2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பமா! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் கடந்த வாரம் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்காவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதிக வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் மத்தியில் கடந்த காலத்தின் பயனற்ற வரவு-செலவுத்திட்டத்தின் தொடர்ச்சியையே ரணில் விக்கிரமசிங்காவும் பின்பற்றியுள்ளாரென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. மாறாக ரணில் விக்கிரமசிங்கா பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையில், 'அரசியல் கட்சிகள் நீண்ட காலமாக தேர்தல் வாக்குறுதிகளை நம்பியிருப்பது வரலாற்று ரீதியாக நாட்டின் பொருளாதார திவால்நிலைக்கு வழிவகுத்தது என்பதை நினைவு கூர்ந்து, ஒரு தேசத்தை முன்னேற்றுவதற்கு வெறும் விசித்திரக் கதைகளை விட அதிகமானதை 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் உள்ளடக்கியுள்ளதாக' தெரிவித்துள்ளார். இக்கட்டுரை 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட அறிக்கையின் உள்ளடக்கத்தின் அரசியல் நலன்சார் நோக்கங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நவம்பர்-13அன்று தனது அரசாங்கத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சராக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் சமர்ப்பித்த இரண்டாவது வரவு-செலவுத் திட்டம் இதுவாகும். 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் விவாதம் நவம்பர்-21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்திற்கு அமைய 2024ஆம் ஆண்டில் அரச வருமானம் 4 172 பில்லியன் ரூபாவாகும். அரசின் மொத்தச் செலவீனம் 6 978 பில்லியன் ரூபாவாகும். இதற்கிணங்க, வரவு-செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2 ஆயிரத்து 806 பில்லியன் ரூபாவாகும். மேலோட்டமாகப் பார்க்கும் போது இவ்வரவு-செலவுத்திட்டம் சம்பள அதிகரிப்பு, சலுகை, மலையக மக்களுக்கான வீட்டு திட்டம், கல்விக்கான உதவி, காப்புறுதி, புதிய பல்கலைக்கழக உருவாக்கம் போன்றவை மக்களைக் கவரும் வகையில் உள்ளன. அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய நிவாரணமாகவும் அரசாங்கத்தின் அரசியல் நலனுக்கான விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
இன்றைய விலைவாசியின் அதிகரிப்பில் இந்தச் சலுகைகள் ஏற்புடையனவையா என்பதே தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் முதன்மையான கேள்வியாக அமைகின்றது. சம்பள உயர்வு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு எதிரானது என்ற நிலையில் சமயோசிதமாக வாழ்க்கை செலவு கொடுப்பனவு என்ற சொற்பிரயோகத்தினூடாக இலங்கை அரசாங்கம் சர்வதேச கொடையாளியின் பரிந்துரைகளை முகாமை செய்துள்ளது. அவ்வாறே அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஊதிய உயர்வு என்ற மகிழ்வுக்கு பின்னால் மக்கள் மீதான நிதிச்சுமையே அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வருவாய் ஈட்டுவது திருப்திகரமாக இல்லாவிட்டால், அரச துறையின் முன்மொழியப்பட்ட ஊதிய உயர்வுக்கு அரசு எவ்வாறு வசதி செய்யப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்தின் சமீபத்திய யதார்த்தத்தை பார்க்கும்போது, மீண்டும் வரி மற்றும் கட்டணங்களை அதிகரிப்பதே வெளிப்படையான பதிலாக அமைகின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 8 சதவீதம் வரையிலிருந்த பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (ஏயுவு) தற்போது 18 சதவீதம் வரை உயர்வை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை தொடர்ந்தும், தொழிற்சங்கங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக தொழிற்சங்கம் 20,000 ரூபாய் ஊதிய உயர்வைக் கேட்டனர். மேலும் தொழில்முறை சங்கங்கள் தனிப்பட்ட வரிகளில் கணிசமான குறைப்புக் கோரின. அரசாங்கம் 10,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக உறுதியளித்துள்ளது. அதேநேரம் இது வரிவிதிப்பு அச்சத்தையும் எழுப்பியுள்ளது. பொருளாதார மீட்சி என்பது ஒரு சீரான வேலையாக இருக்க வேண்டும். அங்கு வருமானம் சீராக அதிகரிக்கும் அதே வேளையில் செலவுகள் மூலோபாய ரீதியாக குறைக்கப்படும். எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பை ஒரு சாக்காகப் பயன்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தன்னை பாதுகாத்துக்கொள்வதாகவே தெரிகிறது.
