ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்களின் முக்கியத்துவத்தினை தமிழ் அரசியல் தரப்பினர் பயன்படுத்தி கொள்வார்களா? -ஐ.வி.மகாசேனன்-

தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் நகர்வுகள் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தியே இடம்பெறுகின்றது. குறிப்பாக, பிரதான அரசியல் கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர்களையும் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். ஒரு சில கட்சிகள் சில பேரம்பேசலுக்கான உத்திகளை கையாண்டு வருகின்றது. ஈழத்தமிழரசியலில் ஒரு சில அரசியல் கட்சிகள் மற்றும் கருத்தியல் தளத்தில் ஜனாதிபதித் தேர்தலை கையாள்வது தொடர்பான உரையாடல்களை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் ஈழத்தமிழரசியலின் பிரதான அரசியல் கட்சியான தமிழரசுக்கட்சி அவ்உரையாடலை நிராகரிக்கும் தன்மை காணப்படுகின்றது. அதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி புறக்கணிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான தமிழ் அரசியல் கட்சிகளின் கடந்த கால தன்னிச்சையான செயற்பாடுகள் எதிர்மறையான அனுபவங்களினையே வழங்கியுள்ளது. இந்நிலையில் மீளவும் அவ்வாறானதொரு எண்ணங்களுக்குள்ளேயே தமிழ் அரசியல் கட்சிகள் நகர்வது தமிழ் மக்களிடையே விசனத்தை உருவாக்குவதாகவே அமைகின்றது. இக்கட்டுரை ஜனாதிபதித் தேர்தலை ஈழத்தமிழரசியல் தந்திரோபாயரீதியாக கையாள்வதனூடாக பெறக்கூடிய வாய்ப்புக்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்பதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களை மேற்கொண்டு வருகின்றது. முன்னைய கட்டுரைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வரவு-செலவுத்திட்ட அறிக்கை மற்றும் ராஜபக்ஷhக்களின் பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடுகள் ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயர்த்த நகர்வுகள் என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேவேளை ஈழத்தமிழரசியல் எத்தகைய நகர்வுக்குள் பயணிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது என்பதனையும் முன்னைய கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும், தமிழ் அரசியல் கட்சிகளிற்கிடையே ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையே காணப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலை தமிழ்த்தரப்பு தந்திரோபாயமாக கையாள்வது தொடர்பில் வினைத்திறனான செயற்பாட்டை ஆரம்பிக்க திராணியற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சி சின்னத்தில் போட்டியிட்ட பிரதிநிதிகளின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தியில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கரிசணையற்ற எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். 'ஜனாதிபதித் தேர்தலில் எந்தக்கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது? அல்லது தமிழ்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதா? அல்லது ஜனாதிபதித்தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதா? என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. அது தொடர்பில் இன்னமும் நாம் யோசிக்கவும் இல்லை' என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பது, தேர்தல் முறைமை மீதான மக்களின் அவநம்பிக்கையின் வலுவான வெளிப்பாடாக தமிழர்கள் கருத வேண்டுமென' வலியுறுத்தியுள்ளார். அதேவளை ஐனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பாக உரையாடி வருகின்றது. அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி. விக்னேஸ்வரன், 'கஜேந்திரகுமார் பொதுவேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் தான் அவருக்கே வாக்களிப்பேன்' எனத்தெரிவித்திருந்தார். இவ்வாறான முரண்பாட்டு உரையாடல் வெளியே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் அரசியல் தரப்பினரிடையே காணப்படுகின்றது.

ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் தேர்தல்கள் கனதியாக வகிபாகத்தை பெறுகின்றது. ஈழத்தமிழ் அரசியல் தரப்பினரே அதனை சரியாக கையாள தவறியுள்ளனர். ஜனநாயக அரசியல் களத்தில் தேர்தல்களின் முக்கியத்துவத்தை மையப்படுத்தியே, 1972ஆம் ஆண்டு அஹிம்சை போராட்டத்தை முன்னெடுத்த அரசியல் தலைவர்களும், 2001ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்த விடுதலைப்புலிகளும் தேர்தல் அரசியலில் திரட்சியை வெளிப்படுத்த சிதறிக்காணப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டிருந்தார்கள். ஜனநாயக அரசியலில் ஜனநாயக வெளிப்பாட்டு காரணியான தேர்தல் பிரதானமாக அமைகின்றது. இந்த பின்னணியிலேயே இலங்கையில் 2024ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய ஜனாதிபதித்தேர்தலை தமிழர்கள் கையாள வேண்டியதன் முக்கியத்துவத்தை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.

