ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-
சமகால அரசியலில் எந்தவொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும் பூகோள அரசியல் மற்றும் புவிசார் அரசியல் தாக்கங்கள் தவிர்க்க முடியாத நிலையை பெறுகின்றது. ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திலும் புகோள அரசியல் மற்றும் புவிசார் அரசியல் வார்த்தைகள் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் மலிந்து காணப்படுகின்ற போதிலும், செயற்பாட்டு பரப்பில் அதனை உணர்ந்து செயற்படுகின்றார்களா என்பதில் தொடர்ச்சியான சந்தேகங்களே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் மேற்காசியாவில் ஏதெனும் நெருக்கடி ஏற்படுகின்ற சூழலில் யாழ்ப்பாண எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசைகளில் நிற்பதை அவதானிக்க கூடியதாக அமைந்தது. இது தொடர்பாக சமுகவலைத்தளங்களிலும் பல கேலிக்கை விமர்சன பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் சாதாரண மக்களிடம் தமது எண்ணங்களுக்குள் காணப்படும் பூகோள அரசியல் விழிப்புக்கூட ஈழத்தமிழரசியல் தலைவர்களிடம் காணப்படுகின்றதா என்பதில் வலுவான கேள்விக்குறியே உள்ளது. மேலும் ஊடகங்களும் போதிய அளவில் பூகோள அரசியல் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. குறிப்பாக அண்மையில் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் மீது இனப்படுகொலையை அரங்கேற்றுவதாக தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இக்கட்டுரையும் தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள இனப்படுகொலை வழக்கினூடாக ஈழத்தமிழர்கள் பெறக்கூடிய படிப்பினையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) ஜனவரி 11-12அன்று நடைபெற்ற தென்னாபிரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வழக்கு உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. டிசம்பர்-29அன்று தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் 84 பக்க வழக்கு பதிவில் இஸ்ரேல் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்திருந்தது. குறித்த வழக்கு பதிவில், காஸாவில் நடாத்தப்படும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அழிவு மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் அளவு சர்வதேச சட்டத்தின் கீழ் 1948ஆம் ஆண்டு இனப்படுகொலை மாநாட்டின் வரம்பை சந்திக்கின்றன. காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிடுமாறும் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் வழக்கு அடிப்படையில், 'இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீனிய தேசிய இனம் மற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கம் கொண்டது. அது காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனிய குழுவின் பகுதியாகும்.' இதை மறுத்த இஸ்ரேல், சர்வதேச சட்டத்தின் கீழ் தற்காப்புக்கான தனது அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதாக வாதிடுகிறது.
தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது தொடுத்துள்ள வழக்கில் சர்வதேச நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பினை வெளியிடப் போகின்றது. அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்த தீர்ப்பு வாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நீதிமன்றத்தின் தற்காலிக நடவடிக்கைகள் என்பது இடைக்காலத் தீர்ப்புகள் ஆகும். எனினும் அதன் சொந்த உத்தரவுகளை அமல்படுத்த எந்த வழியும் இல்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கைகளை எடுப்பது சாத்தியம். ஆனால் அது நிரந்தர உறுப்பினர்களின் வீட்டோ அதிகாரத்திற்கு உட்பட்டது. ஒரு பாதகமான தீர்ப்பு ஏற்பட்டால், அத்தகைய உத்தரவை அமல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் வீட்டோ செய்ய பாதுகாப்பு சபை நாடுகள் தமது நலன் சார்ந்து செயற்படக்கூடியதாகும். இஸ்ரேலுக்கு பாதகமான தீர்ப்பு ஏற்பட்டால், அத்தகைய உத்தரவை அமுல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் வீட்டோ செய்ய இஸ்ரேல் அமெரிக்காவை கோரலாம். இப்பின்னணியிலேயே சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரமற்ற நீதி தொடர்பில் பல விமர்சனங்கள் காணப்படுகின்றது. இத்தகையதொரு விமர்சனத்தையே தமது இயலாமையை மறைப்பதற்காக ஈழத்தமிழரசியல் தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர். எனினும் சர்வதேச நீதிமன்றத்துக்கு இனப்படுகொலை தீர்மானத்தை நகர்த்துவதனூடாக ஏற்படக்கூடிய முக்கியத்துவத்துவத்தை ஈழத்தமிழரசியல் தரப்பினர் இலாபகரமாக மூடிமறைக்க முயலுகின்றனர்.
