தமிழரசுக்கட்சியின் புதிய தலைமை தமிழ்த்தேசியத்துக்கானதாக அமையுமா? -ஐ.வி.மகாசேனன்-
தென்னிலங்கையில் வரவு-செலவுத்திட்டம் அதனை ஆதாரமாகக்கொண்டு 2024ஆம் ஆண்டுக்கான தேர்தலில் அரசியல் கட்சிகள் முட்டி மோதிக்கொண்டிருகின்றன. தமிழர் தாயகப்பகுதியில் தமிழரசியல் கட்சியின் திரட்சியும் நெடிய வரலாறும் தொடர்ச்சியாக சிதைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, கடந்த வருடம் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அறிவிப்புடன் இரு தசாப்தங்களாக தமிழ்த்தேசியத்தின் ஏகபிரதிநிதித்துவத்தை தக்கவைத்து, தமிழ்த்தேசியத்தின் அடையாளமாக முன்னிலைப்படுத்தப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிதைக்கப்பட்டிருந்தது. தற்போது தலைமைத்துவ போட்டியில் பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழரசுக்கட்சிற்குள் நெருக்கடிகள் உருவாகியுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் தொடர்ச்சியான முரண்பாடுகள் தமிழ்த்தேசிய அரசியலுக்கான ஆபத்தை அடையாளப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் எச்சரிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இக்கட்டுரை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிசார் அரசியல் விளைவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நான்கரை வருடங்கள் தாமதித்து எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி நடாத்துவதற்கு நவம்பர்-05அன்று வவுனியாவில் நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. மேலும், மாநாட்டுக்கு முன்பாக கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவு, இளைஞர் மற்றும் மகளிர் அணிகளுக்கான மாநாட்டு திகதிகளும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், ஜனவரி-21ஆம் திகதி புதிய நிர்வாகத்தெரிவும், கடைசி மத்திய குழு கூட்டம், கட்சியின் மகளிர் அணி மற்றும் இளைஞர் அணியின் விசேட மாநாடுகள் போன்றவற்றை ஜனவரி-27ஆம் திகதியும் திருகோணமலையில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே கடந்த சில வருடங்களாக தமிழரசுக்கட்சியில் நிலவிவரும் தலைமைத்துவப்போட்டி உச்ச நிலையினையும், இறுதிக்கட்டத்தினையும் அடைந்துள்ளது. தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதி தங்களுக்கே உண்டு எனும் அடிப்படையிலேயே அதன் அரசியல்வாதிகள் சிலர் பொதுவெளிகளில் எதிரெதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேசிவருகின்றனர். கட்சியின் மூத்த உறுப்பினர்களோ கட்சியின் தலைமைத்துவ பிரச்னையைக்கூட, நிவர்த்தி செய்ய முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.
2009களுக்கு பின்னர் தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் பல்வேறு எதிர்விமர்சனப்பார்வைகள் பொதுவெளியில் முன்வைக்கப்படுகின்ற போதிலும், தமிழரசு கட்சி பழம்பெரும் கட்சியாக தமிழ்த்தேசிய வரலாற்றில் அதன் வகிபாகம் தனிமுதன்மையாக அமைகின்றது. ஆரம்ப காலங்களில் தமிழ்த்தேசியம் சார்ந்த தமிழரசுக்கட்சியின் இறுக்கமான செயற்பாடுகள் அதன் தலைமைத்துவம் சார்ந்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே தற்போதைய தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசியத்தின் போதாமை தொடர்பான விமர்சனங்களும் அதன் தலைமைத்துவத்தின் குறைபாடு சார்ந்தே எழுந்துள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைத்துவத்தின் அரசியல் முக்கியத்துவத்தினை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, தமிழ்த்தேசியத்தை வரையறை செய்தமையில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவரான சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்களே முதன்மை பெறுகின்றார். இலங்கையின் சுதந்திரத்திற்கு முந்தைய தமிழ் அரசியல் தலைமைகளான சேர். பொன். இராமநாதன், சேர். பொன். அருணாச்சலம், ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோர் கொழும்பு மைய அரசியலை முன்னிறுத்தி செயற்பட்டமையால் இலங்கை