முதலாவது, இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்காத போதிலும், தமிழர்களின் வாக்குகள் கடந்த காலங்களில் ஜனாதிபதித்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறுகள் காணப்படுகின்றது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கா 180 786 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். தமிழ் மக்கள் 2005ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பின்னணியில் ரணில் விக்கிரமசிங்காவின் தோல்விக்கு பின்னால் தமிழ் மக்களின் தேர்தல புறக்கணிப்பு செல்வாக்கு செலுத்தியிருந்தது. மேலும், 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றியில் சிறுபான்மை தேசிய இனங்களின் வாக்குகள் கணதியான செல்வாக்கு செலுத்தியமையை வாக்களிப்பு தரவுகள் உறுதி செய்திருந்தன. அத்துடன் தோற்கடிப்பட்ட மகிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மக்களிடம் 'தமிழர்கள் தம்மை தோற்கடித்து விட்டார்களென' தெரிவித்ததாக அன்றைய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. எனவே, ஜனாதிபதியை தெரிவு செய்வதில் இலங்கை அரசியல் வரலாற்றில் ஈழத்தமிழர்களுக்கு செறிவான முக்கியத்துவம் காணப்படுகின்றமை வரலாற்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அச்செறிவை தமிழரசியில் தரப்பினர் வினைத்திறனாக கையாண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனமாகும். 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு பங்களிப்பை நல்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் காகிதங்களால் எழுதப்பட்ட ஒப்பந்தங்களே கிழித்தெறியப்பட்ட வரலாற்றை கொண்ட இலங்கைத்தீவில் அரசாங்கத்துடன் இதயத்தால் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர். 2019ஆம் ஆண்டு ஆட்சி முடிவுற்ற பின்னர் வழமை போன்றே அரசாங்கம் ஏமாற்றிவிட்டதாக தமிழ் மக்களை ஏமாற்றும் நாடகத்தையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

இரண்டாவது, நெருக்கடி காலத்தில் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை தேசிய இனங்களில் வாக்குகளே ஜனாதிபதி தெரிவை உறுதிசெய்யும் வாக்குகளாக காணப்படுகின்றது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் கோத்தபாய ராஜபக்ஷாவின் வெற்றி சிங்கள பேரினவாத வாக்குகளால் மாத்திரம் இலங்கை ஜனாதிபதி தெரிவு சாத்தியப்படுத்த முடியுமென்பதை உறுதி செய்தது. எனினும் அதன் பின்னரான இலங்கையின் பொருளாதார வங்குரோத்து நிலை பேரினவாத அரசியலின் விளைவையும் பறைசாற்றியுள்ளது. எனவே 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பேரினவாத பிரச்சாரங்கள் உயரளவில் தாக்கும் செலுத்தும் காரணியாக அமையப்போவதில்லை என்பதே அரசியல் அவதானிகளதும் கருத்தாக அமைகின்றது. இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் பிரதான வேட்பாளர்களிடையே சிதறடிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது. அளிக்கப்படும் வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்களின் வாக்குகளே இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்ய தேவையான ஏற்பாடாக அமைகின்றது. இந்நிலையில், சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதனால், பிரதான வேட்பாளர்கள் 50 சதவீத வாக்குகளை தனித்து சிங்கள வாக்குகளால் பெற முடியாத நிலையே உருவாகும். இதனூடாக சிறுபான்மை தேசிய இனங்களின் வாக்குகளே வெற்றியாளரை தீர்மானிக்கக்கூடியதாக அமைய உள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும் அவ்வாறானதொரு சூழலே காணப்பட்டது. குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி மற்றும் உள்ளக அரசியலில் இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த மைத்திரிபால சிறிசேனா சுதந்திர கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷhவுக்கு எதிராக பொதுவேட்பாளாராக களமிறக்கபட்டமை எனும் குழப்பகரமான சூழலில் தென்னிலங்கையில் வாக்குகள் சிதறடிக்கப்பட்டது. இப்பின்னணியிலேயே வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகளாக சிறுபான்மை தேசிய இனங்களின் வாக்குகள் காணப்பட்டது. சமகாலத்திலும் பொருளாதார நெருக்கடி மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடையே பிரதான வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என குழப்பகரமான அரசியல் சூழமைவே காணப்படுகின்றது. இது சிறுபான்மை தேசிய இனங்களின் வாக்குகளின் பெறுமதியை உயர்த்துகின்றது.

