இன-மத வன்முறையை தூண்டும் தென்னிலங்கை அரசியல்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் இன்றைய அரசியலில் முக்கிய அம்சமாக இன உறவுகள் தொடர்பான பிரச்சினையே காணப்படுகின்றது. நடைமுறையில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இனப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போதிலும், அதன் தீர்வுக்கு வேண்டிய நடவடிக்கைகள் பூரணப்படுத்தும் உபாயங்களை வினைத்திறனுடன் மேற்கொள்ள தயாராகவில்லை. கால இழுத்தடிப்புக்கான உபாயங்களையே நகர்த்தி வருகின்றார். இச்சூழல் இனப்பிரச்சினையை உக்கிரப்படுத்தும் முறையிலேயே அமைந்துள்ளது. அரசாங்க உறுப்பினர்களே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக இனவாத செயற்பாடுகளை மும்மரமாக நடைமுறைப்படுத்துகின்றார்கள். குறிப்பாக முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் அரசாங்கத்துக்கு உட்பட்ட வகையில் அரசாங்க திணைக்களங்களினாலேயே தமிழர்-சிங்களவர்களுக்கு இடையிலான இனப்பதட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்இனப்பதட்டம் மீளவொரு இனக்கலவரத்தை உருவாக்கக்கூடிய சூழல் காணப்படுவதாக இந்திய புலனாய்வுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இக்கட்டுரை இலங்கையின் சமகால தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையிலான இனப்பதட்ட சூழலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தின் தீவிரத்தன்மையைக் குறிப்பிட்டு, குருந்தூர் மலை கோவிலில் குழப்பங்களையும் அமைதியின்மையையும் உருவாக்குபவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க உள்ளூர் புலனாய்வு சேவைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆங்கில மொழி ஊடகமொன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. உளவுத்துறைக்கான உத்தரவு, கோவில் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் சர்ச்சைகளால் உருவாக்கப்படக்கூடிய உடனடி இனவாத கலவரங்கள் குறித்து இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது என்று செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. 'இலங்கையில் 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், தீவிரத்தன்மையின் அடிப்படையில் நடந்ததை விட இலகுவாக இனவாத கலவரங்கள் மற்றும் குழப்பங்கள் ஏற்படுவதற்கான வலுவான சாத்தியம் உள்ளது' என்று இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. 2019ஆம் அண்டு உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து சிங்கள-பௌத்த பேரினவாதிகளால் தூண்டப்பட்ட முஸ்லிம் விரோத இனவாதக் கலவரங்கள் பற்றிய குறிப்பை சுட்டிக்காட்டியே இந்திய உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்கூட்டியும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட்-22அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, பௌத்த சாசன, மத விவகார மற்றும் கலாசார விவகார அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் சுயாதீன எதிரணி குழுவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த சமரவீர, 'குருந்தூர் விகாரையை அடிப்படையாகக் கொண்டு இனவாத, மதவாத, பிரிவினைவாத மோதல் இந்த விகாரையை அடிப்படையாகக் கொண்டு ஏற்படலாம் என்று இந்திய புலனாய்வுத்துறை கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு தொல்பொருள் திணைக்களமே பொறுப்புக் கூற வேண்டும்' எனத்தெரிவித்துள்ளார். எனினும் பாராளுமன்றமே அதன் சிறப்புரிமையின் ஊடாக இனவாத எண்ணங்களை தென்னிலங்கையில் உருவாக்குகின்றமையே சமகால பாராளுமன்ற அரசியல் விவாதங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த காலங்களிலும் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் போர்வையிலான இனவழிப்பின் பின்னணிகளில் பாராளுமன்ற உரைகள் செலுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி கடந்த வாரங்களில் இப்பகுதியிலேயே ஆழமாக உரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையின் நிகழ்தகவுகளை ஆராய்வதோடு, அதன் அரசியல் தாக்கத்தை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.

