தமிழரசுக்கட்சியின் முக்கியத்துவத்தை புதிய தலைமையின் செயற்பாடுகள் சீர்படுத்துமா! -ஐ.வி.மகாசேனன்-

நீண்ட வாதப்பிரதிவாதங்கள் மற்றும் கொதிநிலை விமர்சனங்களுடன் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்வு தேர்தல் கடந்த வாரம் முடிவு பெற்றுள்ளது. புதிய தலைமையாக யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டட பாராளுமன்ற பிரதிநிதி சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையின் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒப்பான பிரச்சார போட்டிகள் தமிழரசுக்கட்சி தலைமைக்கான தேர்வில் இடம்பெற்றுள்ளமை அதன் முக்கியத்துவத்தையே உறுதி செய்கின்றது. தமிழரசுக்கட்சிக்கு வினைத்திறனான தலைமை உருவாக வேண்டும் என்பதில் கட்சிக்கு வெளியே இருந்த கருத்தியலாளர்கள் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதனை மையப்படுதியே முந்தைய கட்டுரைகளில் தமிழரசு கட்சியின் தலைமைக்கான தேர்தல் தொடர்பில் இப்பந்தியில் எழுதப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே இக்கட்டுரை தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழசுக்கட்சியின் புதிய தலைமைக்கு உள்ள பொறுப்புக்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

முதலாவது, தமிழ்த்தேசியம் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் காலப்பகுதியில் தமிழரசுக்கட்சியில் புதியதொரு தலைமை மாற்றம் உருவாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் இயக்கத்தினுள்ளேயே தமிழ்த்தேசிய நீக்க அரசியல் உயரளவில் எழுச்சி பெற்று வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய செயற்பாடுகள் தொடர்பில் 2009களுக்கு பின்னர் பொதுமக்களிடையே வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதன் சாட்சியமாகவே தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கியின் வீழ்ச்சி காணப்படுகின்றது. மேலும் திரட்சியை வலியுறுத்த வேண்டிய தமிழ்த்தேசிய அரசியலுக்குள் ஆசன இலக்குகளை மையப்படுத்திய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சிதைவும் தமிழரசுக்கட்சியில் மேலோங்கியுள்ள தமிழ்த்தேசிய நீக்க அரசியலே காரணம் என்பது பொதுவான அரசியல் அவதானிகளின் விமர்சனமாக காணப்படுகின்றது. நடந்து முடிந்த தமிழரசுக்கட்சிக்கான தலைமைத்தேர்தலிலும் தமிழ்த்தேசியம் வலுவான பேசுபொருளாக காணப்பட்டமை தமிழ்த்தேசியத்துக்கு தமிழரசுக்கட்சியினுள் காணப்படும் நெருக்கடியையே உறுதி செய்கின்றது. கடந்த 15ஆண்டுகால தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய நீக்க அரசியல் செயற்பாட்டு காலப்பகுதியில் சிறிதரன் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக காணப்பட்டார். இருந்த போதிலும் தமிழரசுக்கட்சியினுள் இடம்பெறும் தமிழ்த்தேசிய நீக்க அரசியலுக்கு எதிராக செயற்படவில்லை எனும் விமர்சனமும் பொதுவெளியில் காணப்படுகின்றது. எனவே கடந்த கால விமர்சனங்களை பகுப்பாய்ந்து தலைமை பொறுப்பில் தமிழ்த்தேசியத்தை பாதுகாக்கக்கூடிய கட்டமைப்பாக தமிழரசுக்கட்சியை புனரமைக்க வேண்டிய பாரிய பொறுப்பு முதன்மையானதாக சிறிதரனை சாருகிறது. சிறிதரனின் வெற்றிக்கு பின்னால் தமிழ்த்தேசிய அரசியல் பிரச்சாரம் பாரிய செல்வாக்கினை செலுத்தியுள்ளமையை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இரண்டாவது, கிழக்கு மாகணத்தில் ஆழமாக பொதிந்துள்ள தமிழ்த்தேசிய கருத்தியல் மீளவும் தமிழரசுக்கட்சியின் தலைமை தெரிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சமிக்ஞையாக கொண்டு கிழக்கு மாகணத்தின் நெருக்கடிகள் மீது தமிழரசுக்கட்சி கூடிய கவனத்தை செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. 1948ஆம் ஆண்டு பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற முதல் தமிழ்த்தேசிய அரசியலில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலப்பரப்பாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது நேரடியாக சிங்கள பேரினவாத அரசின் ஆக்கிரமிப்பு காணப்படுவதுடன், அரச ஆதரவுடன் முஸ்லீம் அரசியல்தரப்பாலும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நெருக்கடிகள் ஏற்படுகின்றது. ஒப்பீட்டளவில் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை தென்னிலங்கை ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களே வழங்கி வருகின்றார்கள். தமிழரசுக்கட்சியின் கிழக்கு மாகாண பாராளுமன்ற பிரதிநிதிகளின் செயற்பாடுகள் வினைத்திறனாக கடந்த காலங்களில் அமைந்திருக்கவில்லை. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற பிரதநிதிநியாக காணப்படுகின்ற போதிலும் வயது முதுமையால் அவர் மக்களுடன் இயங்காத நிலைமையே காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசிய செயற்பாட்டுள் கிழக்கு மாகாணம் தவிர்க்கப்படுகின்ற போதிலும், வரலாறுதோறும் கிழக்கு மாகாணம் முழுமையாக தமது தமிழ்த்தேசிய எழுச்சியை உறுதி செய்து வந்துள்ளது. குறிப்பாக 2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் தேவைப்பாடும், அதுசார்ந்த செயற்பாடுகளும் கிழக்கை மையப்படுத்தியே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழரசுகட்சியின் தலைமை தெரிவில் தமிழ்த்தேசிய பிரச்சாரம் முதன்மைப்படுத்தப்பட்ட நிலையில் சிறிதரனின் வெற்றிக்கு பின்னால் கிழக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்கு பலமானதாக அமைந்துள்ளது. கிழக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் சிறிதரனை தெரிவு செய்வதுக்கு பின்னால் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உந்துதல் வலுவான காரணியாக அமைகின்றது. எனினும் சிறிதரன் கிழக்கு மகாண போராட்டங்களில் போதியளவில் கரிசணை செலுத்துவதில்லை என்பது வலுவான விமர்சனமாக காணப்படுகின்றது. தமிழர் தாயகக்கோட்பாட்டின் முழுமை வடக்கு-கிழக்கின் இருப்பிலேயே பாதுகாக்கப்படுகின்றது. தேசியத்தை முன்னிறுத்தி கிழக்கு மாகாண மக்கள் வெளிப்படுத்தியுள்ள சமிக்ஞைக்கு பலமான எதிர்வினையை செலுத்தி, கிழக்கு மீதான பேரினவாத ஆக்கிரமிப்பிலிருந்து கிழக்கை பாதுகாப்பதற்கான வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெப்பதற்கான வழிவகைகளை ஆராயும் பொறுப்பு தமிழரசின் புதிய தலைமைக்கு பிரதானமாகின்றது.

