தீர்வு முயற்சிக்கான பாராளுமன்ற உரைகளும்இனவாத உணர்வுகளும்! -ஐ.வி.மகாசேனன்-
13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய உரையாடல்களே இலங்கை அரசியலின் பிரதான விவாதப்பொருளாகி உள்ளது. ஜூலை-26அன்று 13ஆம் திருத்தத்தின் நடைமுறையாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில், 13வது திருத்தத்தின் நோக்கத்தில் எவ்வித இணக்கப்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து, 13வது திருத்தச் சட்டம் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஆகஸ்ட்-09அன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். எனினும் 13ஆம் திருத்த சட்ட நடைமுறையாக்கத்திற்கு இசைவானதொரு பதிலை தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடமிருந்து ஜனாதிபதியால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மாறாக இனவாத பிரச்சாரங்களே தென்னிலங்கையில் முதன்மையாக காணப்படுகின்றது. தென்னிலங்கையின் இனவாத தரப்பினரால் முன்னெடுக்கப்படும் 13வது திருத்தத்துக்கு எதிரான பாராளுமன்ற உரைகள் மீளவொரு இனக்கலவர போர்வையிலான இனவழிப்புக்கு தூபம் போடுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இக்கட்டுரை 13வது திருத்த சட்டம் தொடர்பான இலங்கை அரசியல் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களின் தாக்கத்தினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட்-09அன்று இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில், 13ஆம் திருத்த சட்ட அமுலாக்கத்தின் அவசியம் பற்றியே முதன்மைப்படுத்தியிருந்தார். குறிப்பாக, நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதை அடைவதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையேயும் விரிவான மற்றும் திறந்த மனதுடன் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து தேவை எனவும் தெரிவித்துள்ளளார். மேலும் சர்வ கட்சி மாநாட்டில் 13ஆம் திருத்தம் தொடர்பில் கட்சிகள் கொண்டிருந்த மாறுபட்ட எண்ணங்கள் அவநம்பிக்கையின் கூறுபாடாக குறிப்பிட்டிருந்தார். 'ஒருங்கிணைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு பொறிமுறை பற்றிய எந்த யோசனையும் அங்கு வெளிப்படையாக வெளிப்படுத்தப்படவில்லை. சில கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தயங்குவது அல்லது சற்று தயக்கம் காட்டுவதும், வேறு சில கட்சிகள் நம்பிக்கையின்றி மாநாட்டில் கலந்து கொண்டதும் தெளிவாகத் தெரிகிறது. அனைத்து உறுப்பினர்களும் தனிப்பட்ட விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிட்டு, தேசத்தின் எதிர்காலத்தை கற்பனை செய்வதில் கவனம் செலுத்துமாறு' ஜனாதிபதி உரையில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.
எனினும் தென்னிலங்கை கட்சிகள் தனியன்களாக 13ஆம் திருத்தம் தொடர்பில் வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்தாலும், கூட்டாக பேரினவாத கருத்தினை விதைத்துள்ளார்கள். ஜனாதிபதியின் பாராளுமன்ற உரைக்கு கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் தேசிய இனப்பிரச்சினையை தவிர்த்து பொருளாதார பிரச்சினையையே இலங்கையின் முதன்மையானதாகவும், 13ஆம் திருத்தத்தினூடாக வடக்குக்கு அதிகாரம் அளிப்பது நாட்டின் அமைதியின்மையை உருவாக்கக்கூடியதாக எச்சரித்துள்ளார். 'வறுமையால் இன்று அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை கதைப்போம். வடக்கிற்கு அதிகாரங்களைக் கொடுப்பதால் இந்தப் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? 13ஐ கொடுத்தால் யுத்தம் முடிந்துவிடும் என்று அன்று கூறினீர்கள். யுத்தம் முடிந்ததா? 24 மணிநேரத்தில் சமாதானம் கிடைத்துவிடவில்லை. தற்போது நீங்கள் செய்யும் செயற்பாடுகள், மீண்டும் நாட்டில் அமைதியின்மைக்குத்தான் வழிவகுக்கும்' என அத்துரலிய ரத்னதேரர் எச்சரித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சா 13ஆம் திருத்தத்தினூடாக வடக்கு-கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் சிறுபான்மையாக்கப்படுவதாக பிரச்சாரம் செய்துள்ளார். மாகாண சபை அதிகாரத்தினூடாக வடக்கு-கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்னைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை என பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். மேலும், 'வடக்கு-கிழக்கு மாகாணங்களின் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேசுவதாக ஜனாதிபதி கூறினார். முஸ்லிம்களின் பிரச்னைகள் தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேசுவதாகக் கூறினார். ஆனால், அந்த மாகாணங்களில் வாழும் சிங்கள