ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தமிழ்த்தேசிய கொள்கையை முன்னிறுத்துவதற்கான களம்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வாண்டு நடுப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட வேண்டிய தேவை தேர்தல் ஆணைக்குழுவிடம் காணப்படுகின்றது. எனினும் கடந்த கால ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நரித்தனத்தால், ஜனாதிபதித் தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடைபெறுமா என்பதில் இலங்கை அரசியல் அவதானிகள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பலமான கேள்விகள் காணப்படுகின்றது. சமதளத்தில் தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களில் தென்னிலங்கை கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகளும் முறையே சஜித் பிரேமதாசா மற்றும் அநுரகுமார திசாநாயக்காவை தமது ஜனாதிபதி வேட்பாளராகவும் அறிவித்துள்ளது. இப்பின்னணில் தமது கூட்டை உருவாக்குவதற்கான பேரம்பேசல்களை முன்னெடுத்து வருகின்றன. ஆளுங்கட்சிகளிடையே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவே பெரும் குழப்பகரமான சூழலில் காணப்படுகின்றது. அவ்வாறே தமிழ் அரசியல் தரப்பிலும் ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் அரசியல் கட்சிகளிடையே முரண்பட்ட வாதங்கள் காணப்படுகின்றது. இக்கட்டுரை தமிழ் அரசியல் தரப்பின் கடந்த கால அரசியல் நகர்வுகளை அலசுவதனூடாக இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு வாய்ப்பான சூழலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்துவதனூடாக தமிழ் மக்கள் தமது இறைமையை வெளிப்படுத்த இயலும் எனும் சிந்தனையை தமிழ் அரசியல் கருத்தியலாளர்கள் நீண்டகாலமாக முன்வைத்து வருகின்றனர். அதற்கான நியாயப்பாடுகளை இப்பகுதியிலும் முன்னைய கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ் அரசியல் கட்சிகளிடையே பொதுவேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பில் உறுதியான முடிவுகளை வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை ஆதரித்திருந்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுவேட்பாளர் கருத்தியலை நிராகரித்து ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்புக்கான அழைப்பை விடுத்துள்ளனர். தமிழரசுக்கட்சி தமது உள்வீட்டு மோதலுக்குள் தேசிய அரசியலுக்கான நகர்வுகளில் மந்தப்போக்கை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், 'எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை. அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது' எனத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யார்யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது சம்பந்தமாக உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை. அந்த அறிவிப்புக்கள் உறுதியாக வெளியானதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரின் எண்ணங்களுடனேயே மேலும் சில தலைவர்களும் தமிழரசுக்கட்சியில் காணப்படுகின்றார்கள் என்பதே சிலரது செய்தியறிக்கைகளூடாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.சம்பந்தன் கடந்த காலங்களிலும் பொதுவேட்பாளர் தொடர்பான எதிரான கருத்தையே கொண்டுள்ளார். அல்லது அதுதொடர்பில் போதிய அறிவு இல்லையோ என்ற எண்ணங்களும் அவரது உரையாடல்களில் பிரதிபலிக்கின்றது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் தமிழ் அரசியல் தரப்பு தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்த வேண்டுமெனும் கருத்தாடல் தமிழ் சிவில் சமுகப்பரப்பில் காணப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஒன்றினைத்து ஜனாதிபதித் தேர்தலை கையாள்வதற்கான முன்முயற்சியின் ஆதாரமாகவும் தமிழ்ப்பொதுவேட்பாளர் சிந்தனையே காணப்பட்டது. எனினும் தமிழரசுக்கட்சியின் அரசியல் தந்திரத்துக்குள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சி நீர்த்துப்போயிருந்தது. சமகாலத்தில் தமிழ் மக்கள் பேரவையும் மதத்தலைவர்கள் மற்றும் அரசியல் கருத்தியலாளர்களின் ஒருங்கிணைப்பில் தமிழ்ப்பொதுவேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பான உரையாடல்களை அரசியல் கட்சிகளுடன் முன்னெடுத்திருந்தார்கள். தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா. சம்பந்தனுடனான உரையாடலில், தமிழ்ப்பொதுவேட்பாளர் முன்னிறுத்துவதன் அரசியல் இலக்கை புரிந்து கொள்ளாது, தமிழ்ப்பொதுவேட்பாளர் தோல்வியையே எதிர்கொள்வாரெனக்கூறி தமிழ் மக்கள் பேரவையின் முயற்சியை சம்பந்தன் நிராகரித்திருந்தார்.
