வேலை நிறுத்தங்களையும் பயங்கரவாத செயலாக வரையறை செய்கிறது. வேலைநிறுத்தத்தின் நோக்கம், ஒரு சேவையை வழங்குவதையோ அல்லது ஒரு செயல்பாட்டை நடத்துவதையோ தடுப்பதாகும். வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் நியாயமான நோக்கங்களில் ஒன்றாகும். எவ்வாறாயினும், வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக குறைக்க முடியும் என்று பொதுவான சட்டங்கள் கூறியுள்ளன. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு சட்ட விரோதமான சுகாதாரத் துறையில் வேலை நிறுத்தத்தினை தடுக்க இயலும். பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் பிரிவு 3(i)(டி)இன் கீழ், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது 'தவறாக அல்லது சட்டவிரோதமாக' பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவதாகும். இது பிரிவு 3(2)(h)ஆல் தடைசெய்யப்பட்ட செயலாகும் இருபது வருடங்கள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு காலக்கெடு மற்றும் ஒரு மில்லியன் ரூபாய் வரை அபராதம் மற்றும் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யலாம். 

இரண்டாவது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் பயங்கரவாதத்துக்கான பரந்த வரையறை மக்களின் ஜனநாய உரிமைகளையே வலுவிழக்க செய்கின்றது. முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில் அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிற தரவரிசை அதிகாரிகளிடம் உரையாற்றிய ஜனாதிபதி விக்ரமசிங்க, 'தான் ஜனாதிபதியாக இருக்கும் போது சட்டத்தை மீற எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், தெருக்களில் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட எவருக்கும் உரிமை இல்லை என்றும், ஆனால் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அமைதியான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவோ அல்லது விமர்சிக்கவோ உரிமை உண்டு' என கடந்த வாரம் வலியுறுத்தியுள்ளார். இன்று பொருளாதார ஸ்திரத்திற்காக மக்கள் போராட்டங்களை வன்முறையாக பயங்கரவாத செயலாக சித்தரிக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், அரசியல் கூறுபாடுகள் வழமை போல் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது, மக்களின் துயரங்களைத் துடைக்க எந்த ஒரு சாத்தியமான தீர்வும் இல்லாமல், இந்த நாட்டின் சாதாரண மக்களே இறுதியாக நல்லதொரு மாற்றத்தைத் தேட முடிவு செய்தனர். இன்று அத்தகைய ஜனநாயக போராட்டங்களையே பயங்கரவாதத்தின் பேரால் முடக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முற்படுகின்றது.

மூன்றாவது, பயங்கரவாத சட்டங்களினால் இராணுவத்தினால் மீறப்படும் மனித உரிமை மீறல்கள் தேசிய பாதுகாப்பு என்ற வார்த்தைக்குள் அரசுகள் சுதாகரித்து கொள்ள முற்படுகின்றன. எனினும் அரசறிவியலில் பாதுகாப்பை வரையறுப்பதற்கான தர்க்கரீதியான மற்றும் சொற்பொருள் அணுகுமுறை தெளிவற்ற மற்றும் முடிவில்லாத முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. தேசிய பாதுகாப்பில் இராணுவத்தின் வகிபாகத்தை விளக்கும் செங் பியான் எனும் அறிஞர், 'இராணுவ அம்சம் தேசிய பாதுகாப்பின் மையமாக உள்ளது. ஆனால் அது ஒரே மதிப்பு அல்ல.' எனக்குறிப்பிடுகின்றார். தேசிய பாதுகாப்பில் இராணுவத்தை தவிர்ந்த விடயங்களும் உள்வாங்கப்படுவதனையே உறுதி செய்கின்றது. மேலும், அஹ்மத் ஃபாருகி எனும் அறிஞர், உறுதியான வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், சமூக ஒற்றுமை மற்றும் அரசியல் போன்ற இராணுவம் அல்லாத பரிமாணங்களைக் குறிக்கும் அதே வேளையில், தேசியப் பாதுகாப்பு என்பது நாட்டின் இராணுவப் போர் செயல்திறன் அல்ல என்று கூறினார். இவ்வகையில் தேசிய பாதுகாப்பில் இராணுவம் ஒரு கூறாகவே பொதுவிளக்கங்கள் காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் முன்மொழியப்படும் பயங்கரவாத சட்டங்களில் தேசிய பாதுகாப்பை வலியுறுத்தி இராணுவத்துக்கு உயர் நிலை வழங்கப்படுவது தொடரான விடயமாகவே காணப்படுகின்றது.