மக்களின் பிரச்சனைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெரியவில்லையா? யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரையில் சமயக்கிரியைகளில் ஒரு தரப்பினரின் பிரச்னைகளை மட்டும் பார்க்காமல், அனைத்து இன மக்களின் பிரச்னைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வேண்டும்' என்றார். மேலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகரா, 'வடக்கு - கிழக்கில் உள்ள சிங்கள மக்களின் கருத்துக்களையும் இந்த விவகாரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியானால் நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கத் தயாராக உள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையின் 13ஆம் திருத்தம் பற்றிய உரையாடல்கள் முழுமையாக பேரினவாதத்துக்கு அபாயம் எனும் எச்சரிக்கையையே மேற்கொண்டு வருகின்றது. 13ஆம் திருத்தம் பற்றிய தென்னிலங்கையின் உரைகள் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை வரலாற்றின் பார்வையில் நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, இலங்கை அரசியலில் வரலாறுதோறும் ஈழத்தமிழர்களுக்கு பகுதியளவிலேனும் அதிகாரப்பகிர்வை தென்னிலங்கை வழங்க தயாரில்லை எனும் பதிவின் தொடர்ச்சியாகவே 13ஆம் திருத்தம் தொடர்பான சமீபத்திய பாராளுமன்ற பேரினவாத உரைகள் அமைந்துள்ளது. சுதந்திர இலங்கையில் சிங்கள பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்ட தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய முன்னாயர்த்தங்கள், யாவும் ஏதொவொரு வகையில் எதிர்க்கட்சி என்ற பெயயரிடலில் காணப்படும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எதிர்க்கப்பட்டு, தீர்வு முயற்சிகள் நிராகரிக்கப்படும் வரலாறே காணப்படுகின்றது. குறிப்பாக 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டத்தினை சிங்கள பேரினவாதத்தை குளிர்விப்பதற்காக கொண்டுவந்து இனஒடுக்குமுறைக்கு உரமூட்டிய எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா 1957ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் மூலம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு-கிழக்கு பகுதியில் தமிழ் மொழி அங்கீகாரத்தை வழங்கும் சிறிய தீர்வுப்பொதியையும் அன்றைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் சிங்கள பேரினவாத எதிர்ப்பைத்தொடர்ந்து பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. இவ்வாறதொரு அனுபவமே தொடர்ச்சியான டட்லி-செல்வா ஒப்பந்தம் முதல் 2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் வரை காணப்படுகின்றது. சமகாலத்தில் அரசாங்க-எதிர்க்கட்சி ஒத்துழைப்பினை உள்ளடக்கிய அரசியல் கலாச்சாரத்திற்கும், அதன் நிமித்தமாக நிறுவப்பட்ட போட்டி பாரம்பரியத்திலிருந்து விலகுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அழைப்பு விடுத்துள்ளார். எனினும் 2000களில் சந்திரிக்காவின் அதிகாரப்பகிர்வு பொதியை எதிர்க்கட்சி பாரம்பரியத்தில் ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் தீயிட்டு கொழுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது, இலங்கையின் வரலாறு சிங்கள-பௌத்த தம்மதீப கோட்பாட்டிலேயே நிறைந்துள்ளது. 13வது திருத்த நடைமுறையாக்கத்துக்கு எதிரான சமகால பிரச்சாரங்களும் அதன்நீட்சியையே வெளிப்படுத்துகின்றது. இலங்கையின் நிலவும் தேசிய இனப்பிரச்சினையானது சிங்கள பௌத்த ஐதீகம் ஒன்றை மையமாக கொண்டு அமைந்துள்ளது. இது சுருக்கமாக தம்மதீப கோட்பாடு எனப்படும். அதாவது, பௌத்த தர்மத்தைப் பேணி பாதுகாக்கவென புத்தபிரானாலே தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு என்பதாகும். அவ்அடிப்படையில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் செயல்கள் யாவும் சிங்கள-பௌத்த கண்ணோட்டத்தில் நோக்குவதே மரபாக காணப்படுகின்றது. இவ்மரபானது, இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் என்ன தான் இணக்கம் காணப்பட்டாலும், இறுதியில் அதனை அழிக்கும் கருவியாக சிங்கள-பௌத்த தம்மதீபம் மேலெழும் என்பதே வரலாறு உணர்த்துகின்றது. பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான தென்னிலங்கையின் போராட்டம் சிங்கள பௌத்தத்தின் தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, பௌத்த தேரர்களின் முற்றுகை போராட்டத்தின் பலனாகவே எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா பண்டா-செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். இவ்வரலாற்று அனுபவங்கள் இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒழுங்கிலேயே 13ஆம் திருத்தத்திற்கு எதிரான வாதங்களை சிங்கள பேரினவாதம் சிங்கள-பௌத்தத்தை முன்னிறுத்துவதனூடாக அறிய முடிகின்றது.
