தென்னிலங்கை-தமிழ்த்தரப்பு பேச்சுவார்த்தை ஏமாற்று அரசியலுக்குள் நகர்கிறது! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியலில் பேச்சுவார்த்தைகளும், மாநாடுகளும் என்பதுவே சமகாலத்தில் முதன்மையான உரையாடல்களாக காணப்படுகின்றது. இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை நீர்த்து போகச்செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பேச்சுவார்த்தைகளும் மாநாடுகளும் அவசியமாகின்றது. பொருளாதார நெருக்கடியின் ஒப்பீட்டடிப்படையிலான மீட்சியும், அதன் வெற்றிப்போக்கினையே  உறுதி செய்கின்றது. அரச இயந்திரத்தை முழுமையாக ஈடுபடுத்தி அவ்வெற்றி போக்கை இலங்கை அரசாங்கம் சாத்தியமாக்கியுள்ளது. மறுதளத்தில் தேசிய இனப்பிரச்சினை சார் அரசியல் விவகாரத்துக்கும் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை மற்றும் மாநாட்டு பொறிமுறையை இலாபகரமாக பயன்படுத்தி வருகின்றது. எனினும் தமிழ் அரசியல் தரப்பினர் பேச்சுவார்த்தையை இராஜதந்திர பொறிமுறைக்குள் கையாள தவறுகின்றனர் என்ற விமர்சனம் பொதுப்பரப்பில் காணப்படுகின்றது. இக்கட்டுரை தேசிய இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் இலங்கை அரசாங்கம் மமற்றும் தமிழ் அரசியல் தரப்பின் பேச்சுவார்த்தை இயங்கியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

முறையான அரசியல் தீர்வுகள் அல்லது சமாதான உடன்படிக்கைகளை அடைவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பேச்சுவார்த்தையின் வருகையும் (எ.கா: அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில், அல்லது ஆயுதமேந்திய போராளிகளுக்கு இடையில்) இயற்கையாகவே பேச்சுவார்த்தை அறையில் உள்ளவர்கள் பற்றிய எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியது. ஆனால் ஒரு பேச்சுவார்த்தையில் பலதரப்பட்ட குரல்களை இணைப்பதற்கான சாத்தியக்கூறு மிகவும் விரும்பத்தக்க இலக்காக இருந்தாலும், அவ்வாறு செய்யக்கூடிய பங்காளிகளின் தன்மையும் எண்ணிக்கையும் செயல்முறையின் பல உள்ளார்ந்த வரம்புகளுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். மேலும் பேச்சுவார்த்தை களமானது, அரசியல் சார்ந்த நிலையில் சில சமயங்களில் வெறுமனே அடையாளமாகவும் கட்டமைக்கப்படுவதுண்டு. அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்பினரின் முதன்மை நோக்கமாக, கட்சிகளுக்கு மரியாதை, நல்லெண்ணம் அல்லது பகிரப்பட்ட அக்கறை காட்டுவதாக இருக்கலாம். ட்ரக்மேன் மற்றும் வாலன்ஸ்டீன் எனும் அறிஞர்கள் பனிப்போரில் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான உச்சிமாநாடுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், 'நாட்டுத் தலைவர்களின் தனிப்பட்ட சந்திப்பு, அவர்கள் போரைத் தொடங்கப் போவதில்லை என்பதைக் காட்டுவதற்கான அடையாளக் காட்சியும் பேச்சுவார்த்தையாளர்களுக்கு மதிப்புள்ளதாக இருக்குமென' வாதிடுகின்றார்கள். பொதுவாக அரசியல் பேச்சுவார்த்தைகளில், இடம், நேரம், நெறிமுறை மற்றும் தொடர்புடைய அம்சங்கள் பெரும் குறியீட்டு மதிப்புடையதாக இருக்கும். குறியீட்டுப் பேச்சுவார்த்தைகளின் உத்தேசிக்கப்பட்ட விளைவுகளில் ஒன்றாக, ஒரு குறிப்பிட்ட உடன்படிக்கையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக பொதுவான நிலையை வலியுறுத்துவது மற்றும் குடிமக்கள் அல்லது இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாத பிற பங்காளர்கள் போன்ற பார்வையாளர்களிடையே சுருக்க உணர்வுகளைத் தூண்டுவதாக அமைகின்றது. இப்பின்னணியில் பேச்சுவார்த்தை இராஜதந்திர பொறிமுறையினை கொண்டமைந்ததாகவும், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்பினரும் இராஜதந்திர நெறிமுறைகளை கையாளும் பாங்கும் காணப்படும்.

இலங்கையின் சமகாலத்தில் நடாத்தப்படும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தமிழ் பாராளுமன்ற அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பாகவும், அனைத்து கட்சி மாநாடாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த ஜூலை-26 அன்று ஜனாதிபதி தலைமையில், தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து கட்சிகளின் மாநாட்டில், தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டனர். 

நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது, 13வது அரசியலமைப்புத் திருத்தம் முழு நாட்டையும் பாதிக்கும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி எடுத்துரைத்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், '13வது அரசியலமைப்புத் திருத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு விடை தேடும் போது ஜனாதிபதி கடந்த காலத்தை அவதானிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். இந்நிலையில்,  தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தென்னிலங்கை கட்சிகள் கடந்த காலங்களில் 13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக குறிப்பாக மகிந்த ராஜபக்ஷா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் '13பிளஸ்' பற்றி தெரிவித்த கருத்துகளினை சுட்டிக்காட்டி ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கும் '13மைனஸ்' உரையாடலை நிராகரித்திருந்தார். அதேவேளை மாகாண சபை தேர்தலுக்கான கோரிக்கையையும் முன்வைத்தார். எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகாண சபை தேர்தல் அல்லது 13வது திருத்தத்தின் மீதான திருத்தம் என்பதில் உறுதியாக இருந்த நிலையில் தீர்வற்ற சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வெளியேற்றத்தோடு நிறைவு பெற்றிருந்தது. இப்பின்னணியில், பேச்சுவார்த்தை எனும் களத்தில் தென்னிலங்கை தரப்பு மற்றும் தமிழ் தரப்பின் இயங்கியலை நுணுக்கமாக அவதானிக்க வேண்டியது அவசியமாகின்றது.

முதலாவது, பேச்சுவார்த்தையின் இயங்கு நிலை நம்பிக்கையின் மீதான கட்டமைப்பாகும். இருதரப்பு நம்பிக்கையிலேயே அதன் இயங்குநிலை காணப்படுகின்றது. எனினும் வரலாற்றில் தென்னிலங்கை தமிழ்த்தரப்புக்கு அத்தகைய நம்பிக்கையை அளிக்கக்கூடிய சூழ்நிலையை கட்டமைக்க தவறியுள்ளது. சமகால பேச்சுவார்த்தை போக்கும் அவ்வாறனதொரு இயல்பினையே வெளிப்படுத்துகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடும், '13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொதுவான இணக்கப்பாடு இல்லை' என்பது பொதுஜன பெரமுன தரப்பினரின் 13ஆம் திருத்தம் தொடர்பான பகிரங்க எதிர்ப்புநிலை பிரச்சாரம் உணர்த்துகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள பொதுஜன பெரமுனவின் எதிர்ப்பை காரணங்காட்டி தற்போதைய பேச்சுவார்த்தையையும் கடந்த கால அனுபவங்களின் தொடர்ச்சியாக தீர்வற்றதொரு பேச்சுவார்த்தையாக அமையக்கூடிய வாய்ப்புகளே வெளிப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷா தன்னுடைய அரசாங்க காலப்பகுதியில் 2011-2015க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் '13பிளஸ்' முதன்மைப்படுத்தி 11 தடவை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் சந்திப்புக்களை மேற்கொண்டு பேச்சுவார்த்தையை முன்னகர்த்தியிருந்தார். தன்னுடைய ஆட்சிக்காலப்பகுதியில் 18ஆம் திருத்தத்தினை 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றியிருந்த மகிந்த ராஜபக்ஷா '13பிளஸ்' பற்றிய உரையாடலை வெறுமனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையுடனேயே மட்டுப்படுத்தியிருந்தார். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட அக்காலப்பகுதி சர்வதேச நெருக்கடியை ஈடுசெய்வதற்கான உத்தியாகவே மகிந்த ராஜபக்ஷா '13பிளஸ்' பேச்சுவார்த்தையை மகிந்த ராஜபக்ஷா கைக்கொண்டிருந்தார். அவ்வாறனதொரு உத்தியே விடுதலைப்புலிகளுடனான திம்பு பேச்சுவார்த்தை முதல் ஜெனிவா பேச்சுவார்த்தைகள் வரை இலங்கை அரசாங்கம் கையாண்டிருந்தது. நடைமுறையும் சுதந்திர இலங்கை வரலாறு காணாத அரசியல் பொருளாதார நெருக்கடியில் அகப்பட்டுள்ள பின்னணியிலேயே ரணில் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது, அரசாங்க தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் தமிழ் அரசியல் தரப்பின் பலவீனமான நடத்தைகள் அரசாங்கத்துக்கு சாதகமான வாய்ப்பை உருவாக்குவதாக அமைகின்றது. குறிப்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் தமிழ் பாராளுமன்ற கட்சிகளான தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சித் தலைவர்களுக்கு தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலோ அல்லது அரசாங்கம் முதன்மைப்படுத்தும் 13வது திருத்தம் தொடர்பிலோ பொதுவான கருத்தொற்றுமை காணப்படவில்லை. கடந்த ஜூலை-26 நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில், தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா சுட்டிக்காட்டியிருந்தார். இதன் பின்னணியில் குறித்த மாநாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் அரசியலமைப்பின் 13வது திருத்தம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முன்வைத்த முரண்நகையான கருத்துக்களே காரணமாக அமைகின்றது. இவ்வாறான சூழல் பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பு செய்ய விரும்பும் ரணில் அரசாங்கத்துக்கான வாய்ப்பை தமிழ்த்தரப்பு ஏற்படுத்தி கொடுப்பதாகவே அமைகின்றது. எதிர்வரும் காலங்களிலாவது பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழ்த்தரப்பு தமது சமுகத்தின் நலனை முன்னிறுத்தி ஒருமித்த கருத்தை உருவாக்குவது பிரதானமாகின்றது. மாறாக தொடர்ச்சியாக ஒவ்வொரு தமிழ் கட்சிகளும் தத்தமது சுயநல நிகழ்ச்சி நிரல்களுக்குள் பேச்சுவார்த்தை களத்தை பயன்படுத்த முற்படின் தமிழ்த்தேசியம் தமிழ் கட்சிகளாலேயே ஏமாற்றப்படும் நிலையே காணப்படும்.

