ஜனாதிபதி தேர்தலில் 'தமிழ் பொதுவேட்பாளர்' தத்துவம் தமிழ் மக்களின் அதிகாரத்தை மீளவலுப்படுத்துமா? -ஐ.வி.மகாசேனன்-
2024ஆம் ஆண்டு உலக அரசியலே தேர்தலுக்குரிய ஆண்டாகவே காணப்படுகின்றது. சர்வதேச அரசியலின் மைய அரசுகளான அமெரிக்க மற்றும் ரஷ்சியா அரச தலைவருக்கான தேர்தலையும் இந்தியா பொதுத்தேர்தலையும் எதிர்கொள்கின்றது. இவ்ஒழுங்கிலேயே இலங்கையும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாய்ப்பினை எதிர்கொண்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் அண்மைய செயற்பாடுகளும் தேர்தலை உறுதிப்படுத்துவதாகவே அமைகின்றது. தென்னிலங்கை அரசியல் கட்சிகள் பரந்த அளவில் தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களையும், தமது வேட்பாளர்களையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றது. அதேவேளை சிறுபான்மை தேசிய இனங்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான பிரச்சார வேலைகளிலும் இறங்கியுள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதியின் வடக்கு விஜயமும் அதனையே உறுதி செய்கின்றது. எனினும் சிறுபான்மை தேசிய இனங்கள் குறிப்பாக சுயநிர்ணய உரிமைக்காக நீண்ட பேராட்டத்தை மேற்கொள்ளும் தமிழ்த்தேசிய இனம் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான பலமான முடிவினை எடுக்க முடியாது உள்ளது. கருத்தியலாளர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான உபாயங்களை வழிகாட்டுகின்ற போதிலும் தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக முரண்பாடான கருத்துக்களையே பொதுவெளியில் உரையாடி வருகின்றனர். இது கடந்த காலங்களை போன்று ஜனநாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை வீணடிக்கப்போகின்றதா எனும் அச்சத்தை அரசியல் அவதானிகள் வெளிப்படுத்தி வருகின்றனர். இக்கட்டுரை தமிழ் மக்கள் தமது அதிகாரத்தை ஜனாதிபதி தேர்தலில் பிரயோகிக்கக்கூடிய வழிமுறையை அரசியல் தத்துவரீதியாக தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
உலக வடிவமைப்பு என்பது அதிகாரத்தை சார்ந்தே அமைகின்றது. ஆதலாலேயே அரசறிவியலாளர்களும் அதிகாரம் தான் அரசியல் என வரையறை செய்கின்றனர். அரசியலில் அதிகாரம் அன்றாட மக்கள் மீது நேரடி விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும் அரசியல் அதிகாரத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்தாவிட்டால், முடிவுகள் கணிக்க முடியாததாக இருக்கும். இது ஒரு நிலையற்ற அரசியல் சூழலுக்கு வழிவகுக்கும். இத்தகைய அதிகாரம் தனித்து இயங்குவதில்லை. கட்டமைப்பினூடாகவே செயற்படக்கூடியதாகும். உலகின் நர்டுகள் அரசு எனும் கட்டமைப்பிற்கூடாகவே தமது அதிகாரத்தை செயற்படுத்துகின்றனர். அதிகாரத்தின் உச்ச வடிவமாகவே அரசின் இறைமை அமைகின்றது. அதிகாரத்தை செயற்படுத்தும் கட்டமைப்புக்களின் ஆதாரமாக தத்துவங்கள் அமைகின்றன. எடுத்துக்காட்டாக தாராள ஜனநாயக அரசு எனும் கட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னணியில் தாராள ஜனநாயக தத்துவம் ஆதாரமாக அமைகின்றது. அதேவேளை தத்துவம் கால மாற்றத்தை உள்வாங்கி சமுக யதார்த்தத்திற்கான மாற்றங்களை உள்வாங்கும் போதே அக்கட்டமைப்பும் தங்குதடையின்றி இயங்க காரணமாகின்றது. மாறாக மாற்றமின்மையை போதிக்கும் தத்துவங்கள் கட்டமைப்பின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமைகின்றது. இக்கருத்தியலை மையப்படுத்தியே ஈழத்தமிழர்களின் ஜனாதிபதித்துவ தேர்தலுக்கான அரசியல் நகர்வை தேட வேண்டி உள்ளது.