மூன்றாவது, இலங்கையின் பாராளுமன்றத்தின் சிறப்புரிமையின் பேரினால் உமிழப்படும் பேரினவாத பிரச்சாரங்கள் இலங்கையின் இனவன்முறைகளுக்கான ஆரம்ப முத்தாய்வுகளாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. 13ஆம் திருத்தத்தை மையப்படுத்தி சமகாலத்தில் தென்னிலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள பேரினவாத தரப்பினரால் எழுப்பப்படும் உரைகளும் இனவன்முறைக்கான அபாயங்களையே உருவாக்கியுள்ளது. இனக்கலவரங்களின் கடந்த கால அனுபவங்களில் இனக்கலவரங்களிற்கு தூபம் போடுவதாகவும், சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைகளை ஆதரிக்கும் வகையிலேயே தென்னிலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களிள் உரைகள் அமையப்பெற்றுள்ளது. குறிப்பாக 1983ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசாங்க காலப்பகுதியில் கறுப்பு ஜூலை தமிழினப்படுகொலைக்கு முதல் மாதங்களில் திருகோணமலையில் இலங்கை இராணுவ ஆதரவுடன் சிங்கள பேரினவாத காடையர்களால் இனவெறி வேட்டை நிகழ்த்தப்பட்டது. இதுதொடர்பாக ஜூலை-08(1983)அன்று அன்றைய எதிர்க்கட்சி தவைர் அமிர்தலிங்கம் ஆற்றிய உரைக்கு பதிலளித்த அன்றைய கைத்தொழில் அமைச்சர் சிறில் மெத்தியு, 'யாழ்ப்பாணத்தில் 20,000 சிங்களவர்கள் இருந்தார்கள் இப்போது ஒருவரும் இல்லை. முன்னர் பல்கலைக்கழகத்தில் 400 சிங்கள மாணவர்கள் இருந்தார்கள் இப்போது அவர்கள் ஒருவரும் இல்லை. முன்னர் யாழ்ப்பானத்தில் பல பேக்கரிகள் இருந்தன இப்போது ஒன்றும் இல்லை. யாழ்ப்பாணத்தின் நிலைமையை திருகோணமலையிலும் கொண்டுவரப் பார்க்கிறீர்கள். திருகோணமலையில் சிங்களவர்களைப் பாதுகாக்க வேண்டும்.' என திருகோணமலையில் தமிழர்கள் மீது நிகழ்ந்த இனவெறி தாக்குதலை ஆதரித்து கருத்துரைத்தார். இந்தப்பலமான ஆதரவே கறுப்பு ஜூலை தமிழினப்படுகொலைக்கு சிங்கள காடையர்களுக்கு பலமான உந்துதலை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழர்களின் அடிப்படையான கோரிக்கைகளுக்கு வலுவான தீர்வினை வழங்காத 13வது திருத்தச்சட்ட உரையாடல்கள் மூலம், மீளவும் தமிழர்களுக்கெதிரான இனவன்முறையையே சிங்கள பேரினவாதம் கட்டமைத்து வருகின்றது. ஆயினும் இம்முறை தமிழ்த்தரப்பு தமக்கெதிரான தென்னிலங்கையின் செயற்பாட்டிற்கு ஆரோக்கியமான எதிர்வினையாற்ற இயலாத தரப்பினராக காணப்படுகின்றனர். 13ஆம் திருத்தச்சட்டம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுப்பொதியாகவே முன்னகர்த்தப்படுகின்றது. அதுதொடர்பில் தென்னிலங்னை இனவாதரீதியக உரைகளை முன்னகர்த்தி செல்கையிலும், தமிழத்தரப்பு 13ஆம் திருத்தம் தொடர்பிலான தமது எண்ணங்களை வலுவாக திரளாக வெளிப்படுத்த திராணியற்றறவர்களாக காணப்படுகின்றார்கள். 1987ஆம் ஆண்டு 13வது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அதனைத் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தொடக்கப்புள்ளியாகக் கூட ஏற்றுக் கொள்ள முடியாதென்ற நிலைப்பாட்டை தமிழரசியல் தரப்பின் ஏகபிரதிநிதிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னகர்த்தியிருந்தனர். இன்று மாறாக தமிழ் அரசியல் தரப்பு பிளவுற்று 13ஐ ஏற்றுக்கொள்வதாகவும், நிராகரிப்பதாகவும் தமக்குள் மோதும் நிலையே காணப்படுகின்றது. தமிழரசியல் தரப்புக்குள் காணப்படும் பிளவுகளால் தமிழ் மக்களின் எண்ணங்களை திரட்ட கூடிய திரணற்றவர்களாய், தென்னிலங்கையின் இனவாதத்துக்குள் தமிழினத்தை முடக்குபவர்களாகவே தமிழரசியல் தரப்பினர் காணப்படுகின்றனர்.
Comments
Post a Comment