இப்பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பிலான சம்பந்தனின் எண்ணங்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பது கொள்கை அரசியல் என்பதை கதிரை அரசியலுக்காக பயணிக்கும் சம்பந்தன் புரிந்து கொள்ள வேண்டும். 70 சதவீதத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் வாழும் நாட்டில் தமிழ்ப்பொது வேட்பாளர் என்பது ஜனாதிபதி கதிரைக்கான வேட்பாளர் அல்ல என்பதே அடிப்படையானதாகும். மாறாக தமிழ் மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரிப்பதுடன், தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை திரளாய் வெளிப்படுத்துவதற்கான குறியீட்டு அரசியலாகும். இங்கு தமிழ்ப்பொது வேட்பாளருக்கான வாக்களிப்பு தனிநபருக்கானது அன்றி, தமிழ் மக்களின் உரிமைக்கோரிக்கைகளுக்கானதாகும். தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை முன்னிறுத்தி வாக்கு திரட்சியை வெளிப்படுத்துவதும் ஒரு வகையிலான ஜனநாயக வழிப்போராட்டமாகவே அமைகின்றது. விடுதலைக்காக போராடும் தேசிய இனமாகவே தமிழர்கள் காணப்படுகின்றார்கள். தமிழ் மக்களின் அரசியல் கட்சிகளும் தேர்தல் இலக்குகளை கடந்து, தேசிய இன விடுதலையை நோக்கி பயணிப்பதாக அமைய வேண்டும். ஆயினும் துரதிஷ்டமாக தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் தேர்தல் நலன்களுக்குள்ளேயே பயணிக்கின்றது. பாராளுமன்ற ஆசனங்களை இலக்கு வைத்தே தமிழரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றது. இப்பின்னணியிலேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பொதுவேட்பாளரையும் சம்பந்தன் ஜனாதிபதி கதிரையுடன் மட்டுப்படுத்தியே புரிந்து கொள்கின்றார். மாறாக அப்பொறிமுறையின் பின்னாலுள்ள அரசியல் இராஜதந்திர உரையாடலை கவணிக்க தவறுகின்றார்.
இரண்டாவது, சம்பந்தன் தனது செய்தியறிக்கையில், தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது நாட்டை பிளவுபடுத்துவதாக அமையும் என்றவாறு கருத்துரைத்துள்ளார். இது வெளிப்படையான அறிவிலித்தனமான விடயமாகவே காணப்படுகின்றது. அத்துடன் சிங்கள மக்கள், தமிழ் சமஷ்டிக் கோரிக்கையை நாட்டை பிளவுபடுத்துவதாக அச்சப்படுவதற்கு ஒப்பானதாகவே சம்பந்தனின் கருத்து அமைகின்றது. 'தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழுவதற்காக ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். அவ்விதமான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர்கள் சார்பில் களமிறக்கும் விடயத்தினை நான் ஆதரிக்கவில்லை.' என சம்பந்தன் தெரிவித்துள்ளார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பை தவிர்த்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தென்னிலங்கை வேட்பாளர்களுக்கே வாக்களித்து வந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றி தமிழ் மக்களின் வாக்குகளினாலேயே சாத்தியமானது. இதனை மைத்திரிபால சிறிசேனா தனது பதவியேற்பில் நினைவு கூர்ந்திருந்தார். எனினும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்க எந்தவொரு தென்னிலங்கை ஜனாதிபதிகளும் முன்வரவில்லை. இவ்வரலாற்று அனுபவங்களினை முன்னிறுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தும் அரசியல் குறியாகவே தமிழ் பொதுவேட்பாளர் அமைய உள்ளது. தமிழ் மக்கள் ஜனநாயக வழியில் தமது அபிலாசைகளை முன்னிறுத்துவதும், ஜனநாயக தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவதும் ஒன்றுபட்ட இலங்கைக்கு சவால் செய்யக்கூடியதாகக்கூறி சம்பந்தன் நிராகரிப்பது, அவரின் அரசியல் அறிவை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது.
