ரணில் விக்கிரமசிங்காவின் பலவீனமும் ஜனாதிபதி தேர்தலும்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து முழுமையாக மீளாத நிலையிலும், தென்னிலங்கை அரசியலில் ஆட்சியதிகாரம் பற்றிய பேரங்கள் முதன்மையான அலையாக காணப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு இலங்கையின் தேர்தல் ஆண்டாகவே உரையாடப்படுகின்றது. மாகாண சபைத்தேர்தல், பாராளுமன்றத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் பற்றிய ஆரூடங்கள் முன்வைக்கப்படுகின்றது. பிரதானமாக ஜனாதிபதித் தேர்தலின் போட்டியாளர்கள் பற்றியும் அவர்களது அணி சேர்க்கைகளும் தென்னிலங்கை அரசியலில் சூடான விவாதமாக காணப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் நகர்வுகள் யாவும் அரசு இயந்திரத்தை கொண்டு தேர்தலூடாக தனது ஜனாதிபதி பதவியினை தக்கவைப்பதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதற்கான முயற்சியாகவே நோக்கப்படுகின்றது. இக்கட்டுரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் உள்ள வாய்ப்புகள் தொடர்பாக தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் எதிர்க்கட்சித் தலைவராக மற்றும் சில தடவைககள் பிரதமரானாலும், இலங்கை அரசியலின் துருவத்தின் உச்சிக்கு வராத மனிதராக வரலாற்றில் இடம்பிடித்தார். அதேவேளை இலங்கையின் காலனித்துவ விடுதலையின் அடையாளமாக உதயமாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் அடிப்படை வாக்கு வீதத்தினை கடந்த பொதுத் தேர்தலில் நாற்பது சதவீதத்திலிருந்து இரண்டு சதவீதமாக்கி, அதைத் தரைமட்டமாக்கிய தலைவர் என்ற விமர்சனத்தையும் கடந்த பொதுத்தேர்தல் முடிவில் பெற்றுக்கொண்டார். எனினும் இரு வருட காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க, தனது எதிர்ப்பாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்து குறுகிய கால இடைவெளியில் பிரதமராகவும் ஜனாதிபதி எனும் இலங்கையின் உயர் அரசியல் அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டார். 

பியகமவின் மிக இளம் உறுப்பினராக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சரியாக நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மிகவும் முதிர்ச்சியடைந்த ரணில் விக்கிரமசிங்க, அதிர்ஷ்டம், இணை நிகழ்வு அல்லது விடாமுயற்சி என்று அழைக்கக்கூடிய வகையில் 2022ஆம் ஆண்டு எட்டாவது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியாக பதவியேற்றார். இன்றளவும் தென்னிலங்கை அரசியலில் ரணில் விக்கிரமசிங்க, தன்னை ஒரு நவீனகால வின்ஸ்டன் சர்ச்சில் என்று தெளிவாகக் கண்டார். பிரித்தானியாவின் இரண்டாம் உலகப் போர்க்காலப் பிரதம மந்திரியைப் போலவே, ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத் தலைவராவதற்கு முன் நான்கு தசாப்தங்கள் அரசியலில் கழிக்க வேண்டியிருந்தது. சர்ச்சிலைப் போலவே, அவர் அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவிகளை அடைவதற்கு சற்று முன்பு அரசியல் வனாந்தரத்தில் சில ஆண்டுகள் கழித்தார். சர்ச்சில் ஹிட்லருக்கு எதிராகப் போரை நடத்தினார் என்றால், ரணில் விக்கிரமசிங்கா இலங்கையின் வரலாறு காணாத அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போரை எதிர்கொள்கிறார். வின்சன்ட் சர்ச்சில் பிரித்தானியாவின் இரண்டாம் உலகப்போர் நெருக்கடி கால பிரதமராக மிகச்சிறந்த போர்க்காலத் தலைவராக புகழாரம் சூடப்பட்ட போதிலும், போர் வெற்றிக்கு பின்னரான பொதுத்தேர்தலில் வின்சன்ட் சர்ச்சில் தோற்கடிக்கபட்டிருந்தார். இப்பின்னணியில் அரசியல் பொருளாதார நெருக்கடி சூழலை கட்டுப்படுத்தியமையை பிரச்சாரப்படுத்தி, தேர்தலை எதிர்கொள்ள உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வாய்ப்புக்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.