தேசியத்துக்குள் நின்று செயற்படவே முற்பட்டனர். சேர். பொன். அருணாச்சலம் விதிவிலக்காக இலங்கை தேசிய இயக்கத்தில் சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்ட போது தமிழர் மகாசபை என்பதை உருவாக்கி இருந்தார். எனினும் தமிழர் மகாசபை உருவாக்கத்துக்காகவே சேர். பொன். அருணாச்சலம் தமிழர் தாயகத்து பயணித்திருந்தார் என்ற விமர்சனமும் காணப்படுகின்றது. அதேவேளை தமிழர் மகாசபை உருவாக்கம்பெற்று குறுகிய காலப்பகுதியிலேயே சேர். பொன். அருணாச்சலம் மரணித்தமையால் தமிழ்த்தேசிய அடையாளப்படுத்தல் சாத்தியப்படவில்லை. தொடர்ச்சியாக கொழும்பு மைய அரசியலே இலங்கை தேசியத்துக்குள் தமிழரசியலை சுருக்கியது. 1950களில் அரசியலில் எழுச்சி பெற்ற செல்வநாயகத்தின் அரசியல் வளர்ச்சி தமிழர் தாயகக்கோட்பாட்டை நிறுவியதுடன், தமிழ்த்தேசிய எழுச்சிக்கும் காரணமாகியது. இப்பின்னணியில் செல்வநாயகத்தின் இருப்பு தமிழர் தாயகத்தை மையப்படுத்தி இருந்தமையே காரணமாகியது. இறக்குமதி அரசியல் தமிழர்களின் உணர்வுகளுடன் பயணிக்கக்கூடியதாக அமையப்போவதில்லை. ஈழத்தமிழர்களின் அரசியலை பொறுத்தவரை அவர்களுக்கென இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப்பகுதியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. தமிழர் தாயகப்பகுதியில் மக்களுடன் வாழ்பவர்களுக்கே அந்நிலத்தின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக சிந்திக்கும் திராணியை பெறுகின்றனர். அத்தகைய தரப்பினராலேயே தமிழர்களுக்கு சிறப்பான தலைமைத்துவத்தை வழங்க முடியும். இலங்கை அரசியலில் 1910களிலிருந்து தமிழ் அரசியல் தரப்பினரின் ஈடுபாடு காணப்படுகின்ற போதிலும், 1950களில் எழுச்சி பெற்ற சா.ஜே.வே. செல்வநாயகம் 'தந்தை' செல்வநாயகம் என அழைக்கப்படுவதற்கு பின்னால் தாயகத்திலிருந்து எழுச்சி பெற்ற அரசியல் தலைமை என்பதுவும் பிரதான காரணமாகிறது. இப்பின்னணியிலேயே தமிழர் தாயகத்திலிருந்து தமிழரசுக்கட்சியின் தலைமையை தெரிவு செய்வது தமிழ்த்தேசியத்துக்கு பலமானதாக அமையும்.
இரண்டாவது, தமிழ்த் தேசிய அரசியலில் மதிநுட்பத்துக்கு சமாந்தரமாக தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய இயல்பும் அவசியமாகின்றது. தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கு பின்னால் செயற்பட்டுள்ள செல்வநாயகம், நாகலிங்கம், வன்னியசிங்கம், தர்மலிங்கம் போன்ற ஆரம்பகால தலைவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் பயணித்தமையே தமிரசுக்கட்சி குறுகிய காலத்தில் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸை வீழ்த்தி தமிழ் மக்களின் ஏகபிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய காரணமாகியது. தேசியம் என்பது அறிவுபூர்வமான அரசியல் செயற்பாடாக அமைவதுடன் மக்களின் உணர்ச்சிகளுடன் ஆழமாக பிணைந்தது. மதிநுட்பத்தை மையப்படுத்தி இறக்குமதி செய்யப்படும் அரசியல் தரப்பினரால் மக்கள் உணர்வுகளுடன் இணைந்து பயணிக்க முடிவதில்லை. 1980களுக்கு பின்னர் அரசியல் தரப்பினருக்கும் விடுதலை போராட்டக்குழுவிற்குமிடையிலான முரண்பாட்டின் அடித்தளமாக மக்களின் உணர்வுகளை அரசியல் தரப்பினர் புறமொதுக்கி செயற்பட ஆரம்பித்ததே காரணமாகின்றது. மேலும், 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் தமிழரசுக்கட்சி பொதுமக்களிடையே கடுமையான எதிர்விமர்சனங்களை பெறுவதில் இறக்குமதி அரசியல்வாதிகளின் தாக்கமும் முதன்மையாக காணப்பட்டமை முக்கியமானதாகும். இறக்குமதி அரசியல்வாதிகள் மொழியாலும் தொழில் நிபுணத்துவத்தாலும் கட்சியிலும் நாடாளுமன்றத்திலும் ஆதிக்கம் செலுத்துபவராகவும், உயர்மட்டத்தினருக்கு நெருக்கமானவராக இருக்க முடிகின்றதேயன்றி மக்களுக்கு நெருக்கமான அரசியல்வாதியாக இல்லை என்ற விமர்சனங்களும் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன. தமிழரசுக்கட்சியின் எதிர்கால தலைமைகள் தெரிவில் நிபுணத்துவத்துக்கு சமாந்தரமாக மக்களுக்கு நெருக்கமான அரசியல்வாதியை தெரிவு செய்வதனூடாகவே தமிழரசுக்கட்சியின் வரலாற்றை பாதுகாக்கக்கூடியதாக அமையும்.
