ஜனாதிபதி தேர்தலுக்கான தென்னிலங்கையின் முன்னகர்வுகளும் ஈழத்திழர் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-
தென்னிலங்கை அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் அதிகம் தேர்தலை மையப்படுத்தியதாகவே முதன்மைப்படுத்தப்படுத்தப்படுகின்றது. 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் நீண்ட தோல்வி வரலாறுகளுளின் உச்சத்தில் கிடைக்கப்பெற்ற ஜனாதிபதி ஆசனத்தை தக்கவைப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர்வீச்சான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் ரணில் விக்கிரமசிங்கா தொடர்பான மக்கள் எண்ணங்களும் அதிக எதிர்விமர்சனங்களையே உறுதி செய்கின்றது. மறுதலையாக ஈழத்தமிழர்களும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வினைத்திறனான முடிவுகளை எடுக்க வேண்டிய காலப்பபகுதியில் காணப்படுகின்றனர். இக்கட்டுரை இலங்கை ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய தென்னிலங்கை மற்றும் ஈழத்தமிழரசியல் நகர்வுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒக்டோபர்-16ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். குறித்த ஆணைக்குழுவிடம், தற்போது நடைமுறையில் இருக்கும் சகல தேர்தல் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் ஆராய்ந்து தற்போதைய தேவைகளுக்கு பொருத்தமான முறையில் தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கு அவசியமான விதப்புரைகளை செய்யுமாறு விசாரணை ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒரு நபர் மாகாண சபை மற்றும் பாராளுமன்ற சபை ஆகிய இரண்டு தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், ஒரே நேரத்தில் இரண்டு சபைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வாய்ப்பளித்தல் மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையுடன் தொகுதிவாரி வாக்களிக்கும் முறையை ஒருங்கிணைக்கும் பொறிமுறையை உருவாக்குதல் ஆகியன முதன்மையான விடயங்களாக அவதானிக்கப்படுகின்றது. இவற்றை தவிர, இலத்திரனியல் வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்தல், பெண்களினதும் இளைஞர்களினதும் பிரதிநிதித்து வத்தை அதிகரித்தல், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் கவனத்தை செலுத்துமாறும் ஜனாதிபதியின் சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பரிந்துரைகளை வர்த்தமானியில் முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து ஒக்டோபர்-18அன்று பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் இருந்து சுயாதீனமாக தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். குறித்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் வரிசையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் டலஸ் அலகப்பெரும தலைமையிலான குழுவினர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் சீர்திருத்தம் குறித்து அரசியல் கட்சிகள் உடன்பாடு எட்டினால், அது ஒன்பது பேர் கொண்ட ஆணையத்துக்குத் தெரிவிக்கப்படக்கூடியதாக கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது. எனினும், பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் அரசாங்கம் கொண்டு வந்த திருத்தத்தை எதிர்க்கட்சிகள் நிராகரித்ததால் இறுதி முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.
இந்நிலையில் அரசாங்கத்தின் தேர்தல் திருத்தச்சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மற்றும் தென்னிலங்கை சிவில் சமுகத்தினரிடையே கடும் அதிருப்தி நிலை உருவாகியுள்ளது. எதிரணி அரசியல் கட்சிகளுடனோ அல்லது சிவில் சமூகத்துடனோ முன்கூட்டிய கலந்தாலோசனைகளை நடத்தாமல் ஜனாதிபதி ஆணைக்குழுவை அறிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன ஒழுங்கமைத்திருந்த கூட்டத்தை ஆரம்பத்தில் நிராகரிப்பதாகவே எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். பின்பு அக்கூட்டத்தில் பங்குபற்றி திருத்தத்தை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், மூத்த சட்டத்தரணிகள் குழுவொன்று அறிக்கையூடாக தமது விசனத்தை தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் உகந்த முறையில் தேர்தல்களை நடத்துவதற்காக ஊடகங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டல்களை வழங்குவதற்கான ஆணையை தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே கொண்டிருக்கிற நிலையில், எவ்வித முன்கூட்டிய ஆலோசனையையும் கலக்காமல் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறமை விசனத்திற்குரியதென வெளிப்படுத்தியிருக்கிறது.
இப்பின்னணியில் தென்னிலங்கையினை அதிகம் கொதிநிலைக்கு உருவாக்கியுள்ள ஜனாதிபதியின் தேர்தல் திருத்த சட்ட நடடிவக்கைக்குள் ஆழமாக பொதிந்துள்ள அரசியல் நகர்வினை நுணுக்கமாக அவதானிக்க வேண்டியுள்ளது.
முதலாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அமைத்துள்ள தேர்தல் திருத்தச்சட்ட ஆணைக்குழு தேர்தலை இழுத்தடிப்பதற்கான ஜனாதிபதியின் உத்தியாக அமைகின்றதா என்பது பொது உரையாடலில் முதன்மை பெறுகின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் 2024ஆம் ஆண்டு ஒக்டோபருக்கு முதல் தேர்தல் நடாத்த வேண்டி உள்ளதால் தேர்தலுக்கு ஏறத்தாழ 11 மாதங்களே காணப்படும் நிலையில் தேர்தல் சட்டம் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி சுயாதீனமாக ஆணைக்குழுவை உருவாக்கியுள்ளமை சந்தேகத்தை வலுப்படுத்த பிரதான காரணமாக அமைகின்றது. மாகாணசபை தேர்தல்களுக்கான தொகுதிகளின் எல்லை மீள்நிர்ணயம் இப்போது ஐந்தாவது வருடமாக இழுபடுகிறது. குறித்த காலப்பகுதியில் இரு அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்துள்ளது. எனினும் மீள்நிர்ணயம் செய்யும் பணி கூட அரசாங்கங்களின் ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கிறது. இதனை மையப்படுத்தியே 2018ஆம் ஆண்டு முடிவுற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலும் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது. இவ்அனுபவத்தினையே ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதி தேர்தலிலும் கையாள முற்படுகின்றதாரா என்பதே பொது வினாவாக அமைகின்றது. குறிப்பாக தேர்தல் திருத்த சட்ட ஆணைக்குழுவிற்கான பணிகளின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ள, பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையுடன் தொகுதி அடிப்படையிலான முறையும் கலந்ததான பொறிமுறையொன்றை வகுப்பது தீர்க்கப்படா இயலாத சர்ச்சைக்குரிய விடயமாக இருந்துவருகிறது. இது தொடர்பிலான விவாதம் தீர்வு எதுவுமின்றி பல வருடங்களாக தொடர்ந்து கொண்டேயிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்க நெருக்கடி காலத்தில் மீட்பாராக ஜனாதிபதி பதவியை ஏற்று ஒப்பீட்டளவில் மீட்சியை வெளிப்படுத்திய போதிலும், கருத்துக்கணிப்புக்கள் ரணில் விக்கிரமசிங்கா தொடர்பில் எதிர்மறையான விமர்சனங்களையே வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையின் கீழான வரி அதிகரிப்பு பொது மக்களிடையே கடுமையான வரிச்சுமையை அதிகரித்து விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. தேசத்தின் மனநிலை எனும் தொனிப்பொருளில் ஏநசவைé சுநளநயசஉh அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கடந்த நான்கு மாதங்களில் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள திருப்தி என்ற காரணியும் 12 வீதத்தில் இருந்து 6 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிக்கைகளின் மதிப்பீடுகளுக்கு அப்பால் கால இடைவெளியில் அதிகரிக்கும் பொதுச்சங்ககங்களின் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தை அடையாளப்படுத்துகிறது.
மூன்றாவது, தென்னிலங்கை அரசியலில் தலைமைத்துவ வெற்றிடத்தினையே நடைமுறை அரசியல் வெளிப்படுத்துகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இலங்கை அரசாங்கம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளும் காலப்பகுதியிலும் அதனை நிரப்பீடு செய்யக்கூடிய திறனை வெளிப்படுத்த தவறியிருக்கின்றது. பிரதான எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமைத்துவத்திற்குரிய வசீகர தலைமைத்துவ பண்பை கொண்டிருக்கவில்லை. மாறாக சமூக தொண்டு நிறுவனங்களுக்குரிய இயல்புகளையும் கடமைகளையுமே ஐக்கிய மக்கள் சத்தியின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றது. அதேவேளை எதிர்க்கட்சி வரிசையில் அரகல்ய காலத்தில் முதன்மையான உரையாடலை பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கா ஒட்டுமொத்த இலங்கையின் வாக்குகளை பெறுவது கடினமானதாகும். இலங்கையின் அரசியல் கலாசாரம் இடதுசாரி மரபுக்குள் பயணிக்க தயாரில்லை. அதேவேளை ராஜபக்ஷhக்கள் ரணில் விக்கிரமசிங்காவை சார்ந்தும் ரணில் விக்கிரமசிங்கா ராஜபக்சாக்களை சார்ந்துமே அரசியல் சவாரி செய்யும் நிலையில் காணப்படுகின்றார். இவ்வாறான போக்கு எதிர்வரும் தேர்தலில் தென்னிலங்கையின் பெரும்பான்மை வாக்கு சிதறடிக்கப்படும் நிலையையே புலப்படுத்துகின்றது. இது தேசிய சிறுபான்மை இனத்தினரின் வாக்குகளே தீர்மான சக்தியாக அமையும் வாய்ப்பினையே புலப்படுத்துகின்றது.
