வரவு-செலவுத்திட்டம் ரணில்-பெரமுன அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வருமா? -ஐ.வி.மகாசேனன்-

தென்னிலங்கை அரசியல் சிங்கள பௌத்த பேரினவாதத்தினூடாக சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறைகளை தொடர்ச்சியாக நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றுள்ள போதிலும், இலங்கையின் அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் தொடர்ச்சியாக நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. ரணில்விக்கிரமசிங்க-பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்டம் நவம்பர் மத்தியில் சமர்ப்பிக்க உள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைத்திருப்பு தொடர்பில் அதிக வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளது. தொடர்ச்சியாக எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களின் விலையேற்றங்கள் பொதுமக்களிடம் அரசாங்கம் தொடர்பிலான விசனத்தை எழுப்பியுள்ளது. மேலும், தொழிற்சங்கங்களும் சம்பள உயர்வைக்கோரிய போராட்டங்களுக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தகைய நெருக்கடிகளுக்குள்ளேயே  2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்முயற்சிகள் இடம்பெறுகின்றது. இக்கட்டுரை வரவு-செலவுத்திட்டத்தை மையப்படுத்தி தென்னிலங்கையில் கட்டமைக்கப்படும் அரசியல் நெருக்கடிகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் கடந்த ஒக்டோபர்-30அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியமாலாபிட்டிய, 'பொருளாதார நிவாரணத்திற்கான வளர்ந்து வரும் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்துடன் நிலையான வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதற்கான சவாலை இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது' என தெரிவித்துள்ளார். மேலும், 'இதற்கான வருவாயை வரிவிதிப்பு மூலம் கண்டுபிடிக்க வேண்டும். அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. நாட்டை மீண்டும் பாதாளத்துக்குத் தள்ளாமல், ஐசிங் அலங்கரிக்கப்பட்ட பட்ஜெட் என்ற கொள்கையிலிருந்து நாம் முன்னேற வேண்டும். 75 ஆண்டுகள் அதைச் செய்தோம், அதன் பலனைக் கண்டோம். நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு நம்மை அழைத்துச் செல்லும் பட்ஜெட்டுக்கு நாம் செல்ல வேண்டும்,' எனத்தொடர்ச்சியாக தெரிவித்துள்ளார். எனினும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னறிவிப்பை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கையின் வரவு-செலவுத்திட்டம் ஐசிங் அலங்கரிக்கப்பட்ட கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைமையில் அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கையீனத்தையே வெளிப்படுத்தியுள்ளார்கள். 

மேலும் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் வரவு-செலவுத்திட்டம் தொடர்பில் அதீத கவனத்தை செலுத்தும் நிலைமையும் காணப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் கூடுதல் ஆதரவு மற்றும் சீனாவின் கடன் மறுசீரமைப்பு வாக்குறுதியுடன் ஒரு ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளது. இந்த முக்கியமான சோதனை அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக வருகிறது, மேலும் சோர்வுற்ற மக்கள் கடுமையான சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு நிபந்தனைகளால் விரக்தியடைந்துள்ளனர். இப்பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்ட நகர்வில் காணப்படும் அரசியல் சூழமைவை நுணுக்கமாக அவதானிக்க வேண்டியது அவசியமாகும்.