மூன்றாவது, தமிழ்த்தேசிய அரசியலில் மதச்சார்பின்மை முதன்மையான நிலையில் காணப்படுகின்றது. தேசிய விடுதலைப்போராட்டத்தில் மதச்சார்பின்மை பிரதான காரணியாக அமைகின்றது. இன்று வடிவம் மாறியுள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடியின் பிரதான இரு தேசிய இனங்களினதும் ஆரம்ப விடுதலைப்போராட்டங்கள் மதச்சார்பின்மையை தழுவியே கட்டமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக சியோனிசவாதத்தின் தந்தை என புகழாரம் சூடப்படும் தியோடர் ஹெர்சல் யூத தேசியவாதத்தின் எழுச்சியில் மதச்சார்பின்மையை முதன்மைப்படுத்தியிருந்தார். தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சியும் அவ்வாறானதாகவே அமைகின்றது. குறிப்பாக தமிழ்த்தேசியத்தில் தந்தை என அழைக்கப்படும் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் சா.ஜே.வே. செல்வநாயகத்தின் அரசியல் செயற்பாட்டில் மதச்சார்பின்மை வலுவான காரணியாக அமைகின்றது. குறிப்பாக இன்று சகோதர தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படும் முஸ்லீம் மக்களும் செல்வநாயகத்தின் காலப்பகுதியில் மொழியால் தமிழ்த்தேசிய இனமாகவே அடையாளப்படுத்தப்;பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களிடையே மதத்தால் சைவம் பெரும்பான்மையாக காணப்படுகின்ற போதிலும், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றிய செல்வநாயகத்தின் பின்னால் தமிழ் மக்கள் அணிதிரட்டப்பட்டுள்ளாராயின், அது அவரது மதச்சார்பற்ற கொள்கையின் இறுக்கத்தையே அடையாளப்படுத்தப்படுகின்றது. எனினும் இன்று தமிழரசு கட்சிக்குள்ளேயே மதரீதியான ஈடுபாடுகள் பிரதான குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகின்றது. இன்று தமிழ்த்தேசியத்துக்கு பெரிய ஆபத்தாக காணப்படும் மதமாற்றுச்செயற்பாடுகள் தமிழரசியல் கட்சியின் பிரதானிகளால் மேற்கொள்ளப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு பொதுப்பரப்பில் வலுவானதாக காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவ தெரிவு என்பது மதச்சார்பற்ற நிலையை உறுதிப்படுத்தல் அவசியமாகின்றது.