முதலாவது, ஈழத்தமிழர்களின் அதிகாரச்செறிவை கண்டறிய வேண்டிய தேவை சமகாலத்தில் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை மிஞ்சிய அரசியல் தீர்வுகளை இலங்கை அரசாங்கங்கள் உரையாடி இருந்தன. எனினும் 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், அரசியல் பரப்பில் தமிழர்களின் அதிகாரச்செறிவு பலவீனப்படும் நிலை உருவாகியது. அதன் விளைவாகவே அரசியலமைப்பின் 13ஆம் திருத்தமும் நிராகரிக்கப்பட்டு கிராம சபை அளவில் தீர்வுப்பொதி மலினப்படும் நிலை உருவாகியுள்ளது. அதற்கு தமிழ் தரப்பின் அதிகாரம் பலவீனப்படுத்தப்பட்டதே பிரதான காரணமாகியது. இதற்கான பொறுப்புக்கூறலை 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியலை நெறிப்பபடுத்தும் தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர்களின் அதிகாரம் தேர்தல் மூலமாகவே வெளிப்படுத்தப்பட்டது. எனினும் தமிழ் அரசியல் கட்சிகளின் தவறான தீர்மானங்களும், பிளவுகளும் தமிழ் மக்களின் அதிகாரத்தை மலினப்படுத்தும் சூழலை உருவாக்கியது. குறிப்பாக 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை போர் வெற்றியை கொண்டாடுகையில் போர் வெற்றியின் தலைவனுக்கு (ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா) எதிராக அவனது தளபதி (இராணுவத்தளபதி சரத் பொன்சேகா) ஜனாதிபதி வேட்பாளாராக களமிறங்கியிருந்தார். தமிழ் அரசியல் தரப்பில் அன்றைய ஏக பிரதிநித்துவத்தை வழங்கிய இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தென்னிலங்கையின் போர் வெற்றி கொண்டாட்டத்தை ஆதரிக்கும் வகையில் பொது எதிரணி வேட்பாளர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஆதரித்தனர். இந்த தீர்மானம் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தை முழுமையாக சிதைத்ததுடன், தமிழ் மக்கள் தோற்கடிக்கப்ட்ட சமுகமாக அதிகாரமற்றவர்கள் எனும் விம்பத்தை கட்டமைக்க ஏதுவாகியது. இதன் தொடர்ச்சியே 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தல்களிலும் இடம்பெற்றிருந்தது. மறுதளத்தில் தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் பிளவும் தமிழ் மக்களின் வாக்குகளை பாராளுமன்றத்திலும் சிதறடித்து. இதன் பின்னணியில் தமிழ் அரசியல் தலைமைகள் மீது மக்களின் நம்பிக்கைகளையும் இழக்கும் நிலை உருவாக்கம் பெற்றது. இது தமிழ் மக்களின் அதிகாரத்தை வெளிப்படுத்தும் களத்தை முழுமையாக இல்லாமல் செய்துள்ளது. இந்நிலையிலேயே தற்போதைய அரசாங்கங்களும், பிராந்திய சக்திகளும் தமிழ் மக்களினை தமது நலன்களுக்கு ஏற்ப கறிவேப்பிலையாய் நகர்த்தும் போக்கு காணப்படுகின்றது. எனவே தமிழ் மக்கள் தமது அதிகாரத்தை தேர்தல்களூடாக மீள வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மீளவும் கடந்த காலங்களை போல தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் நலன்களுக்கு கறிவேப்பிலையாக செல்ல வாய்ப்பளிக்க கூடாது. தென்னிலங்கை கட்சிகளின் பிரச்சாரங்கள் தமது தேர்தல் நலனுக்ககாக தமிழ் மக்களின் வாக்கு பலத்தை பயன்படுத்த முயலும் போக்கே சமகாலத்தில் பிரகாசமாக காணப்படுகின்றது. மாறாக தமிழ் மக்களின் அதிகாரத்தை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் கோரிக்கையை பலப்படுத்தக்கூடிய உத்தியை வடிவமைக்கும் எண்ணங்களுக்குள் தமிழ் அரசியல் தலைமைகள் செல்ல உடன்பாடற்ற நிலையே காணப்படுகின்றது.