அரசியல் கட்சிகளிடையேயும், குறிப்பாக எதிர்க்கட்சிகள் 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை வழமைபோல கடுமையாக விமர்சித்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 'அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் ஒரு ஊடக சர்க்கஸ் என்றும் மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், முன்வைக்கப்பட்ட பல முன்மொழிவுகள் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை போலவே இருந்தன. ஆனால் அவை அரசாங்கத்தால் செயல்படுத்தப்படவில்லை பயனற்ற மற்றும் ஏமாற்றும் பட்ஜெட்' எனக்குறிப்பிட்டிருந்தார். அவ்வாறே, 'தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் எதுவுமில்லை' என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விசனம் தெரிவித்திருந்தார். தமிழ் மக்கள் தேசிய கூட்டணித் தலைவர் க.வி. விக்னேஸ்வரன், 'பாதுகாப்புச் செலவுகள் மீண்டும் உயர்ந்துள்ளன' எனும் ஆதங்கத்தை முன்வைத்தர். தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், 'ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் நகைச்சுவை நடிகர் வடிவேலின் வரும் ஆனால் வராது என்ற நகைச்சுவைக்கு இணையானதாக உள்ளது' என வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஆளும் தரப்பிலிருந்தும் ரணில் விக்கிரமசிங்காவால் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் விமர்சனத்தை பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷா, 'ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பல முன்மொழிவுகள் முன்னைய வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டவையெனவும், முன்னைய முன்மொழிவுகள் அமுல்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படையானது எனவும் அதனால் அரசாங்கம் அதனை மீண்டும் முன்வைத்துள்ளதாகவும்' தெரிவித்துள்ளார். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் நிதியமைச்சராக ஜனாதிபதி செயற்படுவதை சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷா, கட்சியின் கொள்கைகள் வரவு செலவுத் திட்டத்தில் இருக்க வேண்டும் என்றும், 'தேவதைக் கதைகள் நடைமுறையில் செயல்படாவிட்டால் எந்தப் பயனும் இல்லை' எனக்குறிப்பிட்டுள்ளார். இது ரணில் விக்கிரமசிங்கா வரவு-செலவுத்திட்ட முன்னுரையில் 'விசித்திரக்கதைகள் பயனற்றது' என்ற கருத்துக்கான பதிலாகவே அவதானிக்கப்படுகின்றது.