நான்காவது, ஈழத்தமிழ் அரசியல் தரப்பு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வினைத்திறனான முடிவினை எடுக்க வேண்டி உள்ளது. குறிப்பாக தென்னிலங்கையில் நடைமுறைகள் அதிகம் சிறுபான்மை தேசிய இனங்களினை நாட நிர்ப்பந்திக்கப்படுவதனையே புலப்படுத்துகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா, 'அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களின் ஆதரவை பெறக்கூடிய ஆளுமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு உள்ளது' என்று தெரிவித்தார். இது கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தரப்பின் தீர்மானங்கள் தொடர்பான எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது. இவ்வாறான எண்ணங்களை தமிழ் அரசியல் தரப்பு உருவாக்குவதனால் ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் அரசியல் தரப்பின் வாக்குகள் தொடர்ச்சியாக பயனற்று போகும் நிலைகளே காணப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெற்றி வேட்பாளாரா அமைய போவதில்லை எனினும் தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தக்கூடிய வெற்றியாக்கக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றது. குறிப்பாக தமிழ் அரசியல் ஆய்வுப்பரப்பில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பான பரிந்துரை நீண்ட கால உரையாடலாகவே காணப்படுகின்றது. குறிப்பாக 2010ஆம் ஆண்டு தேர்தல் தொடக்கம் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் தொடர்ச்சியாக முன்னிறுத்தி வருகின்றார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைப்பதனூடாக அத்தகைய முடிவினை பொதுமுடிவாக்கும் எண்ணங்களில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் பயணித்த போதிலும், தமிழரசுக்கட்சியின் அரசியலுக்குள் அம்முயற்சி பலவீனப்படுத்தப்பட்டது. தற்போது புதிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக இயங்கும் கட்சியிடையே ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பிலான பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. எனினும் இதனை சிவில் சமூக அமைப்பு முன்னிறுத்தி தமிழ்க்கட்சிகளின் கூட்டு முடிவாக மாற்றுவது தமிழ் இனத்திற்கு பயனுடைய வாக்குகளை உறுதி செய்யும் ஜனாதிபதி தேர்தலாக மாற்றக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
எனவே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அரசியலில் தென்னிலங்கையில் அதிக குழப்பங்களே நிறைந்துள்ளது. இதனை தமிழ் அரசியல் தரப்பு புரிந்து கொண்டு பயணிக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் பிரதிநிதித்துவத்துக்காக முட்டிக்கொள்வது போன்று ஜனாதிபதி தேர்தலையும் கையாண்டு நழுவவிடுவது தமிழரசியலுக்கே ஆபத்தானதாகும். தமிழரசியல் தரப்பு கடந்த காலங்களில் வாய்ப்புக்களை பயன்படுத்தாது பலவீனப்படுத்தும் அரசியல் தொடர்ச்சியையே பேணி வருகின்றனர். இம்முறை அதில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும். தமிழ் சிவில் சமுக கட்டமைப்புக்கள் அம்மாற்றத்தை முன்னிறுத்தி செயற்பட வேண்டும். குறிப்பாக வடக்கு-கிழக்கு சிவில சமுகங்கள் தமிழ் அரசியல் தரப்புடன் நீண்ட உரையாடலுக்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்த வேண்டும். அதனூடாக தமிழரசியல் தரப்பை நெறிப்படுத்தக்கூடிய கட்டமைப்பை பலப்படுத்துவே தமிழினத்துக்க பலமாக அமையும். தென்னிலங்கையின் குழப்பம் நேரிய பார்வையில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு வாய்ப்பாக அமைகின்றது. மறுவலமாக, கடந்த கால அனுபவங்களில் தென்னிலங்கையின் குழப்பம் பேரினவாதத்தை முதன்மைப்படுத்தின் சிறுபான்மை தேசிய இனங்கள் பாரிய அழிவையே எதிர்கொள்ளக்கூடிய சூழல் அமையும். எனவே, தமிழ் அரசியல் கட்டமைப்பு தம்மை பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.
Comments
Post a Comment