முதலாவது,இலங்கையின் வரவு-செலவுத்திட்டத்தின் உள்ளடக்கங்கள் பிரதானமாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதாகவே அமைய உள்ளது. பொருளாதார நிபுணர் தௌஃபீக், 'அடுத்த ஆண்டு தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்கு தேவையான சீர்திருத்தங்களில் இருந்து வெளியேற அரசாங்கம் தூண்டப்படலாம்' என்று எச்சரிக்கையை விடுத்திருந்தார்.  எனினும் வரவு-செலவுத்திட்ட உருவாக்க சமகாலப்பகுதியில் அதிகரிக்கப்படும் விலையேற்றங்களுக்கு பின்னாலேயே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தூண்டலாக அமைவதனால், இலங்கை அரசாங்கம் இலகுவில் வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளுக்கு நிதியளிக்க கண்மூடித்தனமாக கடன் வாங்கும் நிலைமைகளில் இல்லை என்ற இலங்கை அரசாங்கத்துக்கு காணப்படும் நெருக்கடிகளும் பொது அவதானிப்பில் முதன்மைப்படுத்தப்படுகின்றது.  இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர், 'ஏறக்குறைய 12 மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல, நிச்சயமாக, செலவினத்திற்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருப்பதால், அதை அடையக்கூடிய வலுவான வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கிறோம். மீதமுள்ள இடைவெளிக்கு நிதியளிக்க தயாராக இருக்கும் கடன் வழங்குநர்கள்' என்று வாஷிங்டனில் இருந்து நிகழ்நிலை மாநாட்டில் செய்தியாளர்களிடம் கூறினார். இலங்கை பொதுவாக தனது வரவு செலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக அரச வங்கிகள், வரிகள் மற்றும் அரசாங்கப் பத்திரங்கள் ஆகியவற்றிலிருந்து கடன் வாங்குவதைப் பயன்படுத்துகிறது. இலங்கையின் அரச அதிகார ஏகபோகமான இலங்கை மின்சார சபையின் வருவாயை மேம்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் நடைமுறைக்கு வரும் வகையில், 18% வீடுகளுக்கான மின்சாரக் கட்டண உயர்வை மின் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரித்துள்ளது. பெப்ரவரியில் 66% உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, எட்டு மாதங்களில் இரண்டாவது முறையாக 18% மின் கட்டண உயர்வுக்கு அரசாங்கம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளமை மக்களிடையே அரசாங்கம் தொடர்பில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. 2024ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் மக்களின் சினம் ரணில் விக்கிரமசிங்க நிர்வாகத்துக்கு நெருக்கடியான அரசியல் சூழலையே உறுதி செய்கின்றது.

இரண்டாவது, அரசாங்கத்துக்குள் காணப்படும் முரணான போக்கு அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பொதுஜனபெரமுன அரசாங்கம் உருவாக்கப்பட்ட போதிலும் 2021-2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத அரசியல் பொருளாதார நெருக்கடி, பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை தக்கவைத்த போதிலும் ஸ்திரமற்ற அரசியல் சூழலுக்குள் நகர்த்ப்பட்டது. அதனடிப்படையில் ஜனாதிபதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 15 மாதங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுஜன பெரமுன அரசாங்கம் காணப்படுகின்றது. எனினும் அண்மைக்காலத்தில் பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இடையே ஊடல் போக்கு தென்னிலங்கை அரசியலை நிரப்பியுள்ளது. குறிப்பாக வரவு-செலவுத்திட்டத்திற்கு பொதுஜன பெரமுனாவின் ஆதரவு தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களிடையே காணப்படும் மாறுபட்ட முடிவுகள் ரணில் விக்கிரமசிங்க-பொதுஜன பெரமுன ஊடலை விபரிக்கிறது. எனினும் இவ்ஊடலின் பிளவு சார்ந்த நகர்வு சந்தேகத்திற்குரியதாகவே அமைகின்றது. பொதுஜன பெரமுன அரகலயாக்கு பின்னரான தமது மீள்வருகையை இன்னும் உறுதிப்படுத்த இயலாத நிலையிலே காணப்படுகின்றார்கள். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்காவுடனான அரவணைப்பூடாகவே தமது கட்சியை பலப்படுத்தலாம் என்ற நம்பிக்கையிலேய ஜனாதிபதியாக ரணிலின் தெரிவும் தொடர்ச்சியான ஆதரவும் காணப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க தலைமைக்கான ஆதரவை வாபஸ் பெறுவார்களாயின், ராஜபக்சக்கள் ஒரு வகையான தேர்தல் தற்கொலையை செய்ய தயாராகிறார்கள் என்பதுவே பொதுவான நம்பிக்கையாகும். ராஜபக்ஷக்களின் அடுத்த தலைமுறையின் அரசியலுக்கான ஆபத்தை செய்யத்துணிய மாட்டார்கள் என்பதுவே பொதுவான ஆருடமாகவும் காணப்படுகின்றது.