இரண்டாவது, தமிழ் மக்கள் தமது அதிகாரத்தை வெளிப்படுத்த பலமான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் சிந்திப்பது பயனுடையதாகும். அதிகாரம் கட்டமைப்புக்களுக்கு ஊடாகவே செயற்படுகின்றது. எனினும் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை 2009களுக்கு பின்னர் பலமான கட்டமைப்பற்ற மேய்ப்பானற்ற மந்தைகளாக சுழலும் போக்கே காணப்படுகின்றது. தமிழ் அரசியல் கட்சிகள் தமது தனிப்பட்ட தேர்தல் இலக்குகளை மையப்படுத்தி செயற்படுகின்றார்களேயன்றி, தமிழ் மக்களின் அதிகாரத்தை திரட்டி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான வலுவான தேவைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய கட்டமைப்பாக செயற்பட தயாரில்லாத நிலையே காணப்படுகின்றது. அதன் பிரதிபலிப்பையே கடந்த தேர்தல் முடிவுகளில் அடையாளம் காணக்கூடியதாக அமைகின்றது. தமிழ் மக்கள் கட்டமைப்பற்றவர்களாக பிளவுபட்ட அரசியல் கட்சிகளுக்குள் பயணிப்பதால் தமிழ் மக்களின் திரட்சியான அதிகாரத்தை வெளிப்படுத்த இயலாத நிலை காணப்படுகின்றது. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் திரட்சியான அதிகாரத்தை வெளிப்படுத்தக்கூடிய கட்டமைப்புக்கான முன்முயற்சிகளை மேற்கொண்டது. எழுக தமிழ் போராட்டங்கள் அதன் வெளிப்பாடேயாகும். எனினும் தமிழ் மக்கள் பேரவைக்குள் காணப்பட்ட அரசியல் கட்சிகளின் மோதுகை தமிழ் மக்கள் பேரவை எனும் கட்டமைப்பை சிதைக்க காரணமாகியது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த முடிவை எடுப்பதனூடாக தமிழ் மக்கள் தமது திரட்சியை வடிவமைக்கக்கூடிய கட்டமைப்பை உருவாக்க ஏதுவான சூழலை உருவாக்க முடியும். தமிழ் மக்கள் தமது திரட்சியான அதிகாரத்தை வெளிப்படுத்த கட்சி நலன்களுக்கு அப்பால், ஜனாதிபதி தேர்தலில் பலமான கட்டமைப்பு தேவைப்பாட்டை பூர்த்தி செய்வது அவசியமாகின்றது. தமிழ் அரசியல் கட்சிகள் சிதறிப்பயணிப்பதை தவிர்த்து திரட்சியான முடிவுக்குள் நகர்தல் வேண்டும்.
மூன்றாவது, கட்டமைப்பின் ஆதாரமாக பலமான சமகாலத்துக்கு தேவையான தத்துவத்தை கொண்டிருத்தல் அவசியமாகின்றது. ஜனாதிபதி தேர்தலில் அதிகாரத்தை வெளிப்படுத்த உருவாக்கப்படும் தமிழ் மக்களின் திரட்சியை கொண்ட கட்டமைப்பு சமகால யதார்த்தத்துக்க உட்பட்ட தத்துவத்தை கடைப்பிடித்தல் வேண்டும். அதாவது தமிழ் அரசியல் தரப்பு நீண்ட காலமாக தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் நல்ல பேய் சூத்திரத்திலிருந்து மாற்றத்தை பெற வேண்டும். அதேவேளை யதார்த்தத்துக்கு உட்பட்டதாக அமைதல் வேண்டும். அத்தகையதொரு தெரிவாக தமிழ் மக்களின் பொதுவேட்பாளரை நிறுத்துவது அமைகின்றது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி பொதுவேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பான ஆலோசனையை தமிழ்த்தேசிய பரப்பின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிட்டு வருகின்றார். எனினும் தமிழ் அரசியல் கட்சிகள் கட்சிகள் நிராகரித்து வந்தன. இந்த தடவை ஒரு விசித்திரமான நிகழ்வுப்போக்காக சில தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து பேசத் தொடங்கியிருப்பதைக் காணக்கூடியிருக்கிறது. இத்தகைய மாற்றம் வரவேற்கத்தக்கது. எனினும் இது