ஒன்று, தென்னிலங்கை அரசியல் களம் இனவாத உரையாடல்களையே சமகாலத்தின் முதன்மையான அரசியல் ஏற்பாடாக வெளிப்படுத்தி வருகின்றது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர கடந்த மாதம் பாராளுமன்ற உரையில், 'குருந்தூர்மலையின் தொல்பொருள் பௌத்த பாரம்பரியத்தை கேள்வி கேட்க இந்த தமிழ் நீதிபதிகளுக்கு உரிமை இல்லை. எங்களை வெளியேறச் சொல்லும் உரிமையும் அவருக்கு இல்லை. இலங்கை ஒரு சிங்கள பௌத்த தேசம் என்பதை தமிழ் நீதிபதிகள் மனதில் கொள்ள வேண்டும்.' என முல்லைத்தீவு நீதிபதியை வசைபாடி தமிழ் நீதிபதிகளை எச்சரித்திருந்தார். தற்போது கடந்த வாரம்  பாராளுமன்ற உரையில், 'முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவ்வாறானவரால் எவ்வாறு சரியான முறையில் செயற்பட முடியும்' எனக்கேள்வி எழுப்பியுள்ளார். சரத் வீரசேகராவின் நீதித்துறை மீதான வசைபாடல் இனத்துவரீதியாகவே அமையப்பெற்றுள்ளது. பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சரத் வீரசேகர போன்ற பேரினவாதிகளின் இனவாத உரைகள் பொதுவெளியிலும் இனவாத உரைகளை ஊக்குவிப்பதுடன் பாதுகாப்பளிப்பதாக காணப்படுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், 'பௌத்தத்துக்கு எதிரானவர்களின் தலைகளை கொண்டு வருவேன்' என எச்சரிக்கை செய்துள்ளார். இத்தகைய இனவாத கருத்தியல்கள் பொதுவெளியில் சாதாரணமயமாக்குவதில் சரத்வீரசேகர போன்றவர்களின் பாராளுமன்ற உரைகளும் கனதியான தாக்கத்தை செலுத்துகின்றது. அதுமட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிடப்போவதாக எச்சரித்துள்ளமை இனக்கலவரங்களில் போர்வையில் தென்னிலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு வரலாற்றையே மீள நினைவுபடுத்துகின்றது.

இரண்டு, தேரர்களின் இனவாத அரசியலும் சமகாலத்தில் முழுவீச்சு பெற்றுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. வடக்கு-கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர்கள் கூட்டாக தமிழர்கள் சார்பாக நல்லிணக்க கருத்தை முன்வைத்துள்ள போதிலும், உயரடுக்கில் பௌத்த தேரர்களின் இனவாத உரைகளும் செயல்களுமே காணப்படுகின்றது. மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தொடக்கம் சிஹல ராவய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் வரையில் அனைவரும் களமிறங்கியிருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் கோழைத்தனமும், சந்தர்ப்பவாதமும் அரசியல் பிக்குவை  வலுவூட்டியுள்ளன. அந்தப் பின்னணியில், குருந்தூர் மலையை நோக்கிய இனவாத கருத்தியலை தேரர்கள் ஆரம்பித்துள்ளனர். கடந்த வாரங்களில் இடம்பெற்ற முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற பொங்கல் வழிபாடே தமிழர்களின் இறுதி பூஜையாக இருக்க வேண்டும் என குருந்தூர் மலையில் ஆக்கிரமிப்பு விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறே, மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது, காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு ஆகஸ்ட்-22அன்று சென்ற சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 18 பேரை பௌத்த தேரர் தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினர் வழிமறித்து தடுத்து வைத்துள்ளனர். இவை பௌத்த தேரர்களின் இனவாதம் மீள முகிழ்ச்சி பெறுவதனையே அடையாளப்படுத்தப்படுகின்றது. கடந்த காலங்களில் குறிப்பாக 1958ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் அடிப்படையை பௌத்த தேரர்களே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் யாவற்றிலும் பேரினவாதத்திற்கான பாதுகாப்பு அரணாக பௌத்தமும் தேரர்களுமே செயற்பாட்டார்கள் என்பதை வரலாறு உணர்த்துகின்றது.

மூன்று, ரணில் விக்கிரமசிங்காவின் சந்தர்ப்பவாத அரசியலும், ஐக்கிய தேசிய கட்சியின் கடந்தகார வரலாறுகளும் இந்திய உளவுத்துறையின் இனக்கலவர எச்சரிக்கையை மெய்ப்பிக்கக்கூடிய தன்மையையே உணர்த்துகின்றது. இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இரண்டுமே தமிழின அழிப்பின் இரத்தக்கறைகளை சுமக்கின்ற போதிலும், ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கே அதிகமாக காணப்படுகின்றது. சந்தர்ப்பவாத அரசியல் தந்திரத்தை கைக்கொண்டு இனவாதத்தை பொதுப்பரப்பில் உலாவவிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதிலும் பலப்படுத்துவதிலும் ஐக்கிய தேசிய கட்சி முதிர்ச்சியான அனுபங்களை பகிருகின்றது. 