வரவு-செலவுத்திட்டம் தொடர்பான தொழிற்சங்கங்களின் ஏமாற்றமும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுந்தரப்பின் விமர்சனங்கள் வரவு-செலவுத்திட்டம் தொடர்ச்சியான மரபுக்குள் பயணிப்பதையே அடையாளப்படுத்துகின்றது. குறிப்பாக தேர்தல் இலக்குகளை மையப்படுத்திய அரசியல் கட்சிகளின் நடத்தையின் பிரதிபலிப்பாகவே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, ரணில் விக்கிரமசிங்காவின் வரவு-செலவுத்திட்ட அறிக்கை அதிகமாக சலுகைகளை வழங்குவது தேர்தலை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. ரணில் விக்கிரமசிங்கா சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளையும் முகாமை செய்து சொற்பிரயோக மாற்றீட்டினூடாக அரச துறையினருக்கு வாழ்;க்கை செலவுப்படியாக 10 000 ரூபா ஊதிய அதிகரிப்பும் அதில் கையாண்டுள்ள உத்தியும் ரணில் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நகர்கின்றார் என்பதையே உறுதி செய்கின்றது. குறிப்பாக 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு ஊதிய உயர்வை அதிகரித்துள்ள போதிலும், ஏப்ரல் மாதங்களுக்கு பிற்படவே பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ வழங்குவதாக அறிவித்துள்ளார். இவ்அறிவிப்புக்கள் கடந்த காலங்களில் தேர்தல்களை மையப்படுத்தி அரசாங்கங்கள் மேற்கொண்ட 'டீல் அரசியல்' தந்திரங்களையே பிரதியீடு செய்கின்றது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு தேர்தலை மையப்படுத்தி 2014ஆம் ஆண்டு ஒக்டோபரில் ராஜபக்ஷ அரசாங்கம் அரசாங்க ஊழியர்களுக்கு இலவச மோட்டார் சைக்கிள்களை வழங்குவதாக அறிவித்து முற்பணமும் பகுதியளவு பணப்பெறுகையும் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புக்களையே மீள நினைவூட்டுகிறது. மேலும், உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படுமெனும் வகையில் வரவு-செலவுத்திட்ட அறிக்கையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். எனினும் கடந்த காலங்களில் பல்கலைக்கழக கற்கையை நிறைவு செய்த பின்பும் பலரும் வேலைவாய்ப்பின்றி இருப்பதை இலாபகரமாக மறைத்துள்ளார். எனவே வரவு-செலவுத்திட்ட அறிக்கையின் சலுகைகள் அதிகம் மக்களை வார்த்தைகளால் குளிர்விப்பதாக அமைகின்றதே தவிர நடைமுறை சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது.
இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்கா தனது வரவுத்திட்ட அறிக்கையில் வழக்கத்துக்கு மாறாக பௌத்த தர்ம போதனைகளை உள்ளடக்கி இருந்தமையானது, பௌத்தத்தின் பேரால் தனது இருப்பை பாதுகாப்பதற்கான தென்னிலங்கை அரசியலின் உத்தியின் தொடர்ச்சியாhகவே அவதானிக்கப்படுகின்றது. புத்தபெருமானின் பொருளாதார தத்துவங்களை பொருட்படுத்தாமையினால்தான் நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்கின்றது என ரணில் விக்கிரமசிங்கா தனது வரவு-செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றும் போது சுட்டிக்காட்டியிருந்தார். குறிப்பாக உரையின் ஆரம்பத்திலும் முடிவிலும் புத்தரின் போதனைகளை நினைவுபடுத்தியிருக்கின்றார். ஆரம்பத்தில், புத்த பகவானின் 'சம்ஜீவிகதா' (சமநிலை வாழ்க்கை) என்ற கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார். வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பது பற்றிய கருத்து விரிவுபடுத்துகிறது. அதாவது, குறைந்த வருமானம் பெறும் போது ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துவதற்கு எதிராக புத்தர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு கவனமுள்ள நபர் தனது வருமானத்தை செலவுக்கு ஏற்றவாறு தனது வாழ்க்கையை நடத்துவார் என்று அவர் விளக்குகிறார். இதனூடாக ஒரு மனிதன் வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடாது, இருப்பதை கொண்டு வாழ்வை சிறப்பாக வாழவேண்டும். அதேபோன்று, நுகர்வுக்காக அல்லாமல் முதலீட்டிற்காக கடன் வாங்க வேண்டும் எனும் கரு;தினை சமஜ்ஜபால சுத்தம் எனும் புத்த தர்மத்தினை சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தார். மேலும்; இலங்கை அரசாங்ககங்கள் கடந்த காலங்களில் நுகர்வுக்கு கடன் வாங்கியது. இவ்வாறு கடன் வாங்குவதும் வட்டி கட்டுவதும் மிகவும் ஆபத்தானது என்பதை அங்குட்டாரா சக்க நிபாதத்தில் உள்ள இனா சுட்டா குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறது என விளக்கினார். இதன்மூலம் முன்னைய ஆட்சியாளர்கள் புத்தரின் போதனைகளை முறையாக பின்பற்றவில்லை எனும் குற்றச்சாட்டை ரணில் விக்கிரமசிங்கத கடந்தகால ஆட்சியாளர்கள் மீது முன்வைக்கின்றார். நாடு நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும்போது, மக்களை கையாளும், ஓர் உத்தியாக மக்களது நம்பிக்கைளில் உயர்வாக போற்றப்படும் விடயங்களை ஆட்சியாளர்கள் ஒரு கருவியாக கையாள்வதுண்டு. அவ்வாறானதொரு உத்தியைத்தான் ரணில் விக்கிரமசிங்க பௌத்த தர்மத்தை முன்னிறுத்துவதனூடாக கையாள முற்பட்டள்ளார். இதன்மூலம் சிங்கள மக்களை ஆற்றுப்படுத்தவும், வலிந்து சிங்கள பௌத்த அடையாளத்தை தன்மீது முன்னிறுத்த ரணில் விக்கிரமசிங்க முயல்வதையே புலப்படுத்துகிறது.