மூன்றாவது, 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் மற்றும் அத்தீர்மானத்தை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமது விஞ்ஞாபனமாக மக்கள் முன் சமர்ப்பித்து மக்களாணையை பெற்றுக்கொண்ட வரலாற்றையும் சம்பந்தனுக்கு மீள்நினைவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகம் அவர்களாலேயே வட்டுக்கோட்டை தீர்மானம் முன்மொழியப்பட்டு, மு.சிவசிதம்பரத்தினால் வழிமொழியப்பட்டது. வட்டுக்கோட்டை தீர்மானம், தமிழ் மக்களின் தேசிய அங்கீகாரத்தை வலியுறுத்துகின்றது. 'இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளும்; வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென' பிரகடனப்படுத்துகின்றது. மேலும், '1972இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும்' வட்டுக்கோட்டை தீர்மானம் அறிவித்தது. இதனை மக்களாணைக்கு முன்வைத்து 1977ஆம் தேர்தலை எதிர்கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 18 ஆசனங்களை பெற்று பிரதான எதிர்க்கட்சி நிலையை பெற்றிருந்தது. பின்னர் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு மக்கள் அளித்த ஆணையை புறந்தள்ளிய சூழலிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான வரலாற்று அனுபவத்தினையே சமகாலத்தில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை முன்னிறுத்துவதனூடாக தமிழ் அரசியல் தரப்பு பரீட்சிக்க வேண்டி உள்ளது. மாறாக தமிழர் அபிலாசையை முன்னிறுத்த கூடாதென தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சியின் சிரேஷ்ட தலைவர் தெரிவிப்பது தமிழ் மக்களின் சாபமாகவே அமைகின்றது.
நான்காவது, தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பிலான உத்தியோகபூர்வ முடிவுகளே தமது இறுதி முடிவை தீர்மானிக்குமென சம்பந்தன் தெரிவித்திருப்பது மீளவும் தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிப்பதற்கான முன்முயற்சியாகவே அமைகின்றது. 2009களுக்கு பிறகு இடம்பெற்ற 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பதாகவே சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவாக அமைந்தது. இதன் அடிப்படை தாரக மந்திரமாக ராஜபக்ஷ எதிர்ப்பு அரசியலே ஆகும். மாறாக தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் கவனம் கொண்டிருக்கவில்லை. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இராணுவ தளபதியாக செயற்பட்ட சரத் பொன்சேகாவிற்கு அமைந்தது. 2015ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனாவிற்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் விளைவு தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை யுத்தக்குற்றமாக சுருக்கி இன்று ஜெனிவா கூட்டத்தொடர் காலப்பகுதி உரையாடலாக மட்டுப்படுத்தியுள்ளது. மீளவும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்கள் அறிவுப்புக்களுக்காக தமிழ் மக்களை காத்திருக்க சொல்வது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை தமிழ் அரசியல் தலைவரே புறக்கணிப்பதாகவே அமைகின்றது.
எனவே, தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தனின் தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பிலான கருத்தினை தமிழரசுக்கட்சிக்குள் தமிழ் மக்களின் நலன் சார்ந்து சிந்திக்கக்கூடிய தலைவர்கள் மறுபரிசீலணை செய்யவும் விவாதிக்கவும் முன்வர வேண்டும். தமிழ்ப் பொதுவேட்பாளர் தனிமனித அரசியல் பொறிமுறை அல்ல. தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையை ஜனநாயக வழியில் முன்னிறுத்துவதற்கான களம் என்பதை தமிழ்க்கட்சிகள் புரிதல் வேண்டும். தமது குறுகிய தனிப்பட்ட நலன்களுக்காகவும், கட்சி அரசியல் நலன்களுக்காகவும் கண்ணை மூடிக்கொண்டு பொதுவேட்பாளர் கருத்தியலை புறந்தள்ளுவது தமிழினத்தை அழிப்பதற்கு ஒப்பான செயலேயாகும். ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் கையாள்வது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமுகங்கள் மற்றும் கருத்தியலாளர்கள் ஒன்றிணைந்து பரந்த விவாதத்தை திறந்து ஆரோக்கியமான முடிவினை எடுக்க வேண்டும். தமிழ் அரசியல் தரப்பினர் ஓரணியாய் திரள்வதனூடாகவே தமிழ் மக்களினையும் ஒரே கொள்கைக்குள் திரட்சியாய் ஒன்றிணைக்க முடியும். 1977ஆம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கான மக்கள் ஆணை அரசியல் தரப்பின் திரட்சியால் உருவாக்கப்பட்ட மக்கள் திரட்சியின் விளைவேயாகும். அத்தகையதொரு அடையாள அரசியலை 2024 ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் மக்கள் கைக்கொள்வதே காலத்தின் தேவையாகும்.
Comments
Post a Comment