முதலாவது, ரணில் விக்கிரமசிங்கா இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு சமாந்தரமாக தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்துவது சிங்கள தரப்பினரிடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது. தென்னிலங்கை பொருளாதார பிரச்சினையை தனியானதொரு பிரச்சினையாகவே நோக்குகின்றது. ஈழத்தமிழர்கள் முதன்மைப்படுவது போன்று, தேசிய இனப்பிரச்சினையின் விளைவிலானதாக பொருளாதார நெருக்கடியை காணும் மனநிலை தென்னிலங்கை புத்திஜீவிகள் மத்தியிலும் காணப்படுவதில்லை. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை மதிப்பிடு செய்யும் தென்னிலங்கை புத்திஜீவிகள் கொரோனா ஏற்படுத்திய முடக்கம் மற்றும் அதுசார் அந்நிய செலவாணி பிரச்சினையையே முதன்மைப்படுத்துகின்றார்கள். பகுதியளவிலும் தேசிய இனப்பிரச்சினையை கருத்திற்கொள்ள தயாராகவில்லை. இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி மேற்கு நாடுகள் மற்றும் மேற்கு நிறுவனங்களின் பரிந்துரைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உரையாடல்களை சமதளத்தில் திறந்துள்ளமை தென்னிலங்கையில் எதிரான விம்பங்களையே உருவாக்கியுள்ளது. இது பொருளாதார நெருக்கடியை சீர்செய்யும் தலைமையாக ரணில் விக்கிரமசிங்காவை தென்னிலங்கை ஏற்கும் அதேவேளை, தென்னிலங்கையின் சிங்கள தலைமையாக ஏற்றுக்கொள்ள இயலாத நிலையையே வெளிப்படுத்துகின்றது.

இரண்டாவது, இந்தியாவுடனான இலங்கையின் நெருக்கம் தொடர்பில் சிங்கள பௌத்தம் வரலாறு தோறும் அச்சத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளது. இந்தியா வரலாற்றில், பௌத்த அரசை நிர்மூலமாக்கி இந்தியப்பேரரசை உருவாக்கி உள்ளது. இத்தகைய வரலாற்று பின்புலத்திலேயே பௌத்த அரசை பாதுகாக்கும் மனநிலையில் தென்னிலங்கை இந்தியாவிற்கு எதிரான மனோநிலையை திணித்து வருகிறது. மகாவம்ச உருவாக்கத்திற்கு பின்னணியிலும் இத்தகைய மனநிலையே வளர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே தரைவழி பாதையை உருவாக்குவது தொடர்பில் உரையாடி உள்ளார். தென்னிலங்கை இந்தியாவிலிருந்து இலாபத்தை மாத்திரமே எதிர்பார்க்கிறது. மாறாக அதன் நெருக்கமான உறவை இயன்றளவு தவிர்க்கவே முயலுகின்றது. ரணில் விக்கிரமசிங்காவின் இந்தியாவிற்கான பாலம் பற்றிய உரையாடல் தென்னிலங்கையில் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் எதிரான வாதங்களையே உருவாக்கியுள்ளது.

மூன்றாவது, கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தை பெறுவதில் பலமான ஆதரவை தமிழரசியல் தரப்பினரும் தமிழ் மக்களும் வழங்கி வந்திருந்தார்கள். எனினும் தற்போது ஜனாதிபதியாக ரணிவ் விக்கிரமசிங்க எடுத்துள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தமிழ் மக்களிடையே ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ஷாவே '13பிளஸ்' பற்றிய உரையாடிய நிலையில், தமிழ் மக்கள் அதிக நம்பிக்கையை கடந்த காலங்களில் வெளிப்படுத்தி வந்த ரணில் விக்கிரமசிங்க '13மைனஸ்' பற்றி உரையாடுவது தமிழ் மக்களின் ஆதரவை இழக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமன்றி நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை தேசிய இனப்பிரச்சினையில் பிரயோகிக்காது, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக உரையாடும் ஏற்கனவே அரசியலமைப்புக்கு உட்பட்ட 13ஆம் திருத்தத்தை மீள பாராளுமன்ற உரையாடலுக்குள் தள்ளியமையானது, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகமாகவே தமிழ் மக்கள் விசனப்படுகின்றார்கள். தமிழ் மக்களின் விசனம் தமிழ் மக்களுடைய ஆதரவையும் ரணில் விக்கிரமசிங்க இழந்துள்ளமையினையே வெளிப்படுத்துகின்றது.