மூன்றாவது, வரவு-செலவுத்திட்டத்தின் உள்ளடக்கத்தை பரிட்சிக்காது எதிர்க்கட்சிகளின் முழுமையான நிராகரிப்பும் தேர்தலுக்கான போட்டிச்சூழலினையே வெளிப்படுத்துகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வரவு-செலவுத்திட்டத்தின் உள்ளடக்கங்களை பகுத்தாராய தயாரில்லாத நிலைமையினையே எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் வெளிப்படுத்தி நிற்கிறது. குறிப்பாக, ஜனாதிபதியின் சலுகைகளின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியே நகர்வுகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை வெளிப்படுத்துவது, அதன் உள்ளடகத்தை பகுத்தாராய போவதில்லை என்பதையே உறுதி செய்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, '2024ஆம் ஆண்டு ஏப்ரல் - ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்' எனக்குறிப்பிட்டுள்ளார். இப்பார்வையினூடாக தேர்தல் பிரச்சார போட்டியாகவே எதிர்க்கட்சிகளால் வரவு-செலவுத்திட்டம் அவதானிக்கப்படுகின்றது. அவ்வாறே ஆளும் தரப்பாகிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவும் ரணில் விக்கிரமசிங்கா எதிர்வரும் தேர்தலில் தமது எண்ணங்களுக்குள் பயணிக்க செய்வதற்கான ஓர் எச்சரிக்கை உத்தியை வரவு-செலவுத்திட்டத்தில் கையாள்வதனையே விமர்சன அறிக்கையினூடாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
எனவே, 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் விசித்திரக்கதைகளின் தொடர்ச்சியை பேணும் இலங்கை அரசியல் மரபை பேணுவதாகவே அமைகின்றது. நாடு பொருளாதார நெருக்கடிக்குள் வங்குரோத்து நிலைக்கான அபத்தங்களை முன்னறிவிக்கும் சூழலிலும் அரசியல் கட்சிகளிடையே தேர்தல் நலன்களின் முதன்மையையே ஜனாதிபதியின் வரவு-செலவுத்திட்ட அறிக்கையின் உள்ளடக்கத்திலும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் விமர்சன உள்ளடக்கங்களிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத்தின் முன்னறிவிப்பினையே கடந்த வாரம் வரவு-செலவுத்திட்ட அறிக்கை மற்றும் பாராளுமன்ற விவாதங்கள் வெளிப்படுத்தியுள்ளது. மேலும், புத்த பெருமானும் தென்னிலங்கையின் அரசியல் கருவி என்பது மீள மீள தென்னிலங்கை அரசியல் கட்சிகளால் தெளிவாக அடையாளப்படுத்தப்படுவதையும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட அறிக்கை உணர்த்தி நிற்கின்றது.
Comments
Post a Comment