காஸா போரில் இஸ்ரேல் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பொறுப்புகூறலுக்குள் நகர்த்துவதனால், ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிப்பதைத் தடுக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
ஒன்று, இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டு, இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு ஆழ்ந்த அடையாளத்துடன் கூடிய ஒரு சகாப்த தலையீடு ஆகும். நுணுக்கமான அர்த்தத்தில், சர்வதேச நீதிமன்றத்தின் வழக்கு காஸாவில் மூன்று மாத கால அழிவை மதிப்பிடுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது இராணுவ பிரச்சாரத்தில் ஒரு இராணுவம் 100 காசாக்களில் ஒருவரைக் கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களை இடம்பெயரச்செய்துள்ளது. இப்பின்னணியில் தென்னாபிரிக்காவால் கொண்டு வரப்பட்ட வழக்கு, ஒரு பரந்த அதிர்வலையை பெற்றுள்ளது. குறிப்பாக சியோனிசத்தில் பேரில் நீண்டகாலமாக பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலால் கட்டமைக்கப்டும் இனவழிப்பு செயற்பாடுகளுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 'யூத மக்களை இயல்பாக்குவதற்கும், நாடுகளுக்கு மத்தியில் ஒரு தேசமாக நம்மை மாற்றுவதற்கும் இது சியோனிச அபிலாஷைக்கு ஒரு ஆழமான அடியாகும்' என்று ஜெருசலேமில் உள்ள ஆராய்ச்சி குழுவான ஷாலோம் ஹார்ட்மேன் இன்ஸ்டிட்யூட்டில் எழுத்தாளர் யோசி க்ளேய்ன் ஹலேவி (Yossi Klein Halevi) குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு, அமெரிக்க போன்ற நாடுகள் தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது முன்வைத்துள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டை மறுக்கின்ற போதிலும், இனப்படுகொலைக்கான சூழலை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது. பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஹோலோகாஸ்ட் மற்றும் இனப்படுகொலை ஆய்வுகளின் பேராசிரியர் ஓமர் பார்டோவ், 'இனப்படுகொலையின் வரலாற்றாசிரியர் என்ற முறையில், காஸாவில் தற்போது இனப்படுகொலை நடைபெறுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நான் நம்புகிறேன், இருப்பினும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் கூட நடக்க வாய்ப்புள்ளது.' எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும், 'நிலைமை மோசமடைவதற்கு முன்பு அதை நிறுத்துவதற்கான வாய்ப்பு நமக்கு உள்ளது. இனப்படுகொலை நடந்தபின் அதைத் தாமதமாகக் கண்டனம் செய்வதைவிட, அது நிகழும் முன்னரே இனப்படுகொலைக்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி எச்சரிப்பது மிகவும் முக்கியமானது என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறிவோம். எங்களுக்கு இன்னும் அந்த நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.' என காசா போரில் சர்வதேசம் தலையிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இத்தகைய கோரிக்கையானது, தென்னாபிரிக்காவின் இஸ்ரேல் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டை மையப்படுத்தியே எழுந்துள்ளது.
மூன்று, பாலஸ்தீனம் தொடர்பான இஸ்ரேலின் இனப்படுகொலை சாட்சியங்கள் பொதுவெளிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக இறப்பு எண்ணிக்கைகள் பெரும்பாலும் சர்வதேச கண்டனத்தை கொண்டுவரும் அதே வேளையில், ஒரு சட்டப் பிரிவாக, இனப்படுகொலை என்பது ஒரு அரசின் இராணுவப் படையின் அளவுக்கதிகமான பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பொதுமக்களின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை சார்ந்தது அல்ல. இனப்படுகொலை நோக்கத்தை நிரூபிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. அதனை வெளிப்படுத்தும் வகையில், இஸ்ரேலிய அரசாங்கத்தின் தீவிர வலதுசாரி உறுப்பினர்களின் அறிக்கைகளை மேற்கோள்காட்டப்படுகின்றது. ஒக்டோபர்-7 அன்று, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 'ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு காஸாக்கள் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்றும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் காஸாவின் மக்கள்தொகை மிகுந்த நகர்ப்புற மையங்களின் சில பகுதிகளை இடிபாடுகளாக மாற்றும்' என்றும் கூறினார். தொடர்ந்து ஒக்டோபர்-28அன்று, யூதர்களின் புனித நூல்களில் ஒன்றான உபாகமத்தை (Deuteronomy) மேற்கோள் காட்டி, 'அமலேக் உங்களுக்கு என்ன செய்தார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்' என இஸ்ரேலியர்களுக்கு காஸாவில் போர் தொடர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். பல இஸ்ரேலியர்களுக்குத் தெரியும், 'அமலேக்கின் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, ஆண்களையும் பெண்களையும், கைக்குழந்தைகளையும், பாலூட்டும் குழந்தைகளையும் ஒரே மாதிரியாகக் கொல்லுங்கள்' என்று பைபிள் அழைக்கிறது. ஆழமான ஆபத்தான மொழி பிரதமருடன் முடிவடையவில்லை. இஸ்ரேலிய இராணுவத்தின் பிராந்தியங்களில் அரசாங்க நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளரான மேஜர் ஜெனரல் கசான் அலியன், 'மனித விலங்குகளை அப்படித்தான் நடத்த வேண்டும். அங்கே மின்சாரம் மற்றும் தண்ணீர் இருக்காது. அழிவு மட்டுமே இருக்கும். நீங்கள் நரகத்தை விரும்பினீர்கள், உங்களுக்கு நரகம் கிடைக்கும்' என அரபு மொழியில் காசாவின் மக்களிடம் உரையாற்றினார். இவ்வாறாக இஸ்ரேலின் அரச கட்டமைப்பின் வன்முறை அழிவுகள் கண்டனங்களை கடந்து, இனப்படுகொலைக்கான நோக்கம் பொதுவெளியில் முதன்மை பெற சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா நகர்த்தியுள்ள வழக்கே காரணமாகின்றது.