மூன்றாவது, தமிழ்த்தேசியத்தின் தாயகத்தை ஒன்றினைப்பது போன்றே தேசிய திரட்சியையும் வலுப்படுத்துவதே தமிழ்த்தேசியத்தை பாதுகாப்பதற்கான சூழலை உருவாக்கக்கூடியதாகும். கடந்த காலங்களில் காலத்தின் தேவை கருதி தமிழ்த்தேசியத்தின் திரட்சியை உருவாக்குவதற்கான விட்டுக்கொடுப்புக்களுக்குள் தமிழ்த்தேசியத்தை பலப்படுத்திய வரலாறு தமிழரசுக்கட்சிக்கும் அதன் தலைமைக்கும் காணப்படுகின்றது. தமிழ்த்தேசிய அரசியலில் உருவாக்கப்பட்ட கூட்டணிகளிற்கு தமிழரசுக்கட்சி பிரதான தலைமையான பங்களிப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாக்கத்தில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் அரசியல் செயற்பாட்டை தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் கற்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. அன்றைய சூழலில் தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசிய பரப்பில் தனித்து ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக காணப்பட்டது. எனினும் தேசியத்திரட்சியை உறுதிப்படுத்துவதற்காக தமிழரசு கட்சியின் தலைவர் தனது போட்டிக்கட்சியாளரான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் வீடு சென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஐக்கிய உருவாக்கத்திற்கான அழைப்பை விடுத்தார். அதுமட்டுமன்றி செல்வநாயகம் அவர்களே தமிழ்த்தேசிய கட்சிகளிடையே ஏற்படுத்துகின்ற ஐக்கியத்தினூடாக தமிழ் மக்களின் திரட்சியை பலப்படுத்தும் நோக்கில் தான் உருவாக்கிய தமிழரசுக்கட்சியின் சின்னத்தை முடக்கியிருந்தார். இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பதிவு தொடர்பிலான சச்சரவில் சின்னமே பிரதான சவாலாக உரையாடப்படுகின்றது. அன்று செல்வநாயகம் வெளிப்படுத்திய தமிழ்த்தேசிய இருப்புக்கான முதிர்ச்சியை இன்றைய புதிய தலைமையும் வெளிப்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. சிறிதரன் அவர்களுடைய ஆதரவாளர்களின் உரையாடலில், தமிழரசுக்கட்சியின் புதிய தலைமை சில அரசியல் புறக்கணிப்புக்களால் தமிழரசுக்கட்சியை விட்டு வெளியேறிய சில உறுப்பினர்களின் வீடு சென்று உரையாடப்பாவதாக தெரிவித்திருந்தனர். அவ்வாறான செயற்பாடு தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிறிதரன் நம்பிக்கையையே வலுப்படுத்தக்கூடியதாகும். மேலும் தலைக்கான தேர்தலிலும் வெற்றியின் பின்னரான ஆதரவாளர்கள் சந்திப்பிலும் 2009களுக்கு முன்னரான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மீள புனரமைப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். இதனை சாத்தியப்படுத்துவதே தமிழ்த்தேசியத்தின் திரட்சியை பாதுகாக்கக்கூடியதாகும்.