மூன்றாவது, தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து அரசியல் பிரச்சாரங்களையும் செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளமையையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வலது கரமாக செயற்படும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, 'ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ரணில் விககிரமசிங்காவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். துமிழ்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளர்களை களமிறக்கி தமிழ் மக்களின் வாக்குளைச் சிதறடித்து, வரலாற்றுத் தவறு இழைக்கக்கூடாது. தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தரக் கூடிய ஒருவர் ரணில்தான்.' எனத்தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் ஜனவரி 4-6 வரையான யாழ்ப்பாணத்துக்கான மூன்று நாள் விஜயமும் தேர்தலை இலக்கு வைத்து தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான செயற்பாடாகவே அமைகின்றது. புலம்பெயர் தமிழர்கள் ஒருதரப்பின் இமயமலை பிரகடன முயற்சிகளும் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கையிழந்துள்ள தமிழ் மக்களை ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைப்பதற்கான முயற்சி என்ற விமர்சனங்களும் அரசியல் அவதானிகள் மத்தியில் காணப்படுகின்றது. அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியினரும் தமிழ் மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து செயற்படுகின்றமையானது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை தேசிய இனங்களின் வாக்குளின் முக்கியத்துவத்தையே வெளிப்படுத்துகின்றது.

நான்காவது, ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது அல்லது விலகியிருப்பது தமிழ் மக்களின் வாக்குகளின் முக்கியத்துவத்தை மலினப்படுத்துவதாகவே அமையக்கூடியதாகும். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார். இல்லாவிடில் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்புக்கள் எண்ண வேண்டிய நிலை உருவாகும். தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் சூழலில் தென்னிலங்கை வாக்குகளே அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையாக அமைவதுடன், அதில் 50 சதவீதத்தை பிரதான கட்சிகளில் ஒன்று பெறக்கூடியதாக அமையும். எனவே தமிழ் மக்களின் தேர்தல் புறக்கணிப்பானது பங்குபற்றல் அரசியலின் பொறியான ஜனநாயகத்துக்கான வாய்ப்பை புறக்கணிப்பதாக அமையுமேயன்றி, தமிழ் மக்களுக்கு எவ்வித சாதகமான வாய்ப்புக்களையும் ஏற்படுத்த போவதில்லை. 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருந்தனர். இன்றும் தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை கோருகின்றார்கள் என்பதற்கான வலுவான ஜனநாயக சான்றாக 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவே காணப்படுகின்றது. 1977ஆம் ஆண்டு தமிழர்கள் வழங்கிய ஆணையை தமிழ் அரசியல் தரப்பு வினைத்திறனாக கையாளத்தவறியமை அவ்அரசியல் தரப்பினரது தவறாகவே அமைகின்றது. மாறாக வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்திய அரசியல் நகர்வு தந்திரோபாயமனதேயாகும். அவ்வாறானதொரு நகர்வையும் அதன் தொடர்ச்சியையும் தமிழரசியல் தரப்பு கையாள்வதே இன்றைய தேவையாகும்.

எனவே, 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளதாக உரையாடப்படும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஈழத்தமிழர்களின் அரசியலில் முக்கியமானதொரு களமாக அமைகின்றது. ஈழத்தமிழர்கள் கடந்த 75ஆண்டுகால இலங்கையின் சுதந்திர வரலாற்றில் ஒடுக்கப்படும் தேசிய இனமான உரிமைக்காக போராடுகின்றனர். எனினும் 75ஆண்டுகால ஈழத்தமிழ் அரசியலை நகர்த்தியோர் தந்திரோபாயரீதியான நகர்வுகளை வடிவமைக்க தவறியுள்ளனர். ஒரு சில தந்திரோபாய செயற்பாடுகளை ஆரம்பித்த போதிலும் அதனை வினைத்திறனாக தொடர தவறியுள்ளனர். அதனாலேயே இலங்கை அரசாங்கத்தால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் தரப்பாகவே தமிழரசியல் தரப்பின் அரசியல் அமையப்பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஏமாற்று அரசியலை பற்றி 1970களிலேயே தமது சுதந்திரன் பத்திரைகையில் பதிவு செய்துள்ள தமிழரசுக்கட்சியே, 2015ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை கொண்டு அரசாங்கத்துடன் இதயத்தால் ஒப்பந்தத்தை மேற்கெண்டிருந்தார்கள். ஏமாற்றம் தொடர்பில் ஈழத்தமிழரசியலின் வரலாறு முழுவதும் அனுபவம் நிறைந்து காணப்படுகையில், தொடர்சியாக ஏமாற்ற புலம்பல் தமிழரசியிலின் தந்திரோபாயமற்ற செயற்பாட்டையே உறுதி செய்கின்றது. எதிர்காலத்தையாவது வினைத்திறனுடன் தந்திரோபாயமாக செயலாற்ற தமிழரசியல் தரப்பினர் முன்வர வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

இந்தியாவின் இந்துத்துவத்தில் பௌத்தத்தின் நிலை! -ஐ.வி.மகாசேனன்-

கொழும்பு-புதுடில்லி உறவும் இந்திய இந்து – இலங்கை பௌத்த நாகரீகப் பிணைப்பு -ஐ.வி.மகாசேனன்-