நான்காவது, ரணில் விக்கிரமசிங்க பொது அரங்கில் தான் 'ரணில் ராஜபக்ஷா' இல்லையென பகிரங்கமாக தெரிவிக்கின்ற போதிலும், ரணிலின் ஆட்சிக்கான ஆதரவுத்தளம் பொதுஜன பெரமுனவை மையப்படுத்தியதாக அமைவதனால், பொதுமக்களுடைய ரணில் தொடர்பான பார்வை ராஜபக்ஷாக்களுடன் இணைந்ததாகவே அமைகின்றது. இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு பின்னால் ராஜபக்ஷாக்களின் ஊழல் கனதியான நிலை பெறுகின்றது. எனினும் இலங்கையின் நிர்வாக ஊழல் தொடர்பாக எவ்வித முறையான விசாரணைகளையும் ஜனாதிபதி நெறிப்படுத்தியிருக்கவில்லை. ராஜபக்ஷாக்கள் சொகுசான வாழ்க்கை வாழ்கையில், சாதாரண மக்கள் மீதான வரிச்சுமையை ரணில் விக்கிரமசிங்கா அரசாங்கம் அதிகரித்துள்ளது. இது ராஜபக்ஷாக்களை பாதுகாக்கும் உத்தியாகவே சுட்டிக்காட்டப்படுகின்றது. மக்களால் துரத்தப்பட்ட பொதுஜன பெரமுனவின் ஆதரவில், பொதுஜன பொரமுன பங்காளிகளை பாதுகாக்கும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சி இடம்பெறுவது மக்களிடையே ரணில் விக்கிரமசிங்கா தொடர்பில் அவநம்பிக்கையையே உருவாக்குகிறது.

ஐந்தாவது, ரணில் விக்கிரமசிங்க 2022இல் ஜனாதிபதி பதவியை பெறுவதில் அரகல்யாவின் பங்களிப்பே முதன்மையானதாக காணப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியின் பயனையே ரணில் விக்கிரமசிங்க அறுவடைய செய்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார். எனினும் பின்னாளில் ஆட்சியதிகாரத்தை கொண்டு அரகல்யாவை பலவந்தமாக மூர்க்கத்தனமாக ஒடுக்கி இருந்தார். ஜனாதிபதியாக பாராளுமன்றத்திற்கு தனது முதல் வருகைக்குப் பிறகு, அவர் சிப்பாய்களை வாழ்த்துவதற்காக வழியில் நிறுத்தினார். அவர் தனது முன்னோடியை விட துருப்புக்களுக்கு கட்டளையிடும் அதிகாரியாக அதிகமாக செயல்பட்டார். எண்பதுகளில் ஜேர்.ஆரின் வளர்ப்பில் துருப்புக்களுக்கு கட்டளையிடும் உண்மையான அதிகாரியாக இருந்தார். 2022இல் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று ஜனாதிபதியாக துருப்புக்களுக்கு கட்டளையை பிரயோகித்து அரகல்யா செயற்பாட்டாளர்களை மூர்க்கத்தனமாக ஒடுக்கினார். அரகல்யா செயற்பாட்டாளர்களுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க நடந்து கொண்ட முறைமை கொழும்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்தும் ரணில் விக்கிரமசிங்காவை தூரமாக தள்ளியுள்ளது. கடந்த காலங்கள் போன்று ரணில் விக்கிரமசிங்காவை தாரளவாதியாக கொழும்பு மத்தியதர வர்க்கம் ஏற்க முடியாத நிலையினேயே சமகால அவதானிப்புக்கள் வெளிப்படுத்துகின்றது.

எனவே, ரணில் விக்கிரமசிங்கா பெருமளவில் இலங்கை பேரினவாத தரப்பு, தமிழ்த்தரப்பு மற்றும் கொழும்பு மத்திய தர வர்க்கம் எனப்பல சமுகங்களினால் நிராகரிக்கப்படும் தலைவராகவே காணப்படுவார். ரணில் விக்கிரமசிங்காவின் தைரியமும், அவரது பிரதான எதிர்த்தரப்புகளான சஜித் பிரேமதாசா மற்றும் அநுர குமாரதிசநாயக்க ஆகியோரின் தயக்கமுமே 2022இல் ஜனாதிபதி பதவியை வழங்கியுள்ளது. எனினும் அதனை தக்கவைப்பதற்கான சமயோசித தந்திரத்தை ரணில் விக்கிரமசிங்க கையாளவே தவறியுள்ளார். எனினும் ரணில் விக்கிரமசிங்க அவருடைய மாமா ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் விம்பத்தினூடாக கட்டமைத்து வைத்துள்ள நரி மற்றும் இராஜதந்திரி எனும் விளம்பரங்கள் அவரின் பலவீனங்களை மறைக்க காரணமாகியுள்ளது. மேலும், பொருளாதாரப் போரை எதிர்த்துப் போராடும் போது அவர் மீண்டும் ஆட்சிக்கு திரும்புவதை வின்சன்ட் சர்ச்சிலின் இயல்புடையவராக ஒப்பிட்டுப் பார்த்தால், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றார். ஆனால் அடுத்த தேர்தலில் தோற்றார்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-