இவ்வாறான பின்னணியில் தென்னாபிரிக்கா காசா விவகாரத்தில் இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்டுள்ள இனப்படுகொலை வழக்கு அரசியல் முக்கியத்துவத்தை வழங்குகின்றது. எனினும் ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் கடந்த ஒரு தசாப்த கால இனப்படுகொலை நீதிக்கோரிக்கை பிரச்சாரமாக மாத்திரம் இருப்பதற்கான காரணங்களையும் விளங்கிக்கொள்ளல் வேண்டும்.
முதலாவது, ஈழத்தமிழரசியல் கட்சிகள் பூகோள அரசியல் விவகாரங்களிலிருந்து படிப்பினையை பெற தவறியுள்ளனர். 2009ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது இனவழிப்பு என தாயகத்தில் ஒருசில கட்சிகளும், புலம்பெயர் அமைப்புக்களும் கூறி வருகின்றனர். எனினும் ஈழத்தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழரசுக்கட்சி இனப்படுகொலைசார் உரையாடலை தவிர்த்து வருகின்றது. பிரதானமாக தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான போட்டியில் களமிறங்கியுள்ள சட்டத்தரணி, இனப்படுகொலையின் சட்டப்பிரிவை வியாக்கியானப்படுத்துவதனூடாக நோக்கத்தை வெளிப்படுத்துவது கடினமானதென மறுத்து வருகின்றார். அவரது செயற்பாடு இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கும் செயற்பாடு என்பதே பாலஸ்தீனத்துக்கு ஆதரவான தென்னாபிரிக்காவின் நகர்வுகளின் படிப்பினை வெளிப்படுத்தி நிற்கின்றது. அதேவேளை இனப்படுகொலைக்கான நீதியைக்கோரும் தரப்பினரும் தந்திரோபாய ரீதியாக தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கையை நகர்த்த தயாராக இல்லை. 2009ஆம் ஆண்டுக்கு பின்னரும் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை இலங்கை அரச இயந்திரம் மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் இலங்கை அரச இயந்திரம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்கின்ற நோக்குடன் செயற்படுகின்றமை நீதிமன்ற தீர்ப்புக்களை மீறி மேற்கொள்ளப்படுகின்ற இனச்சுத்திகரிப்பு செயற்பாடுகளிலும், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளிலும், அரச ஆதரவு பிக்குகளின் உரைகளிலும் அப்பட்டமாக தெரிகின்றது. எனினும் இதனை ஆவணப்படுத்தி அடுத்த கட்ட நகர்வுகளுக்கு ஈழத்தமிழரசியல் கட்சிகள் ஏதெனும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்களா என்பது பதில்களற்ற கேள்விகளாகவே அமைகின்றது.