நான்காவது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ், அதன் எல்லைக்குள் வரும் பரந்த அளவிலான செயல்களின் சந்தேகம் மட்டுமே, பயங்கரவாதிகளாக நபர்களை விசாரிக்கவும், கைது செய்யவும் மற்றும் காவலில் வைக்கவும், நபர்களை கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு உட்படுத்தவும், அமைப்புகளை தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கவும், தடைசெய்யப்பட்ட இடங்களை அறிவிக்கவும் மற்றும் விதிக்கவும் காவல்துறையை மற்றும் அதிகார மையத்தை அனுமதிக்கிறது. பிரிவு 85இன் கீழ், ஜனாதிபதி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இராணுவம், கடற்படை அல்லது விமானப்படைத் தளபதி அல்லது கடலோரக் காவல்படையின் இயக்குநர் ஜெனரல் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், எந்தவொரு பொது இடத்தையும் அல்லது பிற இடத்தையும் தடைசெய்யப்பட்ட இடமாக நிர்ணயிக்கலாம். வழிகாட்டுதல்கள் எதுவும் வகுக்கப்படவில்லை. தடைசெய்யப்பட்ட இடத்திற்குள் நுழையும் எந்தவொரு நபருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் மூன்று இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். மேலும், பிரிவு 82இன் கீழ், எந்தவொரு அமைப்பும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றத்திற்கு சமமான எந்தவொரு செயலிலும் ஈடுபட்டுள்ளது என்று ஜனாதிபதி நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால், அவர் அத்தகைய அமைப்பைத் தடை செய்யலாம். தடைசெய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருப்பது பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஒரு மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் குற்றமாகும். இவ்ஏற்பாடுகளின் அடிப்படையில் 1953 ஹர்த்தாலை உதாரணமாக எடுத்துக் கொண்டால், ஹர்த்தாலின் நோக்கம் அரசாங்கத்தை முடக்குவதாகும். பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அமுலில் இருந்திருந்தால் அது பயங்கரவாதமாக மாறியிருக்கும். ஹர்த்தாலில் சேர மக்களை ஊக்குவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்போது பயங்கரவாதிகளாக இருப்பார்கள்.

எனவே, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது அடிப்படை உரிமைகளை மீறும் விதிகளால் நிரம்பியுள்ளது. அடிப்படை உரிமைகள் இறையாண்மையைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழி என்பதால், இந்த மசோதா ஒட்டுமொத்தமாக மக்களின் இறையாண்மையை மீறுகிறது. இச்சூழலில் இது தென்னிலங்கைக்கும் ஆபத்தானதே என தமிழர்கள் புறமொதுங்குவார்களாயின் பேரினவாத தலைமைகள் அதிகாரத்தை அலங்கரிக்கையில் இன்று தமிழ்-சிங்களவரிடையே பகிரப்படும் பயங்கரவாத சட்ட அமுலாக்க வீச்சு முழுமையாக தமிழர்கள் மீதே சுமத்தப்படுவதாக அமையும். உரிமைக்கான ஜனநாயக குரல்களையும் எழுப்ப இயலாத நிலையில் ஒடுக்கப்படும் துயரமே தமிழர்களுக்கு நேரும். அண்மைய நாட்களில் பயங்கரவாத சட்டத்தினால் நெருக்கடிகளை அனுபவிக்கும் தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்குள் பயணிக்காது, பயங்கரவாத சட்ட அமுலாக்கங்களால் நான்கு தசாப்த ஒடுக்குமுறை வரலாற்றை பகிரும் முன்அனுபவங்களுடன் ஈழத்தமிழர் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக தலைமையேற்று அணிதிரட்ட வேண்டும். அதுவே புதிய பழைய பயங்கரவாத சட்டங்களை முழுமையாக அகற்ற வழிஉருவாக்கும்.




Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-