நான்காவது, தமிழ்த்தேசியத்தின் ஒற்றுமையை பலப்படுத்துவதில் தமிழரசுக்கட்சிக்கு நீண்ட வரலாற்றுக்கடமை காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிளவுகளுக்கு பின்னால் தமிழரசுக்கட்சியின் எதேச்சதிகாரமும் தலைமையின் பலவீனமுமே பிரதான குற்றச்சாட்டாக ஏனைய கட்சிகளாலும், அரசியல் அவதானிகளாலும் முன்வைக்கப்பட்டது. எனினும் ஆரம்ப காலங்களில் தமிழ் அரசியல் தரப்பிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதனூடாக தமிழ்த்தேசிய திரட்சியை கட்டமைப்பதில் தமிழரசுக்கட்சி முதன்மையான அனுபவத்தை பகிர்கின்றது. 1972, மே-14ஆம் திகதி, ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி, சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், சி.சுந்தரலிங்கத்தின் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி உட்பட சில தமிழ் அமைப்புகள் இணைந்து, தமிழர் ஐக்கிய முன்னணியை (வுருகு) உருவாக்கின. இதுவே பின்னாளில் தமிழர் விடுதலைக்கூட்டணியாக பிரபல்யமடைந்தது. இவ்ஐக்கியத்தின் பின்னணியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் செல்வநாயகத்தின் வகிபாகம் முதன்மையானது. வாக்கு வங்கியில் உச்சத்தில் நிலைபெற்ற போதிலும், தனது பிரதான போட்டியாளரான ஜீ.ஜீ. பொன்னம்பலத்தினை அவரது வீடு சென்று சந்தித்து ஐக்கியத்திற்கான அழைப்பை விடுத்திருந்தார். மேலும், தமிழ்க் கட்சிகளிடையேயான ஒற்றுமையின் தேவைப்பாட்டை உணர்ந்து மக்களிடம் பிரபல்யம் பெற்றிருந்த தமது கட்சியின் வீட்டு சின்னத்தையே புறமொதுக்கி உதய சூரியன் சின்னத்தில் புதிய அரசியல் பயணத்திற்கு அடித்தளமிட்டார். இப்பின்னணியிலேயே 2001ஆம் ஆண்டு மீளவும் தமிழ்க்கட்சிகளிடையே திரட்சியை உருவாக்கி கட்டடமைக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் வீடு சின்னம் விடுதலைப்புலிகளால் முதன்மைப்படுத்தப்பட்டது. எனினும் 2009களுக்கு பின்னரான தமிழரசுக்கட்சியின் தலைமை கடந்தகால வரலாறுகளை மறந்து தமிழரசுக்கட்சியினை ஒற்றுமைக்கு விரோதமான கட்சியாக மாற்றியுள்ளது. அதன் இறுதிவிளைவாகவே கடந்த வருட உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிதைக்கப்பட்டு தமிழரசுக்கட்சி தனித்து பயணிக்க ஆரம்பித்துள்ளது. புதிய தலைமை உருவாக்கத்தில் மீள தமிழரசுக்கட்சியின் வரலாற்றுக்கடமையை தொடரக்கூடியதாக அமைவது தமிழ்த்தேசியத்தினை பாதுகாக்க அவசியமானதாக கருதப்படுகின்றது.
எனவே, தமிழரசுக்கட்சியின் புதுப்பிப்பு என்பது தமிழ்த்தேசியத்துக்கு புத்துயிர் அளிப்பதாக அமைய வேண்டும். தமிழரசுக்கட்சியின் வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்தக்கூடியதாக தமிழ் அரசியல் கட்சிகளிடையே வலுவான ஒற்றுமையை கட்டியெழுப்பி தமிழ் மக்களின் திரளை உருவாக்கக்கூடிய வகையிலான தலைமையே தமிழரசுக்கட்சியினதும் தமிழ்த்தேசியத்தினதும் தேவைப்பாடாக அமைகின்றது. மாறாக கடந்த கால தவறுகளின் தொடர்ச்சியாக தமிழ்த்தேசியத்தை பலவினப்படுத்தக்கூடியதொரு தலைமையை தமிழரசுக்கட்சி முன்னிறுத்துமாயின், செல்வநாயகம் பொறுப்பு ஒப்படைந்து சென்ற கடவுளாலும் தமிழ் மக்களை காப்பாற்ற இயலாத நிலைக்கே தள்ளப்படும். கடந்த காலங்களில் அரசியல் அவதானிகளால், கருத்தியலாளர்களால் தமிழரசுக்கட்சி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தமிழரசுக்கட்சியை தூய்மைப்படுத்துவதற்கானயே அன்றி அதனை அழிப்பதற்கானது அல்ல என்ற தெளிவை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்க்கட்சிகளில் ஒப்பீட்டு அளவில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் பரந்த கட்டமைப்பு செறிவை கொண்டதொரு கட்சியாக தமிழரசுக்கட்சி மாத்திரமே காணப்படுகின்றது. கொழும்பு கிளை உள்ளடங்கலாக 45 தொகுதி கிளைகளை கொண்டு இயங்கும் பாரம்பரிய கட்சியான தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசியத்துக்கான பயணம் அவசியமானதாகும்.
Comments
Post a Comment