நான்காவது, தமிழரசுக்கட்சி 2009களுக்கு பின்னர் வெகுஜன அரசியலிலிருந்து விலகிச்சென்றுள்ள போக்கே காணப்படுகின்றது. பெரும்பாலும் அரசாங்கங்களுடன் வினைத்திறனற்ற இணக்க அரசியலிற்கான வழிகளையே அதிகம் முதன்மைப்படுத்தியிருந்தார்கள். குறிப்பாக 2015-2019 அரசாங்கத்தின் பங்காளிகளாகவே தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டிருந்தனர். சர்வதேச அரங்கில் நீதி விசாரணைக்கான கால இழுத்தடிப்புக்கு இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தனர். எனினும் 2019ஆம் ஆண்டு ஆட்சி முடிவுற்ற பின்னர் தேசிய அரசாங்கம் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தனர். அரசாங்கத்தின் ஏமாற்று வரலாற்றை தமிழரசுக்கட்சி 1960களிலேயே அனுபவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தமிழரசுகட்சி தென்னிலங்கையுடன் இணக்கத்துக்கு போவதற்கான வெளிப்பாடுகளையே புலப்படுத்தியிருந்தார்கள். எனினும் அவர்களது ஆதரவு வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோற்றமையால் இணக்கத்துக்கு செல்ல முடியவில்லை. எனினும் மக்களுக்கு எதிராக இடம்பெறும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிரான ஜனரஞ்சக போராட்டங்களையும் உயரளவில் மேற்கொண்டிருக்கவில்லை. மாறாக சிவில் சமுகங்களால் ஒழுங்கமைக்கப்படும் போராட்டங்களின் விருந்தினர்களாகவே தமிழரசுகட்சி செயற்பட்டு வருகின்றது. இந்நிலைமையில் புதிய தலைமை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 1970களுக்கு முற்பட்ட அரசியல் வரலாற்றில் தமிழரசுக்கட்சியின் தலைமைகள் வெகுஜனப்போராட்டங்களுக்கு முன்னிலைவகித்ததோடு அவர்களது துணிவான செயற்பாடுகளால் மக்கள் தமிழரசு கட்சிக்கு பின்னால் அணிதிரண்டார்கள். கோப்பாய் கோமகன் வன்னியசிங்கம், இரும்பு மனிதன் நாகலிங்கம் என தமிழரசுக்கட்சி தலைமைகளிற்கான புனைபெயர்கள் அவர்களது ஜனரஞ்சக அரசியலின் அடையாளமாகவே காணப்படுகின்றது. காலிமுகத்திடல் போராட்டம், கச்சேரி முடக்க போராட்டம், சிங்கள ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் என மக்கள் எழுச்சிப்போராட்டங்களை முன்னகர்த்திய தமிழரசுக்கட்சியின் வரலாறு மீள புனரமைக்கப்பட வேண்டும்.

எனவே, தமிழ்த்தேசிய அரசியலில் தமிழரசுக்கட்சியின் முக்கியத்துவத்தை மையப்படுத்தியே தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு கட்சியை கடந்து பொதுவெளியில் பரவலான கருத்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் தற்போது தமிழ்த்தேசியம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் மீளெழுச்சிக்கு தமிழ்த்தேசியத்தின் புனரமைப்பு அவசியமானதாக கருதப்பட்டிருந்தது. அத்தகைய புனரமைப்பை தமிழரசுகட்சியின் புதிய தலைமையிடமிருந்து தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் தமிழ்க்கட்சிகளில் ஒன்றென எளிதில் கடந்து விட இயலாத வரலாற்றை பகிர்கிறது. குறிப்பாக வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தை மையப்படுத்திய தமிழ்த்தேசிய அரசியலை முதலில் முன்னிறுத்திய கட்சியாக தமிழரசுக்கட்சிக்கு தனித்துவமான அடையாளம் காணப்படுகின்றது. இன்று தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் பிரதான தலைமைகள் பலவும் தமது முந்தைய தலைமுறை தமிழரசுக்கட்சியின் ஆரம்பகர்த்தாக்களின், ஆரம்ப கால தலைவர்களின் நெறிப்படுத்தலில் தமிழ்த்தேசிய உணர்வை பெற்றார்கள் என்றே சிலாகிப்பதுண்டு. கடந்த கால பெருமைகளுக்கு அப்பால் தமிழ்த்தேசிய முன்னிறுத்திய கொள்கை அரசியலிலும் செயற்பாட்டுத்தளத்திலும் பிரதான அரசியல் பொறியாக தமிழரசுக்கட்சி இயங்கியுள்ளது. இவ்முக்கியத்துவத்தை சீர்தூக்கியதாக சிறிதரனின் செயற்பாடு அமையுமா என்பதே பலரது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

இந்தியாவின் இந்துத்துவத்தில் பௌத்தத்தின் நிலை! -ஐ.வி.மகாசேனன்-

கொழும்பு-புதுடில்லி உறவும் இந்திய இந்து – இலங்கை பௌத்த நாகரீகப் பிணைப்பு -ஐ.வி.மகாசேனன்-