இரண்டாவது, ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தில் இனவழிப்புக்கான நீதியை பெறுவதில் அரசியல் கட்சிகள் மாத்திரமின்றி ஈழத்தமிழரசியலில் ஒட்டுமொத்த தரப்பும் அசண்டையாக செல்வதனையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அரசியல் கட்சிகள் தத்தமது அரசியல் நலன்களுக்குள் செயற்படுகையில் அவற்றை சமுகத்தின் நலனுக்குள் நெறிப்படுத்த வேண்டிய சிவில் சமுகத்தினரும், அறிவூட்டலையும் விழிப்புணர்வையும் மேற்கொள்ள வேண்டிய ஊடகத்தினரும் போதிய அளவில் தமது கடமைகளை செய்ய தவறியுள்ளனர். கடந்த காலங்களில் சர்வதேச அரங்கில் இடம்பெறும் தேசிய விடுதலை சார் அரசியலை தமிழ் மக்களிடம் விழிப்பூட்டுவதற்கான பல களங்கள் காணப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி இயங்கிய மறுமலர்ச்சி பதிப்பதகம் அவற்றுள் ஒன்றாகும். எனினும் இன்று ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான நீதியை கோரும் தரப்பாக காணப்படுகின்ற போதிலும், சமகாலத்தில் சர்வதேச அரங்கில் இனப்படுகொலை நீதிக்காக நகர்த்தப்படும் முயற்சி தொடர்பில் ஈழத்தமிழர்கள் போதிய விழிப்பு மற்றும் உரையாடலின்றி காணப்படுவது ஈழத்தமிழரசியலின் அவலமாகவே காணப்படுகின்றது.
மூன்றாவது, ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைசார் நீதிக்கோரிக்கை சர்வதேச அரசியலில் உரிய அங்கீகாரத்தை பெறுவதில் தடையாக ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியல் நகர்வுகளும் காரணமாகின்றது. குறிப்பாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மேற்காசிய தவிர்ந்த அல்லது அரபு நாடுகள் தவிர்ந்த ஆபிரிக்க நாடான தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாயினும்;, அதற்கு பின்புலத்தில் அரபு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்கி உள்ளது. சவுதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் மொராக்கோவை உள்ளடக்கிய 57 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (OIC) டிசம்பர்-30 அன்று வழக்குக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. அவ்வாறே அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அஹ்மத் அபுல்-கெய்ட் X இடுகையில் 22 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியின் ஆதரவை உறுதிப்படுத்தியிருந்தார். எனினும் மாறாக ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அத்தகையதொரு நட்பினை பிராந்திய அரசியலில் உருவாக்க தவறியுள்ளது. சமகாலத்திலும் ஈழத்தமிழரசியல் தலைவர்கள் இந்திய அரசுக்கு சேவகம் செய்ய அல்லது எதிரியாக்க துணிகின்றார்களேயன்றி மாறாக நட்பு பாராட்டி இந்திய நலனுக்குள் ஈழத்தமிழர்களின் நலனை ஒன்றிணைக்கும் முயற்சியை செய்ய தவறி வருகின்றனர். சமகாலத்தில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை நீதிக்கோரிக்கைக்கு கனடா மைய அரசு மற்றும் மகாண அரசியல் கட்டமைப்புக்கள் பூரண ஆதரவை வழங்குகின்ற போதிலும், சர்வதேச அரங்கிற்குள் கொண்டு செல்ல முடியாமலிருப்பதில், ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியல் ஒத்துழைப்பின்மை பாரிய சவாலாக அமைகின்றது.
எனவே, தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது நகர்த்தியுள்ள இனப்படுகொலை வழக்கிலிருந்து படிப்பினையை கற்பதனூடாக ஈழத்தமிழர்கள் தங்களுக்கான இனப்படுகொலை நீதிக்கான எத்தனங்களை மேற்கொள்ள முயல வேண்டும். ஈழத்தமிழரசியலில் கூறப்படும் சாக்கு போக்கு காரணங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு சேவகம் செய்யக்கூடியதாகவே அமையும். அவ்வாறே இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை தேர்தல் பிரச்சாரமாக பேணுவதுடன், அதற்கான எவ்வித நகர்வுகளையும் மேற்கொள்ளாத தரப்பினரும் மறைமுகமாக அரசாங்கத்துக்கு நன்மை பயக்கும் காரியத்தையே செய்கின்றார்கள் எனும் தெளிவு பெறல் அவசியமகின்றது. கடந்த வார கட்டுரையின் முடிவுரையில் குறிப்பிட்ட எழுத்தாளர் விஷ்வா சிம்போர்ஸ்கா-இனுடைய கருத்தையே மீள மீள தமிழ்த்தரப்புக்கு வலியுறுத்த வேண்டி உள்ளது. கற்பனாவாதங்களை கனவு காண்பதை விட அல்லது துரத்துவதை விட அதிகரிக்கும் மாற்றங்களுக்காக தமிழ்த்தரப்பு செயற்படுவதே பயனுடையதாக அமையக்கூடியதாகும்.
Comments
Post a Comment