ஒரு சில அரசியல் கட்சிகளின் முடிவாக அமைவது தமிழ்த்தேசியத்துக்கு ஆபத்தான முடிவுகளையே உருவாக்கக்கூடியதாக அமையும். ஜனாதிபதி தேர்தல்களில் முன்னரும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். முதன்முதலாக நடைபெற்ற 1982 தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவை விடவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொன்னம்பலம் சுமார் பத்தாயிரம் வாக்குகளையே கூடுதலாகப் பெற்றார். வன்னி மாவட்டத்தில் அவரை விடவும் கொப்பேகடுவ பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். கிழக்கு மாகாணத்தின் தேர்தல் மாவட்டங்களில் பொன்னம்பலத்துக்கு கிடைத்த வாக்குகள் கணக்கில் எடுக்கக்கூடியவை அல்ல. குமார் பொன்னம்பலத்துக்கு பிறகு 2010 மற்றும் 2019 ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் தமிழ் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். எனினும் அவை பெரிய தாக்கங்களை பெற்றிருக்கவில்லை. எனவே கடந்த கால அனுபவங்கை கொண்டு பொதுவேட்பாளர் எனும் தத்துவத்தை ஆதாமாக கொண்ட தமிழ் மக்களின் திரட்சியான கட்டமைப்பினூடாக வெளிப்படுத்துவதே ஈழத்தமிழர்களின் அதிகாரத்தை மீளவலுப்படுத்த ஏதுவானதாக அமையும். மாறாக தனித்து ஒரு சில கட்சிகளின் எண்ணங்களுக்கு: பொதுவேட்பாளர் தத்துவம் சுருங்கி செல்வது ஈழத்தமிழர்களின் அதிகாரத்தை மீள மலினப்படுத்துக்கூடியதாகவே அமையும்.
எனவே, ஈழத்தமிழர்களின் அதிகாரத்தை மீளவலுப்படுத்துவதற்கான பலமான வாய்ப்பு ஜனாதிபதி தேர்தலை வினைத்திறனுடன் கையாள்வதனூடாக கிடைக்கப்பெறுகின்றது. தனிப்பட்ட கட்சி நலன்களை கைவிட்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் நலனை கருத்திற்கொண்டு தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் திரட்சியை உருவாக்க செயற்பட வேண்டும். அதனூடாக ஜனாதிபதி தேர்தலூடாக கிடைக்கப்பெறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும். ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் பொதுவாக்கெடுப்புக்கான பிரச்சாரத்தை ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகளும், புலம்பெயர் தமிழர்களும் முன்னெடுத்து வருகின்றனர். எனினும் அதற்கான வாய்ப்புக்கள் சாத்தியப்பாடுகள் தொடர்பில் உறுதியான நம்பிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. கடந்த கால சர்வதேச அனுபவங்களினை கொண்ட கற்பனாவாதத்துக்குள்ளேயே இயங்குகின்றது. எனினும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி பொதுவேட்பாளரை தமிழ்த்தரப்பு நிறுத்துவதனூடாக பொதுவாக்கெடுப்புக்கான வாய்ப்பை பரீட்சிக்கக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றது. 1996ஆம் ஆண்டு இலக்கிய நோபல் விருது வென்ற விஷ்வா சிம்போர்ஸ்கா, 'கற்பனாவாதங்களை கனவு காண்பதைவிட அல்லது துரத்துவதை விட, அதிகரிக்கும் மாற்றங்களுக்காக பாடுபடுவது மிகவும் பயனுள்ளதாக அமையும்' என குறிப்பிடுகின்றார். ஈழத்தமிழர்களுக்கு ஜனாதிபதி தேர்தல் அதிகரிக்கும் மாற்றத்துக்கான சமிக்ஞையாக காணப்படுகின்றது. அம்மாற்றத்தை தக்க வைப்பதிலேயே தமிழ்த்தேசியத்தின் இருப்பின் பலமும் தங்கியுள்ளது.
Comments
Post a Comment