மூன்றாவது, தமிழரசியல் தரப்பினர் பேச்சுவார்த்தையை இராஜதந்திர பொறிமுறைக்குள் நகர்த்துவதில் தொடர்ச்சியாக தவறுவிடுபவர்களாகவே காணப்படுகின்றார்கள். குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சுவார்த்தை நிராகரிப்பாயினும் சரி, ஏனைய கட்சிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதாயினும் சரி பேச்சுவார்த்தையின் மையமான இராஜதந்திர பொறிமுறைகளற்ற நிலைமைகளையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. பொதுவழக்கில் பேச்சுவார்த்தைகள் தொடர்பில பொதுமக்களிடம்; 'பேச்சுவார்த்தை மயோபியா' மனநிலையையே மான்ஸ்பிரிட்ஜ் எனும் அறிஞர் அடையாளப்படுத்துகின்றார். அதாவது, பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் ஆதாயமடைந்தால், வரையறையின்படி மற்ற தரப்பினர் இழக்க நேரிடும் என்று மக்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் தங்கள் எதிரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நன்மை பயக்கும் என்று மக்களை நம்ப வைப்பது சவாலாகின்றது. இந்த நீரோட்டத்துடன் இயைந்த வகையிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தென்னிலங்கை தரப்பினருடனான பேச்சுவார்த்தை நிராகரிப்பு அமைகின்றது. எனினும் பேச்சுவார்த்தை நிராகரிப்புக்குரிய களமாக அமையாது. இங்கு இராஜதந்திர பொறிமுறைகளை கையாள்வதனூடாக தமது தரப்பை வெற்றி பாதைக்கு நகர்த்துவதனூடாக தமது தரப்பின் நலனை வென்றெடுப்பதே சிறந்த தலைமையாகும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சுவார்த்தை நிராகரிப்பு அவர்களது தலைமைத்துவ இயல்பையே கேள்விக்குட்படுத்துகிறது. மாறாக பேச்சுவார்த்தைக்கு செல்லும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வரலாறு தோறும் அரசாங்கத்தின் காலப்பகுதி வரை பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்து உரையாடுவதாகவும், அரசாங்க காலப்பகுதி நிறைவடைந்த பின்னர் இத்தனை பேச்சுவார்த்தைகளை நகர்த்தி அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக கூறி, மக்களின் பேச்சுவார்த்தை மீதான 'பேச்சுவார்த்தை மயோபியா' மனநிலையை அதிகரிப்பவர்களாகவே காணப்படுகின்றார்கள். மாற்று உத்திகள் பற்றி எவ்வித ஆக்கபூர்வமான கரிசணைகளும் வெளிப்படுத்துவதில்லை. பிராந்திய அரசாகிய இந்தியாவை தேசிய இனப்பிரச்சினை தீர்வில் பாரப்படுத்தி அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு சமாந்தரமாக இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பினை முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனத்தை தோலுரிக்கு வகையில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு - இந்திய உயர் ஸ்தானிகர் - இலங்கை அரசாங்கம் எனும் முத்தரப்பு சந்திப்பை ஒழுங்கு செய்யும் இயலாமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பலவீனமானமாகவும் பொறிமுறையற்ற போக்காகவுமே காணப்படுகின்றது.

எனவே, தென்னிலங்கை-தமிழ்த்தரப்பு பேச்சுவார்த்தை வரலாற்றின் தொடர்ச்சியான அனுபவத்தினையே பகிர்கின்றது. தென்னிலங்கையின் நெருக்கடியை கையாளவதற்கானதொரு களமாகவே தமிழ்த்தரப்பினுடனான பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் இராஜதந்திர பொறிமுறையுடன் கையாள்கிறது. மாறாக வினைத்திறனான இராஜதந்திர பொறிமுறையற்ற தரப்பாக தமிழரசியல் தரப்பு தொடர்ச்சியாக தென்னிலங்கையின் பொறிக்குள் சிக்குவதாகவே காணப்படுகின்றது. ஒரு பேச்சுவார்த்தையை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வது தனிப்பட்ட பேச்சுவார்த்தையாளர்களை நம்புவதைப் பொறுத்தது என்று மான்ஸ்பிரிட்ஜ் குறிப்பிடுகின்றார். இப்பின்னணியில் தென்னிலங்கை அரசியல் தரப்பின் தொடர்ச்சியான ஏமாற்றும், தமிழ் அரசியல் தரப்பின் ஏமாற்றமும் ஈழத்தமிழர்களிடம் பேச்சுவார்த்தை மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையுமே ஆழமாக பதிவு செய்கின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-