1958 தொடக்கம் 1983 வரையான இனக்கலவரம் போர்வையிலான தமிழின அழிப்புக்கள் யாவும் அத்தகைய வரலாற்றையே வெளிப்படுத்துகின்றது. ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு 1958ஆம் ஆண்டில் பௌத்த தேரர்களை தூண்டி இனவழிப்புக்கு வழிகோலிய ஜே.ஆர் ஜெயவர்த்தன, 1983ஆம் ஆண்டில் ஆட்சியதிகாரத்தை பாதுகாக்க இனவழிப்பை ஆதரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையாடலை மேற்கொள்ளும் சமதளத்தில் அரசாங்க அலகுக்குள்ளேயே, ஒரு தரப்பினர் இனவாதம் மற்றும் மதவாத வெறுப்பு பேச்சுக்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எனினும் இவ்விடயம் குறித்து ரணில் விக்கிரமசிங்கா எவ்வித விசேட கவனத்தையும் முதன்மைப்படுத்தவில்லை. இப்பின்னணியில் ரணில் இனவாத அலையை அரசியல் நலன்சார்ந்து விரும்புகிறாரோ எனும் சந்தேகங்கள் அரசியல் ஆய்வாளர்களிடையே முதன்மை பெற்றுவருகின்றது. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் தாக்குதல்களுக்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை திசைதிருப்பவும் பிளவுபடுத்தவும் இனவாதம் தற்போது தூண்டப்படுவதை ரணில் விக்கிரமசிங்கா சந்தர்ப்பவாத அரசியல் முறைமையில் ஆதரித்து செல்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

எனவே, தென்னிலங்கையின் சமகால அரசியல் இனங்களுக்கிடையிலான பதட்டத்தை உருவாக்குவதனை அடிப்படையாக கொண்டதாகவே அமைகின்றது. இதனையே இந்திய உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்எச்சரிக்கையை புரிந்து கொண்டு சமயோசித அரசியல் நகர்வை செலுத்த வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழரசியலையே சாறுகின்றது. இனவன்முறைகளின் விளைவினை தென்னிலங்கை அரசியல் என்றும் தமக்கு சாதகமாகவே பயன்படுத்தி உள்ளன. அதுசார் இழப்புக்களை பெருமளவில் தமிழ் சமுகமே கடந்காலங்களில் எதிர்கொண்டுள்ளது. இப்பின்னணி அனுபவத்தில் இத்தகைய இனக்கலவரத்துக்கான தென்னிலங்கையின் முன்னகர்வுகளை தமிழ்த்தரப்பு இராஜதந்திர பார்வையில் நகர்த்துவது தமிழ்;த்தேசியத்தை பலப்படுத்தக்கூடியதாக அமையும். குறைந்தபட்சம் தமிழின அழிவை குறைப்பதாகவாவது அமையும். மாறாக சிங்கள பேரினவாதத்தின் உணர்ச்சியூட்டல்களுக்கு எதிராக தமிழ்த்தரப்பு அரசியலும் உணர்ச்சிகரமான வீரவசனங்களை பொதுவெளியில் பிரச்சாரப்படுத்துவது, அவ்அரசியல்வாதியின் வாக்கு வங்கியை பலப்படுத்துமேயன்றி தமிழ்த்தேசத்திற்கு அழிவையே உருவாக்கக்கூடியதாகும். சிங்கள பேரினவாத தரப்பு அரசுடைய தரப்பு அது ஏற்படுத்தும் வன்முறைகள் அரச பாதுகாப்புடன் தமிழின அழிப்பாகவே மாறக்கூடியது என்பதே வரலாற்றின் நிதர்சனமாகும். இதில் வீரஉரையாடல்களுக்கு அப்பால் தந்திர அரசியலே உரிமைக்காக போராடும் தேசிய இனத்திற்கான தேவையாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற 1983 இனவழிப்பை அன்றைய இந்திய பிரதமர் இனவழிப்பாக அடையாளப்படுத்திய போதிலும் தமிழரசியல் தரப்பு இனக்கலவரமாகவே சுருக்கியது. மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மீள அதனை இனவழிப்பாக பிரேரிக்கும் போது அதன் வடு ஆழமான உணர்வுநிலைத்தாக்கத்தை பெறாது. அதுமட்டுமன்றி மீளவொரு இனவழிப்பு தாக்குதலுக்கு தமிழினத்தை உட்படுத்தாது பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழரசியல் தலைமைகளிடமே காணப்டுகின்றது. சமகாலத்தில் இலங்கையில் அரங்கேற்றப்படும் இனவழிப்புக்கான முன்னேற்பாடுகளை இலங்கை பாராளுமன்றத்துக்குள்ளும் தமிழ் ஊடகங்களிலும் உரையாடுவதை கடந்து சர்வதேச வெளிக்கு கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் பேரில் தமிழ் மக்கள் மீது உமிழப்படும் பேரினவாதத்தின் இனவாத பிரச்சாரங்களுக்கும், நீதித்துறை தமிழ் நீதித்துறையாக பிரிவினைப்படுத்தி அதன் சுதந்திரத்தை அச்சுறுத்துவதை சர்வதேச நீதிப்பொறிமுறைக்குள் பிணைக்க வேண்டியது சட்டாம்பிகளால் நிறைந்த தமிழரசியல் தரப்பின் பொறுப்பாகவே அமைகின்றது. இதற்கான வலுவை தமிழ் சிவில் சமூகங்களும், புலமையாளர்களும், ஊடகங்களும், மக்களும் அரசியல் தரப்புக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம். மாறாக தமிழரசியல் தரப்பும் உணர்வு பிரச்சாரத்துக்குள் எதிர்வினையாற்றுவார்களாயின் மீளவொரு தமிழின அழிப்பு 2023இன் பதிவாக அமையும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-