மூன்றாவது, ரணில் விக்கிரமசிங்க தனது இருப்பை சுயாதீனப்படுத்துவதற்கான மற்றும் தனது பலத்தை முதன்மைப்படுத்துவதற்கான நகர்வை வரவு-செலவுத்திட்டத்தை மையப்படுத்தி நகர்த்தி உள்ளதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, சீனாவுக்கான விஜயத்தில் சீனாவின் கடன் மறுசீரமைப்பை உறுதிப்படுத்தியுள்ளமையானது, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டை பிரகாசப்படுத்தியுள்ளது. இது இலங்கையின் பொருளாதார மீட்புக்கு பலமான ஆளுமையான மீள தன்னை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலைமையிலேயே பொதுஜன பெரமுனாவின் இயங்குநிலைக்கு வெளியே தனது அரசியல் நகர்வை வெளிப்படுத்தும் வகையில் புதிய அமைச்சரவை மறுசீரமைப்பில் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களை நிராகரித்து அதன் தாய்க்கட்சியான இலங்கை சுதந்திர கட்சி உறுப்பினர்களை உள்வாங்கும் தந்திரோபாயத்தை கையாண்;டிருந்தார். அதனோர் நகர்வாகவே ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் கீழ், ஜனாதிபதித்தேர்தலே அடுத்த ஆண்டுக்குரியது. பாராளுமன்றத்துக்கு மேலதிகமாக ஒரு வருடம் காணப்படுகின்றது. இரண்டையும் இணைத்ததன் மூலம், ரணில் விக்கிரமசிங்கா, 'ஒன்று நாம் ஒன்றாக நீந்தலாம், அல்லது ஒன்றாக மூழ்கலாம் தெரிவு என்னுடையதாக அமையும்' என்ற செய்தியையே பொதுஜன பெரமுனக்கு வெளிப்படுத்தியுள்ளதாகவே அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்காவின் இவ்அரசியல் நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதியாக பதவியேற்ற காலப்பகுதியில் இப்பகுதியில் உரையாடப்பட்ட விடயமொன்றை நினைவூட்டுவது பொருத்தமாக அமையும். அனைத்தையும் இழந்தவனுக்கு கிடைக்கப்போகும் ஒவ்வொன்றும் இலாபகரமானதேயாகும். புதிதாக இழப்பதற்கு அவனிடம் ஏதும் இருக்கப்போவதில்லை. ரணில் விக்கிரமசிங்கா தோல்வியின் எல்லை வரை சென்றுள்ளார். பாராளுமன்றத்தில் ஓர் ஆசனத்தையே கொண்டுள்ளார். இந்நிலையில் தனது தந்திரோபாய நகர்வுகளூடாக தனது அரசியல் பலத்தை வலுப்படுத்துவதற்கான நகர்வாகவே பொதுஜன பெரமுனவுடனான நெருக்கடியும் அமைகின்றது. 

எனவே, 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை மையப்படுத்தி தென்னிலங்கையை சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடி முழுமையாக ஆளும் அரசாங்க தரப்புக்களான பொதுஜன பெரமுன - ரணில் விக்கிரமசிங்கா பலப்பரிட்சையாகவே அமைகின்றது. அரசியல் என்பது அதிகாரத்துக்கான போட்டி எனும் அரசறிவியலாளர்களின் வரையறைக்குள்ளேயே இலங்கை அரசியலும் அதிகார போட்டியாகவே சமகால தென்னிலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் காணப்படுகின்றது. இவ்வாறான நெருக்கடிக்குள் ஸ்திரமற்ற ஆட்சியை தொடர்வதற்கு, அரசாங்கம் மூழ்குவது மக்களுக்கு நலனாக அமையும். பலமான ஸ்திரமான ஆட்சியை உறுதி செய்வதனூடாக இலங்கையின் பாழாப்போன அரசியல்-பொருளாதார கட்டமைப்பை புணரமைக்க முடியும். மாறாக ஸ்திரமற்ற ஆட்சிக்குள் அரசாங்கத்தரப்பினர் தமது சுய அரசியல் எதிரகால இருப்பை மையப்படுத்திய மோதலுக்குள்ளேயே அரசாங்கத்தை நகர்த்த முற்படுவார்களேயன்றி மக்கள் நலனை பற்றிய எண்ணங்களுக்குள பயணிக்கப்போவதில்லை. இலங்கையின் முப்பதாண்டு போர் மற்றும் 2018ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் என யாவும் தென்னிலங்கை அரசாங்கங்களின் அதிகார போட்டி ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவினதேயாகும்.


Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

இந்தியாவின் இந்துத்துவத்தில் பௌத்தத்தின் நிலை! -ஐ.வி.மகாசேனன்-

கொழும்பு-புதுடில்லி உறவும் இந்திய இந்து – இலங்கை பௌத்த நாகரீகப் பிணைப்பு -ஐ.வி.மகாசேனன்-